மேயர் சுயாங்கோ வந்திருக்கிறேன்

நம்மில் பலர் நாம் வகிக்கும் பதவியினால் நமக்கு பெருமை என்று எண்ணுகிறோம். பதவியால் எல்லாவற்றையும் சாதித்து விடலாம், அது எல்லாவற்றையும் வழங்கி விடும் என்று தவறாகக் கருதுகிறோம்.

அவ்வாறு சுயாங்கோ என்பவர் மேயர் பதவியில் இருந்தபோது, துறவி ஒருவரைக் காணச் சென்றார். அப்போது நிகழ்ந்தவற்றை அறிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

சீன தேசத்தில் உள்ள ஷாங்காய் நகரத்தின் மேயராக சுயாங்கோ என்பவர் இருந்தார்.

ஒரு நாள் அந்நகரத்தின் அருகே உள்ள மலையில் வசித்த துறவியைக் காண சுயாங்கோ சென்றார்.

துறவி இருந்த அறைக்கு வெளியே நின்றிருந்த சிறுவனிடம் “மேயர் சுயாங்கோ வந்திருக்கிறேன். உங்களோடு நான் பேச வேண்டும்.” என்று எழுதிக் கொடுத்தார்.

துறவியின் அறையின் உள்ளே சென்ற சிறுவன் மறுவினாடியே ஓடி வந்தான். சுயாங்கோ எழுதிக் கொடுத்த ஓலையை அவரிடமே திருப்பிக் கொடுத்தான்.

சுயாங்கோ அந்த ஓலையை திருப்பிப் பார்த்தார். ஓலையின் பின்னால் “உம் போன்ற மடையர்களிடம் பேசி நேரத்தை வீணடிக்கும் அளவுக்கு, சரியான மடையர்கள் யாரும் இங்கு இல்லை.” என எழுதி இருந்தது.

ஓலையைப் படித்த சுயாங்கோ மிகவும் அதிர்ச்சிக்கு உள்ளானார்.

இந்த துறவி மிகவும் நியாயமானவர். அப்படி இருக்க துறவி ஏன் அவதூறாக எழுதி உள்ளார்? மேலும் தன்னை சந்திக்க மறுப்பதன் காரணம் என்ன? என்று சிறிது நேரம் அமைதியாக யோசித்தார்.

அப்போதுதான் மேயர் சுயாங்கோவிற்கு துறவியின் செயலில் இருந்த சூட்சமம் புரிந்தது. தன்னிடம் இருந்த ஓலையில் மேயர் சுயாங்கோ என எழுதியிருந்ததைப் பார்த்தார்.

மேயர் என்ற வார்த்தையை அடித்து விட்டு சுயாங்கோ என்ற பெயரோடு ஓலையை திருப்பி அனுப்பினார்.

சிறுவன் அவ்வோலையை துறவியிடம் கொடுத்ததும் துறவியின் அறைக் கதவு திறந்தது. துறவி ஓட்டமும் நடையுமாக வெளியே வந்தார்.

“வாங்க சுயாங்கோ, வாங்க. உங்களுக்காகதான் வெகு நாட்களாகக் காத்துக் கொண்டிருக்கிறேன். எப்படியும் நீங்கள் வருவீர்கள் என்று தெரியும். ஆனால் இவ்வளவு சீக்கிரம் வருவீர்கள் என்று எனக்கு தெரியாது” என்று கூறி சுயாங்கோவை உள்ளே அழைத்துச் சென்றார்.

உண்மையான பெரியவர்கள், நம்முடைய பதவியை வைத்து நம்மை எடை போடுவதில்லை. அவர்கள் நம்முடைய குணத்தை வைத்தே, நம்மை எடை போடுகின்றார்கள்.

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.