மென்னீர் – நீருடன் ஓர் உரையாடல் – 15

வீட்டில் ஒவ்வொரு பகுதியாக சுத்தம் செய்துகொண்டு வந்தேன். அப்பொழுது எனது அறையின் பரணைச் சுத்தம் செய்ய முடுவு செய்தேன்.

ஒரு உயர்ந்த நாற்காலியின் மீது ஏறி நின்றுப் பார்த்தேன்.

பரணையில் அட்டைப் பெட்டிகள், சாக்கு மூட்டைகள் என பலப் பொருட்கள் இருந்தன. பயங்கர ஒட்டடை. தூசிப் படலம் அடர்த்தியாக இருந்தது.

“இதுல வேல செஞ்சா உடனே அலர்ஜி வந்திடும்” என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன்.

நாற்காலியிலிருந்து இறங்கிச் சென்று அலமாரியில் வைத்திருந்த முகக்கவசத்தை எடுத்து அணிந்துக் கொண்டேன்.

‘தூசி கண்ணுல விழுந்திடுச்சின்னா..’ மேசையின் அடியிலிருந்த அலமாரியில் வைத்திருந்த பிளாஸ்டிக்காலான பாதுகாப்புக் கண்ணாடியை எடுத்து அணிந்துக் கொண்டேன்.

மறுபடியும் நாற்காலியில் ஏறி, ஒவ்வொரு பொருளாக எடுத்து தரையில் கவனமுடன் வைத்தேன். கிழிந்த பைகள், புதிய சாமான்கள், பழைய இரும்பு பொருட்கள் என பல அவற்றில் இருந்தன.

அப்பொழுது, ஒரு அட்டைப் பெட்டியில் வாளியில் சுடுதண்ணீர் வைக்க உதவும் பழைய இம்மெர்ஷன் வாட்டர் ஹீட்டர் இருந்தது.

நீரில் முழுகும் பகுதியில் உப்புக்கள் தடிமனான அடுக்காக படிந்திருந்தன. அது செயல்படுமா என்று தெரியவில்லை. அதை எடுத்து ஓரமாக வைத்தேன்.

தொடர்ந்து, தேவையில்லாத பொருட்களை தனியாக பிரித்து வைத்தேன்.

பரணையை துடைப்பத்தால், நன்றாக சுத்தம் செய்தேன். தேவையான பொருட்களை மட்டும் மீண்டும் அட்டைப் பெட்டியிலேயே வைத்து, பரணையில் அடுக்கினேன்.

தேவையில்லாதவற்றை பிரித்து வீட்டின் முன்புறம் இருந்த படிகட்டுப் பகுதியின் அடியில் இருந்த காலி இடத்தில் வைத்தேன்.

அப்பொழுது, “டீ குடிக்க வாப்பா…” என்று அம்மா அழைக்கவே, கைகளை கழுவச் சென்றேன்.

மென்னீர் என்றால் என்ன?

ஒரு வாளியில் நீர் கொஞ்சமாக இருந்தது. இரண்டு உள்ளங்கைகளும் தூசியால் கருப்பாக இருந்தன. நீரில் கைகளை விட்டேன்.

“சார், என்ன பண்றீங்க?”

கைகளை விலக்கிப் பார்த்தேன். வாளியில் இருந்த நீர் தான் பேசியது.

“என்ன ஆச்சு?”

“சார், அப்படியே வாளி தண்ணீருல கைய விட்டா? ஒரு மக்குல (mug) எடுத்து கழுவுங்க சார்.”

“தண்ணீர் கொஞ்சமா தானே இருக்குன்னு நெனைச்சேன்.”

“ஓ, சார் உங்க கை, பயங்கர தூசியா இருக்கு. வீட்ட சுத்தம் செய்யறீங்களோ?”

“ஆமா, நீ சரியா சொல்லிட்டே.”

“பாத்தீங்களா, உங்க கையில இருக்குற தூசியக் கூட நான் தான் சுத்தம் செய்யிறேன்.”

