முழங்காலில் செய்யும் பஸ்கிகள் செய்வது எப்படி?

முழங்காலில் செய்யும் பஸ்கிகள் செய்வது எப்படி? என்ற‌ இக்கட்டுரை, டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா எழுதிய இந்திய நாட்டு தேகப் பயிற்சிகள் என்ற நூலில் இடம் பெற்ற கட்டுரை ஆகும்.

முழங்காலில் செய்யும் பஸ்கிகள் தொடங்கும் நிலை

தோள்களின் அகலம் இருக்கும் அளவுக்கு முழங்கால்களை வைத்து உட்காருகின்ற அமைப்பு இருக்க வேண்டும். இடைவெளியின் அகலம் 10 அங்குலத்திலிருந்து 12 அங்குலம் வரை இருக்கலாம்.

உள்ளங்கைகளை ஒவ்வொரு முழங்காலுக்கும் முன்னே தரையில் வைத்து, நெஞ்சை நேராக நிமிர்த்தி, நேர்கொண்ட பார்வையில் இருக்க வேண்டும். குதிகால்களின் மீது பிட்டம் (Buttock) இருப்பது போல முதலில் அமர்ந்திருக்கவும்.

(அ) முதல் வகை பஸ்கி

உடலை நிமிர்த்தி, இடது கையை மடக்கி நெஞ்சுக்கு முன்புறத்தில் கொண்டுவந்து, இடதுகை கட்டைவிரலை நெஞ்சுக்கு நேராக நிறுத்தி, அதே சமயத்தில் வலது கையை தரைக்கு இணையாக முன் நோக்கி இருக்குமாறு நீட்டித் தரையைத் தொட வேண்டும்.

குறிப்பு : உள்ளங்கை தரையை நோக்கி இருக்குமாறு வலது கையை முன்புறம் நீட்ட வேண்டும்.

அடுத்து, வலது கையை நெஞ்சுக்கு நேராக கொண்டு வந்து, வலது கை கட்டைவிரலை நெஞ்சுக்கு முன் வைத்து, இடது கையை தரைக்கு இணையாக முன்நோக்கி நீட்ட வேண்டும்.

இவ்வாறு மாறி மாறிச் செய்ய வேண்டும்.

(ஆ) இரண்டாம் வகை பஸ்கி

முழங்காலில் உட்கார்ந்திருக்கும் நிலையிலிருந்து கால்பாக அளவு (Quarter Twist) உடலை இடப்புறம் திருப்பி, இரு கைகளையும் இடப்புறமாக திருப்பி, இடப்புறம் உள்ள தரையைத் தொடவேண்டும்.

இரு கைகளையும் நெஞ்சின் முன்புறமாக நீட்டி, பின்னர் தாழ்த்திக் கொண்டு சென்று தரையில் பதிக்கவும். பிறகு, முன்பிருந்த நிலைக்கு வந்து விடவும்.

இதைப் போலவே வலப்புறமும் செய்ய வேண்டும். இவ்வாறு மாறிமாறி செய்ய வேண்டும்.

(இ) மூன்றாம் வகை பஸ்கி

முழங்காலிட்டு உட்காரும் நிலையிலிருந்து, இந்த பஸ்கியையும் தொடர வேண்டும்.

முழங்கால்களில் வைத்திருந்த இரு கைகளையும் எடுத்தபிறகு, இடது கையைக் கொண்டுவந்து, உள்ளங்கை கீழ் நோக்கி இருக்குமாறு நெஞ்சுக்கு அருகில் கொண்டு வந்து, இடக்கை கட்டை விரல் நெஞ்சினை நோக்கிக் காட்டியிருக்க, வலது கையை வலப்புறத்திலிருந்து, தரைக்கு இணையாக இருப்பதுபோல தோள் மட்டத்திற்குக் கொண்டு வந்து சமநிலையாக வைத்து நீட்ட வேண்டும்.

இடப்புறம் செய்ததுபோலவே வலப்புறமும் செய்ய வேண்டும். பிறகு, அடுத்தடுத்து மாறி மாறிச் செய்ய வேண்டும்.

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

எஸ்.நவராஜ் செல்லையா அவர்கள்

ஒரு மிகச் சிறந்த உடற்பயிற்சி ஆசிரியர் மற்றும் தமிழ் எழுத்தாளர் ஆவார். (பிறப்பு 1937 – இறப்பு 2001)

இவர் விளையாட்டு, உடற்பயிற்சி, உடல்நலம், விளையாட்டுத் துறை (ஆங்கிலம் தமிழ்) அகராதி உள்ளிட்ட 27 நூற்களை எழுதியுள்ளார். இவரின் நூல்களை 2010 -2011 இல் தமிழ் நாடு அரசு நாட்டுடைமை ஆக்கியது.

முதன் முதலாக விளையாட்டுத்துறை பற்றி ஆய்வு செய்து, சென்னைப் பல்கலைக் கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றவர் இவர்.

விளையாட்டுக் களஞ்சியம் மாத இதழை 1977 முதல் வெளியிட்டு அதன் ஆசிரியராகவும் பணியாற்றி வந்தார்.

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.