முள்ளங்கி கூட்டு வித்தியாசமான அசத்தலான சுவையுடன் கூடிய தொட்டுக் கறியாகும்.
இதனை செய்வது எளிது. நீர்ச்சத்து மிகுந்த முள்ளங்கியை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளுதல் நலம்.
முள்ளிங்கி சாம்பார் போல் முள்ளங்கி கூட்டினையும் அடிக்கடி செய்து உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
முள்ளங்கியில் தாது உப்புக்களான கால்சியம், காப்பர், இரும்புச் சத்து, மெக்னீசியம், மாங்கனீசு, துத்தநாகம், பொட்டாசியம் போன்றவை உள்ளன.
விட்டமின் சி, இ, பி6 (பைரிடாக்ஸின்), ஃபோலேட்டுகள் அதிகளவு காணப்படுகிறது. இதில் விட்டமின் ஏ, கே, பி2(ரிபோஃப்ளோவின்), பி5(நியாசின்) ஆகியவை காணப்படுகின்றன.
முள்ளங்கி கோடை காலத்தில் ஏப்ரல் முதல் ஜீன் வரையிலும், குளிர் காலத்தில் அக்டோபர் முதல் ஜனவரி வரையிலும் அதிகளவு கிடைக்கிறது.
முள்ளங்கியில் உள்ள ஐசோஃப்லேவேன்கள் தைராய்டு சுரப்பில் வீக்கத்தினை உண்டாக்கும் தன்மை உடையது. எனவே இதனை தைராய்டு சுரப்பி குறைபாடுகள் உள்ளவர்கள் தவிர்ப்பது நலம்.
முள்ளங்கியை வாங்கும்போது விறைப்பான, தடிமனான, புதிதான சீரான நிறத்துடன் உள்ளவற்றை தேர்வு செய்யவும்.
முள்ளங்கியின் இலைகள் பசுமையாக வாடாமல் ஒரே சீரான நிறத்துடன் உள்ளதாக இருக்க வேண்டும்.
மேற்பரப்பில் வெட்டுப்பட்ட, வெடிப்பு உள்ள சீரற்ற நிறத்துடன் உள்ள காய்களை நீக்கிவிட வேண்டும்.
குளிர்பதனப் பெட்டியில் ஒரு வாரம்வரை வைத்திருந்து இக்காயினை பயன்படுத்தலாம்.
இனி சுவையான முள்ளங்கி கூட்டு செய்முறை பற்றிப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
முள்ளங்கி – ¼ கிலோ கிராம்
பாசிப் பருப்பு – 50 கிராம்
பச்சை மிளகாய் – 3 எண்ணம் (மீடியம் சைஸ்)
தேங்காய் – ¼ மூடி (பெரியது)
உப்பு – தேவையான அளவு
தாளிக்க
சின்ன வெங்காயம் – 3 எண்ணம் (மீடியம் சைஸ்)
கறிவேப்பிலை – 3 கீற்று
கடுகு – ¼ ஸ்பூன்
நல்ல எண்ணெய் – 3 ஸ்பூன்
முள்ளங்கி கூட்டு செய்முறை
முதலில் முள்ளங்கியை தோல் சீவிக் கொள்ளவும். பின்னர் அதனை துருவிக் கொள்ளவும்.
பச்சை மிளகாயை சதுரத் துண்டுகளாக்கவும்.
சின்ன வெங்காயத்தை தோலுரித்து சதுரத் துண்டுகளாக வெட்டவும்.
கறிவேப்பிலையை அலசி உருவிக் கொள்ளவும்.
தேங்காயைத் துருவிக் கொள்ளவும்.
பாசிப் பருப்பினை தண்ணீரில் போட்டு வேக விடவும்.
தண்ணீர் கொதித்ததும் அடுப்பிலிருந்து இறக்கி பாசிப் பருப்பினை 10 நிமிடங்கள் சுடு தண்ணீரில் இருக்குமாறு செய்யவும். பின்னர் தண்ணீரிலிருந்து பாசிப் பருப்பினை தனியே பிரித்து எடுக்கவும்.
வாணலியை அடுப்பில் வைத்து நல்ல எண்ணெய் ஊற்றவும்.
எண்ணெய் காய்ந்ததும் அதில் சதுரங்களாக்கிய சின்ன வெங்காயம், கறிவேப்பிலை, கடுகு சேர்த்து தாளிதம் செய்யவும்.
கடுகு வெடித்ததும் துருவிய முள்ளங்கி மற்றும் நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
முள்ளங்கி பாதியளவு வதங்கியதும் அதனுடன் வேக வைத்த பாசிப் பருப்பு, தேவையான உப்பு ஆகியவற்றைச் சேர்த்து வதக்கவும்.
முள்ளங்கி நன்கு வெந்ததும் அடுப்பினை அணைத்து விடவும். துருவிய தேங்காயை சேர்த்து கிளறவும்.
சுவையான முள்ளங்கி கூட்டு தயார்.
இதனை சாம்பார், புளிக்குழம்பு, தயிர் சாதம் ஆகியவற்றுடன் சேர்த்து உண்ணலாம்.
குறிப்பு
விருப்பமுள்ளவர்கள் சிறிதளவு மஞ்சள் பொடி, பெருங்காயப் பொடி சேர்த்து கூட்டு தயார் செய்யலாம்.
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!