“சரி தான். ஆனா, நீ மென்னீரா இருக்குறப்போ, இன்னும் நல்லா எங்கள சுத்தம் செய்துக்க பயன்படுவ.”

“என்ன சார் சொன்னீங்க. மென்னீரா?”

“ஆமாம், மென்னீர் தான்.”

“நீங்க ஏற்கனவே ‘கடின நீருன்னு’ எனக்கு ஒரு பேரு இருக்குன்னு சொன்னதா நியாபகம். இப்ப மென்னீருன்னு சொல்றீங்க. எப்படி சார் நானே கடின நீராகவும் மென்னீராகவும் இருக்கிறேன். புரியும்படியா சொல்றீங்களா?”

“ஈம்ம், கடின நீருன்னா என்னன்னு உனக்கு நியாபகம் இருக்கா?”

“ரொம்ப நாட்களுக்கு முன்னாடி சொன்னீங்க. நான் மறந்திட்டேன்.”

“சரி, பரவாயில்ல. கடின நீருன்னா, தண்ணீர்ல, கால்சியம் மற்றும் மெக்னீசியம் குளோரைடு, சல்பேட்டு மற்றும் பைகார்பனேட்டு உப்புக்கள் இருக்கும். இதனால, கடின நீருல சோப்பு, நல்லா நுரைய தர முடியாது. துணி துவைக்கும்போது, சோப்பு வீணாகும்.”

“ஆமாம் சார், இப்ப எனக்கு நியாபகம் வந்துடுச்சு.”

“அப்படியா? நல்லது.”

“சார், மென்னீர் பத்தி சொல்லுங்க.’

“சுலபம் தான். கடின நீருக்கு நேர் எதிரானது மென்னீர்.”

“என்ன சொல்றீங்க?”

“புரியலையா? நீரில், கால்சியம் மற்றும் மெக்னீசியம் உப்புக்கள் இல்லைனா, அந்த நீர் ‘மென்னீர்’. அவ்வளவு தான்.”

“இவ்வளவு தானா?”

“மென்னீருக்கான வரையறை இவ்வளவுதான். ஆனா, கடின நீரோட ஒப்பிட மென்னீரால சில பிரத்யேக நன்மைகள் இருக்கு.”

“ஓ,என்ன நன்மைகள்? சொல்லுங்களேன்.”

மென்னீரின் நன்மைகள்

“நிலத்தடி நீர், மென்னீரா இருந்தா, குழாய்களுக்கு பாதிப்பு இருக்காது. கடின நீரா இருந்துச்சுன்னா, குழாயில் உப்புக்கள் படிஞ்சு பாதிப்பு ஏற்படுத்தும்.”

“இப்பெல்லாம், வீட்டுல, நெகிழி குழாய்களத்தான பயன்படுத்துறாங்க. அப்பவுமா உப்புக்கள் படியுது?”

“இல்ல, நெகிழி குழாய்கள்ல கடின நீருல இருக்கும் உப்புக்கள் உடனடியாக படிவதில்ல. ஆனா, தொடர்ச்சியான நீரோட்டத்தால, காலப்போக்கில, சில பாதிப்புகள் வரலாம். அத்தோட, வீட்டுல, நீர் சூடேற்றி (water heater), துாவாலைக் குழாயின் தலைப்பகுதி (Shower Head) மற்றும் உலோக குழாய்கள் கடின நீரால அரிக்கப்படலாம். மென்னீரா இருந்த இந்தப் பிரச்சனையே இல்ல.”

“சரி தான்”

“அதுமட்டுமில்ல, மென்னீரால எஃகு, கண்ணாடி மற்றும் வெள்ளிப் பாத்திரங்கள கழுவும் பொழுது அவற்றுல சோப்பு கறை இருக்காது. இதனால அவை எல்லாம், புதுசா, பளபளப்பா தோற்றமளிக்கும். சுத்தமாகவும் இருக்கும்.”

