மேட்டூர் அணை வரலாறு பற்றி நாம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
நமது நெற்களஞ்சியாமாக விளங்கும் தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் செழிக்கக் காரணாமாக அமைந்துள்ளது மேட்டூர் அணை,
அணையின் தேவை
கர்நாடக மாநிலத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் ‘கூர்க்’ எனப்படும் குடகு மொழி பேசும் குடகு மாவட்டத்தில் உருவாகும் காவிரி, ஹாசன், மைசூரு, மாண்டியா, பெங்களூரு, சாம்ராஜ்நகர் ஆகிய மாவட்டங்கள் வழியாக பயணித்து தருமபுரி மாவட்டத்தில் உள்ள பிலிகுண்டுலு வழியாக தமிழ்நாட்டுக்குள் நுழைகிறது.
காவிரி ஆறு பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்
பின்னர் சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி வழியாக பயணிக்கும் காவிரி நதி, கல்லணை பகுதியில் கிளை நதிகளாக பிரிந்து தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களை செழிக்க வைத்து பூம்புகாரில் வங்காள விரிகுடாவில் கலக்கிறது.
காவிரித்தாயின் நீண்ட பயணத்தில், ஆக்ரோஷமான நீரோட்டத்தால் பல ஏக்கர் பாசன நிலங்கள் வெள்ளநீர் சூழ்ந்து காவிரி டெல்டா விவசாயிகளின் கண்ணீருக்கு காரணமானது.
இதனால் 1801ஆம் ஆண்டு பிரிட்டீஷ் இந்திய கிழக்கிந்திய கம்பெனி இரு மலைகளுக்கு இடையே காவிரி நுழையும் பகுதியான மேட்டூரில் அணை கட்ட முயன்றது. ஆனால் இதற்கு அன்றைய மைசூர் சமஸ்தானம் கடும் எதிர்ப்பை தெரிவித்ததால் அணை கட்டும் திட்டம் கைவிடப்பட்டது.
ஆனால் நீரை தேக்கவும், கட்டுப்படுத்தி வேளாண்மை செய்யவும் முடியாத காரணத்தால் வறட்சியும் வெள்ளமும் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தை வாட்டி வேளாண்மையை கடுமையாக பாதித்தது.
‘இந்திய நீர் பாசனத்தின் தந்தை’ என அறியப்படும் சர் ஆர்தர் காட்டன் என்ற ஆங்கில பொறியாளர் காவிரி நீரை கட்டுப்படுத்தி நீரை மேலாண்மை செய்ய பல்வேறு திட்டங்களை வகுத்தார்.
அதில் ஒன்று மேட்டூரில் அணை கட்ட மைசூரு சமஸ்தானத்தின் அனுமதி பெறுவது. ஆனால் தொடர் எதிர்ப்பு காரணமாக அது கைவிடப்பட்டதால் கல்லணையை சீராக்கி நீரை பிரித்து அனுப்பும் அவரது மற்றொரு திட்டம் வெற்றிகரமாக செயல்பாட்டுக்கு வந்தது.
இறுதியில் 1923ஆம் ஆண்டு கேரளாவில் உள்ள திருவாங்கூர் சமஸ்தானத்தில் முக்கிய பொறுப்பில் இருந்த திவான் பகதூர் சர் சி.பி.ராமசாமி ஐயரிடம் ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் தங்களது பிரச்னையை எடுத்துரைத்தனர். அவரின் முன்னோர்கள் தஞ்சாவூர் மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சி.பி.ராமசாமி ஐயர் மைசூரை சேர்ந்த திவான்பகதூர் விஸ்வேஸ்வரய்யாவை அணுகி இது குறித்து விரிவாக எடுத்துரைத்தாலும் அணை கட்டும் முடிவுக்கு மைசூர் சமஸ்தானம் தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டது.
இதன் எதிரொலியால் ஒருங்கிணைந்த தஞ்சையில் வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புக்களுக்கு ஆண்டுக்கு 30 லட்சத்தை இழப்பீடாக வழங்க கோரி தஞ்சை ஆட்சியர் மூலம் நோட்டீஸ் அனுப்பபட்டது.
ஆண்டுக்கு 30 லட்சம் கொடுப்பதை விட அணை கட்ட ஒப்புக் கொள்வதே சிறந்த தேர்வு என்பதால் மைசூர் சமஸ்தானம் வழிக்கு வந்தது.
கட்டுமான பணிகள்
இதன் படி சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூரில் 1924ஆம் ஆண்டு ‘ஸ்டேன்லி’ என்ற பொறியாளரை கொண்டு அணையின் கட்டுமானப்பணி தொடங்கியது.
மேட்டூர் அணை முதலில் திட்டமிடப்பட்டப்போது, தற்போது அணை இருக்கும் இடத்தில் கட்டுவதற்குத் திட்டமிடப்படவில்லை. மாறாக, தற்போதுள்ள இடத்திலிருந்து சுமார் ஒரு மைல் தூரம் தள்ளி இருக்கும் வகையில் திட்டமிடப்பட்டது.
