முள்ளங்கி

முள்ளங்கி சாம்பார் தமிழ்நாட்டில் பிரபலமான ஒன்று. முள்ளங்கியின் மணம் மற்றும் சுவையானது சிலருக்கு பிடிக்காமல் இருக்கலாம். ஆனால் இக்காயில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மற்றும் மருத்துவப் பண்புகள் இக்காயினை உண்ண வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகின்றன.

முள்ளங்கியில் இலை, விதை மற்றும் கிழங்குப் பகுதிகள் உணவுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன. பொதுவாக முள்ளங்கி என்பது கிழங்குப் பகுதியை குறிப்பிடும் சொல் ஆகும்.

முள்ளங்கி கிழங்கு
முள்ளங்கி கிழங்கு

 

முள்ளங்கி விதைகள்
முள்ளங்கி விதைகள்

 

முள்ளங்கியின் தாகயம் சீனா மற்றும் தெற்காசிய பகுதியாகும். முள்ளங்கியானது ரோம், எகிப்து மற்றும் கிரேக நாகரிகத்தில் பயன்படுத்தபட்டதாக வரலாற்று செய்திகள் கூறுகின்றன. தற்போது உலகின் பரவலாக எல்லா இடங்களிலும் முள்ளங்கியானது பயன்படுத்தப்படுகிறது.

முள்ளங்கியானது பிராசிகாசியா என்ற தாவரக் குடும்பத்தைச் சார்ந்தது. இதன் அறிவியல் பெயர் ராப்ஹான்ஸ் சாட்டிவஸ் என்பதாகும்.

முள்ளங்கியை பச்சையாகவோ, சமைத்தோ, பதப்படுத்தியோ உண்கின்றனர்.

முள்ளங்கி வெள்ளை, சிவப்பு, பச்சை, ஊதா மற்றும் கருப்பு நிறங்களில் காணப்படுகிறது. நீளம், உருளை மற்றும் வட்ட வடிவத்தில் காணப்படுகிறது.

பல வண்ணங்களில் முள்ளங்கி
பல வண்ணங்களில் முள்ளங்கி

 

காரம் மற்றும் இனிப்பு சுவைகளுடன் நீர்ச்சத்தினையும் இக்காயானது கொண்டுள்ளது. இக்காயின் காரத்திற்கு இதில் உள்ள ஐசோதியோசயனைட் மூலக்கூறே காரணம் ஆகும்.

நம் நாட்டில் வெள்ளை மற்றும் சிவப்பு நிற முள்ளங்கிகள் காணப்படுகின்றன.

கோடை காலத்தில் ஏப்ரல் முதல் ஜீன் வரையிலும், குளிர் காலத்தில் அக்டோபர் முதல் ஜனவரி வரையிலும் இக்காயானது அதிகளவு கிடைக்கிறது.

முள்ளங்கியின் விதைகளிலிருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது. எண்ணெய் மற்றும் விதைகளுக்காகவே முள்ளங்கியின் ஒரு சில ரகங்கள் பயிர் செய்யப்படுகின்றன. நல்ல வெப்பமான சத்தான நீர்வளமிக்க மணலில் இத்தாவரம் செழித்து வளரும்.

முள்ளங்கி செடி
முள்ளங்கி செடி

 

முள்ளங்கியில் உள்ள ஊட்டச்சத்துக்கள்

முள்ளங்கியில் விட்டமின் சி, இ, பி6 (பைரிடாக்ஸின்), ஃபோலேட்டுகள் அதிகளவு காணப்படுகிறது. இதில் விட்டமின் ஏ, கே, பி2(ரிபோஃப்ளோவின்), பி5(நியாசின்) ஆகியவை காணப்படுகின்றன.

தாது உப்புக்களான கால்சியம், காப்பர், இரும்புச் சத்து, மெக்னீசியம், மாங்கனீசு, துத்தநாகம், பொட்டாசியம் போன்றவை உள்ளன. மேலும் இதில் குறைந்த எரிசக்தி, கார்போஹைட்ரேட், புரதச்சத்து, அதிகளவு நார்சத்து போன்றவை காணப்படுகின்றன.

