யானை என்னும் சூழல் பொறியாளர் பற்றி எல்லோரும் அவசியமாக அறிந்து கொள்ள வேண்டும்.
இவ்வுலகில் ஒரு செல் உயிரினமான அமீபா முதல் பெரிய உயிரினமான நீலத்திமிங்கலம் வரை எல்லா உயிரிகளும், தங்களின் வாழிடச்சூழலில் தனித்துவமான பங்களிப்பை தருவதோடு, உயிர்வாழ மற்ற உயிரினங்களைச் சார்ந்தே இருக்கின்றன.
சுற்றுசூழல் அமைப்பில் உள்ள அனைத்தும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளன. எனவே இச்சூழலில் இருக்கும் ஒரு இனத்தின் அழிவு மற்றொரு இனத்தின் உயிர்வாழ்வைக் கடுமையாக அச்சுறுத்தும்.
யானை நிலவாழ் உயிரிகளில் மிகப்பெரிய தாவர உண்ணி. உலகில் உள்ள உயிரினங்களில் மிகவும் புத்திசாலியான விலங்குகளில் ஒன்று. அதோடு தான் வாழும் உயிர்ச்சூழலை சிறந்த முறையில் கட்டமைக்கும் சூழல் பொறியாளராகவும் செயல்படுகிறது.
யானை வாழிடத்தில் தான் மட்டும் வாழாமல் ஆல்கா முதல் ஒட்டகச்சிவிங்கி வரையிலான உயிரினங்களுக்கு உணவு, தண்ணீர், உறைவிடம் உள்ளிட்டவைகளை வழங்குகிறது.
யானை என்னும் சூழல் பொறியாளர்
யானைகள் பொதுவாக ஒரு நாளில் பதினெட்டு மணி நேரத்தை உண்பதிலேயே செலவிடுகின்றன. மேலும் மிகப்பெரிய உடலினைக் கொண்டுள்ள வளர்ந்த ஒரு யானை நாள் ஒன்றுக்கு சராசரியாக 150 கிலோ தாவர உணவினை உண்ணுகிறது.
இதனால் யானை உணவினையும் நீரினையும் தேடி நீண்ட தொலைவு பயணம் செய்கிறது. ஆசிய யானையின் வசிப்பிட வரம்பு 400 சதுர கிலோ மீட்டருக்கு அதிகமகாவும், ஆப்பிரிக்க யானையின் வசிப்பிட வரம்பு 15000 சதுர கிலோ மீட்டருக்கு அதிகமாகவும் இருக்கிறது.
யானையின் உணவில் மர இலைகள், பட்டைகள், தளிர்கள், புற்கள், பழங்கள், விதைகள் ஆகியவை அடங்கும். யானைக்கு ஜீரணசக்தி மிகவும் குறைவு. தான் உண்ணும் உணவில் பாதிக்கு மேல் நன்கு ஜீரணம் செய்யாமல் சாணமாக வெளியேற்றுகிறது.
யானையின் உடலுக்குள் சென்று செரிமானமாகாமல் வெளியேற்றப்படும் விதையானது சிறந்த முளைப்புத் திறனைக் கொண்டுள்ளது.
யானையின் இடப்பெயர்ச்சி காரணமாக இவ்விதைகள் நீண்ட தொலைவுக்கு எடுத்துச் செல்லப்பட்டு விதைப்படுகின்றன.
இவ்விதைகளிலிருந்து புதிய இடங்களில் தாவரங்கள், புற்கள், மரங்கள் செழித்து வளர்ந்து மற்ற உயிரினங்களுக்கு வாழிடத்தை உருவாக்குகிறது.
யானைகள் உள்ள காட்டில் ஒரே வகையான மரங்கள் அருகருகே இருப்பதில்லை. மாறாக கலந்து மாறி மாறி இருக்கின்றன.
மரங்களின் பரவலான இவ்வமைப்பிற்கு யானைகளே முக்கிய காரணம். இதனால் மரங்கள் சூரிஒளி, நிலம், நீர் ஆகியவற்றிற்காக போட்டியில்லாமல் முழுமையாக செழித்து வளருகின்றன.
ஆப்பிரிக்க யானைகள் சுமார் 335 தாவர இனங்களையும், ஆசிய யானைகள் சுமார் 122 தாவர இனங்களையும் சாணத்தின் மூலம் வெவ்வேறு இடங்களுக்கு பரப்பி செழித்து வளரச் செய்கின்றன.
யானை தன்னுடைய இடப்பெயர்ச்சியின் போது வழியிலுள்ள பெரிய மரங்களின் கிளைகளை ஒடித்தும், வேரோடு பிடுங்கியும் உண்ணுகின்றன.
மேலும் முட்புதர்ச் செடிகளை மிதித்தும் அழிக்கின்றன. இதனால் ஒரே விதமான பரந்த மரங்கள் மட்டுமல்லாது தரைக்குக் கிடைக்கும் சூரிய ஒளியால் சிறிய தாவரங்களும் வளர உதவுகிறது.
பெரிய உருவத்தினைக் கொண்டுள்ள யானை இடப்பெயர்ச்சியின் போது அடர்ந்த தாவரங்களை அழித்து தெளிவான பாதையை உருவாக்குகிறது. இதனால் இப்பாதையில் சிறிய விலங்குகள் எளிதாக இயங்கி வாழிடத்தை அதிகரித்துக் கொள்கின்றன.
