(முன் கதை சுருக்கம்: ரேவதியும் யாமினியும் ப்ளஸ் டூ படிக்கும் தோழிகள். தனது புக் ஒன்றை வாங்கிவர ரேவதி தோழி யாமினியின் வீட்டுக்குச் செல்ல, யாமினி வீட்டில் இல்லாத நிலையில் கெடுநோக்குடன் அணுகும் யாமினியின் தந்தையிடமிருந்து தப்பி வருகிறாள் ரேவதி.)
‘குப்புறப்படுத்துக் கதறி அழும் மகள் எதற்காக அழுகிறாள்?’ என்பதை அறியாமல் தவிக்கும் ரேவதியின் தாய், ‘மகளின் தோழி யாமினிக்கு ரேவதியின் கதறலுக்கான காரணம் தெரிந்திருக்கலாமோ?’ என்ற எண்ணத்தில் ‘யாமினிட்டன்னா ஃபோன் செஞ்சு கேக்கலாம்’ என்று அறையைவிட்டுக் கவலையோடு வெளியே வந்தார்.
ஆர்த்தோ டாக்டர் பசுபதியின் அறையைவிட்டு வெளியே வந்தனர் யாமினியும் அவளின் தாய் லீலாவதியும்.
லீலாவதி கணுக்காலிலிருந்து பாதம்வரை சிறிய அளவிலான கட்டுடன் வீல் சேரில் அமர்ந்திருக்க ஹெல்பர் வீல் சேரை தள்ளிக் கொண்டு வந்து ஓரிடத்தில் நிறுத்திவிட்டு,
“பாப்பா நீ போய் மாத்திர, மருந்து வாங்கிக்கிட்டு ஆட்டோவுல போவரதா இருந்தா வாசலுல நிறைய ஆட்டோ நிக்கிம். ஆட்டோவ அழச்சிகிட்டு வா, தோ வரேன்” என்று சொல்லிவிட்டு நகர்ந்தார்.
“அம்மா! மாத்ர வாங்கிகிட்டு ஆட்டோவ அழச்சிகிட்டு வரேன். ஒக்காந்திரு, பத்ரம்” என்று சொல்லிவிட்டு மருத்துவமனையின் வாசலை நோக்கி நடக்க ஆரம்பித்தவளின் ஹேண்ட் பேக்கிலிருந்து செல்ஃபோனின்அழைப்பொலி கேட்டது.
ஹேண்ட்பேகிலிருந்து செல்லை எடுத்துப் பார்த்தாள் யாமினி.
‘ரேவியோட அம்மான்னா கூப்புடறாங்க’, செல்லை ஆன் செய்து “ஹலோ ஆன்ட்டி, சொல்லுங்க ஆன்ட்டி, ரேவி வந்துட்டாளா? ப்ராக்டிகல் நல்லா பண்ணீருக்குறதா சொன்னாளா?”
“யாமி!” எதிர்முனையிலிருந்து ரேவதியின் தாயுடைய உற்சாகமில்லாத குரல்.
“ஆன்ட்டி! என்ன ஆன்ட்டி ஆச்சு? ரொம்ப வருத்தமா இருக்காப்ல இருக்கு கொரலு”
“ஆமா யாமி! ஒம் ஃப்ரெண்டு வந்ததுலேந்து படுக்கேல. படுத்துண்டு கதறிக் கதறி அழறா. எது கேட்டாலும் பதில் சொல்ல மாட்டேங்கிறா. பிராக்டிகல் நல்லா பண்ணாட்டியும் பரவால்ல. அதுக்குப் போய் இப்டி அழுவியான்னு சமாதானம் சொன்னாலும் காதுலயே வாங்காம அழுதுண்டே இருக்கா. மொகமெல்லாம் வீங்கிப் போயிடுத்து. ரொம்ப பயமா, கவலயா இருக்கு யாமி!” சொல்லும்போதே அழுதே விட்டார் ரேவதியின் தாய்.
‘திக்’கென்றானது யாமினிக்கு.
“என்ன ஆன்ட்டி ரேவி அழுவுறாளா? ப்ராக்டிகல் எக்ஸாம்ல்லாம் அவுளுக்குக் கஷ்டமால்லாம் இருந்திருக்காது. சான்ஸே இல்ல. ஆன்ட்டி கவலப்படாதிங்க ஆன்ட்டி. அம்மா பாத்ரூம்ல வழுக்கி விழுந்து கால் பெசகிடுச்சி. டாக்டருட்ட அழச்சிகிட்டு வந்தேன்.
