யாமினி – பகுதி 1

விடிகாலை நாலு மணிக்கே விழிப்பு வந்துவிட்டது ரேவதிக்கு.

படுக்கையில் எழுந்து உட்கார்ந்தவள் கண்களைத் திறக்காமலேயே, “புள்ளையாரப்பா! முருகா!, ஆஞ்சனேயா!” என்று ஆரம்பித்துத் தனக்குத் தெரிந்த அனைத்துத் தெய்வங்களின் பெயர்களையும் கைகளைக் கூப்பிக் கண்களை மூடிக் கொண்டு மெதுவாய் உச்சரித்தாள்.

பிறகு கண்களைத் திறந்து இரு உள்ளங்கைகளையும் ‘பரபர’வென்று தேய்த்து இரு கைகளையும் அருகருகே வைத்துப் பார்த்தாள். தலை முடியைக் கோதிக் கொண்டாள்.

மெல்லப் படுக்கையிலிருந்து எழுந்து பாத்ரூம் நோக்கிச் சென்றவளை பாத்ரூம் வாசலின் டைல்ஸ் ஒட்டப்பட்டிருந்த ஒரு இன்ச்சே உயரமாயிருந்த படி தடுக்கியது. கட்டைவிரல் மடங்கி நிமிரப் ‘பளீரெ’ன்று வலித்தது.

“ஐயோ! அம்மா!” என்றவள் அப்படியே தரையில் உட்கார்ந்து கொண்டாள். நல்லவேளை விரலில் காயம் ஏதும் ஏற்படவில்லை.

கட்டை விரலை மெல்ல நீவி விட்டவள், ‘காலம்பர எழுந்த ஒடனேயே அபசகுனம் மாரி இப்டியா இடிச்சிக்கனும். இன்னிக்கு கெமிஸ்ட்ரி ப்ராக்டிகல் எக்ஸாம் இருக்கே. கஷ்டமா இருந்துடுமோ! அதுவும் அந்த முசுடு ஆர்.கே.சார்க்கு பொண்ணுங்களக் கண்டாலே புடிக்காதே. இன்னிக்கின்னு அவருக்குக் கோவம் பொங்கி மார்க்ல கை வெச்சுடுவாரோ!’ கவலை எட்டிப் பார்த்தது +2 படிக்கும் முழுஆண்டுத்தேர்வுக்குத் தயாராகிக் கொண்டிருந்த ரேவதிக்கு.

“புள்ளையாரப்பா! நீதான் பாத்துக்கனும்” என்று வாய்விட்டுச் சொல்லியபடியே பல் விளக்கிவிட்டு ஹாலுக்கு வந்தவள் காலண்டரில் புன்னகையோடு அமர்ந்திருந்த பிள்ளையாரைப் பார்த்துக் கன்னத்தில் போட்டுக் கொண்டு பாதங்களைத் தொட்டுக் கண்களில் வைத்துவிட்டு தலை உச்சியியிலும் வைத்துக் கொண்டாள்.

“புள்ளையாரப்பா இன்னிக்கு ப்ராக்டிகல் எக்ஸாம் ஈஸியா இருக்கனும்பா” என்று வேண்டிக் கொண்டாள்.

ஃபிஸிக்ஸ் பாடங்களும் கெமிஸ்ட்ரி பாடங்களும் அடுத்தடுத்து இடம் பெற்றிருந்த பைண்ட் செய்யப்பட்ட கனத்த புத்தகத்தை எடுத்து டேபிள் மேல் வைத்துவிட்டு படிக்க உட்கார்ந்தவளுக்கு, ‘காபி குடிச்சா சுறுசுறுப்பா படிக்கலாம்ல’ எண்ணம் தோன்ற சமையலறைக்குள் நுழைந்தாள்.

ராத்திரியே படுக்கப் போகும் முன் அம்மா பாக்கெட் பாலைக் காய்ச்சி மூடி அடுப்பின் மீதே வைத்து விடுவது வழக்கம்.

