மொய்யார் தடம் பொய்கை புக்கு முகேர்

மொய்யார் தடம் பொய்கை புக்கு முகேர்

மொய்யார் தடம் பொய்கை புக்கு முகேர் என்ன என்ற இப்பாடல் திருவெம்பாவையின் பதினோராவது பாடல் ஆகும்.

சிவந்த மேனியில் வெண்ணீறு பூசிய இறைவனான சிவபெருமான் மீது வாதவூரடிகள் எனப் போற்றப்படும் மாணக்கவாசகர் திருவெம்பாவையைப் பாடினார்.

கிபி 9-ம் நூற்றாண்டில் பாடப்பட்ட திருவெம்பாவை பாடல்கள் இன்றைக்கும் மார்கழியில் இறைவழிபாட்டின் போது பாடப் பெறும் சிறப்பினைப் பெற்றுள்ளது.

பாவை நோன்பு நோற்கும் பெண்கள் நீராட அகன்ற குளத்திற்குச் சென்று, இறைவனின் புகழினைப் பாடி, மீண்டும் பிறவாமை என்னும் நிலைத்த இன்பத்தை வழங்குமாறு வேண்டும் வகையில் திருவெம்பாவையின் பதினோராவது பாடல் அமைந்துள்ளது.

“சிவந்த மேனியில் வெண்ணீறு அணிந்த இறைவனே, நாங்கள் குளத்தில் நீராடும்போது உன்னுடைய திருவடிகளின் புகழினை பாடுவதால், உன்னுடைய அருளால் உன்னடியவர்களுக்கு கிடைக்கும் நிலைத்த இன்பத்தை நாங்களும் பெற்றோம். அந்த இன்பத்தை எங்களுக்கு நிலைத்திருக்க அருள் செய்வாயாக” என்று இறைவனிடம் நோன்பிருக்கும் பெண்கள் வேண்டுகின்றனர்.

கிடைத்தற்கரிய மனிதப் பிறவியைப் பெற்றவர்கள், எப்போதும் இறைவனை சிந்தையில் வைத்து வழிபட, நிலைத்த இன்பமாகிய பிறப்பின்மையை அடையலாம் என்பதை இப்பாடல் விளக்குகிறது.

இனி திருவெம்பாவை பதினோராவது பாடலைக் காண்போம்.

திருவெம்பாவை பாடல் 11

மொய்யார் தடம் பொய்கை புக்கு முகேர் என்னக்

கையால் குடைந்து குடைந்துஉன் கழல்பாடி

ஐயா வழியடியோம் வாழ்ந்தோம் காண் ஆர்அழல்போல்

செய்யா வெண்ணீறுஆடி செல்வா சிறுமருங்குல்

மையார் தடங்கண் மடந்தை மணவாளா

ஐயா நீ ஆட்கொண்டு அருளும் விளையாட்டின்

உய்வார்கள் உய்யும் வகை எல்லாம் உய்ந்துஒழிந்தோம்

எய்யாமல் காப்பாய் எமைஏல் ஓர் எம்பாவாய்

விளக்கம்

பாவை நோன்பிருக்கும் பெண்கள் குளத்திற்கு நீராட வருகின்றனர்.

“நெருப்பினைப் போன்று சிவந்த நிறமுடைய சிவபெருமானே!

வெண்மையான திருநீற்றினை அணிந்தவனே!

எல்லா செல்வங்களையும் உடையவனே!

சிறிய இடையினையும், மைதீட்டிய அகன்ற கண்களையும் கொண்ட உமையம்மையின் மணாளனே! ஐயனே!

வழியடிமைகளாகிய நாங்கள் வண்டுகள் மொய்க்கின்ற பூக்களைக் கொண்ட அகன்ற குளத்தில் முகேர் என்ற ஒலியை எழுப்பிவாறு குதிக்கின்றோம்.

அவ்வாறு குதித்து மூழ்கி கைகளால் நீரினைக் குடைந்து குடைந்து நீராடுகையில், கழல்கள் அணிந்த உன் திருவடிகளைப் புகழ்ந்து பாடி உன் அடியார்களாகிய நாங்கள் வாழ்ந்தோம்.

எங்கள் தலைவனே, உனது திருவிளையாடல்கள் மற்றும் திருவருளின் மூலம் உன்னுடைய அடியார்கள் துன்பங்களைக் கடந்து, நிலைத்த இன்பமான மறுபிறப்பின்மையை அடைந்துள்ளார்கள்.

நாங்களும் உன்னைப் புகழ்ந்து பாடி வாழ்வின் இந்நிலையை அடைந்துள்ளோம்.

இனியும் பிறவிகள் பல எடுத்து வருந்தி இளைக்காதவாறு எங்களை காப்பாற்ற வேண்டும்.

நிலைத்த இன்பமான பிறப்பின்மையைப் பெற, இறைவனை எப்போதும் சிந்தையில் இருத்தி வழிபட வேண்டும் என்பதை இப்பாடல் உணர்த்துகிறது.

 


Comments

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.