மேருவைச் செண்டால் அடித்த படலம் உக்கிரபாண்டியன் இறைவனான சுந்தரபாண்டியனிடம் இருந்து பெற்ற செண்டினால் செருக்கு மிகுந்த மேருமலையை அடித்து ஆணவத்தை அடக்கி பொருளினைப் பெற்றதை விளக்கிக் கூறுகிறது.
உக்கிரபாண்டியன் தன்நாட்டுமக்களின் பஞ்சத்தைப் போக்குவதற்காக இறைவனின் வழிகாட்டுதலின்படி, கடுமையான பயணங்கள் மேற்கொண்டு மேருமலையை அடைந்து பொருளினைப் பெற்ற விதம் அழகாக இப்படத்தில் கூறப்பட்டுள்ளது.
சோமவார விரதத்தின் பயனால் உக்கிரபாண்டியன் அறிவான மகனான வீரபாண்டியனைப் பெற்றதையும், தன்நாட்டுமக்களின் துயர்தீர்க்க அரசனின் கடமையாக உக்கிரபாண்டியன் மேரு மலையை அடைந்து பொருள் பெற்றதையும், உக்கிரபாண்டியன் இறைவனின் திருவடியை அடைந்ததையும் இப்படலம் விளக்கிக் கூறுகிறது.
மேருவை செண்டால் அடித்த படலமானது திருவிளையாடல் புராணத்தின் மதுரை காண்டத்தில் பதினைந்தாவது படலமாகும்.
மதுரையில் ஏற்பட்ட பஞ்சம்
உக்கிரபாண்டியன் அகத்தியர் கூறிய முறைப்படி சோமவார விரதமுறையைப் பின்பற்றி மதுரையை நல்வழியில் ஆட்சி செய்து வந்தான்.
சோமவார விரதத்தின் பயனாக உக்கிரபாண்டியனுக்கு அழகான மகன் பிறந்தான். அவனுக்கு வீரபாண்டியன் என்று பெயரிட்டனர். சோமவார விரதத்தின் பயனாக வீரபாண்டியன் இயற்கையிலேயே அழகும் அறிவும் நிரம்பியவனாக இருந்தான். பலகலைகளிலும் தேர்ச்சி பெற்று அவன் விளங்கினான்.
அப்போது ஒரு சமயம் மதுரையில் மழைவளம் குன்றி பஞ்சம் ஏற்பட்டது. மக்கள் அரசுக்கு வரி செலுத்த முடியாமல் திணறினர். தம்மக்களின் குறைகளைப் போக்க எண்ணிய உக்கிரபாண்டியன் நேரே திருக்கோவிலை அடைந்து சொக்கநாதரையும், மீனாட்சி அம்மையும் வணங்கி மக்களின் துயர் போக்க வழியினை வேண்டி வழிபாடு நடத்தினான்.
அன்றைய இரவில் உக்கிரபாண்டியனின் கனவில் சொக்கநாதர் சித்தர் வடிவில் தோன்றி இமயத்தை தாண்டி இருக்கும் மேருமலையின் அரசன் ஏராளமான பொன் மற்றும் பொருள்களைத் தன்னகத்தே கொண்டுள்ளான்.
தற்போது செல்வச் செழிப்பினால் மேருமலையானது செருக்கு கொண்டுள்ளது. நீ அந்தமலையை சுந்தரபாண்டியனார் கொடுத்த செண்டினால் அடித்து அதன் செருக்கை அழித்து அதனிடமிருந்து பொருளைப் பெற்று உன் நாட்டு மக்களின் துயரினைத் துடைப்பாயாக.
தேவையான பொருளினைப் பெற்றவுடன் அதன்மீது பாண்டிய நாட்டின் இலச்சியினைப் பொறிப்பாயாக. அதேநேரத்தில் மேருமலையை அடைவதற்கு நீ நீண்ட கடினமான பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.” என்று கூறிஅருளினார்.
செல்வத்தைப் பெறும்பொருட்டு உக்கிரபாண்டியனின் பயணம்
இறைவனின் திருவாக்கினைக் கேட்ட உக்கிரபாண்டியன் அதிகாலையில் விரைந்து எழுந்து நித்திய கடன்களை முடித்து பெரும் படைத்திரட்டி மேருமலையை நோக்கி பயணம் ஆவதற்கு தயார் ஆனான்.
காலையில் சொக்கநாதரையும், மீனாட்சிஅன்னையையும் வழிபட்டு தன்னுடைய படைகளுடன் மேருமலையை நோக்கிய பயணத்தைத் தொடங்கினான்.
அவன் காசியை அடைந்து விஸ்வநாதரையும், விசாலாட்சியையும் வணங்கி தனது பயணத்தைத் தொடர்ந்தான். பின் இமயத்தைக் கடந்து பொன்போல் ஒளிவீசும் மேருமலையை அடைந்தான்.