அதனால் அதிலிருந்து ஒருடம்ளர் பாலை எடுத்து காபி போடும் வால் பாத்திரத்தில் ஊற்றிவிட்டு அடுப்பைப் பற்ற வைக்க ஜன்னல் மர ஃபிரேமில் இரு ஆணிகளுக்கிடையே தொங்கும் லைட்டரை எடுக்க கையை நீட்டினாள்.

அப்போது எங்கிருந்தோ பறந்து வந்த பெரிய சைஸ் கரப்பான்பூச்சி ஒன்று ரேவதியின் கன்னத்தில் வந்து அமர்ந்து தலையை நோக்கி ஊர்ந்தது.

அடுத்தநொடி பயத்திலும் அருவருப்பிலும் “வீல்” என்று அலறியபடி கரப்பான் பூச்சியைக் கையால் தட்டிவிட அது ‘தொப்’பென்று டம்ளரில் ஊற்றி வைத்த பாலில் விழுந்து மல்லாந்தது.

பயத்தில் கிச்சனைவிட்டு வெளியே ஓடி வந்தாள் ரேவதி. கரப்பான்பூச்சி அமர்ந்து ஊர்ந்த இடம் குறுகுறுத்து மனதை இம்சை செய்தது.

“ஐயோ! இதென்ன காலம்பற எழுந்த நேரம் சரியில்லையா. அடுத்தடுத்து ப்ரர்ச்சனையாவே நடக்கறது. இன்னிக்கு ஒழுங்கா எக்ஸாமுக்குப் போவமா? போனாலும் ப்ராக்டிகல நல்லா பண்ணுவமா. கடவுளே பயமா இருக்கே’ என்று மனம் அலை பாய, வாஷ்பேசினில் தண்ணீரைப் பிடித்து கன்னத்தைத் துடைத்துக் கொண்டாள்.

‘காபியும் வேண்டாம்; ஒருமண்ணும் வேண்டாம்’ என்று நினைத்தபடி ‘மீண்டும் படிக்கலாம்’ என்ற எண்ணத்தோடு மேஜைக்கு அருகே வந்தபோது செல்போன் அழைப்பு சன்னமாகக் கேட்டது.

இரவு படுத்திருந்த படுக்கையின் அருகேயிருந்து சப்தம் வரவே “அட! செல்ல எடுத்துண்டுவர மறந்துட்டேம் பாரு” என்றவாறே படுக்கையருகே ஓடியவள் குனிந்து செல்போனை எடுத்தபோது அம்மா புரண்டு படுத்ததைத் பார்த்தாள்.

‘நல்லவேள அம்மா செல்போன் சத்தம் கேட்டு எழுந்துக்கல. முழுச்சுண்ருந்தா, ஆரம்பிச்சாச்சா விடியறத்தையேன்னு திட்டு விழும்’ என்று எண்ணுகையில் செல்திரையில் தோழி யாமினியின் நம்பர் மிளிர்ந்தது. ஆன் செய்தாள்.

“ஹலோ! குட்மார்னிங்டி ரேவி, எழுந்தாச்சா?” யாமினியின் குரல்.

“வெரிகுட்மார்னிங்டி யாமி, எழுந்து அரமணியாச்சு”

“என்னப்பா வாய்ஸ் ஒருமாதிரி இருக்கு. தூக்கம் கலையலயா? காபி குடிச்சியா?”

“க்கும். எங்க காபி குடிக்கிறது? ப்ச்”

“ஏம்ப்பா என்ன ஆச்சு? பால் இருக்குல்ல?”

“பால்லாம் இருக்கு. ஆனா?”

“ஏய்! என்னாச்சு? சொல்லுப்பா”

பாத்ரூமில் படி தடுக்கி விழுந்ததையும் கன்னத்தில் கரப்பான்பூச்சி பறந்து வந்து
உட்கார்ந்து ஊர்ந்ததையும் தான் அதைத் தட்டிவிட அது பாலில் போய் விழுந்ததையும் விவரமாய்ச் சொன்னாள்.

