யானை துதிக்கை அதிசயங்கள் பற்றித் தெரியுமா?

நான் ஒரு சனிக்கிழமை மதியம், நெட் ஜியோ வொய்ல்ட் சானலில், ‘அனிமல் பைட் கிளப்’ என்ற நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

அதில் ஒரு யானைக் கூட்டம் நீரோடையில் இறங்கி முன்னேறிக் கொண்டிருந்தது.

யானையின் பாதி உயரத்தை மறைக்கும் அளவுக்கு, அந்நீரோடையில் உயரமான புற்கள் நிறைந்து கிடந்தன.

திடீரென யானைக் கூட்டத்தில் இருந்த, குட்டிக்கும் பெரியதுக்கும் இடைப்பட்ட அளவில் இன்னும் தாயை விட்டுப் பிரியாத யானை ஒன்று, வேகமாக தலையை இங்கும் அங்குமாக அசைத்து சப்தம் இட்டது. அந்த யானையின் துதிக்கை வெளியே தெரியவில்லை.

தாய் யானையைத் தவிர கூட்டத்தில் இருந்த மற்ற யானைகள் லேசாக பின்வாங்கின.

அப்போது யானையின் துதிக்கையை ஏதோ பிடித்து இழுக்கிறது என்று வர்ணனையாளர் கூறினார்.

அந்த யானை கஷ்டப்பட்டு துதிக்கையை வெளியே எடுத்தது. முதலை ஒன்று யானையின் துதிக்கையை கவ்வியபடி வெளியே தெரிந்தது.

தாய் யானை, முதலையை தலையால் முட்டியது.

உடனே யானைக் குட்டி ‘தம்’ பிடித்து துதிக்கையை உயரே தூக்கி, தண்ணீரில் படாதவாறு இங்கும் அங்கும் காற்றில் அசைத்தது.

மீண்டும் தாய் யானை முதலையை தலையால் முட்டவே, முதலை பிடியை தளர்த்தி துதிக்கையை விடுவித்தது.

உடனே யானைக் கூட்டம் அவ்விடத்தை விட்டு வேகமாக வெளியேறி விட்டது.

உடனே எனக்கு கஜேந்திர மோட்சம் நினைவிற்கு வந்தது. எனினும் இயற்கையாகவே யானையின் துதிக்கைக்கு இவ்வளவு பலமா? என்று ஆச்சர்யம் ஏற்பட்டது.

யானை துதிக்கை அதிசயங்கள் பற்றித் தெரியுமா? என்னும் இக்கட்டுரை மூலம் நீங்களும் யானை துதிக்கை அதிசயங்கள் பற்றி அறிந்து கொள்ளுங்கள்.

யானையின் துதிக்கை என்றால் என்ன?

யானையின் துதிக்கை என்பது மூக்கும், மேலுதடும் சேர்த்து நீண்டு வளர்ந்த சதைப் பகுதி ஆகும். யானையின் துதிக்கையானது இயற்கையின் அதிசயம் ஆகும்.

யானைத் தவிர ‘துதிக்கை’ என்ற சிறப்பான உறுப்பினைக் கொண்ட விலங்கு வேறு எதுவும் விலங்குகளின் உலகத்தில் இல்லை என்றே கூறலாம். இதனை நீண்ட, பற்றுவதற்கு ஏற்ற யானையின் மூக்கு என்றும் சொல்லாம்.

யானையின் துதிக்கையைப் போன்று மனித உடலில் உள்ள உறுப்பு நாக்கு ஆகும். துதிக்கையிலும், நாக்கிலும் எலும்பு கிடையாது. தசைகளால் ஆன இவை இயக்கத்திற்கு நீர் அழுத்தத்தைப் பயன்படுத்துகின்றன.

யானைக்கு துதிக்கை ஏன்?

யானைக்கு துதிக்கை மிகவும் அவசியமான ஒன்று.

தூண் போன்ற கால்கள் மற்றும் அதிக எடையைக் கொண்ட தலை ஆகியவற்றைக் கொண்டுள்ள யானையால், மற்ற தாவர உண்ணிகளைப் போன்று குனிந்தோ, நிமிர்ந்தோ உணவினை உண்ண இயலாது.

ஆதலால் தான் இயற்கை இதற்கு நீண்ட, வளையும் தன்மையுடன் வலிமையான துதிக்கையைக் கொடுத்துள்ளது.

எனவே யானையால் நின்றபடி துதிக்கையின் மூலம் தரையில் உள்ள புற்களையும், உயரமான மரங்களின் பூக்கள், தளிர்கள், பழங்களையும் பறித்து உண்ண இயலுகிறது.