இதில் பைட்டோ-நியூட்ரியன்களான ஆல்பா கரோடீன், பீட்டா கரோடீன், லுடீன் ஸீஸாத்தைன் ஆகியவை உள்ளன.

 

முள்ளங்கியின் மருத்துவப் பண்புகள்

ஆரோக்கிய உடல் எடை குறைப்பிற்கு

முள்ளங்கினை உண்ணும்போது அது குறைந்த அளவு எரிசக்தியுடன் வயிறு நிரம்பிய உணர்வினை ஏற்படுத்துகின்றது. இக்காயில் உள்ள நார்சத்தானது உடலின் கழிவினை வெளியேற்ற உதவுகிறது.

இக்காயானது குறைந்த அளவு செரிக்கும் தன்மையுடைய கார்போஹைட்ரேட்டையும், அதிகளவு செரிக்காத கார்போஹைட்ரேட்டையும் அதிகளவு நீர்ச்சத்தினையும் கொண்டுள்ளது. எனவே உடல் எடையை குறைக்க விரும்புவர்களுக்கு இக்காய் சிறந்த தேர்வாகும்.

 

மஞ்சள் காமாலை குணமாக

முள்ளங்கியானது கல்லீரல் மற்றும் செரிமான உறுப்புகளில் உள்ள கழிவுகள் மற்றும் நச்சினை நீக்க உதவுகிறது. முள்ளங்கியானது இரத்தத்தில் ஆக்ஸிஜனின் அளவினை அதிகரித்து இரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை உயர்த்துகிறது.

இரத்தத்தில் பிலிரூபினின் அளவினை கட்டுப்படுத்துகிறது. மஞ்சள் காமாலையினால் பாதிக்கப்பட்ட கல்லீரல் மற்றும் பித்தப்பையினை இக்காயில் உள்ள ஊட்டச்சத்துக்கள் சரி செய்து கல்லீரல் மற்றும் பித்தப்பையில் உள்ள செல்கள் நன்கு செயல்பட ஊக்குவிக்கின்றன.

 

மூலநோய்

முள்ளங்கியில் உள்ள அதிகளவு உள்ள நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து மலத்தினை இளக்கி கழிவாக எளிதாக வெளியேற்றுகிறது. செரிமான உறுப்புகளில் உள்ள நச்சுப் பொருட்களை இக்காய் நீக்குவதால் மூலநோய், வாயு தொந்தரவு, மலச்சிக்கல் ஆகியவற்றிற்கு இது சிறந்த தீர்வாக உள்ளது.

 

சிறுநீர் கழிப்பதில் உள்ள குறைபாடுகள் நீங்க

முள்ளங்கியானது சிறுநீரை நன்கு பெருகச் செய்கிறது. சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சலானது முள்ளங்கிச் சாற்றினை அருந்தும்போது குணமாகிறது.

இக்காயானது சிறுநீரகங்கள் மற்றும் சிறுநீர் பாதையில் உள்ள நச்சினை வெளியேற்றுகிறது. சிறுநீரகம் மற்றும் சிறுநீர் பாதையில் ஏற்படும் குறைபாடுகளுக்கு இக்காய் நல்ல மருந்தாக உள்ளது.

 

புற்றுநோய்க்கு

முள்ளங்கியில் உள்ள விட்டமின் சி, ஃபோலிக் அமிலம், ஆந்தோசையனைன் மற்றும் நச்சினை நீக்கும் பண்பு ஆகியவை புற்றுநோய் வராமலும், புற்றுநோய் உள்ள இடங்களுக்கு தீர்வாகவும் உள்ளன.

பெருங்குடல், சிறுகுடல், சிறுநீரகங்கள், வயிறு, வாய் ஆகிய இடங்களில் உள்ள புற்றுநோய்க்கு இக்காயின் மருத்துவப்பண்புகள் சிறந்த மருந்தாக விளங்குகின்றன. இக்காயில் காணப்படும் ஐசோதியோசையனைட் பொருளானது புற்றுச்செல்களின் வளர்ச்சியினை தடைசெய்கிறது.