“டீ! யாமி பயமாருக்குடி. காலேல எழுந்ததுலேந்து அபசகுனமாவே நடக்கறது.
இன்னிக்கு நா ப்ராக்டிகல் எக்ஸாம அட்டென்ட் பண்ணுவேனா. அட்டென் பண்ணினாலும் சரியா செய்வேனா.

செஞ்சாலும் முழுமார்க் கெடைக்குமா? பயமாருக்குடி யாமி. இன்னிப்பொழுது நல்ல பொழுதா போகுமான்னு அகில் திகிலா இருக்குப்பா” கிட்டத்தட்ட தோழியிடம் அழுதே விட்டாள் ரேவதி.

“ஏய், ஏய்.. நிறுத்து.. நிறுத்து.. மொதல்ல அழுவுறத நிறுத்து. இப்ப என்ன ஆச்சுன்னு அழுவுற. தடுக்கி விழறதும் கரப்பாம்பூச்சி கன்னத்துல ஒட்டுறதும் அபசகுனமா?

போடீ லூஸு இதையெல்லாம் சாதாரண நிகழ்வா எடுப்பியா? பரிட்ச எழுதுவனா பாஸாவேனான்னு பயந்து சாவுற. ஸ்கூல் ஃபஸ்ட் என்ன ஸ்டேட் ஃபஸ்ட்டே நீ வருவன்னு நம்ம ஸ்கூலே ஒன்ன எதிர்பாக்குது; நம்புது. இப்டீல்லாம் நெகடிவ்வா திங்க் பண்ற. பி பாசிடிவ்பா”

“ம்.!”

“எங்க ஓகேடி யாமின்னு சொல்லு” தோழியை இயல்புக்குக் கொண்டுவர யாமினி செய்த முயற்சி வெற்றியே பெற்றது.

“ஓகேடி யாமி” சொல்லிவிட்டு லேசாகச் சிரித்தாள் ரேவதி.

“அது! அது! வெரிகுட்.. வெரிகுட்.. ரேவி, இன்னிக்கு நடக்குற ப்ராக்டிகல் எக்ஸாமுல நா ஃபஸ்ட் பேச். அதுனால நா ஸ்கூலுக்கு எட்ரைக்லாம் வந்துடுவேன். நீ கடைசி பேச்ல.
நீ ஸ்கூலுக்கு எப்ப வருவ?”

“மதியம் ஒருமணிக்கெல்லாம் வந்டுவேன்பா”

“ஆனாலும் அதுக்குள்ள நா வீட்டுக்குப் போயிடுவேன்ல”

“ஆமாம்ப்பா, இன்னிக்கு ரெண்டு பேரும் பாத்துக்க முடியாதில்ல” என்று வருத்தத்தோடு சொன்ன ரேவதி, “ஏய் யாமி! மறந்தே போச்சில்ல. என்னோட பயாலஜி புக் ஒங்கிட்டதானே இருக்கு”

“ஆமாம்ப்பா, மறந்துடோம்ல.”

“அப்ப நா ப்ராக்டிகல் முடிச்சிட்டு ஒவ்வீட்டுக்கு வந்துர்றேம்ப்பா. புக்கையும் வாங்கிண்டாப்லயும் இருக்கும். ஒன்னையும் பாத்தாப்லயும் இருக்கும்ல.”

“சரிப்பா ரேவி, வந்துடு சரியா? ஆல் தி பெஸ்ட்பா!”

“ஒனக்கும் ஆல்திபெஸ்ட்ரீ யாமி”

ரேவதி நினைத்ததுபோல் இல்லை.ப்ராக்டிகல் தேர்வு மிக எளிதாகவே இருந்தது. முழு மதிப்பெண்ணும் கிடைக்குமென்ற நம்பிக்கை ஏற்பட்டது ரேவதிக்கு. “ச்சே! தேவையில்லாம காலேல அபசகுனம் அது இதுன்னு மனச போட்டுக் கொழப்பிண்டு யாமியையும் கொழப்பி, நீ யாமி சொல்றாப்ல ஒரு லூஸு” பின்னந்தலையில் லேசாய்த் தட்டிக்கொண்டே புன்னகைத்துக் கொண்டாள்.

