மௌன மொழி

இனி உலகின் பொது மொழியான மௌன மொழி பற்றிய ஒரு கதை.

மனிதன் தனது ஆன்ம பலத்தைப் பெருக்கிக் கொள்ள, மௌனவிரதம் இருக்கிறான். பேச வேண்டிய நேரத்தில் பேசாமல் இருப்பதும், பேசக் கூடாத நேரத்தில் பேசுவதும் குற்றமாகும்.

மௌனமாக இருக்கும் பொழுது அலைபாயும் மனதை அடக்கிச் சீர்படுத்த முடியும். மனமது செம்மையானால், மந்திரங்கள் ஓத வேண்டாம் என்று கூறுவார்கள்.

புத்தர் பற்றி நிரம்பக் கதைகள் உள்ளன. அதில் ஒரு கதை, பேச்சினால் விளையும் தீமை குறித்து, மிக அழகாக எச்சரிக்கிறது.

புத்தரின் பூர்வ ஜென்மப் பெயர் போதிசத்துவர். புத்தர் பிறந்தது முதல் பேசவே இல்லை. புத்தர் போதிசத்துவராய் இருந்த காலத்தில் அவருக்கு ஏற்பட்ட அனுபவத்தின் காரணமாகப் பேசாதிருப்பது நல்லது என்ற தீர்மானத்திற்கு வந்திருந்தார்.

புத்தர், அரசனுக்கு மூத்த மகனாகப் பிறந்த அரசகுமாரன். மிகவும் அழகாக இருந்தார். உடற்கட்டுடன் இருந்தார். கண்கள் ஒளியுடன் பிரகாசித்தன. ஆனாலும் அரசன் மிகவும் கலங்கிப் போனான். காரணம் வாய் மௌனத்தில் ஆழ்ந்திருந்தது.

நாட்டில் உள்ள அத்தனை மருத்துவர்களும் முயன்று பார்த்துத் தோற்றுப் போனார்கள். என் மகனின் வாய்ப் பேச்சைக் கேட்கும் பாக்கியம் எனக்கு இல்லையா? என்று அரசன் புலம்பித் தீர்த்தான்.

இறுதியில், இளவரசனைப் பேச வைப்பவர்களுக்குப் பரிசு என அறிவித்தான். நாட்கள் ஓடின, யாராலும் அரசகுமாரனைப் பேசவைக்க முடியவில்லை. அரசன் ஏங்கித் தவித்த படியே அவனது காலத்தைக் கடத்தினான்.

 

நீங்கள் ஏன் பேசினீர்கள்?

அரசகுமாரனுக்குத் தனிமை மிகவும் பிடித்த விஷயம். அதுவும் காடுகளில் தன்னந்தனியே நடப்பது மிகவும் பிடிக்கும்.

வழக்கம்போல் அவன் காட்டில் தனியே அமர்ந்து வானத்தையும், பசுமையான மரங்களையும், அருவியின் துள்ளல் நடையையும் கண்டு மகிழ்ந்து கொண்டிருந்தான்.

அப்பொழுது வேட்டைக்காரர்கள் சிலர் மிருகங்களைத் தேடி ஒன்றும் கிடைக்காததால், வருத்தத்திலும், சோர்விலும் அமர்ந்திருந்தனர். அப்பொழுது ஒரு ஜோடிக் குருவிகள் ‘கீச்…கீச்…’ எனச் சப்தமெழுப்பியபடி மகிழ்ச்சியுடன் படபடவென அங்கும் இங்குமாகப் பறந்து விளையாடிக் கொண்டிருந்தன.

பார்த்தான் ஒரு வேடன், எய்தான் அம்பை! இரண்டு குருவிகளும் அம்படிபட்டுத் தரையில் விழுந்து துடித்தன.

இதைக்கண்ட புத்தர் ஓடோடிப் போய் அவற்றைத் தமது கைகளில் தூக்கினார், துடித்தன பறவைகள், இளகியது அரசகுமாரனின் மனம். கண்களில் கண்ணீர்த் துளிகள்.

அந்தப் பறவைகளைப் பார்த்து, ‘நீங்கள் ஏன் பேசினீர்கள்?’ என்று கேட்டார். அரசகுமாரன் பேசியதைக் கண்ட வேடர்களுக்கு ஒரே ஆனந்தம். ஓடிச் சென்று இந்தச் செய்தியை மன்னனிடம் கூறினர்.

மகிழ்ச்சியடைந்த மன்னன், அரசகுமாரன் வருகைக்காகக் காத்திருந்தான். வழக்கம் போல பேசியதற்கான அறிகுறியே சிறிதும் இல்லாமல், அரண்மனையினுள் நடந்து, தமது அறைக்கு விரைந்தார் அரசகுமாரன்.

மன்னனுக்கு வந்தது கோபம்! வேடர்கள் பொய் சொல்லி உள்ளார்கள் என்று கருதி, பொய் சொன்ன வேடர்களின் தலையைச் சீவி விடும்படிக் கட்டளையிட்டார்.

அவர்களோ மன்னனிடம் கதறி அழுதார்கள், அங்கு வந்த அரசகுமாரனை பார்த்து, நீங்கள் பேசியது உண்மை! இது நமக்கு மட்டும் தான் தெரியும். நீங்கள் வாயைத் திறந்து ஒப்புக் கொண்டால் தான், எங்கள் தலை தப்பும், எங்கள் பிள்ளைகள் அனாதை ஆவது தடுக்கப்படும் என்று கூறி அழுதார்கள்.

அவர்கள், மீது கருணை கொண்ட அரசகுமாரன் ‘நீங்கள் ஏன் பேசினீர்கள்?’ என்று கேட்டுவிட்டு உள்ளே சென்றார். கதை சொல்லும் நீதியைப் பற்றி எதுவும் கூறத் தேவையில்லை, அது உணர்த்தும் நீதி உங்களுக்கே புரியும்.

பல நேரங்களில் மௌனம் நிறைய விஷயங்களை எளிதாகச் சொல்லி விடுகிறது.

நம்மால் வாழ்க்கை முழுவதும் பேசாதிருக்க இயலாது. ஆனால் தினமும், சிறிது நேரமாவது பேசாமல், மௌனமாக இருக்க முயற்சி செய்யலாம். அப்போது நமது மனம் மலரும் அதிசயத்தை உணரலாம்.

மௌன மொழி மூலம் நமது ஆன்ம பலம் பெருகும். குடும்பத்திலும் பணிபுரியும் இடத்திலும் மகிழ்ச்சி பொங்கும்.

 

காந்தியடிகளும், ரமண மகரிஷியும் பேசிய மொழி மௌன மொழி. நீங்களும் இன்றே முயன்று பாருங்களேன்.

காற்றின் மொழி – ஒலியாய், இசையாய்

பூவின் மொழி – நிறமாய், மணமாய்

கடலின் மொழி – அலையாய், நுரையாய்

காதல் மொழி – விழியாய், இதழாய்

இயற்கையின் மொழிகள் புரிந்துவிடின்

மனிதனின் மொழி மௌன மொழி.

– சிவகாசி, ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்

 

Comments are closed.