மைசூர் மசாலா தோசை செய்வது எப்படி?

மைசூர் மசாலா தோசை அட்டகாசமான சுவையில் எல்லோரையும் கவர்ந்திழுக்கும் தோசை வகை.

காரத்தை விரும்பி உண்பவர்களுக்கும், மசாலா சுவை ரசிகர்களுக்கும் இது ஓர் வரப்பிரசாதம் என்றே சொல்லலாம்.

மசாலா தோசையில் உருளைக்கிழங்கு மசாலாவை தோசையினுள் வைத்துக் கொடுப்பர்.

மைசூர் மசாலா தோசையில் உருளைக்கிழங்குடன் கார மசாலாவையும் வைத்துக் கொடுப்பர்.

சூடான சாம்பார் அல்லது தேங்காய் சட்டினியுடன் இதனை உண்பது மிகவும் பொருத்தமாக இருக்கும்.

இனி சுவையான மைசூர் மசாலா தோசை செய்முறை பற்றிப் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

தோசை தயார் செய்ய

இட்லி அரிசி – 1 கப்

உளுத்தம் பருப்பு ‍ 1/4 கப்

வெந்தயம் – 1 ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

கடலை எண்ணெய் – தோசை சுடத் தேவையான அளவு

உருளைக்கிழங்கு மசாலா செய்ய

உருளைக்கிழங்கு – 3 எண்ணம் (தோராயமாக 300 கிராம்)

பெரிய வெங்காயம் – 1 எண்ணம் (தோராயமாக 150 கிராம்)

பச்சை மிளகாய் – 1 எண்ணம் (பெரியது)

இஞ்சி – சுண்டு விரல் அளவு

கறிவேப்பிலை – 2 கீற்று

கொத்தமல்லி இலை – ஒரு கொத்து

நல்ல எண்ணெய் – 4 ஸ்பூன்

மஞ்சள் பொடி – 1 ஸ்பூன்

கடலை பருப்பு – 1 ஸ்பூன்

உளுந்தம் பருப்பு – 1 ஸ்பூன்

கடுகு – 1/4 ஸ்பூன்

சீரகம் – 1/2 ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

காரச் சட்னி செய்ய

மிளகாய் வற்றல் – 6 எண்ணம்

கொத்த மல்லி விதை – 3 டேபிள் ஸ்பூன்

சீரகம் – 1 டேபிள் ஸ்பூன்

வெள்ளைப் பூண்டு – 6 பற்கள் (பெரியது)

கறிவேப்பிலை – 5 கீற்று

உப்பு – தேவையான அளவு

மைசூர் மசாலா தோசை செய்முறை

தோசை மாவு செய்யும் முறைக்கு அரிசியையும் வெந்தயத்தையும் கழுவி நான்கு மணி நேரம் ஊற வைக்கவும்.

உளுந்தம் பருப்பை கழுவி 1/2 மணி நேரம் ஊற வைக்கவும்.

உளுந்தம் பருப்பை முதலில் மையாக அரைத்துக் கொள்ளவும்.

அரிசியையும், வெந்தயத்தையும் சேர்த்து நன்கு மையாக இல்லாமல் லேசாக மையாய் அரைத்துக் கொள்ளவும்.

உளுந்தம் மாவையும் அரிசி மாவையும் ஒருசேரக் கலந்து, உப்பு சேர்த்து பிசைந்து சுமார் 4-6 மணி நேரம் புளிக்க வைக்கவும்.

உருளைக்கிழங்கு மசாலா செய்ய முதலில் உருளைக்கிழங்கினை வேக வைத்து தோலுரித்துக் கொள்ளவும்.

பின்னர் அதனை சதுரத்துண்டுகளாக வெட்டவும்.

இஞ்சியை தோல் நீக்கி நசுக்கிக் கொள்ளவும்.

பெரிய வெங்காயத்தை தோலுரித்து சதுரத் துண்டுகளாக வெட்டவும்.

பச்சை மிளகாயை அலசி பொடியாக வெட்டவும்.

கறிவேப்பிலை மற்றும் மல்லி இலைகளை அலசி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

வாணலியை அடுப்பில் வைத்து அதில் நல்ல எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கடுகு, கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, சீரகம் சேர்த்து தாளிதம் செய்யவும்.

