மேற்குத் தொடர்ச்சி மலையின் பிரபலமான விலங்குகள்

மேற்குத் தொடர்ச்சி மலையின் பிரபலமான விலங்குகள் பற்றிப் பார்ப்போம்.

மேற்குத் தொடர்ச்சி மலையானது கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் காணப்படுகிறது.

இது இப்பகுதி மக்களுக்கு நல்ல தண்ணீர் வளத்தை தருவதோடு, பல்வேறு உயிரினங்களுக்கு வசிப்பிடமாகவும் உள்ளது. இம்மலையில் 139 வகையான பாலூட்டிகள் உள்ளன. அவற்றில் பிரபலமான விலங்குகள் பற்றிப் பார்ப்போம்.

 

வங்காளப் புலி

வங்காளப் புலி
வங்காளப் புலி

 

சுந்தரவனக் காடுகளுக்கு வெளியே இம்மலையிலேயே வங்காளப் புலிகள் அதிகமாகக் காணப்படுகின்றன.

இம்மலையில் காணப்படும் விலங்குகளின் உணவுச்சங்கிலியில் முதலிடத்தை இப்புலி பெறுகிறது.

இப்புலி இந்தியா மற்றும் வங்காள தேசம் ஆகிய நாடுகளின் தேசிய விலங்காக உள்ளது.

 

இந்திய சிறுத்தை

இந்திய சிறுத்தை
இந்திய சிறுத்தை

 

இந்திய சிறுத்தை இந்தியாவின் மழைக்காடுகள், இலையுதிர் காடுகள், ஊசியிலை காடுகளில் காணப்படுகிறது, சுந்தரவனக் காடுகளில் இது காணப்படுவதில்லை.

இவற்றின் வாழிடம் அழிக்கப்படுதல், திருட்டுத்தனாமாக வேட்டையாடுதல், இடப்பற்றாக்குறை ஆகியவற்றின் காரணமாக இது அழிந்து வரும் விலங்குகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.

 

இந்திய யானை

இந்திய யானை
இந்திய யானை

 

மேற்கு தொடர்ச்சி மலையில் காணப்படும் மிகமுக்கியமான விலங்கு இந்திய யானைகள் ஆகும்.

இவை உலர் இலையுதிர் காடுகள், ஈரளிப்பான இலையுதிர் காடுகள், மழைக்காடுகள், மேய்ச்சல் நிலங்கள் ஆகிய இடங்களில் காணப்படுகின்றன.

வாழிடமிழப்பு, பிரிந்து காணப்படல், வேட்டையாடுதல் ஆகியவற்றால் இவை அழிந்துவரும் விலங்குளில் இந்திய யானை  ஒன்றாகியுள்ளது.

 

இந்திய காட்டெருமை

இந்திய காட்டெருமை
இந்திய காட்டெருமை

 

இது கடமா, காட்டுப்பசு, காட்டா, மரை, ஆமா, காட்டுப் போத்து, கட்டேணி என பலபெயர்களில் அறியப்படுகிறது.

இது பீகாரின் மாநில விலங்கு ஆகும்.

இது புல்வெளி நிறைந்த தேக்குக் காடுகள், இலையுதிர் ஈரக்காடுகள், மூங்கில் காடுகள், இலையுதிர் உலர்காடுகள், மழைக்காடுகள் ஆகியவற்றை இவை வாழிடமாகக் கொண்டுள்ளன.

 

சோலைமந்தி

சோலை மந்தி
சோலை மந்தி

 

மேற்குத் தொடர்ச்சி மலைகளில் காணும் மந்தி இனத்தைச் சார்ந்த இது கருங்குரங்கு எனவும் அழைக்கப்படுகிறது.

இதனுடைய வாலானது சிங்கத்தின் வாலை ஒத்து இருப்பதால் இது ஆங்கிலத்தில் சிங்கவால் குரங்கு என்று அழைக்கப்படுகிறது.

இது விரும்பி உண்ணும் பழவகைகள் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் மட்டுமே காணப்படுகின்றன.

 

நீலகிரி வரையாடு

நீலகிரி வரையாடு
நீலகிரி வரையாடு

 

இது மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்கே உரித்தான சிறப்பினங்களில் ஒன்றாகும்.

இவை 4000 அடி உயரத்திற்கு மேலே உள்ள முகடுகளில் வாழும் தன்மை உடையவை. இது காட்டாடு இனத்திலேயே மிகப்பெரிய உடலமைப்பு உடையது.

நீலகிரி வரையாடு தமிழ்நாட்டின் மாநில விலங்காக உள்ளது.

 

நீலகிரி மந்தி

நீலகிரி மந்தி
நீலகிரி மந்தி

 

இவை மேற்குத் தொடர்ச்சி மலையின் நீலகிரி பகுதியில் வாழ்பவை. இவை கர்நாடகாவில் குடகு, தமிழ் நாட்டில் பழனி மலைகள் ஆகியவற்றில் காணப்படுகின்றன.

இதன் உடல் பளபளப்பாக கருமை நிறத்திலும், தலைப்பகுதி மஞ்சளும், பழுப்பும் கலந்து காணப்படும். சாதாரண குரங்கின் அளவே இருக்கும் இவை நீளமான வாலினை உடையவை.

இக்குரங்கு ஒன்பது அல்லது பத்து எண்ணிக்கையில் கூட்டமாக வாழும்.

 

இந்திய செந்நாய்

இந்திய செந்நாய்
இந்திய செந்நாய்

 

இந்திய செந்நாய் மழைக்காடுகள், வறண்ட, ஈரப்பதமான இலையுதிர் காடுகளில் இவை காணப்படுகின்றன. இவை டோல் என்றும் அழைப்படுகின்றன.

மேற்குத் தொடர்ச்சி மலைகளில் காணப்படும் ஆபத்தான விலங்குகளில் இதுவும் ஒன்று.

வாழிட இழப்பு, வீட்டு நாய்களிடமிருந்து பரவிய தொற்றுநோய், உணவுப் பற்றாக்குறை ஆகியவற்றால் இவை அழிந்து வரும் விலங்கினங்களில் ஒன்றாக உள்ளன.

 

இந்திய மலை அணில்

இந்திய மலை அணில்
இந்திய மலை அணில்

 

இந்திய மலை அணில் அல்லது மலபார் மலை அணில் என்பது மரத்தின் மீது வாழும் மிகப்பெரிய அணில் வகையாகும்.

இவை பகலில் உணவருந்தும் பழக்கத்துடன் மரக்கிளைகளில் வாழும் வகையைச் சார்ந்தவை.

தாவர உண்ணியான இந்திய மலை அணில், மகாராஷ்ர மாநிலத்தின் மாநில விலங்காகும்.

 

புள்ளிமான்

புள்ளிமான்
புள்ளிமான்

 

இது இந்திய காடுகளில் அதிகளவு காணப்படும் மானினமாகும். இந்தியாவே இதனுடைய பிறப்பிடம் ஆகும்.

சமூக விலங்கான இது தெலுங்கானா மாநிலத்தின் மாநில விலங்காகும்.

 

மேற்குத் தொடர்ச்சி மலையின் பிரபலமான விலங்குகள் பற்றி தெரிந்து கொண்டீர்கள் தானே.

மேற்கு தொடர்ச்சி மலைக்கு சுற்றுலா செல்லும்போது மேற்கண்ட விலங்குகளை பார்த்து ரசித்து மகிழுங்கள்.

அழிந்து வரும் வன் விலங்குகளைக் காக்க என்ன செய்யலாம் என்று யோசித்து செயல்படுங்கள்!

வ.முனீஸ்வரன்

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.