 

வெண்குட்டம் நோய்க்கு

முள்ளங்கியில் உள்ள நச்சினை நீக்கும் பண்பு வெண்குட்ட நோய்க்கு தீர்வாக உள்ளது. முள்ளங்கியின் விதைகள் பொடிக்கப்பட்டு வினிகர், இஞ்சி சாறு மற்றும் பசுவின் கோமியம் ஆகியவற்றில் ஊறவைக்கப்பட்டு பின் பாதிக்கப்பட்ட இடத்தில் தடவப்படுகின்றன. வெண்குட்டத்தால் பாதிக்கப்பட்டவர்கள் முள்ளங்கியை உண்டும் நிவாரணம் பெறலாம்.

 

சுவாச நோய்க்கு

முள்ளங்கியானது சளி மற்றும் ஒவ்வாமையினால் மூக்கு, தொண்டை, காற்றுக்குழாய் மற்றும் நுரையீரல் ஆகிய இடங்களில் ஏற்படும் பாதிப்புக்களை நீக்குகிறது. இக்காயில் உள்ள ஊட்டச்சத்துகள் சுவாச பாதையில் தொற்று ஏற்படாமல் பாதுகாக்கிறது.

 

சரும பாதிப்பினைத் தடுக்க

முள்ளங்கியில் உள்ள விட்டமின் சி, பாஸ்பரஸ், துத்தநாகம், பி விட்டமின் தொகுப்புக்கள் ஆகியவை சருமப்பாதுகாப்பில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

முள்ளங்கியில் உள்ள நீர்சத்தானது சருமத்தின் ஈரப்பதத்தைப் பாதுகாக்கிறது. முள்ளங்கியின் தொற்றுநோய் தடுக்கும் பண்பானது சருமம் உலர்தல், வெடிப்பு, பிளவுகள் ஆகியவை ஏற்படாமல் சருமத்தினைப் பாதுகாக்கிறது.

 

பூச்சி கடிக்கு

முள்ளங்கியின் நமைச்சலை எதிர்க்கும் பண்பானது பூச்சி கடி மற்றும் தேனீகொட்டு ஆகியவற்றிற்கு சிறந்த தீர்வாகும். முள்ளங்கி சாற்றினை பாதிக்கப்பட்ட இடத்தில் தடவ வலி, வீக்கம் ஆகியவற்றை போக்கும்.

 

முள்ளங்கி பற்றிய எச்சரிக்கை

முள்ளங்கியில் உள்ள ஐசோஃப்லேவேன்கள் தைராய்டு சுரப்பில் வீக்கத்தினை உண்டாக்கும் தன்மை உடையது. எனவே இதனை தைராய்டு சுரப்பி குறைபாடுகள் உள்ளவர்கள் தவிர்ப்பது நலம்.

 

முள்ளங்கியை வாங்கும் முறை

முள்ளங்கியை வாங்கும்போது விறைப்பான, தடிமனான, புதிதான சீரான நிறத்துடன் உள்ளவற்றை தேர்வு செய்யவும். முள்ளங்கியின் இலைகள் பசுமையாக வாடாமல் ஒரே சீரான நிறத்துடன் உள்ளதாக இருக்க வேண்டும்.

மேற்பரப்பில் வெட்டுப்பட்ட, வெடிப்பு உள்ள சீரற்ற நிறத்துடன் உள்ள காய்களை நீக்கிவிட வேண்டும். குளிர்பதனப் பெட்டியில் ஒரு வாரம்வரை வைத்திருந்து இக்காயினை பயன்படுத்தலாம்.

முள்ளங்கியை பயன்படுத்தும்போது நன்கு கழுவி மேல் மற்றும் கீழ்பாகத்தை மட்டும் நீக்கி விட்டு பயன்படுத்தவும். தோலினை நீக்க வேண்டாம். அவசியம் எனில் மெல்லிதாக தோலினை நீக்கவும்.

முள்ளங்கி சாறாகவோ, அப்படியேவோ, சமையலிலோ பயன்படுத்தப்படுகிறது. ஊறுகாய், சாலட்டுகள் போன்றவை தயார் செய்யவும் இக்காய் பயன்படுகிறது.

சத்துக்கள் நிறைந்த முள்ளங்கியை உண்டு நல்வாழ்வு வாழ்வோம்.

-வ.முனீஸ்வரன்

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.