மேருவை செண்டால் அடித்தல்
உக்கிரபாண்டியன் மேருமலையை நோக்கி “மலைகளுக்கு எல்லாம் அரசனே, எம் தந்தையாகிய சிவபெருமானின் கையில் உள்ள வில்லே, நிலவுலகின் ஆதாரமே, வானத்தில் உள்ள தேவர்கள் எல்லோரும் வசிக்கும் கோவிலே நீ விரைந்து வருவாயாக” என்று கூவி அழைத்தான்.
உக்கிரபாண்டியன் அழைத்தும் வராததால் கோபம் கொண்டு சுந்தரபாண்டியனார் கொடுத்த செண்டு எனப்படும் பொன்பந்தினால் மேருவின் சிகரத்தில் ஓங்கி அடித்தான்.
செண்டினால் அடிபட்ட மேருமலை வலியால் துடித்தது. அம்மலையை சுற்றியுள்ள அனைத்தும் நடுநடுங்கின. பின் மேருமலையானது நான்கு தலைகளும், எட்டு தோள்களும், வெண்ணிற குடையையும் தாங்கியவாறு உக்கிரபாண்டியனின் முன்னால் வந்து நின்றது.
உக்கிரபாண்டியனும் கோபம் தணிந்து “நீ காலம் தாழ்த்தி வந்ததற்கு காரணம் யாது?” என்று கேட்டான். அதற்கு அம்மலை “நான் இத்திருவுருவத்துடனே தினமும் சோமசுந்தரக்கடவுளையும், மீனாட்சிஅம்மனையும் ஆகாய மார்க்கமாக சென்று வழிபட்டு வந்தேன்.
ஆனால் இன்றைக்கு ஒரு பெண்ணின்பால் ஏற்பட்ட ஈர்ப்பின் காரணமாக நான் பறக்கும் சக்தியை இழந்ததோடு சோமசுந்தரரையும் வழிபட மறந்தேன். அதனால் காலம் தாழ்த்தி வந்து தங்களிடம் தந்த சோமசுந்தரரின் பந்தினால் அடியும் பட்டேன். தாங்கள் இங்கே வந்த காரணம் யாது?” என்று கேட்டது.
உடனே பாண்டியனும் “நான் என் மக்களின் துயரினைப் போக்க பொருளினை விரும்பி இவ்விடத்திற்கு வந்தேன்.” என்றான்.
மேருமலை “உக்கிரபாண்டியனே, நீ விரும்பிய பொன்னானது அதோ அந்த மாமரத்தின் அடியில் ஓர் அறையில் பாறையால் மூடி பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.” என்று கூறி பொருள்கள் இருக்கும் அறையை தன் கையினால் சுட்டிக் காட்டியது.
பொன்பொருட்களைப் பெற்று உக்கிரபாண்டியன் மதுரை திரும்பல்
உக்கிரபாண்டியன் அப்பொன்னறையின் அருகே சென்றான். மூடிய பாறையை நீக்கி வேண்டியஅளவு பொன்னை எடுத்துக் கொண்டான். முன்போலவே மூடி அதன்மேல் தன் இலச்சினைப் இட்டான்.
பின்னர் தன் படைகளோடு புறப்பட்டு மதுரையை அடைந்தான். மதுரையை அடைந்தவன் சோமசுந்தரக்கடவுளையும், மீனாட்சியையும் வணங்கினான். பின் அரண்மனையை அடைந்து தான்கொண்டு வந்த பொன்பொருட்களைக் கொண்டு தம்குடிமக்களின் பசித்துன்பத்தை நீக்கினான்.
சிவபெருமானின் திருவருளால் மீண்டும் பாண்டிய நாட்டில் மழைபெய்து வளங்கள் பெருகின. நீதிதவறாமல் அரசாண்ட உக்கிரபாண்டியன் தன்மகனான வீரபாண்டியனுக்கு அரசுரிமையை அளித்தான். பின் சொக்கநாதரின் திருவடியில் இரண்டறக் கலந்தான்.
இப்படலம் கூறும் கருத்து
செல்வ செருக்கும், முறையற்ற பெண்ணாசையும் ஒருவனை தன்னுடைய நிலையில் இருந்து தாழ்ந்துவிடச் செய்யும் என்பதே மேருவைச் செண்டால் அடித்த படலம் கூறும் கருத்தாகும்.
முந்தைய படலம் : இந்திரன் முடிமேல் வளையெறிந்த படலம்
அடுத்த படலம் : வேதத்துக்குப் பொருள் அருளிச் செய்த படலம்
One Reply to “மேருவைச் செண்டால் அடித்த படலம்”
Comments are closed.