இன்னும் சற்று நேரத்தில் தனக்குக் காத்திருக்கும் ஆபத்தை அறியாதவளாக.

பள்ளியை விட்டு ரேவதி வெளியே வந்தபோது மணி நாலுபத்து.

‘யாமி வீடு இங்கேந்து நடக்குற தூரந்தான். நடந்தே போயிடலாமா? இல்லாட்டி பரவால்ல ஷேர் ஆட்டோல போயிடலாமா? ஆட்டோவுல ஏறி எங்க இறங்கினாலும் இருவது ரூவா குடுக்கனும்’ என்ன செய்வதென்று யோசித்த நேரத்தில்தான், ‘அம்மாவிடம் யாமினி வீட்டுக்குப் போய் பயாலஜி புக்க வாங்கிண்டு வரேனென்று சொல்லிவிட்டு வராதது’ ஞாபகம் வந்தது.

‘என்னதான் நடக்கும் தூரத்தில் யாமி வீடு இருந்தாலும் அவ வீட்டுக்கு நடந்து போக பத்து நிமிஷமாவது ஆகும்.

நடக்க பத்து நிமிஷம். அப்றம் யாமினியப் பாத்துட்டா அதுஇதுன்னு எதையாவது பேச ஆரம்பிச்சா கொறஞ்சது அரைமணி நேரமாகும்.

அப்றம் வீட்டுக்குப் போக அரமண்நேரம். ம்கூம் பத்துநிமிஷம் லேட்டானாலே கவலப்பட்டுண்டு வாசலுக்கும் உள்ளுக்கும் குட்டிபோட்ட பூனையாட்டம் நடக்கும் அம்மா ஒருமணிநேரம் லேட்டானா அவ்ளவுதான்.

ஃபோனாவது பண்ணி சொல்லலாம்னா எக்ஸாம்க்கு ஃபோன்லாம் கொண்டுவரக் கூடாதுன்னு எடுத்துண்டு வேற வல்ல. ஆட்டோல போவதா, நடந்தே போவதா’ என்ற ரேவதியின் யோசனையை முடிவுக்குக் கொண்டு வருவதுபோல் ஷேர் ஆட்டோவொன்று ஸ்டாப்பிங்கில் வந்து நின்று பயணிகளை உதிர்த்தது.

ஆட்டோவுக்குள் இரண்டு பெண்களே மிச்சமிருந்த நிலையில் ஆட்டோ டிரைவர் லேசாய் வெளியில் தலை நீட்டி ‘ஏறலாமா வேண்டாமா?’ என்ற சிந்தனையில் நின்று கொண்டிருந்த ரேவதியைப் பார்க்க, யோசனையைக் கைவிட்டு சடக்கென ஆட்டோவில் ஏறி அமர்ந்து கொண்டு “அண்ணா, தில்லை நகர்ணா” என்றாள்.

ஆட்டோவிலிருந்து இறங்கி தில்லைநகர் என்ற பெயர்ப் பலகையைத் தாங்கி நின்றிருந்த அந்த நகருக்குள் நுழைந்தாள் ரேவதி. நகருக்குள் நிறைய தெருக்கள்.

கம்பர் தெரு என்று எழுதப்பட்டு ஆரோமார்க் போடப்பட்டிருந்த பலகையோடு சற்று குட்டையான கம்பம் நின்றிருந்த அந்த தெருவுக்குள் நுழைந்தவள் கைகடிகாரத்தில் மணி பார்த்தபோது நாலு நாற்பதாகியிருந்தது.

