நாற்பது வயதைக் கடந்ததும், லேசாக கால் வலித்தாலே, மனதிற்குள் ஒருவித அச்சம் உண்டாகும். எங்கே மூட்டுவலி வந்து முடக்கிப் போட்டுவிடுமோ என்ற பயம்தான் காரணம்.
இயல்பு வாழ்க்கையே முடக்கி, சொந்த வேலைகளைக்கூட, சுயமாகச் செய்ய முடியாமல், நொந்து போகும் அளவுக்கு செய்துவிடும் மூட்டுவலி, இன்றைக்கு பெரும் அளவில் பலருக்கும் இருப்பதுதான்.
மனிதனை வாட்டி வதைத்து, அன்றாட வாழ்க்கை நிகழ்வுகளையே பாதிக்கும் அளவிற்கு வேதனையை ஏற்படுத்தும் இந்த நோய், கீல்வாதம், முழங்கால் மூட்டுவலி, மூட்டுத் தேய்மானம் என்றெல்லாம் பொதுவாக அழைக்கப்படுகிறது.
மூட்டுத் தேய்மானம் பொதுவாக ஆண்களைவிட பெண்களையே அதிகம் பாதிக்கிறது. இருப்பினும் நாற்பத்தைந்து வயதினைக் கடந்த ஆண், பெண் என இருபாலினத்தவரும் மிகுந்த பாதிப்பிற்கு உள்ளாகின்றனர் என்பதே உண்மை.
முழங்கால் மூட்டுவலி உண்டாகக் காரணங்கள்
கீல்வாதம் என்ற இதன் பெயருக்கான காரணத்தை கொஞ்சம் யோசித்தாலே ஒரு விஷயம் புரியும்.
பொதுவாக கீல் என்பது கதவுகள், ஜன்னல்களில் மூடுவதற்கும், திறப்பதற்கும் வசதியாகப் பொருத்தப்படுவது. கீல் இறுகிவிட்டால் கதவு, ஜன்னலைத் திறப்பது கடினமாகிவிடும்.
அதற்காக அதில் கிரீஸ் என்கின்ற மசகினைப் போடுவார்கள். வீடுகளில் கீல் பாகங்களில் எண்ணெய் விடுவதும் உண்டு. மசகு என்பது அவசியமானாலும், இது அதிகமானால் சில சங்கடங்கள் ஏற்படும். இப்போது விசயத்திற்கு வருவோம்.
உடலில் மடக்க நீட்ட என்று அவயங்களில் கீல் போன்று உள்ளவைகள்தான் மூட்டுக்கள். இந்த கீல்கள் அதாவது மூட்டுக்கள் இறுகிப் போகும் போதுதான் தேய்மானம் ஏற்படுகிறது.
பொதுவாக உடலில் உள்ள எல்லா மூட்டுகளிலுமே கீல்வாத பாதிப்பு வரக்கூடும் என்றாலும், பெரும்பாலும் முழங்கால் மூட்டே பெரும் பாதிப்பிற்கு உண்டாகிறது.
இதற்கு காரணம், நம்மால் அதிகளவில் பயன்படுத்தப்படுவது அந்த மூட்டுதான். நாம் அலட்சியமாக இருப்பதும் அந்த மூட்டின் செயல்பாட்டில்தான்.
முழங்கால் மூட்டு எலும்புகளின் அதீத செயல்பாடுகளால் ஏற்படும் உராய்வினால், மூட்டுகளில் உள்ள குருத்தெலும்பு (Cartlage) மற்றும் மூட்டைச் சுற்றியுள்ள தசைநார்கள் பாதிப்படைந்து விடுகின்றன.
இதனால் மூட்டு எலும்புகளுக்கு இடையே உள்ள இடைவெளி குறைவதால், ஒன்றோடு ஒன்று நெருங்கி உராய்கிறது. அதன் காரணமாக மூட்டு தேய்கிறது.
இப்படி தேயும் சமயத்தில், இயல்பாக மூட்டுகளில் ஏற்படும் சிறு உராய்வினைத் தடுக்க, மூட்டுகளில் உள்ள சைனோவியல் (Synoviam) என்ற திரவமானது, அதிகமாக சுரந்து மூட்டைச் சுற்றி தேங்கி நீர்க்கோர்த்து, வீக்கத்துடன் வலியும் உண்டாகிறது.
அதிக உடல் எடை காரணமாகவும் மூட்டுகள் தேய்மானம் அடைகின்றன. உடலில் எடையினைத் தாங்குபவை கால்களே. எனவே அதிக எடையினாலும் இந்த பாதிப்பு நிகழ்கிறது.
விபத்துகளின் காரணமாக மூட்டுகளில் ஏற்படும் பாதிப்புகளும் மூட்டுத் தேய்மானத்திற்கு காரணமாகின்றன.
