மேற்படிப்பைத் தேர்ந்தெடுக்கும் வழிமுறைகள்!

கல்லூரி

அன்பு நிறைந்த மாணவ கண்மணிகளுக்கு,

+2 முடித்த பிறகு என்ன மேற்படிப்பைத் தேர்ந்தெடுக்கலாம் என்ற மன ஓட்டங்கள் உங்களுக்குள் இருக்கும். உங்கள் பெற்றோர்களிடமும் அது பற்றிப் பரந்து விரிந்து பேசப்படும்.

அதில் கவனிக்க வேண்டிய சில விஷயங்களை மட்டும் இங்கே பட்டியலிடுகிறேன்.

மற்றவர்களைப் பார்த்து உங்களுக்கான படிப்பைத் தேர்ந்தெடுக்காதீர்கள்

உங்கள் வீட்டுக்கு அருகில் கல்லூரி பேராசிரியர், மருத்துவர், இன்ஜினியர் அல்லது பள்ளி ஆசிரியர் யாராவது இருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள்.

தினமும் அவர்கள் காலையில் பணிக்கு செல்லும் போது டிப் டாப்பாக ஆடை அணிந்து சிறப்பாக செல்கிறார். அவரைப் பார்த்து உங்களது தந்தை என்ன முடிவெடுத்து இருப்பார் தெரியுமா?

அவரைப் போல் எனது மகனையும் ஆக்க வேண்டும்.

உங்கள் வீட்டுக்கருகில் மிகப்பெரிய படிப்பை படித்து விட்டு, எந்த வேலைக்கும் செல்லாமல் அல்லது தினமும் சாதாரண ஒரு வேலைக்கு செல்லும் ஒரு நபரைப் பார்த்தால், இவரை போல் தனது மகனையும் ஆக்க வேண்டும் என்று எந்த பெற்றோரும் நினைப்பதில்லை.

பிற மனிதரை வைத்துத் தான் நாம் படிப்பைத் தேர்ந்தெடுக்கிறோமே தவிர, அந்த படிப்பின் எதார்த்தம் அதன் எதிர்காலம் குறித்து பெரும்பாலும் யாரும் முடிவு எடுப்பதில்லை.

எனவே நீங்கள் உங்களுக்கான படிப்பைத் தேர்ந்தெடுக்கும் போது, மற்றவர்களுக்கான தாக்கத்தை பார்க்காமல், இந்த படிப்பைப் படித்தால் உங்களுக்கான எதிர்காலம் எப்படி இருக்கும் என்று, உங்களது நிலையையும் அந்த படிப்பின் எதிர்கால போக்கையும் கணித்து திட்டமிட்டால் சிறப்பாக அமையும்.

எதிர்காலத்தில் இருந்து நிகழ்காலத்திற்கு வாருங்கள்

    நீங்கள் பத்தாவது வகுப்பு விடுமுறையில் அடுத்து என்ன செய்யலாம் என்று ஆலோசனை கேட்டு இருப்பீர்கள்; அது போன்று 12 ஆம் வகுப்பு விடுமுறையில் அடுத்து என்ன செய்யலாம் என்று ஆலோசனை கேட்டுக் கொண்டிருப்பீர்கள்.

    இப்படி இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை யோசிக்காமல் நீண்ட காலத்திற்குத் திடடமிடுங்கள். அதற்கு நீங்கள் எதிர்காலத்தில் இருந்து நிகழ்காலத்திற்கு வர கற்றுக் கொள்ள வேண்டும்.

    அது எப்படி?

    தற்போது உங்களுக்கு வயது 17. ஆண்டு 2024.

    2037 ஆம் ஆண்டில் உங்களுக்கு வயது 27 ஆகும் போது நீங்கள் என்னவாக இருக்க வேண்டும் என்பதை இப்போதே தீர்மானியுங்கள்.

    ஒன்று, இரண்டு, மூன்று விருப்பங்களை தேர்வு செய்யுங்கள்.

    உதாரணத்திற்கு 2037 ஆம் ஆண்டு ஒரு கல்லூரியில் வரலாற்றுத் துறை பேராசிரியர் ஆவது உங்கள் லட்சியம் என்று வைத்துக் கொள்வோம்.

    அதற்கு நீங்கள் 2036 ஆம் ஆண்டு ஆராய்ச்சி படிப்பு (Ph.D.,) படித்திருக்க வேண்டும்.

    2028 ஆம் ஆண்டு முதுகலையில் (MA) வரலாறு படிக்க வேண்டும்

    2024 ஆம் ஆண்டு இளங்கலை (BA) வரலாறு படிக்க வேண்டும்

    இப்போது உங்களிடம் கேட்கிறேன்.

    நீங்கள் என்னவாக விரும்புகிறீர்கள்?

    உங்கள் பதில் இப்படி வேண்டும்.

    சார்! நான் வரலாற்றுத் துறையில் கல்லூரி பேராசிரியராக ஆக வேண்டும்.

    அதற்கு ஆராய்ச்சி படிப்பு வேண்டும். அல்லது NET / SET தேர்வில் வெற்றி பெற வேண்டும்.

    ஆராய்ச்சி படிப்பு படிப்பதற்கு முதுகலை வரலாறு தேவை.

    முதுகலை வரலாறு படிப்பதற்கு இளங்கலை வரலாறு தேவை.

    அதனால் 12 ஆம் வகுப்பு முடித்தவுடன் நான் இளங்கலை வரலாறு தேர்வு செய்ய ஆசைப்படுகிறேன்.

    +2 முடித்ததற்கு பின் என்ன செய்ய வேண்டும் என்று தீர்மானிக்கும் உங்களது முடிவையும், எதிர்காலத்தில் இருந்து நிகழ்காலத்திற்கு வருகின்ற இந்த முடிவையும் யோசனை செய்து பாருங்கள்.

    கற்பனையே வித்தியாசமாக இருக்கும்.

    இதுபோன்று பல மாணவர்களிடம் அடுத்து என்ன செய்யப் போகிறீர்கள் என்று கேட்டால்…

    சார், நான் அரசு அதிகாரியாக ஆக வேண்டும் என்று சொல்வார்கள்.

    அரசாங்கத்தில் ஏராளமான துறைகள் இருக்கின்றன.

    எந்தத் துறையில் எந்த பதவியில் நீங்கள் பத்து ஆண்டுகளுக்கு பின் அமர வேண்டுமென்று ஆசைப்படுகிறீர்களோ, அந்தத் துறை சார்ந்த தேர்வு, அந்த தேர்வுக்கான தகுதி, பாடத்திட்டம், மதிப்பெண்கள் விபரம் அனைத்தையும் தெரிந்து, அந்தத் தேர்வு எழுதுவதற்கான அடிப்படைத் தகுதி இப்பொழுது நான் எடுக்கக் கூடிய கோர்ஸில் இருப்பதால், நான் அதை தேர்ந்தெடுத்து இருக்கிறேன் என்ற தெளிவான மனோநிலை உங்களுக்கு வேண்டும்.

    எனவே நீங்கள் தெளிவான மனநிலையில் கல்லூரிக்குள் அடி எடுத்து வைக்க என் வாழ்த்துக்கள்!

    முனைவர் மு. பக்கீர் இஸ்மாயில்
    இணை பேராசிரியர்
    பொருளாதாரத் துறை
    புதுக்கல்லூரி, சென்னை – 600 014
    கைபேசி: +91 96000 94408

    Visited 1 times, 1 visit(s) today