“ம்கூம்! யாமிட்ட ரொம்ப நேரம் பேசிண்ருக்கக்கூடாது. போனமா புக்க வாங்கினமா வீட்டுக்குக் கெளம்பினமான்னு இருக்கனும். அஞ்சர மணிக்கெல்லாம் ‘டாண்’ணு வீட்ல இருக்கணும். இல்லாட்ட அம்மா கவலப்படுவா. நம்மள பாத்ததுமே ‘ஏண்டி லேட்டு?’ன்னு ‘காள்காள்’னு கத்த ஆரம்பிச்சுடுவா என நினைத்தபடியே நடந்தவளின் கால்கள் யாமினியின் வீட்டுவாசலில் முன் தானாகவே நின்றன.

கிரில் கேட்டின் தாழ்ப்பாளைத் திறந்து உள்ளே சென்றவள், திரும்பி உள்பக்கம் கேட்டைத் தாழ் போட்டாள்.

மூன்று படிகள் ஏறி மூடியிருந்த வாசல் மெயின் கதவின் முன்னால் நின்றவளுக்கு ‘காலிங் பெல்லை அழுத்துவதா? கதவைத் தட்டுவதா?’ என்று சில வினாடிகள் குழம்பியது மனது.

வலதுகை விரல்களை மடக்கி முட்டியால் கதவை லேசாகத் தட்டினாள்.

கூடவே “யாமி! யாமி!” என்று தோழியின் பெயரைக் கொஞ்சம் சப்தம் போட்டு அழைத்தாள்.

“ப்ளக்!” என்ற சப்தத்துடன் உட்புறத் தாழ்ப்பாள் நீக்கப்பட்டு கதவு திறந்தது.

யாமினியின் அப்பா தில்லைசாமி நின்றிருந்தார்.

வினாடி நேரத்தில் ரேவதியின் பார்வை அவரைத் தாண்டி உள்ளே சென்று மீண்டது.

“அப்பா! யாமி இல்ல?”

“உள்ள வாம்மா! ஏன் வெளியே நின்னு பேசற? உள்ள வா”

“தோ!” என்றபடி செருப்புகளை வாசல்படிக்குக் கொஞ்சம் தள்ளினாற்போல் போட்டுவிட்டு உள்ளே நுழைந்தாள் ரேவதி.

வீடு கல்லென்று அமைதியாய் இருந்ததால், மீண்டும் “அப்பா யாமி இல்லயா?” கேட்டாள் ரேவதி.

“இல்லம்மா! அவ அம்மா அதான் எம்பொண்டாட்டி பாத்ரூம்ல வழுக்கி விழுந்துட்டா. கால் பெசகிப் போச்சு. வலி தாங்காம கத்த ஆரம்பிச்சுட்டா. அதான் யாமினி அம்மாவ அழச்சிகிட்டு ஹாஸ்பிடல் போயிருக்கா”

“ஓ! அப்டியா? பாவம் அம்மா. அப்ப அவங்க வர்ரதுக்கு லேட்டாகும் இல்லப்பா?”

“ஆமாம். எப்ப வராங்களோ?”

“என்னோட பயாலஜி புக்கு யாமிட்ட இருக்கு. அத வாங்கிண்டு போலாம்னு வந்தேன். சரிப்பா, நான் இன்னோரு தடவ வந்து வாங்கிக்கிறேன்”

“ஏம்மா! வரது வந்துட்ட. யாமி ரூமு ஒனக்குப் புதுசா என்ன? அவ ரூமுலதா புக் இருக்கும். போய் எடுத்துக்கம்மா”

சற்றும் யோசிக்கவில்லை ரேவதி.

ஏதடா வீட்டுல யாருமில்லயே என்னதான் உயிர்த்தோழியின் அப்பாவாக இருந்தாலும் அவர் ஒரு ஆண்.

என்னதான் தானும் தோழியின் தந்தையை ‘அங்கிள்’ என்று அழைக்காமல் ‘அப்பா’ என்றே அழைத்தாலும் தன் தோழியின் தந்தையைத் தானும் தனது தந்தையைப் போலவே நினைத்தாலும் என்றைக்கும் வேற்று ஆண் வேற்று ஆண்தான் என்று சிந்திக்க ரேவதிக்குத் தோன்றவில்லை.