யானைகள் உணவிற்காக மரக்கிளைகளை ஒடிப்பதால் மரக்கிளைகள் கத்தரிக்கப்பட்டு மரங்களின் வளர்ச்சி எளிதாகிறது. இதனால் காடுகளின் கார்பன் அளவை அதிகரிக்கிறது.
யானைகள் தங்களின் கால்களால் கரையான் புற்றுகளை உடைத்து மண்ணைக் கிளறும்போது சோடியம், பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம் முதலிய கனிமச் சத்துகளை மரங்களுக்கு உரமாகக் கிடைக்கச் செய்கிறது. யானைகள் இல்லையென்றால் காடுகளுக்கு இக்கனிமச்சத்துகள் கிடைக்காமல் போய்விடும்.
யானைகள் காடுகளை செதுக்கும் சிற்பிகளாக இருப்பதால்தான் காடுவளம் பெருகி, மழைவளம் அதிகரித்து நீர்நிலைகள் நிரம்பி, மக்களுக்கு உணவும் நீரும் கிடைக்கிறது.
யானைச் சாணம் வண்டுகள், எறும்புகள், தேள்கள், சிலந்திகள், பூச்சிகள், கரையான்கள் உட்பட பல உயிரினங்களுக்கு உணவாக உள்ளது. யானை நாளொருன்றுக்கு 15 தடவை சாணம் இடுகிறது. சாணத்தை நம்பியிருக்கும் உயிரினங்களுக்கு இது போதுமானதாக உள்ளது.
புதிதான சாணத்தை நோக்கி எண்ணற்ற பூச்சிகள் திரண்டு வருகின்றன. பூச்சிகளை உணவாக்கும் பறவைகளுக்கு யானைச் சாணப் பூச்சிகள் முக்கிய உணவாக விளங்குகின்றன.
மேலும் சாண வண்டுகள், யானை சாணத்தை சேகரித்து அவற்றின் லார்வாக்களுக்கு உணவு ஆதாரமாக சேமித்து வைக்கின்றன.
பின்னர் சாணத்தில் உள்ள சாண வண்டு லார்வாக்களின் தொகுப்பு தேன் வளைக்கரடிகளுக்கு (Honey Badger) உணவாகின்றன. இவ்வாறு யானைச் சாணம் பெரிய உணவுச் சங்கிலியைக் கொண்டுள்ளது.
வண்ணத்துப்பூச்சிகள் உடலினை வெப்பப்படுத்த புதிதான யானைச் சாணத்தை மொய்ப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
மேலும் யானைச் சாணத்தில் இனப்பெருக்கத்திற்கு அவசியமான தாதுப்பொருள் உள்ளதால் ஆண் வண்ணத்துப்பூச்சிகள் அவற்றை உட்கொள்ள மொய்ப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
யானைகள் உணவிற்காக மரக்கிளைகளை ஒடிப்பதால் கீழே விழுந்த மரபாகங்களான இலைகள், பூக்கள், பழங்கள் உள்ளிட்டவைகளை மான், காட்டுப்பன்றிகள் உள்ளிட்ட பெரிய தாவரஉண்ணி விலங்குகள் உணவாக்குகின்றன.
ஆற்றுப்படுகைகளில் நீர் வற்றியுள்ள கோடைகாலங்களில் யானைகள் தங்களின் அபார மோப்பசக்தியைப் பயன்படுத்தி நிலத்தடி நீரைக் கண்டறிகின்றன.
அவ்விடங்களில் துதிக்கை, தந்தம் ஆகியவற்றை பயன்படுத்தி குழிகளைத் தோண்டி நீரினை வெளிக் கொணர்கின்றன. இவ்வாறு வெளிப்படும் நீரினை யானைகள் தவிர மற்ற விலங்குகளும் பயன்படுத்துகின்றன.
யானைகளின் வழித்தடத்தில் யானைகளின் கால்தடங்களால் உண்டாக்கப்படும் குழிகளில் நீர் நிரம்பி தவளைகள் அந்நீரில் முட்டையிட்டு பிரட்டவளைகள் உருவாகியிருப்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
மேலும் யானை கால்தடக்குழிகள் தவளைக் குஞ்சுகளுக்கு எதிரிகளின் அச்சுறுத்தல் இல்லாத பாதுகாப்பான இடமாகவும் இருப்பதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
யானை தன்னுடைய உடலுக்கு அவசியமான சோடியத்தை நிலத்திலிருந்தே பெறுகிறது. தன்னுடைய அபார மோப்ப சக்தியினால் சோடியம் இருக்கும் நிலத்தினைக் கண்டறிந்து தந்தங்களால் நிலத்தைத் தோண்டி சோடியத்தை உண்ணுகிறது.
இவ்வாறு கண்டறியப்படும் சோடியம் யானையால் மட்டுமல்லாமல் சோடியம் தேவைப்படும் ஏனைய தாவர விலங்குகளாலும் உண்ணப்படுகிறது.
யானை சுற்றுசூழல் அமைப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. யானை என்னும் சூழல் பொறியாளர் பங்களிப்பை வேறு எந்த உயிரியாலும் மாற்றவோ, நிரப்பவோ முடியாது.
ஆதலால் யானை இனத்தை வளரச் செய்து பூமி என்னும் உயிர்ச்சூழலை வளமாக்குவோம்.
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!