மாதத்திற்கு ஒருமுறை முகச்சவரம் செய்வதை வழக்கமாக கொண்டிருந்தேன். எத்தனை வயதிலிருந்து சவரம் செய்துகொள்ள ஆரம்பித்தேன் என்பது நினைவில் இருந்தால், இதுவரை எத்தனை சவரம் செய்துள்ளேன் என்பதை சுலபமாக சொல்லி விடலாம்.
அதே போல்தான் மூன்று மாதத்திற்கு ஒருமுறை தலை முடியை வெட்டிக்கொள்ளும் பழக்கத்தையும் ஏற்படுத்திக் கொண்டிருந்தேன். அக்குளுக்குள் சவரம் செய்து ஆறு மாதத்திற்கு மேல இருக்கும்.
அக்குளுக்குள் வேர்த்து வேர்த்து சடை பிடித்துப் போய் ஊரையே அழைத்து முடி எடுப்பு விழா எடுக்கலாம் அந்த அளவிற்கு வளர்ந்து கிடந்தது.
மனுசப் பிறவிகள் என்னதான் இரண்டு, மூன்று தரம் வாசனை சோப்புகளை போட்டு தேய்த்து குளித்துவிட்டு, வாசனை திரவியங்களை தெளித்துக் கொண்டாலும் அக்குள் முடியை சவரம் செய்தால்தான், உடலில் இருந்து வரும் துர்நாற்றத்திலிருந்து ஒரு தடுப்பு சுவர் அமைத்ததை போல இருக்கும்.
இல்லையென்றால், எவ்வளவு வாசனை திரவியங்களை தெளித்து மறைக்க முயன்றாலும் தெளித்து அரை, ஒரு மணி நேரத்தில் கிளம்பி வரக்கூடிய வியர்வை நாற்றத்தை நம்மாலே சகித்துக்கொள்ள முடியாது.
அப்படியென்றால், நம்மை சுற்றியிருப்போர்கள் நிலைமை பழகி விட்டோம் என்பதற்காக நம் உடலிலிருந்து வருகிற நாற்றத்தையும் சகித்துக்கொண்டு செல்ல வேண்டியதாகத்தான் இருக்கும்.
அவ்வாறு செல்வது என்பது பாசத்தினால் இருக்கலாம். இல்லை பதவி பாய்ந்துவிடும் என்ற பயத்தினாலும் இருக்கலாம். இன்னும் பிற காரணங்களும் இருக்கவே செய்கின்றன.
முடிவெட்டி முகச்சவரம் செய்து கொண்ட கையோடு அக்குள் முடியையும் சவரம் செய்துகொண்டு விடலாம் என்று நினைத்து சட்டையையும் பனியனையும் கழற்றி சலூன் கடையின் ஆணியில் தொங்க விட்டு, இடது கையை தூக்கி தலைக்கு பின்புற பக்கமாக உள்ளங்கையை வைத்துக்கொண்டு “அண்ணே இத கொஞ்சம் மழித்து விடுங்கண்ணே” என்று சலூன் கடைக்காரரிடம் சொன்னேன்.
அக்குள் முடியை சவரம் செய்ய சொன்னதுமே கொலை செய்ய சொன்னதை போல திண்ட திண்ட விழித்தார் சலூன் கடைக்காரர். அவர் என்னை பார்த்த விதத்தை பார்த்து ஒரு நிமிசம் நானே பயந்து போய்விட்டேன்.
‘சவரம் செய்ய சொல்றதுக்கு பதிலாக ஏதாவது வார்த்தை பிறழ்வாய் தப்பாக சொல்லி விட்டோமோ’ என்று யோசித்த எனக்கு அப்படி ஒன்றும் தவறாக பேசியதாக தோணவில்லை.
‘ஒருவேளை நாம சொன்னது புரியலயா? இல்லை சரியாக கேட்கலயா?’ என்றும் யோசித்துவிட்டு திரும்பவும் தெளிவாக “அக்குள் முடியை கொஞ்சம் மழித்து விடுங்க” என்று அழுத்தம் திருத்தமாக சொன்னேன்.