“சரிப்பா” என்றபடி வெகு எதார்த்தமாய் வெகு சுதந்திரமாய் தோழி யாமினியின் அறைக்குள் நுழைந்தாள் ரேவதி.

தோழியின் அறையைப் பார்த்ததும் ‘பக்’கென்று சிரிப்பு வந்தது ரேவதிக்கு.

புத்தகங்கள் இங்குமங்கும் இறைந்து கிடக்க, படுக்கைமீதும் நாற்காலிமீதும் கழற்றிப் போட்ட டிரஸ்களும் ஹேர்க்ளிப்புகளும் வளையல்களும் முடி சிக்கியிருந்த சீப்பும் நின்று கொண்டிருந்த பீரோவில் பொருத்தபட்டிருந்த கண்ணாடியில் விதவிதமான கலர்களில் ஸ்டிக்கர் பொட்டுக்கள் ஒட்டப்பட்டும் அந்த அறையே அதகளமாய் இருந்தது.

‘நான்மட்டும் என்னோட ரூம இப்பிடியொரு நெலேல வெச்சுருந்தேன்னா. போச்சு, அம்மா என்ன கத்து கத்தி அமக்களம் பண்ணுவா!

ஏண்டி! நீயெல்லாம் ஒருபொம்னாட்டி பொண்ணா? கொஞ்சமாவது சுத்தபத்தம் வேண்டாம். இப்பிடியா ரூம அலங்கோலமா வெச்சுப்ப. என்னதாம் படிச்சு
வேலக்கிப் போனாலும் ஒரு நாள் புருஷனாத்துக்குப் போய்த்தான் ஆகனும்.

அங்கியும்போய் நீ இப்டி இருந்தீன்னா, ஒன்ன சொல்லமாட்டா, என்ன பொண்ண வளத்துருக்கான்னு என்னத் தாண்டி பேசுவா என்று ஆரம்பித்து அம்மா அடிக்கும் லெக்சருக்குப் பயந்து நாம எப்டி வெச்சுப்போம் நம்ம ரூம.

பாரு! யாமியோட ரூமு கெடக்குற கெடப்ப பாத்தா அவள திட்டனும் இப்டியாடி ரூம வெச்சுப்பன்னு’ தனக்குள் சிரித்துக் கொண்டாள் ரேவதி.

நிமிட நேரம்தான் நினைப்பை ஒதுக்கிவிட்டு ப்ராக்டிகல் எக்ஸாம் ஆரம்பிக்கும் முன் சும்மா உட்கார்ந்திருக்கும் நேரம் புரட்டுவதற்காகக் கையோடு கொண்டு வந்திருந்த நோட்டினையும் பேனா, பென்சில், ரப்பர், கொஞ்சம் பணம் என்று போட்டு வைத்திருந்த ஜிப் வைத்த சின்ன சைஸ் பேனா பேக்கையும் அங்கு கிடந்த மேஜைமீது வைத்துவிட்டு கப்போர்டில் கலைந்து கிடக்கும் புத்தகம் நோட்டுக்களுக்கிடையே தன் பயாலஜி புக்கைப் ‘பரபர’வென்று தேட ஆரம்பித்தாள் ரேவதி.

எங்கு தேடியும் காணவில்லை கப்போர்டின் மேல் தட்டுதான் தான் பாக்கி. மேல்தட்டு உயரத்தில் இருந்ததால் புக்கைத் தேடுவது அவ்வளவு எளிதாக இல்லை.

கால்களின் நுனிவிரல்களைத் தரையில் ஊன்றி நின்று எம்பி எம்பிக் கைகளால் துளாவினாள் ரேவதி.

‘எங்கதான் வெச்சுருப்பா” தோழி மீது செல்லமாய்க் கோபம் வந்தது.

‘க்ளிக்!’ என்ற சன்னமான சப்தம்.

‘என்ன சப்தமிது?’ சற்றே திரும்பிப் பார்த்தாள் ரேவதி.

