மூன்று மீன்கள்

அந்தியூர் என்ற ஊரில் இருந்த செங்குளத்தில் மூன்று மீன்கள் நண்பர்களாக வசித்து வந்தன.

வரும் முன் காப்போம், வரும் போது காப்போம், வந்த பின் காப்போம் என்பவை அம்மூன்று மீன்களின் பெயர்கள் ஆகும்.

ஒருநாள் செங்குளத்திற்கு மீனவர்கள் நான்கு பேர் வந்தனர். அவர்களில் ஒருவன் “இக்குளத்தில் அதிக மீன்கள் இருக்கின்றன. நாம் இங்கு வலையைப் போட்டு இங்குள்ள மீன்களை பிடித்து சந்தையில் விற்போம்.” என்று கூறினான்.

அதற்கு மற்றொருவன் “நாளைக்கு காலையில் வந்து மீன்களைப் பிடிப்போம்” என்றான். மீனவர்களின் பேச்சினை வரும் முன் காப்போம் மீன் கேட்டது.

அது மீனவர்கள் பேசியதை தன் நண்பர்களிடம் கூறி எப்படியாவது தப்பிக்க வேண்டும் என்று மனதிற்குள் எண்ணியது.

சிறிது நேரத்தில் வரும் போது காப்போம் மற்றும் வந்த பின் காப்போம் மீன்கள் இரண்டும் வரும் முன் காப்போம் மீனினைக் காண வந்தன. தன் நண்பர்களிடம் நடந்தவற்றை வரும் முன் காப்போம் கூறியது.

பின் அவர்களிடம் “வாருங்கள் நாம் இப்போதே கால்வாய் வழியே செல்லும் நீரின் மூலம் அடுத்து இருக்கும் பச்சையூரணிக்குச் சென்று விடுவோம்” என்று கூறியது.

அதற்கு வரும் போது காப்போம் மீன் “இப்போது ஏன் இப்படிப் பயப்படுகிறாய்?. நாளை காலையில் தானே மீனவர்கள் வருவார்கள். அப்போது போய்க் கொள்ளலாம்.” என்றது.

வந்த பின் காப்போம் மீன் “நீங்கள் இருவரும் அவசரப்படுகிறீர்கள். நாளை மீனவர்கள் வந்து வலையை வீசிய பின்பு பார்த்துக் கொள்ளலாம்.” என்று கூறியது.

வரும் முன் காப்போம் மீன் “சரி நீங்கள் இருவரும் இருங்கள். நான் இப்போது கால்வாயின் வழியே பச்சையூரணிக்குச் செல்கிறேன்.” என்று கூறிவிட்டு சென்று விட்டது.

மறுநாள் காலையில் மீனவர்கள் மீன்களைப் பிடிக்க செங்குளத்திற்கு வந்தனர்.

அதனைப் பார்த்ததும், வரும் போது காப்போம் மீன் வந்த பின் காப்போம் மீனிடம் “வா நாம் இருவரும் இப்போதே கால்வாயின் வழியாக பச்சையூரணிக்குச் செல்வோம்” என்று கூறியது.

அதற்கு வந்த பின் காப்போம் “நீ வேண்டுமானால் செல். அவர்கள் வலையை வீசிய பின் நான் வருகிறேன்” என்று கூறியது. வரும் போது காப்போம் மீன் “சரி நான் வருகிறேன்” என்று கூறி பச்சையூரணிக்கு புறப்பட்டது.

மீனவர்கள் வலையை மீன்பிடிக்க விரித்தனர். வந்த பின் காப்போம் மீன் மீனவர்களின் வலையில் சிக்கியது. தனது நண்பர்களின் பேச்சினைக் கேட்காமல் வலையில் மாட்டிக் கொண்டதை எண்ணி வருந்தியது.

நாம் எப்போதும் செயல்களை முன்கூட்டி திட்டமிடுதல் அவசியம். இல்லை என்றால் அவதிப்பட நேரிடும் என்பதை மூன்று மீன்கள் கதையிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

– வ.முனீஸ்வரன்

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.