சலூன்கடைக்காரர் இப்போது கெட்ட வார்த்தையில் திட்டியதை போல விழித்தார். நான் நெல்லைக்காரன் நெல்லை தமிழில் பேசி ஏதாவது தவறாக அர்த்தம் செய்து கொண்டுவிட்டாரோ?
நான் நெல்லைக்காரனாக இருக்கலாம். ஆனா, இப்போது நெல்லை தமிழே எனக்கே மறந்து போய்விட்டது. அதற்கு காரணம் நான் சென்னையில் குடியேறி பதிமூன்று வருடங்கள் ஆகிவிட்டது.அதனால், இப்போது எந்த மாவட்டத்தோட தமிழிலும் பேசுவதில்லை.
ஏன், நான் சென்னை தமிழில்கூட பேசுவதில்லை. பொதுத்தமிழில் மட்டும்தான் பேசுகிறேன். நான் பேசியவை அனைத்தையும் ஞாபகப்படுத்திக் கொண்டு ‘பேசியதில் தவறு இருக்க வாய்ப்பில்லை’ என்று தெளிவடைந்தவனாய்,
“என்ன அப்படி பார்க்கறீங்க? ஏதாவது தப்பா கேட்டுட்டேனா?” என்றேன்.
“….”
“ஒன்னு பண்றேன்னு சொல்லுங்க. இல்ல, முடியாதுன்னு சொல்லுங்க? இப்படி, பொம்பள புள்ளைய பார்க்குற மாதிரி பார்த்துட்டே இருந்தா என்ன அர்த்தம் பண்றது.” என்றேன்.
அதன் பிறகு “இல்லை, இங்க பண்றதில்ல.” என்றார்.
“இத சொல்ல வேண்டியது தான? பார்த்துகிட்டே இருந்தா நான் என்னன்னு நினைக்கிறது. சரி, எவ்வளவு ஆச்சின்னு சொல்லுங்க?”
“இருநூற்று ஐம்பது” என்றதும்.
டிஜிட்டல் முறையில் பணத்தை கொடுத்துவிட்டு சலூனிலிருந்து வெளியேறி கடைக்கு முன்னால் நிறுத்தி வைத்திருந்த, எனது பைக்கை எடுத்துக்கொண்டு கிளம்பிச் சென்றேன்.
பைக்கில் செல்லும் போது எனக்குள்ளே சலூன் கடையில் நடந்த அந்த சம்பவமே என் நினைவில் வந்து வந்து சென்றது. அக்குளும் மனித உடம்பில் உள்ள ஒரு பகுதிதானே. அது ஒன்னும் தீண்டத்தகாத இடம் இல்லையே.
‘தலையையும் முகத்தையும் இவரை சவரம் பண்ணக் குடுத்துட்டு அக்குளுக்குன்னு தனியே யாரப் போயி பாத்து சவரம் பண்ணுறது?’ என்று யோசித்தபோது, எனது நினைவுக்கு வந்தவர் என்னுடைய சின்ன வயதில் நான் சந்தித்த அந்த மிலிட்டரி தாத்தா மைக்கேல். அவரை எப்படி அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியும்?
அப்ப, எனக்கு ஒரு எட்டு வயதிருக்கும் “ஏய் எனக்கும் ஆசை இருக்காதா, நான் எடுக்கட்டா” என்ற அன்புக்குரலோடு இரண்டு கைகளையும் விரித்தவாறு எங்களை நெருங்கும்போது என்னை போன்ற சிறுவர்கள் எல்லோரும் ஓட ஆரம்பித்துவிடுவோம்.
தெரு நாய்கள் அனைத்தும் தங்களுடைய ஒற்றுமையை காட்டுவதை போல ஒன்று சேர்ந்துகொண்டு குரல் வந்த திசையை நோக்கி குரைக்க ஆரம்பித்துவிடும்.