வீட்டுக்குக் கெளம்பிட்டோம். அம்மாவ வீட்டுல விட்டுட்டு நா அங்க வர்றேன் ஆன்ட்டி. கவலப்படாதீங்க ஆன்ட்டி. சீக்கிரமே வந்துடறேன். வெச்சுடவா” செல்லை ஆஃப் செய்து ஹேண்ட்பேக்கில் போட்டுவிட்டு மெடிகல் ஷாப்பில் மாத்திரைகள் வாங்கிக் கொண்டு ஆட்டோவை அழைத்து வந்தாள் யாமினி.
யந்திர கதியில் பரபரப்பாய் அனைத்தையும் செய்தாளேயொழிய மனம் ரேவதியின் நினைவிலேயே இருந்தது.
“ரேவதி ஏன் அழனும்? என்ன காரணமாய் இருக்கும்?’ சிந்தனைத் தோழியைச் சுற்றிச் சுற்றியே வந்தது.
ஆட்டோவிலிருந்து அம்மாவைப் பிடித்து இறக்கி மெதுவாய்த் தாங்கிப் பிடித்து நடத்தி உள்ளே அழைத்துச் செல்ல முயன்றவளின் பார்வை வாசல் கதவு
வெளிப்புறமாய்த் தாள் போட்டிருப்பதைபதைக் கண்டது.
அடுத்ததாய் நிலைப்படியின் முன் கொஞ்சம் தள்ளினாற் போல் கிடந்த ரேவதியின் செருப்புக்களின் மீது படிந்தது.
‘ரேவியோட செருப்பு கெடக்கு. அப்ப அவ சொன்னபடி வந்திருந்திருக்கா. நல்ல வேள அப்பாட்ட சொல்லிட்டுப் போனோம்.
பயாலஜி புக் வாங்க ரேவதி வருவா. தீடீர்னு அம்மாவ அழச்சுகிட்டு ஹாஸ்பிடல் போறதால அவுளுக்கு ஃபோன் பண்ணி சொல்லமுடியல. அவ ப்ராக்டிகல் எக்ஸாமுல இருப்பா. ஃபோனும் கொண்டு வந்திருக்க மாட்டா.
அவ வந்தா சோஃபால ஓரமா அவளோட புக்க எடுத்து வெச்சிருக்கேன். எடுத்துக்கச் சொல்லுங்கன்னு சொல்லிட்டு போனது நல்லதாப் போச்சு. அவ புக் எடுத்துண்ருப்பா. ஆனா ஏ அவ செருப்பப் போட்டுக்காம போனா? மறந்திருப்பாளோ!
வாசக் கதவு வெளித் தாப்பா போட்ருக்கு. அப்பா எங்க போனாரு?’ என்று அவள் நினைத்தாள்.
அந்நேரத்தில் தாய் லீலாவதியும் “என்னடி யாமி! வாசக்கதவு வெளில தாப்பா போட்ருக்கு? எங்க போய்ட்டாரு ஒங்கப்பா?” என்று கேட்டார்.
“தெரில!” சொல்லிக் கொண்டே வாசல் கதவைத் திறந்து தாயை மெல்ல உள்ளே அழைத்துச் சென்று சோஃபாவில் அமர வைத்தவளின் பார்வை, சோஃபாவின் கடைக்கோடியில் ரேவதியின் பயாலஜிபுக் தான் வைத்துச் சென்ற இடத்திலேயே
இருப்பதைக் கண்டது.
“என்னது, வாசல்ல ரேவதியோட செருப்பு ரேவதி இங்க வந்ததா
சொல்லுது. ஆனா புக் இங்கியே இருக்கு. அப்பா எங்க? வீடு அமைதியா இருக்கு. கொல்லைபுறத்தில் இருப்பாரோ?’ என்று நினைத்தவள் கொல்லைப் புறக்கதவின் தாழ்ப்பாளைத் திறந்து பார்த்தாள்.
‘ம்கூம்! அங்கும் இல்லை’
லீலாவதி புலம்ப ஆரம்பித்தார்.
“வீட்டுக் கதவ பூட்டாமகூட வெறும சாத்தி வெச்சுட்டு அப்பிடி இவுரு எங்கதாம் போய்ட்டாரு. அப்பிடி அவசரமா எங்கியும் போவுறதா இருந்தா பூட்டிக்கிட்டு போக வேண்டியது தானே.
போறேன்னு ஒரு போனு பண்ணிருந்தா நம்மட்ட இன்னொரு சாவிதா இருக்குல்ல. அதவெச்சு தொறந்து உள்ள வந்திருப்பமில்ல.