பார்த்தவளுக்கு அடி வயிற்றிலிருந்து திகில் பரவி நெஞ்சு வரை எகிறி நின்றது.
மனம் அலெர்ட்டானது.

அறைக் கதவின் மேல் தாழ்ப்பாளைப் போட்டுவிட்டு தன்னை நோக்கி நடந்துவரும் யாமினியின் தந்தையைப் பார்த்ததும் ‘ஐயோ! இவர் ஏன் கதவ தாப்பா போட்டுட்டு வரார். ஏதோ தப்பா தெரியுதே!’ உஷாரானாள் ரேவதி.

“எ..எ..எதுக்குப்பா கதவ தா..தா..தாப்பா போட்றீங்க..” வார்த்தை திக்கியது. உடல் வியர்த்துப் போனது. கால், கை நடுங்கியது.

சட்டென அவரின் சைடாக ஓடி கதவருகில் செல்ல முயன்றாள் ரேவதி.

இருகைகளையும் விரித்து ரேவதியைப் போக விடாமல் தடுத்துக் கொண்டே, “புக் கெடைக்கிலயா?” என்றார்.

கேட்டவரின் வாயிலிருந்து மது வாடை வீசியது. நாக்கு குளறியது.

“நானும் ஒனக்கு ஒத்தாசையா புக்க தேடலாம்னுதா வந்தேன். யாமிக்குக் கொஞ்சங்கூட பொறுப்பே கெடையாது. பாரு ஒன்ன எப்பிடி தேட விட்ருக்கா பாரு. வா ரெண்டு பேருமா தேடலாம்” என்று சொல்லிக் கொண்டே ரேவதியின் கையைப் பற்றித் தன்னை நோக்கி இழுத்தார்.

“ஈ!” என்று விகாரமாய் இளித்தார். வாயின் ஓரங்களில் எச்சில் வழிந்தது.

அவரது நோக்கம் மொத்தமாய்ப் புரிந்து போனது ரேவதிக்கு.

சட்டென கைகளை ஓர் உதறு உதறி அவரது பிடியிலிருந்து கைகளை விடுவித்துக் கொண்ட ரேவதி அசுர பலத்தோடு அவரைப் பிடித்துத் தள்ளி விட்டாள்.

கொஞ்சமும் இதனை எதிர்பார்க்காத தில்லைசாமி மேஜைக்கும் சுவருக்கும் இடையே இருந்த குறுகலான இடைவெளியில் செருகினாற் போல் விழுந்தார்.

நொடி நேரமும் தாமதிக்காமல் கதவின் மேல் தாழ்ப்பாளை நீக்கிக் கதவைத் திறந்து கொண்டு அறையை விட்டு வெளியேறிய ரேவதி, சட்டெனத் திரும்பி அறையின் வெளித் தாழ்ப்பாளைப் போட்டுவிட்டு, உள்பக்கமாய்த் தாழ்ப்பாள் போட்டிருந்த வாசல் கதவைத் திறந்து கொண்டு, கேட்டைத் திறந்து தெருவில் கால் வைத்து நிதானமின்றி ஓடத் தொடங்கினாள்.

புலியிடம் சிக்கிய மான் தப்பி விட்டாலும் அதன் உடம்பு எப்படி நடுங்குமோ அப்படி நடுங்கியது ரேவதியின் உடல்.

மனம் பொங்கிப் பொங்கி வடிந்தது. “ஐயோ! ஐயோ! யாமியின் அப்பாவா இப்பிடி? அங்கிள்னுகூட கூப்டமாட்டேனே யாமி அப்பாவ. வாய் நிறைய மனசு நெறைய அப்பான்னு தானே கூப்டுவேன்’ அதிர்ச்சியிலிருந்து மீள முடியவில்லை அவளால்.

‘சர்சர்’ரென்று இந்த பக்கமும் அந்தப் பக்கமுமாய் விரையும் வாகனங்கள் செல்லும் அந்த மெயின்ரோட்டில் சிந்தனை மழுங்கிப் போனவளாக கட்டுப்பாடின்றி வேகமாகச் சென்றாள்.

