மூன்றாமிடத்தில் குரு

மனிதவாடை அற்ற சிலமாதப் பொழுதுகளில்,

பொரிக்காக வாய் பிளந்து அலைந்தன

கோயில் குளங்களிலெல்லாம் மீன்கள்.

 

கால்நடையோ, பறவையோ நீரருந்த வரும் போது,

மொசுமொசுத்த அகோரப் பசியுடைய

அந்த மீன்கள்,

முதலையாய் உருவெடுத்து

அதைக் குதறித் தின்றுவிடக் கூடாதென

கடவுளிடம் மண்டியிட்டு மன்றாடின.

 

கடவுளும் இவ்வாறே ஆசியளித்தார்…

“உங்கள் குத்தகைக்காரன் நூறாண்டு வாழட்டும்”

 

குத்தகைக்காரனுக்கு எங்கே தெரியும்?

மாதா – பிதா – குரு என்னவென்று.

 

மலை முகடுகளிலிருந்து உருண்டு வரும் பாறைகள் சிதற,

மேகத்திற்கும் குளத்திற்கும் நடுவே சூறாவளியொன்று

குளத்திலுள்ள மீன்களை அள்ளிச் சென்று,

பனிக்கட்டிகளுக்கு இடையே தூங்க வைக்கும்

கனவொன்றைக் கண்டன,

பசியாறத் துடித்த

மீன்கொத்திப் பறவைகள்.

பாரதிசந்திரன்
(முனைவர் செ சு நா சந்திரசேகரன்)
திருநின்றவூர்
9283275782

 

2 Replies to “மூன்றாமிடத்தில் குரு”

  1. கலியுக கல்விக் கடவுள்களின் லீலைகளை ரசிக்க மனமின்றி, தனது பசியைப் பதிவிடுகிறது …
    மாதா மாதம் பொரிக்காக காத்திருக்கும் கலியுக கடவுள்களால் குத்தகை எடுக்கப்பட்ட கோயில் குளங்களை நாடி இருக்கும் இந்த மீன்…..

  2. கொரானா காலம் சில தொழில்சார் வாழ்வியலைக் கெடுத்திருக்கிறது. நசுக்கப்பட்ட குடும்பச்சூழல். திணறி மூச்சு முட்டி சாவின் விளிம்பிற்குச் செல்ல எத்தனித்த ஊழியர்கள் எத்தனை எத்தனையோ… அதன் நடுவே பள்ளி ஆசிரியர்கள் பட்ட வேதனை படும் சமூகத் துயரம்…. வேறு தொழில் தெரியாமல் இதை நமபி வாழும் சூழல்….. அழகாக ஆசிரியர்களின் உணர்வை சுட்டிச் செல்லுகிறது இக்கவிதை…….

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.