ஆனால், 1924ஆம் ஆண்டு காவிரியில் மிகப்பெரிய வெள்ளம் ஒன்று ஏற்பட்டது. அப்போதுதான், முன்பு திட்டமிட்டதைவிடக் கூடுதல் நீரைத் தேக்கும் வகையில் அணை கட்டப்பட வேண்டும் என்பதற்காகத் தற்போதுள்ள இடம் தேர்வு செய்யப்பட்டது.
இந்தத் திட்டத்திற்கு ஏழு கோடியே 37 லட்ச ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டது. இந்த அணை கட்டி முடிக்கப்பட்ட பிறகு, வரி வருவாய் உயர்வதன் மூலம், செய்யப்பட்ட முதலீட்டிற்கு 6 சதவீதம் அளவுக்குப் பலன் கிடைக்கும் என மதிப்பிடப்பட்டது.
ஆனால், இந்த அணையின் மூலமாக டெல்டா மாவட்டங்களில் உருவாகும் வேலைவாய்ப்பு, வாழ்க்கைத் தரம் உயர்ந்தது போன்றவற்றைக் கணக்கிடும்போது இந்த வருவாய் மிகக் குறைவுதான்.
இந்த அணைக்கான செலவைத் திட்டமிடும்போது, மிகத் துல்லியமாகத் திட்டமிடப்பட்டது. கட்டுமானப் பணிக்கான செலவு, நிலத்தைக் கையகப்படுத்துவதற்கான செலவு, ஊழியர்களின் வீடுகளுக்கான செலவு, கால்வாய்கள், இயந்திரங்கள், ஓய்வூதியம், இவ்வளவு ஏன் வரைபடம் உள்ளிட்ட காகிதங்களுக்கு ஆகும் செலவுகள்கூட துல்லியமாகக் கணக்கிடப்பட்டன.
இந்த அணையைக் கட்ட 2,16,000 டன் சிமென்ட் தேவைப்பட்டது. இந்த அளவுக்கு சிமென்ட் சப்ளை செய்ய ஷகாபாத் சிமென்ட் கம்பெனியுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது.
சிமென்ட்டை எடுத்துவர, சேலத்தில் இருந்து மேட்டூர் வரை ஒரு ரயில் பாதை போடப்பட்டது. அந்த ரயில் பாதைக்கான செலவின் ஒரு பகுதி மேட்டூர் திட்டச் செலவிலிருந்தே அளிக்கப்பட்டது.
மேட்டூர் அணை கட்டப்படுவதற்கு முன்பாக மேட்டூர் ஒரு குக்கிராமம். ஈரோடு ரயில் நிலையத்தில் இருந்து 37 மைல் தூரத்தில் இருந்தது. அங்கிருந்து மேட்டூரை வந்தடைய மண் சாலைதான் இருந்தது.
அணை குறித்த நேரத்தில் கட்டப்பட வேண்டுமென்றால், அணையின் கட்டுமானப் பணிகளுக்காக வரும் தொழிலாளர்கள், பொறியாளர்கள் தங்கும் அளவுக்கு ஒரு சிறிய நகரத்தையாவது மேட்டூரில் உருவாக்க வேண்டியிருந்தது.
இதையடுத்துதான் பொருட்களை எடுத்துவர, சேலத்தில் இருந்து ஒரு ரயில் பாதையும் தார் சாலையும் போடப்பட்டது. பிறகு, அணையின் பணியாளர்களுக்காக வீடுகளைக் கட்டத் திட்டமிடப்பட்டது.
மொத்தமாக 10,000 பேர் தங்கும் அளவுக்கான வீடுகள் இதற்காகக் கட்டப்பட்டன. ஒரு குக்கிராமம், ஒரு சிறு நகரமாக உருவெடுக்க ஆரம்பித்தது
மேட்டூர் டவுன் மிகச் சிறப்பாக வடிவமைக்கப்பட்டது. தூய்மையான குடிநீர், பாதாள சாக்கடை வசதிகளுடன் இந்தச் சிறுநகர் உருவாக்கப்பட்டது.
மைசூர் அரசுக்கு உட்பட்டிருந்த சிவசமுத்திரத்தில் இருந்த மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் வழங்கப்பட்டது. இங்கு வசித்த மக்களுக்காக ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் மிகப்பெரிய வாரச் சந்தை கூடியது.
நிலம் எடுக்கும் பணிகளுக்காக, மேட்டூர் தனி மாவட்டம் என அறிவிக்கப்பட்டது. மேட்டூர் அணை அமையும் இடம், அணையின் நீர் தேங்கும் இடம், தொழிலாளர்களின் கேம்ப், மின் நிலையம், ஒர்க் ஷாப் பகுதிகள் போன்றவற்றை உள்ளடக்கி இந்த மாவட்டம் உருவாக்கப்பட்டது.
ஆனால், இந்த அந்தஸ்து நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. நில எடுப்புப் பணிகள் முடிந்த பிறகு, 1929 ஜூலையில் மேட்டூர் மாவட்டம், சேலம் மாவட்டத்தின் ஒரு தாலுகாவாக கீழிறக்கப்பட்டது.
