மூளைக்கான பூஸ்டர் பாதாம் பருப்பு

மூளைக்கான பூஸ்டர் பாதாம் சிறிவர்கள் முதல் பெரியவர்கள் வரை உண்ண ஏற்ற அருமையான பருப்பு ஆகும்.

மூளைக்கானது மட்டுமில்லாமல், இது கொழுப்பினை குறைத்து, இதயநலத்தையும் பேணுகின்ற இயற்கை நிவாரணி.

இன்றைக்கு மட்டுமில்லாமல் பழங்காலந்தொட்டே பல்வேறு நாடுகளில் இதனை உண்ணும் பழக்கம் நடைமுறையில் இருந்துள்ளது.

பைபிளில் இது பழங்களில் சிறந்தது எனவும், புனிதத் தன்மையானதாகவும் கூறப்பட்டுள்ளது. சீனாவில் இது பெண்களின் அழகு என்று கருதப்படுகிறது.

 

உலகெங்கும் சுமார் 430 பாதாம் இனங்கள் காணப்படுகின்றன. இவை உலகின் வடக்கு மிதவெப்ப மண்டலங்களில் பரவிக் காணப்படுகின்றன.

பாதாமானது அப்படியேவோ, ஊறவைத்தோ உண்ணப்படுகிறது. பாதாமின் அறிவியல் பெயர் ப்ரூனஸ் டல்சிஸ் ஆகும்.

பாதாமில் இனிப்பு, கசப்பு என இரண்டு வகைகள் உள்ளன. இனிப்பு வகையானது உண்ணவும், கசப்பு வகை எண்ணெய் எடுக்கவும் பயன்படுத்தப்படுகிறது. இந்த பாதாமெண்ணெய் உணவின் சுவை மற்றும் மணத்தினை அதிகரிக்கச் செய்கிறது.

பாதாமின் அமைப்பு

பாதாமானது 3-8 மீட்டர் உயரம் வளரக்கூடிய சிறிய இலையுதிர் மரவகையைச் சார்ந்தது.

ஒவ்வொரு வசந்த காலத்திலும் இம்மரமானது இளஞ்சிவப்பு கலந்த வெள்ளை நிறப் பூக்களைப் பூக்கின்றது.

 

பாதாம்பூ
பாதாம்பூ

 

இப்பூக்கள் இலையுதிர் காலத்தில் பழங்களாக மாறுகின்றன.

 

இளம் பாதாம் காய்
இளம் பாதாம் காய்

 

முதிர்ந்து வெடித்த பாதாம்
முதிர்ந்து வெடித்த பாதாம்

 

இப்பழங்கள் ட்ரூப் வகையைச் சார்ந்தவை. இம்மரமானது நடப்பட்டு ஐந்து முதல் ஆறு வருடங்களில் பயன் கொடுக்கத் தொடங்கும்.

 

மரத்தில் பாதாம் காய்கள்
மரத்தில் பாதாம் காய்கள்

 

 

பாதாம் கூட்டினுள்
பாதாம் கூட்டினுள்

 

பாதாமானது 2செமீ நீளத்திலும், 1செமீ அகலத்திலும் 1முதல்1.5கிராம் எடையிலும் பழுப்புநிற தோலால் மூடப்பட்டு காணப்படுகிறது.

பாதாமின் வரலாறு

பாதாமானது மத்திய தரைக்கடல் காலநிலையில் செழித்து வளரும் இயல்பினைக் கொண்டுள்ளது.

பாதாமின் தாயகம் மத்திய கிழக்கு மற்றும் தெற்காசிய நாடுகள் ஆகும்.

பாதாமானது முதலில் மத்திய தரைக்கடல் பகுதியிலிருந்து வடக்கு ஆப்பிரிக்கா, ஆசியா, தெற்கு ஐரோப்பிய பகுதிகளுக்கு பரவியது.

தற்போது கலிஃபோர்னியா உலகின் பாதாமின் உற்பத்தியில் 80 சதவீதத்தைப் பூர்த்தி செய்கிறது.

சௌதி அரேபியா, லெபனான், ஈரான், துருக்கி, இஸ்ரேல், ஜோர்டான், சிரியா போன்ற நாடுகளிலும் தற்போது இது பரவிக் காணப்படுகிறது.