மைக்கேல் தாத்தாவை நாங்கள் தொடுவதற்கு அனுமதிப்பது இல்லையே தவிர அவர் எங்கள் ஊர் எல்லையை கடக்கும் வரை அவரை சுற்றி சுற்றிதான் வருவோம்.
பள்ளியில் மாறுவேட போட்டி நடந்தால் காந்தி தாத்தா, நேரு மாமா, பேரறிஞர் அண்ணா, கர்மவீரர் காமராஜர், மகாகவி பாரதியார் இவர்களின் வேசத்தை போட்டுக் கொண்டதைவிட மைக்கேல் தாத்தாவின் வேசத்தைதான் அதிகம் போட்டிருப்போம்.
மைக்கேல் தாத்தா வேசம் போட்டால் பரிசு கிடைக்குதோ இல்லையோ அத பற்றியெல்லாம் கவலையில்லை. ஆனால் மைக்கேல் தாத்தா வேசத்தில் வரும்போது கிடைக்கிற கை தட்டுதலுக்கு அளவே கிடையாது, அதற்காகவே போடுவோம்.
ஒரு முறை கேரளாவில் இருந்து எங்க வீட்டிற்கு எனது அத்தையும் மாமாவும் வந்திருந்தார்கள். அவர்கள் இருவருமே கேரளாவில் மூங்கிலார் எஸ்டேட்டின் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களாக இருந்தார்கள். என் மாமாவின் பெயரும் மைக்கேல் தான்.
அந்த சமயத்தில் என் அண்ணன் ஒரு சிறிய கோணிப்பைக்குள் இரண்டு, மூன்று கற்கள், பழைய பேட்டரி கட்டிகள் இன்னும் சில விளையாட்டு சாமான்களை போட்டுக்கொண்டு மைக்கேல் தாத்தாவைப் போல கோணிப்பையை கையில் பிடித்தவாறு தோளில் தொங்க போட்டுக்கொண்டு தனக்குத் தானே “மெக்கேல் வந்துட்டான்… மெக்கேல் வந்துட்டான்” என்று சொன்னான்.
அவன் சொன்னதை கேட்டுவிட்டு என் மாமா தனது பெயரைச் சொல்லி அழைக்கிறான் என்று கோபித்துக் கொண்டுவிட்டார். அதன்பிறகு என் தந்தை தலையிட்டு அவருக்கு விளக்கம் கொடுத்தார்.
அதன்பிறகும்கூட, அவர் சமாதானம் அடைந்ததாக தெரியவில்லை. அன்று மைக்கேல் தாத்தாவிடம் அழைத்து சென்று சவரம் பண்ணவும் வைத்தார்.
அப்போது மைக்கேல் தாத்தாவின் தோற்றத்தை பார்த்து உண்மையை புரிந்துக்கொண்டார். அந்த அளவுக்கு எங்களோடு கலந்திருந்தார் மைக்கேல் தாத்தா.
மைக்கேல் தாத்தா அவரை அவ்வளவு குண்டு என்றும் சொல்ல முடியாது. ஒல்லி என்றும் சொல்லிவிட முடியாது. மழையில் நனைந்த பனைமரத்தின் நிறம். ஐந்தரை அடி உயரம். பஞ்சு மிட்டாய் போன்ற தலையை பட்டாளத்துகாரனை போல முடியை தனக்கு தானே திருத்திக் கொண்டிருப்பார்.
அவரும் ஒரு முன்னாள் பட்டாளத்துக்காரர்தான். வெள்ளைக்காரன் ஆட்சியில் பட்டாளத்திற்கு பிடித்து செல்லப்பட்டவர். அவர் பட்டாளத்தில் செய்து வந்த முடி திருத்தும் பணியைதான் ஓய்வுக்கு பிறகும் செய்து வந்தார்.
நாங்கள் அவரை “மெக்கேல், ஏய்… மெக்கேல்” என்றே அழைப்போம். “மெக்கேல் வந்துட்டான்” என்று வயதுக்குகூட ஒரு மரியாதை கொடுக்காமல் பேசுவோம்.