எதையும் பொருட்படுத்தாமல் செல்லும் ரேவதியை பலரும், “பாப்பா! பாத்துப் போமாட்டியா. கடுமையான இந்த டிராபிக்குல இப்டியா போவ? எவனாச்சும் மேல வண்டிய ஏத்திட்டுப் போய்டப் போறானுங்க” என்று அக்கறையாகவும்,

சிலர் “ஏ பொண்ணு! கஞ்சா கிஞ்சா அடிச்சிருக்கியா? இம்மாம் வேகமா குறுக்கு நெடுக்கா நடந்து போவுற வூட்டுல சொல்லிட்டு வன்ட்டியா?” என்று நக்கலாகவும் கேட்க, எதையும் கேட்கும் நிலையில் இல்லை ரேவதி.

மனம் வழிகாட்டி ரேவதி வீட்டுக்கு வரவில்லை. அவளின் பழக்கப்பட்ட கால்களே அவளை வீட்டின் முன் கொண்டு வந்து நிறுத்தின.

வாசல் வராண்டாவிலேயே காத்திருந்த ரேவதியின் தாய் எந்திரகதியாய்க் கேட்டைத் திறந்து கொண்டு வந்து முதல் படியில் கால் வைத்த ரேவதியைப் பார்த்ததும்,

“அம்மாடி! கா மணிதான் லேட்டாச்சு. என்னடா லேட்டாருதேன்னு கவல ஆரம்பிச்சிடுத்து. நல்லவேள வந்துட்ட” என்று ஆரம்பித்தார்.

தாய்க்கு பதில் சொல்லாதது மட்டுமல்ல தாயின் முகத்தைக் கூடப்பார்க்காமல் வேக வேகமாக உள்ளே நுழைத்தவள் ‘சரேலெ’னத் தனது அறைக்குள் சென்று கதவைப் ‘படீரெ’ன்று சாத்தி விட்டுக் கட்டிலில் குப்புற விழுந்து கதற ஆரம்பித்தாள்.

‘என்ன ஆச்சு இவுளுக்கு? ரொம்ப வேகமா உள்ள ஓடறா! நம்மள திரும்பிக்கூட பாக்காமன்னா ஓட்றா’ என்று நினைத்தபடி உள்ளே வந்து ரேவதியின் சாத்தியிருந்த அறைக் கதவை லேசாகத் திறந்து எட்டிப் பார்த்த ரேவதியின் தாய் கதறியபடி படுக்கையில் குப்புறக் கிடக்கும் மகளைப் பார்த்து அதிர்ந்து போனார்.

“ரேவதி! ரேவதி! என்னடியாச்சு? ஐயோ! ஏண்டி இப்பிடி அழற? ரேவதி! ரேவதி!” ரேவதியின் தோளைப் பிடித்து அசைத்தார் ரேவதியின் தாய்.

பதில் இல்லை.

“ஏண்டி, ப்ராக்டிகல் கஷ்டமா இருந்துதா? மார்க்கு வராதுன்னு அழறியா? இல்ல ப்ராக்டிகல்ல. ஃபெயில் கியில் ஆயிடுவோம்னு அழுறியா? எதுன்னாலும் அழாதடி ரேவதி. ப்ராக்டிகல் போனா போறுது. ரிட்டன் எக்ஸாம நன்னா எழுதி மார்க் வாங்கினா போச்சு”

மகள் கதறும் கதறலைப் பார்த்து தாயின் மனது தவித்தது. மகளின் கதறலுக்கு உண்மையான காரணம் தெரிந்தால் என்னாவாரோ?

எப்படியெல்லாமோ சமாதானம் செய்தும் ரேவதி சமாதானமாகவில்லை. அவளின் கதறலும் அழுகையும் ஓயவில்லை.

(அடுத்த வாரம் இரண்டாம் பகுதி)

காஞ்சி தங்கமணி சுவாமிநாதன்
காஞ்சிபுரம்

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.