9 ஆண்டு காலம் நடந்த இந்த கட்டுமானப் பணியில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டனர். சுண்ணாம்பு, காரை மட்டுமின்றி சிமெண்ட்டை கொண்டும் அணை கட்டப்பட்டுள்ளது.
திருமலை நாயக்கர் கோட்டை
அணை கட்டப்படும் இடத்தில் காவேரிபுரம் என்ற ஊர் ஒன்று இருந்தது. அணை கட்டப்பட்ட தருணத்தில் இங்கு குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் கிறிஸ்தவர்கள் வசித்து வந்தனர்.
சிதிலமடைந்த நிலையில் ஒரு கோட்டையும் ஒரு சிவன் கோவிலும் இந்தக் கிராமத்தில் இருந்தன. மைசூருக்கு செல்லும் கணவாயின் துவக்கத்தில் இந்தக் கோட்டை அமைந்திருந்தது.
மைசூரிலிருந்து வரும் படையெடுப்பைக் கண்காணிக்க, திருமலை நாயக்கரால் இந்தக் கோட்டை கட்டப்பட்டது. இந்தக் கோட்டை 1768இல் ஆங்கிலேயர் வசம் வந்தது. அதற்கு அடுத்த ஆண்டிலேயே ஹைதர் அலி அதைக் கைப்பற்றினார்.
மைசூர் போர் நடந்த காலம் நெடுகவே இந்தக் கோட்டை வியூக ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது.
ஆனால், அணை கட்டப்பட்டுக் கொண்டிருந்த 20ஆம் நூற்றாண்டில் இந்தக் கோட்டைக்கு எந்த முக்கியத்துவமும் இல்லை. முடிவில், இந்தக் கோட்டை ஊரோடு சேர்ந்து மேட்டூர் அணையில் மூழ்கியது.
நீரில் மூழ்கிய கிராமங்கள்
அன்றைய மேட்டூரை சுற்றி இருந்த சோழப்பாடி, நெருஞ்சிப்பேட்டை, சம்பள்ளி, நேயம்பாடி, செட்டிபட்டி, தாளவாடி, பழைய நாயம்பாடி, பண்ணவாடி, கோட்டையூர் உள்ளிட்ட 33 கிராமங்கள் மேட்டூர் அணையால் நீரில் மூழ்கின.
கி.பி 10ஆம் நூற்றாண்டில் சோழர்கள் ஆட்சியில் கட்டப்பட்ட நந்தி முகப்பும், ஜலகண்டீஸ்வரர் கோயிலும், ஆங்கிலேயர் காலத்தில் கட்டபப்ட்ட இரட்டை கோபுர கிறிஸ்தவ தேவாலயமும் இதன் அடையாள சின்னங்களாக நீரில் மூழ்கி உள்ளன
அணையின் நீர்மட்டம் 80 அடிக்கு கீழ் குறைந்தால் நந்தி சிலையும், 70 அடிக்கு கீழ் குறைந்தல் கிறிஸ்தவர் கோபுரமும் இன்றைக்கும் தெரியும்.
மேட்டூர் அணை கொள்ளளவு
124 அடி உயரம் வரை எழுப்பப்பட்ட அணையின் முழுக் கொள்ளவு 120 அடி என வரையறுக்கப்பட்டது. அணையின் முழு கொள்ளளவு 9,347 கன அடி ஆக வடிவமைக்கப்ப்ட்டது.
அணையில் உள்ள ஒரு டிஎம்சி தண்ணீர் வெளியேற்றப்பட்டால் 1.25 அடி தண்ணீர் குறையும். அணையில் இருந்து ஒரு அடி அளவில் தண்ணீர் திறக்கப்பட்டால் 0.75 டி.எம்.சி தண்ணீர் வெளியேறும்.
16 கண் மதகுகளை கொண்ட இந்த அணையில் ஆங்கிலேயர் ஆட்சிலும் பின்னர் வந்த இந்திய குடியரசு அரசிலும் இரண்டு மின்நிலையங்கள் உருவாக்கப் பட்டுள்ளன.
காவிரி-மேட்டூர் திட்டத்தின் கண்காணிப்பு பொறியாளராக செயல்பட்ட W.M.எல்லீஸ் ‘மேட்டூர் அணையின் சிற்பி‘ என அழைக்கப்படுகிறார்.
1934ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21ஆம் தேதி அன்றைய மெட்ராஸ் ஆளுநர் சர்.ஜார்ஜ் பெட்ரிக் ஸ்டேன்லியால் திறந்து வைக்கப்பட்டதால் இது ‘ஸ்டேன்லி அணை‘ என்று அழைக்கப்படுகிறது.
இந்தியாவிவை ஆண்ட ஆங்கிலேயர் நமது தமிழ்நாட்டிற்கு அளித்த மாபெரும் கொடையாக மேட்டூர் அணை கருதப்படுகிறது.
R.ரமேஷ்