யானை தனக்குத் தேவையான உணவினை பறித்து உண்ணவே, துதிக்கை படைக்கப்பட்டுள்ளது என்பது விஞ்ஞானிகளின் ஆய்வு முடிவு ஆகும்.

துதிக்கையின் அமைப்பு

நீண்டு தொங்கும் யானையின் துதிக்கையானது 2 முதல் 3 மீட்டர் நீளமும், 140 கிலோ எடையையும் கொண்டது.

துதிக்கை 40,000 சிறப்பு வாய்ந்த தசைகளால் ஆனது. இதில் சிறு எலும்புகூடக் கிடையாது. ஆனால் மனித உடல் முழுவதும் 639 வகையான தசைகளே காணப்படுகின்றன.

துதிக்கையானது யானையின் தலைப்பகுதியோடு அதன் மண்டையோட்டில் உள்ள எலும்புத் திறப்பின் மூலம் இணைக்கப்படுகிறது.

யானையின் மூளையிலிருந்து துதிக்கைக்குச் செல்லும் புரோபோசிஸ் நரம்பானது, துதிக்கையின் நுண்ணிய இயக்கங்களைக் கட்டுப்படுத்துகிறது.

கருவில் இருக்கும் யானைக் குட்டிக்கு மூக்கும், மேலுதடும் இணைக்கப்பட்டு இருக்காது. குட்டி பிறந்த பின்பு தசைப் பகுதி வளர்ச்சியடைந்து, மூக்கும் மேலுதடும் இணைந்து துதிக்கையாக வளர்ச்சி அடைகிறது.

மனிதக் குழந்தைக்கு கைகளின் பயன்பாடு வளர்ந்த பின்பே தெரிய வருவது போல், யானை குட்டியும் வளர்ந்த பின்பே துதிக்கையின் பயன்பாட்டினைத் தெரிந்து கொள்கிறது.

பொருட்களை கையாளுவதை வைத்து மனிதர்களை இடக்கைப் பழக்கமுடையவர், வலக்கை பழக்கமுடையவர் என்பதைப் போல் யானைகளும் பொருட்களைக் கையாளுவதைக் கொண்டு வலக்கைப் பழக்கமுடையவை, இடக்கைப் பழக்கமுடையவை எனப் பிரிப்பர்.

ஆப்பிரிக்க யானையை ஒப்பிடுகையில் ஆசிய யானை, துதிக்கையில் அதிகளவு தசைப்பகுதியைக் கொண்டு சிக்கலான பணிகளைச் செய்கிறது.

ஆசிய யானைகளோடு ஒப்பிடுகையில் ஆப்பிரிக்க யானை துதிக்கையானது அதிகளவு வளையங்களைக் கொண்டு மென்மையாக இருக்கிறது.

துதிக்கையின் பயன்கள்

இப்புவியில் உள்ள உயிரினங்களின் உறுப்புகளில் யானையின் துதிக்கையே அதிகளவு பல்வேறு பணிகளைச் செய்ய பயன்படுத்தப்படுகிறது.

யானை சுவாசிப்பதற்கு, குடிப்பதற்கு, குளிப்பதற்கு, உண்பதற்கு, நுகர்வதற்கு மற்றும் தொடர்பு கொள்வதற்கு துதிக்கையைப் பயன்படுத்துகிறது.

மேலும் மனித கைகளின் பயன்பாட்டினைப் போன்றே தொடுவதற்கு, பிடுங்குவதற்கு, இழுப்பதற்கு, உணர்வதற்கும் துதிக்கையை யானை பயன்படுத்துகிறது.

சுவாசம்

யானையின் சுவாசம் துதிக்கையின் வழியே நடைபெறுகிறது. யானைகளால் உடல் முழுவதும் நீரில் மூழ்கியும், துதிக்கையின் நுனிப்பரப்பு மட்டும் வெளியே தெரியும்படி வைத்துக் கொண்டு நீர்ப்பரப்புகளைக் கடந்து செல்ல இயலும்.

ஆழ்கடலில் நீந்துபவர்கள் சுவாசிக்கப் பயன்படுத்தும் ஸ்நோர்கெல் கருவியைப் போன்று துதிக்கை யானைக்குப் பயன்படுகிறது.

மோப்பசக்தி

யானையின் துதிக்கை அபார மோப்ப சக்தியைக் கொண்டது.

யானையின் மோப்பசக்தி வேட்டை நாயின் மோப்பசக்தியைப் போன்று இருமடங்கு அதிகமானது.