காலங்கெட்டுக் கெடக்குற காலத்துல இப்பிடியா கதவ வெறும தாப்பா போட்டுட்டு போவாரு. எங்க போயிருக்காரு தெரியிலயே?” சொன்னதையே சொல்லிச் சொல்லி புலம்ப ஆராம்பித்தார் லீலாவதி.
தாயின் புலம்பலைக்கேட்கும் நிலையில் யாமினியின் மனது இல்லை.
‘ரேவதி செருப்பு கிடக்கு வாசல்ல. புக்கையும் எடுத்துக்கல. செருப்பயும் போடல. வீட்டுல முகம் வீங்கும் அளவு அழுது கொண்டிருப்பதா ஆன்ட்டி சொல்றாங்க. இங்க அவ வந்திருப்பா நிச்சயம். அப்போ என்ன நடந்திருக்கும் இங்க?’ குழம்பிப் போனாள் யாமினி.
‘ஆன்ட்டி கேட்டும் எதுவும் சொல்லாம அழுவுறான்னா…’ ஏதோ தப்பாய்த் தோன்றியது யாமினியின் மனதுக்குள்.
தனது அறைக்குச் சென்று டிரஸ் சேஞ்ச் செய்து கொண்டு ரேவதியைப் பார்க்கக் கிளம்ப எண்ணியவளாக அறையின் தாழ்ப்பாளைத் தொட்ட யாமினியின் காதில் உள்ளேயிருந்து யாரோ முனகும் சப்தம் கேட்டது.
“என்னயிது யாரோ மொனக ராப்ல இருக்கு!”
அவசரமாய்க் கதவைத் திறந்தவளின் கண்கள் அப்படியே நிலைகுத்திப் போயின.
மேஜைக்கும் சுவற்றுக்கும் இடையே இருந்த சிறிய இடைவெளியில் செருகினாற்போல் விழுந்து கிடந்த தந்தையைப் பார்த்ததும் அதிர்ச்சியில் சிலநொடிகள் சிலைபோல் நின்றவள்.
பின் சட்டென நிகழ்வுக்கு வந்து, “அப்பா! அப்பா!” என்று கத்திக் கொண்டே விழுந்து கிடக்கும் தந்தையை நோக்கி ஓடினாள் யாமினி.
‘அப்பா அப்பா’ என்று கத்திக் கொண்டே ஓடும் யாமியைப் பார்த்து பயந்து போனார் சோஃபாவில் அமர்ந்திருந்த லீலாவதி.
நிமிடநேரத்தில் தன் கால்வலியையும் மறந்து, “யாமினி! ஐயோ அப்பாக்கு என்னடி ஆச்சு? அங்கயா இருக்காரு அப்பா!” என்று கத்திக் கொண்டே யாமினியின் அறை நோக்கி ஓடினார்.
‘மேஜையை நகர்த்தினால்தான் கீழே கிடக்கும் அப்பாவைத் தூக்க முடியும்’ என்ற எண்ணத்தோடு மேஜையை நகர்த்த மேஜையில் கை வைத்தாள்.
அப்போது மேஜையின் ஒரு ஓரமாய் ஒருநோட்டு, அதன்மீது பென்பாக்ஸ் அதன்மீது நான்காய் மடித்து வைத்திருந்த கர்சீப் என்று வைக்கப்பட்டிருந்த பொருட்களைப் பார்த்ததும் அப்படியே அதிர்ந்து போனாள் யாமினி.
‘இதெல்லாம், இதெல்லாம் ரேவியோடதாச்சே. அப்ப, அப்ப அவ என்னோட இந்த ரூம் வர வந்துருக்கா. அப்பா கீழ கிடக்காரு. ரேவியோட நோட்டு, பேனாபாக்ஸ் கர்சீப்லாம் இதோ இருக்கு.
சோஃபாவுல பயாலஜிபுக் அப்டியே இருக்கு.ரேவி செருப்பகூட போடாம போயிருக்கா. வீட்ல மூஞ்சி வீங்கிப் போகும் அளவு அழுதுகிட்ருக்கா. அப்டீன்னா,
அப்டீன்னா.. ஏதோ நடந்திருக்கு இங்க’ பதட்டமாகிப் போனாள் யாமினி. குழப்பத்தால் செய்வதறியாது நின்றாள்.
