ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் பிரிட்டிஷ் இராணுவப் பொறியாளராக இருந்தவர் கர்னல் ஜான் பென்னிகுயிக்.
இவர் இந்தியாவின் புனே நகரத்தில் 1841 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15 ஆம் நாள் பிறந்தார். 1911 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 9ஆம் தேதி மறைந்தார்.
இவர் பிரிட்டிஷ் ஆட்சியில் நிர்வாகப் பொறுப்புகளில் இருந்தவர். அன்றைய மெட்ராஸ் லெஜிஸ்லேட்டிவ் கவுன்சிலின் உறுப்பினராகவும் இருந்தவர்.
பல்வேறு நீர்ப்பாசனத் திட்டங்களுக்கு மூல காரணமாக இருந்த இவர்தான் முல்லைப் பெரியாறு அணையை உருவாக்கியவர்.
ஆம் . இவருடைய புகழ் மகுடத்தின் வைரமாக முல்லைப் பெரியாறு அணை விளங்குகிறது.
‘கரிகாலன் கட்டி வைத்தான் கல்லணை’ என்று கல்லணை சோழ அரசன் கரிகால் பெருவளத்தான் திருமாவளவனின் பெருமையை எடுத்துரைப்பது போல், முல்லைப் பெரியாறு அணையை உருவாக்கிய பென்னிகுயிக் அவர்களைக் காலங்கள் கடந்தும் மக்கள் போற்றி வருகிறார்கள் .
விவரிக்க இயலாத துன்பங்களையும் சிரமங்களையும் மேற்கொண்டு பென்னிகுயிக் , 152 அடியை கட்டி முடித்தார்.
அவருடைய பிறந்த நாள், பொங்கல் பண்டிகையை ஒட்டி வருவதால் , அவர் நினைவாக மக்கள் ஒவ்வொரு ஆண்டும் அவர் நினைவாக பொங்கல் படைத்துக் கொண்டிருக்கிறார்கள் .
அடர்ந்த காடுகள் இடையே இடர்ப்பாடுகளை எதிர்கொண்டு கட்டப்பட்ட முதல் அணை மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.
மனம் தளராமல் மீண்டும் பென்னிகுயிக், அணை கட்டுமானப் பணிகளை மீண்டும் தொடர்ந்தார். எப்படி என்று பார்ப்போம் .
தென் தமிழகத்தில் வறட்சி நிலவிய காலகட்டத்தில், அரபிக் கடலில் கலக்கும் பெரியாறு நதி நீரை கிழக்குப் பக்கம் திருப்பி அணை கட்டி சேமிக்கலாம் என்று பென்னிகுயிக்-ன் எண்ணத்தில் முகிழ்த்து முழு வடிவம் பெற்றது தான் முல்லைப் பெரியாறு அணை .
ஒரு கட்டத்தில் முதலில் மேற்கொள்ளப்பட்ட கட்டுமானங்கள் பெரு வெள்ளத்தில் மூழ்கி வீணானது. அதனால் பிரிட்டிஷ் அரசு அவருக்கு இந்த செயல் திட்டத்திற்கான நிதியை அளிக்க மறுத்து விட்டது.
முன் வைத்த காலை பின் வைக்காத பென்னிகுயிக், இங்கிலாந்து சென்று, தம்முடைய உடைமைகளை எல்லாம் விற்று பணமாக்கி, இந்தியாவுக்குத் திரும்பி வந்து, அணை கட்டுமானப் பணிகளைத் தொடர்ந்தார்.
‘கட்டில்’ என்பது இங்கிலாந்தில் உள்ளவர்களுக்கு மிகவும் முக்கியமானது என்று கூறப்படுகிறது.
அவர்கள் எளிதில் தங்கள் கட்டிலை விற்க மாட்டார்களாம்.
ஆனால் பென்னிகுயிக் கட்டிலையும் விற்று நிதியை உருவாக்கினார்.
முல்லைப் பெரியாறு அணையை அவர் 1895 ஆம் ஆண்டு வெற்றிகரமாக கட்டி முடித்தார்.
அன்றைய மெட்ராஸ் பிரசிடன்சியின் கவர்னராக இருந்த வென்லாக் பிரபு திறந்து வைத்தார்.
இந்த அணையால் தேனி, மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், இராமநாதபுரம் மாவட்டங்களின் 2,23,000 ஏக்கர் பரப்பளவு நிலப்பகுதி பாசனத்தைப் பெற்றது.
பென்னிகுயிக் அவர்களின் நினைவைப் போற்றும் பல அடையாளங்கள் தென் தமிழகத்தில் உள்ளன. இந்தப் பகுதியில் சில விவசாயக் குடும்பங்களில் குழந்தைகளுக்கு இவரது பெயரைச் சூட்டி மகிழும் பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது.
2013 ஆம் ஆண்டு பென்னிகுயிக்- ன் நினைவைப் போற்றும் வகையில் தமிழ்நாடு அரசால், தேனி மாவட்டம் கூடலூர் லோயர் கேம்ப் பகுதியில் அன்னாரது வெண்கல உருவச்சிலையுடன் கூடிய மணி மண்டபம் அமைக்கப்பட்டது.
2018 ஆம் ஆண்டு தமிழ்நாட்டிற்கு வருகை புரிந்த பென்னிகுயிக் அவர்களின் பேத்தி டயானா, இங்குள்ள மக்களைக் கண்டு கலந்து பேசி அவர்களுடன் பொங்கல் திருநாளைக் கொண்டாடியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
தன்னலம் கருதாத பென்னிகுயிக் அவர்களின் நினைவைப் போற்றுவோம்.
மதுரகவி சீனிவாசன்
சென்னை
கைபேசி: 9841376382
மின்னஞ்சல்: mkavi62@gmail.com
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!