மாதவன் சென்ற ஒரு வருடமாகவே எதிலும் எந்தவிதப் பிடிப்புமின்றி கிட்டதட்ட ஓர் யந்திரத்தைப் போல்தான் செயல்பட்டுக் கொண்டிருந்தான்.
பகல்பொழுது மிகச் சுலபமாகச் சென்று கொண்டிருந்தது.
அலுவலகப் பணி, நண்பர்களுடன் அரட்டை, ஓட்டல் சாப்பாடு போன்றவைகள் கை கொடுத்தன. பணி முடிந்து வீடு திரும்பியதும்தான் வெறுமையின் பயங்கரம் அவனை ஆட்டிப் படைத்தது.
பாமா இல்லாத வீடு வெறிச்சோடிப் போயிருந்தது.
டி.வி.யை ‘ஆன்’ செய்தால் நிகழ்ச்சிகள் ஓடிக் கொண்டிருப்பது போல் வீடு வந்து சேர்ந்ததும் நடந்து முடிந்து போன அவலங்கள் அவனது மனத்திரையில் ‘ரீ-ப்ளே’ போல தோன்றி ஒரே இம்சை…
ஆறு வருடங்களுக்கு முன், அலுவலக வேலையாக ஒருமுறை சென்னை சென்ற சமயம்தான் அங்குள்ள அவன் பணிபுரியும் தலைமை அலுவலகத்தில் பாமாவைச் சந்தித்தான்.
அலுவலக சம்பந்தப்பட்ட வேலைகளை பாமாவுடன் சேர்ந்து கவனித்துக் கொண்டிருக்கும்போது இருவரிடையே காதல் மலர்ந்தது.
அலுவலகப் பணியை முடித்துக் கொண்ட கையோடு, பாமாவுடன் அவள் வீடு சென்று பாமாவின் தாயுடனும், அதிகம் படிக்காத, சொற்ப வருமான வேலையில் இருந்த அண்ணனுடனும், வலியப் பேசி தன் விருப்பத்தைத் தெரிவித்தான்.
மாதவனுக்கும் பெற்றோர்கள் இல்லாததாலும், தூரத்து உறவினர் ஒருவர் தயவில் வளர்ந்து, படித்து ஆளாகியிருந்ததாலும் வசதியற்ற குடும்பச் சூழ்நிலையில் தத்தளித்துக் கொண்டிருந்தவர்களுக்கு, பாமாவுக்கு ஏற்ற மாதிரி மாதவன் அமைந்திருக்கவே, அவர்கள் மனம் சபலமடைந்தது.
“எதுவும் தேவையில்லை கோயிலில் வைத்து சிம்பிள் மேரேஜ். கட்டிய புடவையுடன் பாமா வந்தால் போதும்” என்ற மாதவனின் வாய் பந்தல் நிழலில் பாமாவின் தாயும் அண்ணனும் இளைப்பாற விரும்பினர்.
கும்மிருட்டில் இலக்கு தெரியாமல் தடவித் தடவிச் செல்பவனுக்கு திடீரென்று எங்கிருந்தோ வந்து வெளிச்சம் கைகொடுப்பது மாதிரி இருந்தது அவர்களுக்கு.
குடும்பத்திற்கு பாமா மூலம் வந்து கொண்டிருக்கும் வருமானம் நின்று போனாலும் பரவாயில்லை.
‘அவளுக்கு இதை விட மிகச்சிறந்த இடம் இனி அமையப் போவதில்லை; தவிரவும் இருவருமே ஒரே நிறுவனத்தில் பணி புரிகிறார்கள்.’ என்றெல்லாம் கணப்பொழுதில் நினைத்துப் பச்சைக்கொடி காட்டியதால் அடுத்த ஒரு மாதத்தில் மாதவனின் ஆசை நிறைவேறியது.
முதல் மூன்று மாதங்கள் இனிமையாகத்தான் கழிந்தன.
நான்காவது மாதம் முதல் மாதவன் ‘பிரச்சனை விதையை’ நட ஆரம்பித்தான்.
பாமாவை அவள் குடும்பத்திற்கு உதவ விடவில்லை. அவளது வருமானம் முழுவதையுமே தன்னிடம்தான் கொண்டு வந்து தரவேண்டும்’ என்றான். பாமாவும் சம்மதித்தாள்.
திருமணமான ஒருசில வருடங்களில் தனக்கிருந்த கடன்களைப் போக்கிக் கொண்ட மாதவன், கொஞ்சங் கொஞ்சமாக வீடு, வாகனம் என வசதிகளைப் பெருக்கிக் கொள்ள ஆரம்பித்தான்.