யானையால் சுமார் 19 கிமீ தூரத்தில் இருக்கும் உணவினையும், நீரினையும் மோப்பசக்தியால் கண்டறிய இயலும்.

துர்நாற்றம் அடிக்கும் போது யானை சுவாசத்தைத் தடை செய்யாமல், துதிக்கையை தேவையான உயரத்திற்கு தூக்கி, தேவையான திசையில் திருப்பிக் கொள்ளும்.

கனமான பணிகளைச் செய்ய

பல்வேறு வகையான கனமான பணிகளைச் செய்ய, யானை தன்னுடைய துதிக்கையைப் பயன்படுத்துகிறது.

யானை தன்னுடைய துதிக்கையால் 300 கிலோ வரை தூக்க இயலும்.

மரங்களை வேரோடு சாய்க்கவும், மரப்பட்டைகளை உரிக்கவும், மரங்களின் கிளைகளை முறிக்கவும் யானை துதிக்கையைப் பயன்படுத்துகிறது.

மேலும் ஆற்றுப்படுகைகளில் நிலத்தினைத் தோண்டி, குடிநீர் வரவழைக்கவும் துதிக்கை பயன்படுகிறது.

மென்மையான பணிகளுக்கு

மிகவும் மென்மையான துதிக்கையைக் கொண்டு, யானை தன்னுடைய கண்கள் மற்றும் முகப்பகுதியைச் சுத்தப்படுத்துகிறது.

சுமார் 7 மீட்டர் உயரத்தில் உள்ள மரங்களில் தளிர்கள், பழங்கள், பூக்கள் ஆகியவற்றை பறிக்கவும், தரையில் வளரும் விருப்பமான புற்களைப் பிடுங்கவும் துதிக்கையை பயன்படுகிறது.

மேலும் துதிக்கையால் தோலுடன் கூடிய நிலக்கடலையின் உள்ளே இருக்கும் பருப்பு உடையாமல் தோலை மட்டும் உரிக்க‌ இயலும். இது துதிக்கையின் திறமையான சாதனை தானே.

தண்ணீரை உறிஞ்ச

வளர்ந்த ஆப்பிரிக்க யானை தன்னுடைய துதிக்கையில் 12 லிட்டர் நீரினையும், ஆசிய யானை 8 லிட்டர் தண்ணீரையும் உறிஞ்சி கொள்ள இயலும்.

யானை தன்னுடைய உடலின் வெப்பத்தினைக் குறைத்துக் கொள்ள, துதிக்கையால் தண்ணீர் மற்றும் மணலினை உறிஞ்சி உடலில் தெளித்துக் கொள்ளும்.

உணர்வுகளை வெளிப்படுத்த

யானைகள் தங்களுடைய அன்பினை வெளிப்படுத்த, துதிக்கைகளால் ஒன்றை ஒன்று தடவிக் கொள்ளும். குட்டி யானைகள் பாசத்தால் துதிக்கையால் மற்றொன்றை தேய்த்தும், பிடித்து இழுத்தும், புற்களை எறிந்தும் விளையாடுகின்றன. இதனால் குட்டிகளுக்கு இடையே இணக்கம் அதிகரிக்கிறது.

யானையின் விரல்

துதிக்கையின் நுனிப்பகுதியில் வளைந்த அமைப்பு யானையின் விரல் எனப்படுகிறது. ஆப்பிரிக்க யானை இரண்டு விரல்களையும், ஆசிய யானை ஒரு விரலினையும் கொண்டுள்ளது.

ஆப்பரிக்க யானை தன்னுடைய இரண்டு விரல்களால் பிடித்து பொருள்களை கையாளுகிறது. ஆசிய யானை துதிக்கையால் சுற்றி வளைத்து பொருளை கையாளுகிறது.

யானை துதிக்கை அதிசயங்கள் அளவிட முடியாதவை. இவ்வுலகின் வாழ்க்கைப் போராட்டத்தில் நிலைத்து வாழ, யானைக்கு துதிக்கை அவசியாமானது என்பதில் ஐயம் இல்லை.

வ.முனீஸ்வரன்

One Reply to “யானை துதிக்கை அதிசயங்கள் பற்றித் தெரியுமா?”

  1. எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய யானை டாக்டர் கதையை படித்தேன்.
    அதில் யானைகளின் உணர்வுகளை அழகாக பதிவு செய்து இருப்பார்.

    இந்தக் கட்டுரையில் யானையின் துதிக்கை பற்றிய தகவல்களை தெளிவாக பதிவு செய்து உள்ளீர்கள்.

    வாழ்த்துக்கள் ஐயா…!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.