ஒரு அழுக்கு கோணிப்பையை கையில் பிடித்தவாறே தோளில் போட்டு கொண்டு வருவார். அதனுள்ளே முடி திருத்துவதற்கும் சவரம் செய்வதற்கும் தேவையான கத்தரிக்கோல், சோப்பு, சவரக்கத்தி, மின்சாரம் இல்லாமல் முடி சமன் செய்யும் கருவி, சவரக்கத்தியை அப்ப… அப்ப கூர் செய்து கொள்ள தோலால் ஆன பெல்ட் ஒன்றும் வைத்திருப்பார்.
எங்க ஊரிலிருந்து ஐந்து கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள தர்மத்துப்பட்டி. அதுதான் அவருடைய சொந்த ஊர். அங்கிருந்துதான் தினமும் நடந்து சென்று அருகில் உள்ள ஈச்சட்டி, செம்மன்குளம், வல்கடம்பு, தியாகராஜபுரம் போன்ற ஊர்களில் முடி திருத்தும் பணியை செய்து வந்தார்.
இதில் தியாகராஜபுரம் தான் எனது ஊர். எங்கள் ஊரிலிருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் இருந்த டவுண் கல்யாணிபுரம். அங்கே தான் உயர்தர முடி திருத்தும் நிலையங்கள் இருந்தன. வசதி படைத்தவர்கள் மட்டுமே அங்கே சென்று முடி திருத்திக்கொள்வர்.
டவுணில் முடி திருத்தி கொள்ள ஐந்து ரூபாயும் சவரம் பண்ண மூன்று ரூபாயும் வாங்குவார்கள். மைக்கேல் தாத்தா முடி வெட்ட இரண்டு ரூபாயும் சவரம் பண்ண ஒத்த ரூபாயும் மொத்தம் மூன்று ரூபாய்தான் வாங்குவார்.
அந்த மூன்று ரூபாயையும் உடனே கொடுக்காமல் ஒரு வாரம், பத்து நாள் சென்றுதான் சிலர் கொடுப்பார்கள். அப்பவும் எந்த வித முக சுழிப்பும் இல்லாமல் வாங்கிக்கொண்டு செல்வார்.
சிலர் சொன்ன தேதி கடந்தும் கொடுக்காமல் இருப்பர். அவராக சென்று ஞாபகப்படுத்தும்போது “நான் அப்பவே தந்துட்டேன்” என்றும் சொல்பவர்களும் உண்டு. அப்பவும் சிரித்த முகத்தோடு சிலுவை போட்டபடி கடவுளை வணங்கிவிட்டு செல்வார்.
மைக்கேல் தாத்தா கோபப்பட்டு நான் பார்த்ததில்லை, குழந்தைகள் இடத்தில் அவருக்கு கொள்ளை பிரியம். தன்னிடம் முடி வெட்டிக்கொள்ளும் பிள்ளைகளை முடி வெட்டி முடித்ததும், முத்தமிட்டே பிறகே அனுப்பி வைப்பார்.
அவருக்கு மூக்கு பொடி போடும் பழக்கமும் அதே பொடியை வாயில் போட்டு குதப்பிக்கொள்ளும் பழக்கமும் இருந்தது.
எங்கள் ஊரில் திரும்பிய திசையெல்லாம் வேப்ப மரங்களே காட்சி தரும். முடி திருத்திக்கொள்ள வருகிறவர்களை, அங்கிருக்கும் ஏதாவது ஒரு வேப்பமரத்து நிழலில் அமர்த்தி வைத்து முடி வெட்டி, சவரம் செய்து விடுவார்.
