மெழுகு சிகிச்சை – வலிகளைக் குறைக்கும்

வலி அனைத்து உயிரினங்களுக்கும் வேதனை தரக்கூடிய ஒரு உணர்வு.

மருத்துவ உலகில் வலியைக் குறைப்பதற்கு மட்டுமே ஏராளமான மாத்திரைகள், வெளிப்பூச்சு மருந்துகள், ஊசி மருந்துகள் ஆகியவை அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன. இவற்றை வைத்தே வலி குறைப்பிற்கான சிகிச்சையின் முக்கியத்துவத்தை உணரலாம்.

பண்டைய காலம் தொட்டே வலியைக் குறைப்பதற்கு உள்மருந்துகளைத் தவிர வெளிப்புற சிகிச்சைகளை மக்கள் மேற்கொண்டார்கள் என்பதை நாம் பழங்கால ஒத்தட முறைகளிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

அதன் பரிணாம வளர்ச்சியாக மருந்தில்லா மருத்துவமான இயன் மருத்துவத்தில் (பிசியோதெரபி) வலியைக் குறைக்கும் சிகிச்சைகளில் ஒன்றே மெழுகு சிகிச்சை.

மெழுகு சிகிச்சைக்காக பயன்படுத்தப்படும் மெழுகுடன், திரவ பாரபின் மெழுகு, மினரல் ஆயில், பெட்ரோலியம் ஜெல்லி ஆகியவை சேர்க்கப்படுகின்றன.

மற்ற ஒத்தடம் கொடுக்கும் பொருட்களைவிட மெழுகானது வெப்பத்தை உள்ளிழுத்து அதே அளவிற்கு வெளியிடும் தன்மை கொண்டதாக இருப்பதால் வலி குறைப்பதற்கு ஏதுவாக சிகிச்சைக்கு பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது.

மெழுகு ஒத்தடம் அளிப்பதற்கு மெழுகானது அதற்குண்டான சூடேற்றும் தொட்டியில் 46 முதல் 68 டிகிரி செல்சியஸ் வரை (115 முதல் 154 பாரன்ஹீட்) சூடேற்ற வேண்டும். இந்த வெப்ப அளவே சிகிச்சைக்கு ஏற்ற அளவாகும்.

மெழுகு சிகிச்சை அளிக்கும் வகைகள்

மெழுகு சிகிச்சை நான்கு முறைகளில் அளிக்கப்படுகிறது. அவை

1. நனைக்கும் அல்லது மூழ்கும் முறை (Dipping Method)

இந்த முறையில் பாதிப்பின் பகுதியானது மெழுகுத் தொட்டியில் மூழ்கும் வரை அமிழ்த்தி எடுக்கப்படுகிறது. (உதாரணமாக கைகளில் மணிக்கட்டு வரையிலான பகுதி, கால்களில் கணுக்கால் வரையிலான பகுதிகள்).

சிகிச்சைக்கான காலஅளவு பத்திலிருந்து இருபது நிமிடங்களுக்கு சுமார் ஆறிலிருந்து எட்டு முறை அளிக்கப்படுகிறது. (ஒரு முறை என்பது 2 முதல் 3 வினாடிகளாக வரையறுக்கப்படுகிறது.)

2. சுத்துதல் அல்லது போர்த்துதல் முறை (Wrapping Method)

சூடாக்கப்பட்ட மெழுகில் துணியை தோய்த்து எடுத்து பாதிக்கப்பட்ட வலியுள்ள பகுதிகளில் சுற்றி எடுத்தல் அல்லது ஒற்றி எடுத்தல்

3. பூசுதல் முறை (Brushing Method)

தூரிகையால் (Brush) மெழுகினை எடுத்து வலியுள்ள இடங்களில் பூசுதல்.

4. ஊற்றுதல் முறை (Pouring Method)

முதுகுப் பகுதி, இடுப்புப் பகுதி, தொடை போன்ற பெரிய பகுதிகளில் தாங்கக்கூடிய வெப்ப அளவில் நேரடியாக வலியுள்ள பகுதியில் ஊற்றுதல்.

மெழுகு சிகிச்சை – பயன்கள்

மூட்டுகளில் தேய்வினால் உண்டாகும் வலிகள் (Joint pain) மூட்டுகளில் ஏற்படும் நீர்க்கோர்வை, கீல் வாதம் ஆகியவற்றிற்கு இச்சிகிச்சை பயன்படுத்தப்படுகிறது.

இது சிறு மற்றும் பெரு மூட்டுகளில் அழற்சியினால் ஏற்படும் வலிகள், எலும்பு முறிவிற்குப் பின்னர் ஏற்படும் வலிகள் ஆகியவற்றைக் குறைக்கவும், மூட்டுஇயக்கப் பயிற்சிகளின்போது மூட்டுகளை இலகுவாக்கவும் பயன்படுகிறது.

நோய் மற்றும் விபத்தினால் ஏற்படும் வலிகள், சுளுக்கு (SPRAIN) மற்றும் தசைதிரிபுவினால் (STRAIN) ஏற்படும் வலிகளைக் குறைக்கவும் உதவுகிறது.

வீக்கம், மூட்டுகள், தசைகளில் ஏற்படும் இறுக்கத்தைக் குறைக்கவும், மூட்டின் இயக்கங்களை இலகுவாக்குவதிலும் மெழுகு சிகிச்சையானது மிகுந்த பலனளிக்கிறது.

மெழுகு சிகிச்சையானது உள்ளார்ந்த வெப்ப சிகிச்சை முறை (Deep Heat Therapy) என்பதால் சிகிச்சை அளிக்கும்போது சில காரணிகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

திறந்த நிலையில் காயங்கள், தோல் காயங்கள், மெல்லிய தோல் உணர்ச்சி கொண்டவர்கள், சர்க்கரை நோயாளிகள் ஆகியோருக்கு வெப்ப சிகிச்சையான மெழுகு சிகிச்சையை தவிர்ப்பது நலம்.

எவ்வித பக்கவிளைவுகளும் இல்லாத மெழுகு சிகிச்சை வலியைக் குறைப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது என்பது உண்மையே.

க.கார்த்திகேயன்

 

க.கார்த்திகேயன் அவர்கள்

க.கார்த்திகேயன்

தமிழ்நாடு இயன்முறை மருத்துவர்கள் நலச்சங்கத்தின் மாநிலத் தலைவர்.

ஆர். கே. இயன்முறை மருத்துவமனை மற்றும் புனர்வாழ்வு மையத்தின் நிர்வாக இயக்குநர்.

அண்ணாமலைப் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியில் 2007 ஆம் ஆண்டிலிருந்து 2012 ஆம் ஆண்டுவரை உதவி விரிவுரையாளராகப் பணியாற்றியவர்.

அண்ணாமலைப் பல்கலைக் கழகம் – ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் இளையோர் இயன்மருத்துவப் பட்டம் (Bachelor of Physiotherapy), முதுநிலை உளவியல் ஆற்றுப்படுத்துதல் பட்டம்(M.S.,(Psychotherapy) படித்தவர்.

விளையாட்டு மருத்துவம் (Sports Medicine & Rehabilitation) ), மூட்டுவலிக்கான சிறப்பு சிகிச்சை (Ligament Injuries & Rehabilitation) ஆகிய சான்றிதழ் படிப்புகளையும் படித்தவர்.

முகவரி :
க.கார்த்திகேயன்
46 ,மேலத்தெரு
வீரான நல்லூர்
காட்டுமன்னார் கோயில் -608301
கைபேசி: 9894322065

One Reply to “மெழுகு சிகிச்சை – வலிகளைக் குறைக்கும்”

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.