மூட்டுகளில் அறுவைசிகிச்சை மேற்கொண்டவர்கள்,
முழங்கால் மூட்டுகளை அதிகமாக உபயோகித்து பணிபுரிபவர்கள்,
விளையாட்டினால் ஏற்படும் பாதிப்புகள்,
பரம்பரையாக ஏற்படும் மூட்டுவலி,
முடக்குவாத பாதிப்பிற்கு உள்ளானோர்கள் ஆகியோருக்கும் இந்நோய் பாதிப்பு ஏற்படுகிறது.
சிலருக்கு உடலில் சுரக்கும் சில ஹார்மோன்களின் கட்டுப்பாடு இல்லாமல் போவதாலும்கூட, மூட்டுத் தேய்மானம் உண்டாகிறது.
இத்தகைய காரணங்களோடு, மூட்டுகளில் ஏற்படக்கூடிய நோய்த்தொற்று பாதிப்புக்களும் கீல்வாதத்தினை ஏற்படுத்தக் கூடும்.
முழங்கால் மூட்டுவலி அறிகுறிகள்
முதல்நிலை அறிகுறிகள்
மூட்டுகளில் வலி
மூட்டுகளில் இறுக்கம் (குறிப்பாக காலை நேரங்களில்)
மண்டியிடும்போதோ முழங்காலை மடக்கும்போதே கூச்ச உணர்வு
அன்றாட அவசியத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதில் சிரமம்
இரண்டாம் நிலை அறிகுறிகள்
பாதிக்கப்பட்ட மூட்டுகளில் இயக்கமற்ற நிலை
தசைகள் வலுவிழப்பு
மூட்டுகளில் ஸ்திரத்தன்மை இழப்பு
மூட்டுகள் அசைவின்போது சத்தம், தாங்க முடியாத வலி
பரிசோதனைகள்
எக்ஸ்-ரே, இரத்த பரிசோதனைகள், எம்.ஆர்.ஐ.ஸ்கேன் ஆகிய பரிசோதனைகள் மூலம் மூட்டுத் தேய்மானத்தை அறியலாம்.
அத்தோடு எந்த அளவிற்கு பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதைக் கண்டறியவும் இத்தகைய பரிசோதனைகள் அவசியமாகின்றன.
பொது மருத்துவ சிகிச்சை
பொது மருத்துவ சிகிச்சையில் மூட்டுத் தேய்மானம் ஆரம்ப நிலையில் உள்ளவர்களுக்கு வலி குறைப்பிற்கான மருந்துகள் அளிக்கப்படுகின்றன. அதோடு மூட்டுத் தேய்மானத்தின் தீவிரத்தைத் தடுப்பதற்கான பயிற்சிகளும் தரப்படுகின்றன.
அதிகமான மூட்டு பாதிப்பு உள்ள நோயாளிகளுக்கு பாதிப்பிற்கு ஏற்ப அறுவைச் சிகிச்சையோ (Arthroscopy) அல்லது மூட்டு மாற்று அறுவைச்சிகிச்சையோ (Knee replacement) மேற்கொள்ளப்படுகிறது.
இத்தகைய சிகிச்சை பெற்றாலும், சிகிச்சைக்கு பிறகான பயிற்சிகள் முக்கியம்.
இந்த நோயில் இருந்து மீள இயன்முறை (பிசியோதெரபி) சிகிச்சை முக்கியமானதாக பரிந்துரைக்கப்படுகிறது.
அதற்குக் காரணம் இயன்முறை சிகிச்சை மூலம் மூட்டுகளில் ஏற்பட்டுள்ள வீக்கம் மற்றும் மூட்டுகள் உராய்வதால் உண்டாகும் வலியைக் குறைத்தல்.
மேலும் பாதிக்கப்பட்ட மூட்டுகளில் ஏற்படும் இறுக்கத்தைக் குறைத்து நோயின் தீவிரம் அதிகரிக்காமல் இருக்க உதவுதல்.
உடல் எடையை குறைக்க அறிவுறுத்தல் மற்றும் மூட்டுக்களில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துதல்.
வலி குறைந்த தசைகளை உடலியக்கப் பயிற்சிகளின் மூலம் வலுப்படுத்துதல்.
நோயாளிகளின் அன்றாட வாழ்வின் நடைமுறைத் தேவைகளை தாமே செய்து கொள்ளும் வகையில் அவரது உடல்நிலையை மேம்படுத்த உதவுதல்.
மேலும் ஊக்கப்படுத்துதலின் மூலம், நோயாளிக்கு விரைவில் மூட்டுத் தேய்மான நோயில் இருந்து நிவாரணம் கிடைக்கிறது.
இயன்முறைச் சிகிச்சைகள் தொடங்கும்போது சிறிது கடினமாக இருப்பது போல் தோன்றும் என்பதால் சிலர் இதனைத் தவிர்க்க நினைப்பது உண்டு.
அதேபோல் இந்த சிகிச்சையை மேற்கொள்பவர்கள் ஓரளவிற்கு நிவாரணம் தெரியத் தொடங்கும்போதே போதும் என்று நிறுத்திவிடுவதும் உண்டு.
மேற்கூறிய இரண்டுமே தவறானவையாகும்.