வசதிகள் பெருக ஆரம்பித்ததும், மாதவனின் செய்கைகளும் போக்குகளும் திசை மாற ஆரம்பித்தன.
கொஞ்ச நாட்கள் விட்டுக் கொடுத்த பாமா, விழிப்புணர்ச்சியுடன் செயல்பட ஆரம்பிக்க, பிரச்சினை துளிர்விட்டு செடியாகி இப்போது மரமாக ஓங்கி வளர்ந்து நிற்கிறது.
நான்கு வயது மகனுடன் பாமா அவனைவிட்டுப் பிரிந்து அவள் வீட்டிற்கு வந்து இப்போது ஓராண்டு ஆகிறது.
“மாதவன் உன் சுயநலத்துக்காக ஒரு பெண்ணின் வாழ்க்கையை இப்படி வீணடிச்சிட்டியே, நியாயமா?”
“நான் என்ன அவளை என்னோடு வாழ வேண்டாம்னா சொன்னேன். ஆரம்பத்தில் சாதுவா இருந்தாள். சொன்னபடி கேட்டாள். போகப் போக தானும் சம்பாதிக்கிறோம்ங்கிற திமிர் ஜாஸ்தியானா எவன்தான் பொறுத்துப்பான்?”
“இன்னிக்கு இவ்வளவு வசதியா இருக்கியே. அவ சம்பாத்தியம் இல்லேனா உனக்கு ஏதுடா இந்த வாழ்வு? இருளில் மூழ்கியிருந்த உன்னை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்ததே பாமா தான். நீயே விரும்பி, வலியச் சென்று அவளை அடைந்து, உன் சுயநலத்திற்காக அவளைப் பயன்படுத்திக்கிட்டு கடைசியில் இப்படி ‘அம்போ’ன்னு விட்டா எப்படிடா?”
“என்னங்கடா ரொம்ப வியாக்கியானம் பேசறீங்க? அவ போயிட்டா, அவ சம்பாத்தியம் இல்லேன்னா, நான் என்ன தெருவுல நிற்பேன்னு நினைச்சீங்களா?
கரண்ட் போயிருச்சுங்கிறதுக்காக இருட்டிலேயேவா உட்கார்ந்துக்கிட்டிருக்கோம்? டார்ச் லைட் வச்சுக்கிறதில்லை? அது மாதிரி தான் எனக்கு இருக்கிற வசதிக்கு என்னால் ‘ஜெனரேட்டரே’ வச்சுக்க முடியும். இவ என்ன என்னை வெளிச்சத்துக்குக் கொண்டு வர்றது?”
பாமாவின் பிரிவிற்குப் பிறகு நண்பர்களுக்கும் மாதவனுக்கும் இப்படி எத்தனையோ வாதங்கள்! பிரதி வாதங்கள்!
நடந்து முடிந்து போன அவலங்களின் நினைவுகளில் தத்தளித்துக் கொண்டிருந்த மாதவனின் சிந்தனையைக் கலைத்தது காலிங்பெல் ஒலி.
எழுந்து சென்று கதவைத் திறந்த மாதவன், எதிர்வீட்டு நண்பர் கவலை தோய்ந்த முகத்துடன் ஒருவித பரபரப்புடன் நின்று கொண்டிருப்பதைக் கண்டான்.
“என்ன சார்! உள்ளே வாங்க”
“மாதவன் நான் என்னத்தைச் சொல்வேன்? நீ சொன்னியேன்னு ரிட்டையர்மெண்ட் பெனிஃபிட் பணத்தை எல்லாம் நீ சொன்ன அந்த சிட் பண்டு நிறுவனத்தில் டெபாசிட் செய்தேன். இப்போ நிறுவனத்தை இழுத்து மூடிட்டு எல்லோருமா கம்பி நீட்டிட்டாங்கப்பா. எனக்கு என்ன செய்றதுன்னே புரியலை…”
எதிர் வீட்டு நண்பர் கூறியதைக் கேட்டதும், “சார்… என்ன சொல்றீங்க…?”ன்னு அலறிய மாதவன் அதிர்ச்சியால் பேச்சிழந்து மயங்கி கீழே சாய்ந்தான்.
எதிர்வீட்டு நண்பர் மாதவனை எப்படியெல்லாமோ உசுப்பிப் பார்த்தார். மாதவன் கண் திறக்கவில்லை. நாடித்துடிப்பு தாறுமாறாக ஓடுவதையறிந்து அக்கம்பக்கத்தார் உதவியுடன் அருகிலிருந்த தனியார் மருத்துவமனை ஒன்றில் அவனைச் சேர்த்தார்.