“ஏய்! என்னடி அப்டியே நிக்கிற. அப்பாவ தூக்குடி. என்னாச்சு? என்ன நடந்துதுன்னு தெரியலயே. இவுரு இப்பிடி கெடக்குறாறே. ஒன்னும் புரியலயே!” வாய்விட்டுக் கத்திப் புலம்பினார் லீலாவதி.
குழம்பிய மனத்தோடவே குனிந்து அப்பாவைத் தூக்கினாள் யாமினி.
‘பதினேழு வயது பெண்ணுக்கு திடகாத்ரமான ஆணை தரையிலிருந்து தூக்குவது அவ்வளவு எளிதா என்ன?’
மூச்சு வாங்கியது; முதுகும் இடுப்பும் வலித்தது யாமினிக்கு. லீவாவதி குனிந்து நிமிந்தாலே “ஐயோ! கால் வலிக்குதே!” என்று கத்தினார்.
“அப்பா! எழுந்திருக்க நீங்களும் முயற்சி செஞ்சாதான்பா ஒங்குள தூக்க முடியும்!” என்றாள் யாமினி.
குனிந்து அப்பாவைத் தூக்க முயற்சித்தபோது ‘குப்’பென்று வீசிய வாடையால் அவர் குடித்திருக்கிறார் என்பதை உணர்ந்தாள் யாமினி.
‘தூ! என்ன பழக்கமிது?’ பல்லைக் கடித்துக் கொண்டாள்.
ஒருவழியாய் எழுந்து அமர்ந்த தில்லைசாமிக்கு மதுவின் போதை சுத்தமாய் நீங்கிவிட்டிருந்தது.
சோஃபாவில் அமர்ந்திருந்தவரைக் கேள்வியால் துளைத்தெடுத்தார் லீலாவதி.
“ஏங்க! யாமி ரூமுல யாரோ புடிச்சி தள்ளிவிட்டாப்புல இடுக்குல விழுந்து கெடந்தீங்க. நீங்க உள்ள விழுந்து கிடக்கீங்க, ஆனா வாசக்கதவு வெளியே தாப்பா போட்ருந்திச்சி. அது எப்பிடீங்க? என்னங்க நடந்திச்சு இங்க? பயமாருக்குங்க, சொல்லுங்க என்ன நடந்திச்சு?”
“அப்பா சொல்லுங்கப்பா! ரேவதி வந்தாளாப்பா?”
பதில் சொல்லவில்லை தில்லைசாமி.
‘உண்மை தெரிந்துவிட்டால் தன் நிலை என்னாகும்?’ என்ற பயம் அவருக்குள் எட்டிப் பார்த்தது. நிமிட நேரத்துக்குள் புத்தி ஒரு கதையைப் புனைந்து கட்டவிழ்த்துவிடத் தயாரானது.
“என்னங்க பதில் சொல்லாம ஒக்காந்துருக்கீங்க? ரேவதியா வந்தாளா? இவ என்னமோ கேக்குறா?”
“வேண்டாம் விடுங்க. என்னைய ஒன்னும் கேக்காதிங்க”
“அதெப்டிப்பா ஒன்னும் கேக்காம இருக்க முடியும். நிச்சயமா ரேவதி வந்துருக்கா. ஏன்னா அவளோட நோட்டு, பென், பாக்ஸ், கர்சீப் எல்லாம் என்னோட ரூம்ல மேஜமேல இருக்கு.
அவ செருப்பு வாசப்படிகிட்ட கெடக்கு. அவ வந்துருக்கா. நான் அவளோட பயாலஜி புக்க சோஃபால வெச்சுருக்கேன். அத எடுத்துக்கச் சொல்லி அவட்ட சொல்லுங்கன்னு ஒங்ககிட்ட சொன்னேனே சொன்னீங்களா? இல்லையா.
புக்கு நான் வெச்ச எடத்துல அப்டியே இருக்கு. அவ ஏன் என் ரூமுக்குப் போனா? நீங்களும் என் ரூமுக்கு எதுக்குப் போனீங்க? ஏன் விழுந்து கெடந்தீங்க?
நீங்களா விழுந்தீங்களா? யாராச்சும் ஒங்களப் புடிச்சித் தள்ளினாங்களா? அப்பிடி தள்ளினாங்கன்னா யாரு தள்ளினாங்க? ஒங்களப் புடிச்சுத் தள்ளக் காரணம் என்ன? சொல்லுங்கப்பா”
“வேண்டாம்.. கேக்காத.. அதச் சொன்னா நீ தாங்கமாட்ட யாமினி” என்றார் தில்லைசாமி.