பாதாமில் உள்ள ஊட்டச்சத்துக்கள்

பாதாமில் விட்டமின் இ மிகஅதிகளவும், பி2 (ரிபோஃப்ளோவின்) அதிகளவும், பி1 (தயாமின்), பி3 (நியாசின்), பி5 (பான்டாதெனிக் அமிலம்), பி6 (பைரிடாக்ஸின்), பி9 (ஃபோலேட்டுகள்) ஆகியவையும் காணப்படுகின்றன.

இதில் காப்பர், மாங்கனீசு மிகஅதிகளவும், மெக்னீசியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து ஆகியவை அதிகளவும், கால்சியம், பொட்டாசியம், துத்தநாகம், செலீனியம் ஆகியவையும் உள்ளன.

மேலும் இப்பருப்பில் கார்போஹைட்ரேட், புரதச்சத்து அதிகளவு நிறைவுறா ஒற்றை கொழுப்பு அமிலங்கள், நார்ச்சத்து ஆகியவையும் இருக்கின்றன.

பாதாமின் மருத்துவப் பண்புகள்

மூளைக்கான பூஸ்டர்

பாதாமில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மூளையின் வளர்ச்சி மற்றும் ஆரோக்கியத்திற்கு உதவுகின்றன. ஆதலால் வளரும் குழந்தைகளுக்கு அத்தியாவசியமான உணவாகக் கருதப்படுகிறது.

இதில் உள்ள எல்-கார்னைடைன், ரிபோஃப்ளோவின் மூளையின் செயல்பாடுடன் தொடர்புடையவை. பாதாமானது மூளையின் நினைவுதிறனை அதிகப்படுத்துவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

பெரியவர்கள் இதனை உண்ணும்போது மூளைமறதி நோயான அல்சைமர்ஸ் வருவது தடுக்கப்படுகிறது.

இதய நலத்திற்கு

இதயநலத்தைப் பாதுகாக்கும் ஒற்றை நிறைவுறா கொழுப்பு அமிலங்கள், ஆன்டிஆக்ஸிஜென்ட்டுகள் என்ற இரண்டு முக்கிய வேதிப்பொருட்கள் இதில் காணப்படுகின்றன.

இது குறிப்பாக ஆக்ஸிஜனேற்ற ஃபிளவனாய்டுகளை வழங்குகிறது. பாதாமின் தோலில் இருக்கம் தாவர அடிப்படையிலான கலவைகள், தமனி ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும், வீக்கத்தைக் குறைப்பதற்கும் வைட்டமின் ஈ உடன் வேலை செய்கின்றன.

மேலும் இதயநலத்திற்கு தேவையான அர்ஜினைன், மெக்னீசியம், தாமிரம், மாங்கனீசு, கால்சியம் மற்றும் பொட்டாசியம் ஆகியவற்றையும் இது கொண்டுள்ளது.

கெட்ட கொழுப்புகளைக் குறைத்து நல்ல கொழுப்புகளின் அளவினை அதிகரிக்க இது செய்கிறது.

எலும்புகள் மற்றும் பற்களின் ஆரோக்கியத்திற்கு

எலும்புகள் மற்றும் பற்களின் உருவாக்கம் மற்றும் பராமரிப்பிற்குத் தேவையான பாஸ்பரஸ் மற்றும் மெக்னீசியத்தை பாதாமானது கொண்டுள்ளது.

இதனால் பற்சிதைவு, பல்சொத்தை போன்றவை ஏற்படாமல் தடுக்கவும், எலும்பு முறியாமலும், ஆஸ்டியோஃபோரோஸிஸ் ஏற்படாமல் தடுக்கவும் பாதாமினை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ளலாம்.

தோலின் பாதுகாப்பிற்கு

பாதாமானது விட்டமின் ஈ மற்றும் பிற ஆக்ஸிஜனேற்றிகளின் சிறந்த மூலமாகும். இவை சருமத்தை வளவளப்பாக்குவதோடு சருமம் வயதாவதையும் குறைக்கிறது.

இதில் குவெர்செட்டின், கேம்ப்ஃபெரோல் மற்றும் ஐசோர்ஹாம்நெடின் உள்ளிட்ட கேடசின், எபிகாடெசின் மற்றும் ஃபிளாவனோல் ஆக்ஸிஜனேற்றிகள் அதிகளவு உள்ளதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.

இவை தோல் புற்றுநோய் மற்றும் சேதத்தை எதிர்ப்பதோடு மாசு மற்றும் புறஊதா கதிர்களின் செயல்பாடுகிளலிருந்தும் பாதுகாப்பளிக்கின்றன.