தாளிதம் செய்ததும்

கடுகு வெடித்ததும் கறிவேப்பிலை, நறுக்கிய பச்சை மிளகாய், நசுக்கிய இஞ்சி சேர்த்து வதக்கவும்.

கறிவேப்பிலை, பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்ததும்

ஒரு நிமிடம் கழித்து அதனுடன் நறுக்கிய பெரிய வெங்காயத்தைச் சேர்த்து ஒருசேரக் கிளறவும்.

வெங்காயம் சேர்த்ததும்

பின்னர் அதனுடன் மஞ்சள் பொடி சேர்த்துக் கிளறவும்.

மஞ்சள் சேர்த்ததும்

வெங்காயம் கண்ணாடிப் பதத்திற்கு வதங்கியதும், நறுக்கிய உருளைக் கிழங்கினைச் சேர்த்து ஒருசேரக் கிளறவும்.

உருளைக் கிழங்கினைச் சேர்த்ததும்

பின்னர் அதனுடன் கால் டம்ளர் அளவு தண்ணீர் மற்றும் தேவையான உப்பு சேர்த்து, உருளைக்கிழங்கினை நன்கு கரண்டியால் மசித்து விடவும்.

தண்ணீர் சேர்த்ததும்

உருளைக்கிழங்கு மசித்து ஒருசேரத் திரண்டு வரும்போது, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலையைச் சேர்த்து, நன்கு கிளறி அடுப்பினை அணைத்து விடவும்.

உருளைக்கிழங்கு மசாலா தயார்.

கொத்தமல்லி சேர்த்ததும்
உருளைக்கிழங்கு மசாலா

காரச்சட்னி தயார் செய்ய கொத்தமல்லி விதை, சீரகம், மிளகாய் வற்றல், வெள்ளைப்பூண்டு, கறிவேப்பிலை, உப்பு ஆகியவற்றை மிக்ஸியில் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

கொரகொரப்பாக அரைத்ததும்

அதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மைய விழுதாக்கிக் கொள்ளவும்.

விழுதாக அரைத்ததும்

தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, மாவினை ஊற்றி மெல்லிய தோசையாக விரிக்கவும். அதனைச் சுற்றிலும் கடலை எண்ணெய் ஊற்றவும்.

எண்ணெயை தோசை லேசாக உள்வாங்கியதும், தோசைக் கரண்டியை தண்ணீரில் முக்கி கரண்டியால் தோசைமாவினை ஒரே சீராகத் தடவி விடவும்.

தோசைக் கரண்டியை தண்ணீரில் முக்கி மாவின்மீது தடவும்போது மாவானது தோசைக் கரண்டியில் ஒட்டாது.

காரச்சட்னியை வைத்ததும்

தேவையான அளவு காரச்சட்னியை ஸ்பூனால் தோசை முழுவதும் விரித்து விடவும்.

காரச்சட்னியை விரித்ததும்

தோசையின் வலது ஓரத்தில் தேவையான அளவு உருளைக்கிழங்கு மசாலாவை வைத்து, தோசையின் பாதியளவுக்கு காரச்சட்னியின் மேல் விரித்து விடவும்.

உருளைக்கிழங்கு மசாலாவை வைத்ததும்

தோசை சிவந்து வெந்ததும், தோசையின் இடதுபுறப் பாதியை, உருளைக்கிழங்கு விரித்த பகுதியின் மேல் மடக்கி வைக்கவும்.

சுவையான மைசூர் மசாலா தோசை தயார்.

சூடான மைசூர் மசாலா தோசையுடன் சட்னி சாம்பார் சேர்த்துப் பரிமாறவும்.

குறிப்பு

சாதாரண மிளகாய் வற்றலுக்குப் பதிலாக, காஷ்மீரி மிளகாய் வற்றலைப் பயன்படுத்தி காரச்சட்னி தயார் செய்யலாம். காஷ்மீரி மிளகாய் வற்றலைப் பயன்படுத்தும் போது, அதன் அளவினைக் கூட்டிக் கொள்ளவும்.

விருப்பமுள்ளவர்கள் காரச்சட்னியில் தேங்காய் துருவலையும் சேர்த்து சட்னி தயார் செய்யலாம்.

ஜான்சிராணி வேலாயுதம்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.