மாதவனின் எதிர்வீட்டு நண்பரும் அக்கம் பக்கத்து வீட்டாரும் டாக்டரிடம் மாதவனின் நிலை குறித்துக் கேட்க, ‘பலத்த அதிர்ச்சியால் ஸ்ட்ரோக் ஏற்பட்டு மாதவனின் வலப்பக்கம் முழுவதும் எவ்வித இயக்கமுமின்றி போயிருப்பதை’ டாக்டர் விளக்கினார்.
“கிட்டத்தட்ட இருபது லட்சம் இருக்கும். பாவம்”
“சார், நீங்க வயசுலே பெரியவங்க. சொல்றனேன்னு தப்பா நினைக்காதீங்க. உங்க பணமே ஐந்து லட்சத்துக்கு மேல் இருக்கும். மாதவன் பணமோ இருபது லட்சம். அவன் புத்திதான் அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு இப்படிப் போச்சுன்னா உங்களுக்குகூடவா புத்தி இல்லாமல் போச்சு. எவ்வளவு நம்பிக்கையான நிறுவனங்கள், வங்கிகள்லாம் இருக்கு. அதையெல்லாம் விட்டுட்டு இப்படி உங்க பணத்தை ரெண்டு பேருமா விட்டுட்டு நிற்கிறீங்களே?”
“பெண் பாவம் சும்மா விடுமா? சுளை சுளையாய் சம்பாதிச்சுக் கொண்டு வந்து கொட்டினா, மகாலட்சுமியாட்டம் இருந்த மனைவியை விரட்டிட்டு, தன் இஷ்டத்திற்கு மனம் போன போக்கிலே ஆட்டம் போட்டான். ஆண்டவன் சரியான தண்டனையாகத்தான் கொடுத்திருக்கிறான்.”
“இந்த நேரத்துல போய் ஏன் சார் பழைய கதையெல்லாம்? எவ்வளவு நாளைக்கு நாமெல்லாம் இவனைப் பார்த்துக்கிட்டிருக்க முடியும்? இன்னிக்கே மாதவனின் மனைவிக்கு தகவல் சொல்லி வரவழைக்கப் பாருங்க”
“கரெக்ட், இப்பவே தகவலச் சொல்லிடுறேன்” பக்கத்து வீட்டுக்காரர்கள் ஆள் ஆளுக்குப் பேச ஆரம்பித்தார்கள்.
அடுத்த ஓரிரு தினங்களில் மாதவனின் மனைவி தன் அண்ணனுடன் வந்து சேர்ந்தாள். மாதவனின் உடல்நலத்தில் எவ்வித முன்னேற்றமும் இல்லை.
அவனால் சரியாக பேசக்கூட முடியவில்லை. மலங்க, மலங்க விழித்தான். உடலில் ஒருபகுதி முழுவதும் அசைவற்ற நிலையாகிப் போயிருந்தது.
தனியார் மருத்துவமனை மாதவனின் கொஞ்ச நஞ்ச பணத்தையும் கறந்து கொண்டிருந்ததேயொழிய, அவன் உடலில் எந்த முன்னேற்றமுமில்லை.
மருந்துவச் செலவு கட்டுக்கடங்காமல் போய்க் கொண்டிருந்ததால், அரசாங்க மருத்துவமனையில் மாதவன் சேர்க்கப்பட்டான்.
மாதவன் சேர்த்து வைத்திருந்த விலையுயர்ந்த பொருட்கள் யாவும் ஒவ்வொன்றாய் விற்கப்பட்டு மறைந்து கொண்டிருந்தன.
பாமாவின் வருமானம் அன்றாட குடும்பத் தேவைகளைக் கவனிக்கவே போதுமானதாக இருந்தது. அது மட்டுமின்றி, மாதவனைவிட்டுப் பிரிந்த பிறகு அவள் மீண்டும் தன் குடும்பத்திற்கு உதவி செய்ய ஆரம்பித்திருந்ததால், இப்போது அதையும் நிறுத்த முடியவில்லை.
மாதவனின் வீட்டை அடமானம் வைத்து பணம் வாங்க வேண்டிய நிலைகூட வந்து விட்டது.
மாதவன் படுக்கையில் வீழ்ந்து ஓராண்டும் ஆகியிருந்தது. ஒருசில உடற்பயிற்சிகளை மேற்கொள்ளச் சொல்லியும், விலை மதிப்புள்ள மருந்துகளையும் எழுதிக் கொடுத்து அவ்வப்போது வந்து காண்பிக்கச் சொல்லியும், மாதவனை வீட்டிற்கு அழைத்துப் போகுமாறு சொல்லிவிட்டார்கள்.