மேலும் பாதாமில் உள்ள கொழுப்புக்கள் சருமத்தை ஈரப்பதத்துடன் வைப்பதோடு காயங்களை குணப்படுத்தவும் உதவுகிறது.

கேசத்தை பராமரிக்க

லினோலெனிக் மற்றும் லினோலிக் உள்ளிட்ட சிலவகையான கொழுப்பு அமிலங்கள் முக்கியமானவையாகவும், ஒட்டு மொத்த உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதாகவும் இருக்கின்றன.

இவ்வகை அமிலங்களை நம்உடலால் உற்பத்தி செய்ய இயலாது. பாதாமை உண்ணும்போது இவ்வகை அமிலங்கள் நமக்கு கிடைக்கின்றன. இவை கெட்ட கொழுப்பை குறைப்பதோடு கேச பராமரிப்பிற்கும் உதவுகின்றன.

ஆரோக்கியமான உடல்எடை இழப்பிற்கு

இதில் உள்ள ஒற்றை நிறைவுறா கொழுப்பு அமிலங்கள் பசியைக் கட்டுப்படுத்துவதோடு அதிகமாக உண்ணுவதையும் தடைசெய்கிறது.

இதில் காணப்படும் நார்ச்சத்து வயிறு நிரம்பிய உணர்வை ஏற்படுத்துவதோடு குடல்இயக்கங்களை சீராக்கி நச்சினை வெளியேற்றி ஆரோக்கியமான உடல்எடை இழப்பினை உண்டாக்குகிறது.

கர்ப்பிணி பெண்களின் ஆரோக்கியத்திற்கு

கர்ப்பத்தில் இருக்கும் குழந்தையின் ஆரோக்கியத்திற்குத் தேவையான ஃபோலிக் அமிலத்தை பாதாமானது அதிகளவு கொண்டுள்ளது.

ஃபோலிக் அமிலம் ஆரோக்கியமான செல்களின் வளர்ச்சியை ஊக்குவிப்பதோடு திசுக்களின் உருவாக்கத்திற்கும் உதவுகிறது.

ஆகவே கர்ப்பிணி பெண்கள் தங்களின் ஆரோக்கியம் மற்றும் குழந்தையின் ஆரோக்கிய வளர்ச்சிக்கு பாதாமை உட்கொள்வது அவசியம்.

ஊட்டச்சத்து உறிஞ்சுதலை அதிகரிக்க

பாதாமில் உள்ள கொழுப்பு அமிலங்கள் விட்டமின் ஏ, டி போன்ற கொழுப்பில் கரையும் விட்டமின்களை நமது உடல் உறிஞ்ச உதவுகிறது.

மேலும் இது இரைப்பையில் அமிலத்தன்மையைக் குறைத்து உடலின் பி.எச்-ஐ சமப்படுத்தும் திறன் கொண்டது.

உடலின் பி.எச். சமநிலையானது ஆரோக்கியமான செரிமானம், நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் நோய் தடுப்புக்கு ஆகியவற்றிற்கு மிகவும் அவசியமானது.

இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் ஊட்டச்சத்து பிரித்தெடுத்தல், கொலஸ்ட்ரால் தொகுப்பு மற்றும் பித்த அமில உற்பத்தியில் ஈடுபடும் செரிமான நொதிகளை கட்டுப்படுத்துதல் ஆகியவற்றிற்கும் உதவுகின்றன.

பாதாமினை தேர்ந்தெடுக்கும் முறை

பாதாமினை தேர்வு செய்யும்போது ஒரே சீரான ஆரஞ்சு கலந்த பழுப்பு நிறத்திலும், ஒரே மாதிரியான அளவிலும், கனமானதாகவும் உள்ளவற்றை தேர்வு செய்யவும்.

மேற்புறத்தில் வெட்டுக்கள், விரிசல்கள் இல்லாமலும், மக்கிய வாசனை இல்லாதவற்றையும் தேர்வு செய்யவும்.

மூளைக்கான பூஸ்டர் பாதாம் என்பதை நினைவில் கொண்டு எல்லோரும் அதனை அடிக்கடி உணவில் சேர்த்து வளமான வாழ்வு வாழ்வோம்.

வ.முனீஸ்வரன்

 

One Reply to “மூளைக்கான பூஸ்டர் பாதாம் பருப்பு”

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.