மூலிகைத் தாவரங்களை இடித்தோ, பிழிந்தோ, வாட்டியோ சாறு தயாரித்துக் கொள்ளலாம். அப்படிக் கிடைக்கும் சாற்றை மூன்று மணி நேரத்திற்குள் பயன்படுத்தி விட வேண்டும்.
அருகம்புல் சாறு
அருகம்புல்லை சிறிது சிறிதாக அரிந்து கழுவி இடித்துப் பிழியச் சாறு கிடைக்கும். இதனை மூக்கில் இட்டால் மூக்கிலிருந்து இரத்தம் வடிதல் நிற்கும். இதனைப் புண்களில் தடவினால் புண்கள் ஆறும்.
வெங்காயச் சாறு
வெங்காயத்தை தோல் உரித்து இடித்துப் பிழிய சாறு கிடைக்கும். இதனை தினமும் இருவேளை ஐந்து முதல் பத்து மில்லி அருந்தி வந்தால் மயக்கம், வாந்தி, வயிற்று வலி, வயிற்றுப் பொருமல் நீங்கும். இதனைக் காதில் விட காது வலி நீங்கும். உடலில் பூச பூச்சிக் கடிகள் தீரும்.
கற்றாழைச் சாறு
கற்றாழை மடலின் மேல் தோலை நீக்கி விட்டு உட்புறம் உள்ள வழவழப்பான சதைப் பகுதியைச் சிறுசிறு துண்டுகளாக்கி நன்கு கழுவி அத்துடன் படிகாரத்தூள் அல்லது கடுக்காய்த்தூள் சேர்த்து ஒரு பாத்திரத்தில் சாய்ந்த நிலையில் வைக்க அதிலிருந்து சாறு வடிந்து சேகரமாகும்.
இதனை தினமும் ஐந்து முதல் பத்து மில்லி அருந்தி வந்தால் உடல் சூடு, வெள்ளைப் படுதல், நீர்கடுப்பு மற்றும் நீர் எரிச்சல் குணமாகும்.
மருள் சாறு
மருளின் தண்டுப் பகுதியை நன்கு அனலில் வாட்டிப் பிழிய சாறு கிடைக்கும். இதனை ஒன்று முதல் மூன்று துளிகள் காதில் இட வேண்டும். இதனால் காது இரைச்சல் மற்றும் காதிலிருந்து சீழ் வடிதல் குணமாகும்.