ஓர்நாள் மாதவன் வீட்டிற்கு வந்து சேர்ந்தான். அக்கம் பக்கத்தார் ஒவ்வொருவராய் வந்து அவனைப் பார்த்த வண்ணமாய், பாமாவுக்கு ஆறுதல் கூறி வந்தனர்.
மாதவன் வீடு வந்து சேர்ந்த ஆறுமாதத்தில் அவனது உடலில் நல்ல மாற்றம் ஏற்பட்டது. முன் மாதிரி அவனால் செயல்பட முடியாமற் போனாலும், பாமாவின் உதவியுடன் ஓரளவு மெதுவாக நடக்க ஆரம்பித்தான்.
ஒருநாள் காலை நேரத்தில் பாமாவுடன் சென்று வீடு திரும்புகையில் மாதவனின் எதிர்வீட்டு நண்பர் எதிரே வந்து கொண்டிருந்தார்.
அருகில் வந்ததும் மாதவனின் உடல்நிலை குறித்து விசாரித்தார்.
பிறகு, ‘மாதவா, உங்கிட்ட கொஞ்சம் மனம் விட்டுப் பேசணும். அதோ அப்படிப் போய் உட்கார்ந்து பேசலாமா வா’ என்றவர் பாமாவையும் மாதவனையும் அருகிலிருந்த பூங்காவிற்குள் அழைத்துச் சென்றார்.
“மாதவா, நடக்கக் கூடாததெல்லாம் நடந்து விட்டது. ஏதோ நீ செய்த பூர்வ ஜென்ம புண்ணியம் இந்த அளவுக்காவது எழுந்து நடமாடறே.
பூர்வ ஜென்மப் புண்ணியம் மட்டுமில்லப்பா, பாமாவுடைய மாங்கல்யப் பலமும்கூட. அவளை உதாசீனப்படுத்தினே. பாமா எப்போ உன்னை விட்டுப் பிரிஞ்சு போனாளோ அப்போதே உனக்கு கேடு காலம் ஆரம்பிச்சிடுச்சு.
எல்லோரும் எவ்வளவோ சொன்னாலும் நீ எகத்தாளமாய் பேசின. பாமா வந்தப்புறம்தான் உன் வாழ்க்கையே வளமாச்சு. அவ இல்லாட்டா என்ன, குடி முழுகியாப் போயிடும்ன்னு கேட்டே.
இவ என்ன வெளிச்சத்துக்கு கொண்டு வர்றதுன்னு கேட்டே. டார்ச் லைட் வச்சுக்கிறதில்லையான்னு கேட்டே. உன்னால் ஜெனரேட்டரே வச்சுக்க முடியும்னு இறுமாப்புல பேசினே. என்ன ஆச்சு இப்போ?” என்றவர்,
மாதவனின் தோளைப் பற்றி ஆதரவுடன் தட்டிக் கொடுத்தார்.
மறுபடியும் “நீ இருட்டுக்கு வந்துட்டேப்பா. இப்போது டார்ச்லைட்கூட உங்கிட்டே இல்லை. ஒரு மெழுகுவர்த்தி வெளிச்சத்துக்காக ஏங்கறே.
பாமா மெழுகுவர்த்தியா தன்னை உருக்கி உன் வாழ்வில் வெளிச்சம் ஏற்படுத்த வந்திருக்கா. இனி மேலாவது அவளோட நல்லபடியா குடும்பம் நடத்தற வழியைப் பாரு.
என் பணம் போனாலும்கூட என் பையன்கள் சம்பாத்தியத்துல நான் என் மனைவியோடு சந்தோஷமாக இருக்கேன்.
பாமாவைக் கண்கலங்கவிடாம, சந்தோஷமா வச்சுக்கப்பா. குத்துவிளக்காய் சுடர்விட்டுப் பிரகாசம் ஏற்படுத்தற பெண்ணைக் கணவனானவன் அன்பு, ஆதரவு, அன்னியோன்னியம்ங்கிற வற்றாத எண்ணெய்யாய் நின்று அணைஞ்சிடாமப் பாதுகாக்கணும்ப்பா”
எதிர்வீட்டு நண்பர் பேசப் பேச கண்களில் நீர் மல்க பாமாவையே அமைதியாய் வெறித்து நோக்கிக் கொண்டிருந்தான் மாதவன்.

ஜானகி எஸ்.ராஜ்
திருச்சி
கைபேசி: 9442254998