இதுவரை பழக்கம் இல்லாததால் ஆரம்பத்தில் இதற்கான பயிற்சிகள் சிறிது சிரமம்போல் தோன்றும். இது மனத்தின் காரணமே தவிர, உடலுக்குப் பெரிதாகச் சங்கடம் ஏதும் வராது.
அதேபோன்று சிகிச்சைகள் முழுமையாக முடிந்து மூட்டுகள் இயல்பு நிலையை அடைந்துவிட்டன என்று மருத்துவர் பரிந்துரைக்கும் வரை இயன்முறை சிகிச்சையைத் தொடர்வதே நல்லது.
மூட்டுத் தேய்மானத்திற்கான சிகிச்சைகள்
மூட்டுகளில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்க மெழுகுச் சிகிச்சை (WAX THEARPY) மற்றும் ஐஸ் தெரபி (ICE THEARPY) போன்ற சிகிச்சைகள் இயன்முறை மருத்துவர்களால் அளிக்கப்படுகிறது.
வலியைக்குறைக்க குறுக்கலை மின்சிகிச்சை (SHORT WAVE THERAPY), மின்தூண்டுதல் சிகிச்சை, HYDRO THERAPY, மசாஜ் சிகிச்சை, அல்ட்ரா சவுண்ட் போன்றவை நோயாளியின் பாதிப்பினைப் பொறுத்து அளிக்கப்படுகிறது.
மூட்டு வலியால் பாதிக்கபட்டவர்கள், நோயின் கடுமையிலிருந்து விடுபட தாங்களாகவே சில நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.
அவற்றுள் முதலாவதும் முக்கியமானதுமான நடவடிக்கை உடல் எடையைக் குறைப்பதுதான்.
தினமும் குறிப்பிட்ட நேரம் நடைப்பயிற்சி மற்றும் இலகுவான ஏரோபிக் பயிற்சிகள் செய்யலாம்.
பாதிக்கப்பட்ட மூட்டுகளுக்கு அதிக வேலைப்பளு கொடுக்காமல் இருப்பது முக்கியம்.
உடல் செயல்பாடுகளின்போது உடல் எடையை மூட்டுகளில் அழுத்தம் மற்றும் தாக்கத்தை ஏற்படுத்தாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் மட்டுமே வலிகுறைப்பு மற்றும் வெளிப்பூச்சு மருந்துகளை நோயாளிகள் பயன்படுத்த வேண்டும்.
அறுவைச்சிகிச்சைப் பிறகு இயல்பாக நடப்பதற்கும், அன்றாடச் செயல்களை தடுமாறாமல் செய்வதற்கும் மூட்டு இயக்க நிகழ்வுகளை மேம்படுத்துவதற்கும் இயன்முறை மருத்துவரின் ஆலோசனைப்படி உடலியக்கப் பயிற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.
மூட்டு வலியைக் குறைக்கவும், நோயின் தாக்கத்தைக் குறைக்கவும், மருத்துவர்களின் ஆலோசனையின்படி முழங்கால் மூட்டுப்பட்டை (Knee Brace), மூட்டு உறைகள் (Knee Cap) போன்றவற்றை அணியலாம்.
மூட்டுத் தேய்மானம் வந்தால் வாழ்க்கையே முடிந்துவிட்டது என்று தீர்மானித்து அச்சப்பட்டுக் கிடப்பதைவிட, முறையான மருத்துவம் மற்றும் இயன்முறைச் சிகிச்சையினால் இழந்த ஆரோக்கியத்தை மீண்டும் பெற்றிட முடியும் என்பதைப் புரிந்து கொண்டாலே போதும். மூட்டுவலி உங்களை முடக்காமல் தவிர்த்துவிட முடியும்.
எனவே மின்சிகிச்சை என்றதும் பயப்படவோ, தவிர்த்து ஒதுக்கவோ தேவையில்லை என்பதே நிதர்சனமான உண்மை.
க.கார்த்திகேயன் அவர்கள்
தமிழ்நாடு இயன்முறை மருத்துவர்கள் நலச்சங்கத்தின் மாநிலத் தலைவர்.
ஆர். கே. இயன்முறை மருத்துவமனை மற்றும் புனர்வாழ்வு மையத்தின் நிர்வாக இயக்குநர்.
அண்ணாமலைப் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியில் 2007 ஆம் ஆண்டிலிருந்து 2012 ஆம் ஆண்டுவரை உதவி விரிவுரையாளராகப் பணியாற்றியவர்.
அண்ணாமலைப் பல்கலைக் கழகம் – ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் இளையோர் இயன்மருத்துவப் பட்டம் (Bachelor of Physiotherapy), முதுநிலை உளவியல் ஆற்றுப்படுத்துதல் பட்டம்(M.S.,(Psychotherapy) படித்தவர்.
விளையாட்டு மருத்துவம் (Sports Medicine & Rehabilitation) ), மூட்டுவலிக்கான சிறப்பு சிகிச்சை (Ligament Injuries & Rehabilitation) ஆகிய சான்றிதழ் படிப்புகளையும் படித்தவர்.
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!