“நல்லது தான். வேற என்ன நன்மைகள் இருக்கு?”

“மென்னீருல ஆடைகளை துவைச்சா, துணிகள் நீண்ட நாட்களுக்கு புதுசா தோற்றமளிக்குமாம். துணிகள் துவைக்கப் பயன்படும் சலவை இயந்திரத்திலும் சோப்பு கறைகள் இருக்காது.

அதே போல, மென்னீரால தலைமுடியை அலசிக் கழுவ, தலைமுடி பளபளப்பாவும் வலுவாகவும் இருக்குமாம்.”

செயற்கை மென்னீர்

“சிறப்பு சார். ஒருவேளை, இயற்கையா மென்னீர் கிடைக்கலைனா, என்ன பண்ணுவீங்க?”

“செயற்கை முறையில, கடின நீர மென்னீரா மாத்த‌ முடியும். இதற்காக, சில வேதிப்பொருட்கள் இருக்கு. அவற்றுக்கு water softening agents-ன்னு ஆங்கிலத்துல பேரு.”

“இம்ம், இதுல ஒரு சந்தேகம்.”

“என்ன?”

“இயற்கை மென்னீருக்கும் செயற்கை மென்னீருக்கும் வித்தியாசம் இருக்கா?”

“ஆம்ம்.. நல்ல கேள்வி கேட்ட? பொதுவா பார்த்தோமுண்னா இரண்டு நீரிலும் கால்சியம் மற்றும் மெக்னீசியம் உப்புக்கள் மிகக் குறைவாக இருக்கும் அல்லது சுத்தமா இருக்காது.

ஆனா, நீருல இருக்கும் மற்ற கரைந்த அயனிகள் அல்லது மொத்தக் கரைந்த திடப் பொருட்களின் உள்ளடக்கம், அமிலம் மற்றும் கார தன்மைகளில், இயற்கை மென்னீருக்கும் செயற்கை மென்னீருக்கும் இடையில வித்தியாசம் இருக்கும்.”

“ஓ…ஓ..”

“குறிப்பா சொல்லணும்னா, வட அமெரிக்காவுல, ராக்கி மலைத்தொடர் பகுதிகளில் இயற்கையாகவே, மென்னீர் கிடைக்குது. இதற்கு காரணம், இங்கிருக்கும் நிலத்தடி பகுதி கிரானைட்டால ஆனது தான்னு சொல்றாங்க.

ஏன்னா, நீருல கிரானைட்டில் இருக்கும் உப்புக்கள் எளிதுல கரைவதில்லை. அதே சமயத்தில் கார்பனிக் அமிலத் தன்மை காரணமா, இங்கு கிடைக்கும் மென்னீர், அரிக்கும் தன்மையுடையதா இருக்குமாம். இதுவே, செயற்கை முறையில கிடைக்கும் மென்னீருல இந்த மாதிரி அமிலத்தன்மை இருக்காது.”

“ரொம்ப நல்லது சார். எனக்கும் மென்மையான பகுதி இருக்குங்கிறத நீங்க எனக்கு சொல்லியிருக்கீங்க.”

அதற்கிடையில, அம்மா மீண்டும் தேநீர் குடிக்க அழைக்கவே, “சரி நாம அப்புறம் சந்திப்போமா?” என்றேன்.

“சரி சார்.” என்று சொல்லி நீர் நகர்ந்தது.

கை கால்களை நன்றாக கழுவிக் கொண்டு வீட்டிற்குள் நுழைந்தேன். தேநீர் அருந்த.

(உரையாடல் தொடரும்)

கனிமவாசன்
சென்னை
கைபேசி: 9941091461
மின்னஞ்சல்: drsureshwritings@gmail.com

கடல் நீர் – நீருடன் ஓர் உரையாடல் – 16

கனிம நீர் – நீருடன் ஓர் உரையாடல் – 14

கனிமவாசன் அவர்களின் ஆராய்ச்சிக் கட்டுரைகள்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.