முடி வெட்டி சவரம் செய்துக்கொள்ள ஆட்களை அமர்த்தியதுமே, வாழை மட்டையில் மடித்து தனது இடுப்பு வேட்டிக்குள் சொருகி வைத்திருக்கும் மூக்கு பொடியை கையில் எடுத்து, மட்டையை விரித்து பெருவிரல் ஆள்காட்டி விரல் இரண்டையும் சேர்த்து மூக்கு பொடியை எடுத்து மூக்கில் வைத்து நன்றாக உறிந்துவிட்டு, அதை வாயின் இரு பக்கமும் பற்பசையை தேய்ப்பதை போல் தேய்த்துவிட்டு, அப்படியே பாத்திரத்தில் இருக்கும் தண்ணீரை ஒரு கை அள்ளி தலையில் வைத்து, இரண்டு கையாலும் நன்றாக பரோட்டாவுக்கு மாவு பிசைவது போல் பிசைந்து சீப்பை எடுத்து தலையை சீவி விட்டதுக்கு அப்புறம், கத்தரிக்கோலை எடுத்து முடியை வெட்ட ஆரம்பிப்பார்.
ஆரம்பித்த சற்று நேரத்திற்கெல்லாம் தூக்கம் கண்ணை சொக்கி கொண்டு வரும். அப்ப எனக்கு ஒரு எட்டு வயது இருக்கும். என் பெற்றோருக்கு அடுத்து அடுத்து என்னையும் சேர்த்து நான்கு குழந்தைகள். நான் மூன்றாவது.
எங்களுக்கு மைக்கேல் தாத்தா மீது பயம் கிடையாது. அவரோட முத்தத்தின் மீதே பயம். அவர் எங்கள் ஊருக்குள் அடியெடித்து வைத்தது முதல் என்னை போன்ற சிறுவர்கள் எல்லோரும் அவரை சுற்றி சுற்றியே வருவோம்.
ஆனால் அவர் எங்களை நெருங்கும் போது காதொலி தூரம் ஓடுவோம். அப்போதெல்லாம் முடி வளர்ந்ததுமே ‘மைக்கேல் தாத்தாவிடம் இருந்து விடை பெற்று டவுணுக்கு சென்று நாமளும் முடி வெட்டுவேன்’ என்றிருக்கும்.
இப்போது ‘மைக்கேல் தாத்தாவை போன்ற ஒரு ஆள் வரமாட்டாரா?’ என்று நினைக்கிறேன்.
அவரிடம் முடிவெட்டி சவரம் செய்து கொண்டவர்கள் கிராமத்துக்காரர்கள். அவர்கள் எந்த விதமான சோப்பையும் உபயோகப்படுத்தியதில்லை.
கழனியில் வேலை செய்துவிட்டு கையோடு கண்மாய்க்குள் இறங்கி குளித்துவிட்டு வீட்டிற்கு திரும்புவர். காட்டு வேலைக்கு சென்று வரும் கணவனின் வியர்வை வாசனை மனைவிக்கு ஒரு வித காம உணர்வை தூண்டும் என்று அறிவியல் பூர்வமான ஆராய்ச்சிகள் சொல்கின்றன.
ஆண்களின் வியர்வையில் இருந்து பெண்களுக்கு காம இச்சையை தூண்டி குஷிப்படுத்தும் வாசனை திரவியங்களை தயாரிக்க சில நிறுவனங்கள் முயற்சிகள் மேற்கொள்வதாய் கேள்விப்பட்டிருக்கிறேன்.
ஆணின் வியர்வை பெண்களுக்கு காம உணர்வை தூண்டலாம். ஆனால் அருகில் வரும் மற்றவர்களால் எப்படி அந்த வாசனையை சகித்துக்கொள்ள முடியும்.
அதையெல்லாம் மைக்கேல் தாத்தான் எந்தவிதமான முகச்சுழிப்பும் கொடூர பார்வையையும் வீசாமல் சவரம் செய்து விடுவார். அவரை நான் சந்தித்து முப்பது ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது.
என்னைப் போல நவநாகரிக சலூனுக்கு சென்று வருகிற எங்கள் பகுதியை சேர்ந்த எவருக்கும் மைக்கேல் தாத்தாவின் நினைப்பு வராமல் இருக்காது.
ரக்சன் கிருத்திக்
8122404791
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!