“இதென்னப்பா. நடந்திருக்குறதெல்லாம் மர்மமா தெரியுது. எதையும் சொல்ல மாட்டேன். தாங்க மாட்ட நீன்றீங்க. அப்ப நீங்க சொல்ல வேண்டாம் நா ரேவதிட்ட கேக்குறேன்.”
“அதானே!” என்றார் லீலாவதி.
“யாமினி! நீ நினைக்கிறா மாதிரி அந்தப் பொண்ணு ரேவதி அவ்வளவு நல்ல பொண்ணாத் தோணல. நீ அந்தப் பொண்ண நம்பாத. சொல்லிப்புட்டேன்” என்றார் தில்லைசாமி.
“அப்பா!” கத்திவிட்டாள் யாமினி.
“என்ன பேசுறோம்னு தெரிஞ்சுதாம் பேசுறீங்களா? எம் ஃப்ரண்டபத்தி கண்டபடி
பேசாதிங்கப்பா” முகம் சிவக்கக் கத்தினாள் யாமினி.
“என்ன பெரிய பிரெண்டு. ப்ரெண்டாம் ப்ரெண்டு. .நல்ல பொண்ணுனா அதத் தேடிக்கிட்டு கண்டவ வருவானா?
“அப்பா!” கத்தினாள் யாமினி.
“ஏண்டி கத்துற? அப்பா காரணமில்லாம இப்பிடி சொல்லுவாரா? தோழிய நம்புற நீ பெத்த அப்பாவ நம்பமாட்டியா?” என்று யாமினியிடம் கோபப்பட்டார் லீலாவதி.
“அவ கெடக்குறா. நீங்க சொல்லுங்க” என்றார் கணவரிடம்.
“லீலா! அந்தப் பொண்ணு ரேவதி ஒரு நால்ர நாலே முக்காலு இருக்கும் வந்திச்சி. கதவ தட்டிச்சி. ஏற்கனவே யாமி ‘ரேவதி புக்கு வாங்க வரும்; சோஃபாவுல புக்க எடுத்து வெச்சிருக்கேன்; அவ வந்ததும் எடுத்துக்கச் சொல்லுங்கன்னு சொல்லிருந்ததால.
அந்த பொண்ணு வந்ததும் ‘உள்ள வாம்மா, யாமினி நீ வந்தா புக்க எடுத்துக்க சொல்லுங்கன்னு சொன்னா. தோ! இருக்கு பாரு புக்கு எடுத்துக்கம்மான்னு சொன்னேன்
உள்ள வந்த அந்தப் பொண்ணு யாமினி இல்லியான்னு கேட்டா. ‘யாமினி அவ அம்மாவ அழச்சிகிட்டு ஹாஸ்பிடல் போயிருக்கா. பாத்ரூம்ல அவ அம்மா வழுக்கி விழுந்து காலு பெசகிடுச்சுன்னு வெவரம் சொல்லிக்கிட்டே இருந்தப்ப,
தீடீர்னு ஒரு பய ‘ஏய் ரேவதி!’ன்னு கத்திக்கிட்டே உள்ளே ஓடி வந்தான். ரெண்டு பேருக்கும் கடுமையான வாக்கு வாதம் நடந்திச்சு. எனக்கு ஒன்னுமே புரியல. அந்தப் பய கத்திகிட்டே அந்தப் பொண்ண அடிக்கப் பாஞ்சான்.
அந்தப் பொண்ணு அதா அந்த ரேவதிப் பொண்ணு, யாமினியோட ரூமுக்குள்ள ஓடி ஒளிய பாத்து ரூமுக்குள்ள ஓடிச்சு. கண்ணமூடித் தொறக்கரத்துக்குள்ள அந்த காலிப்பயலும் கொலவெறி ஆவேசத்தோட அந்த ரூமுக்கு ஓடினான்.
அந்தப் பொண்ண கொலகில பண்ணிடப் போறானே அந்த பாவின்னு அதத் தடுக்க நானும் அந்த ரூமுக்கு ஓடினேன்.
அந்தப் பொண்ணு மேல பாயப் போன அவன தடுத்தேன். அப்பதான் அவன் என்னைப் பிடித்துத் தள்ளினான். நான் கீழே விழுந்தேன். அதுக்குள்ள அந்தப் பொண்ணு தப்பி ஓடிச்சு.
அந்த பொண்ண தொரத்திக்கிட்டு அந்தப் பயலும் ஓடினான். அப்பிடி ஓடும்போது தான் அவன் ரூம் கதவ வெளிப்புறம் தாப்பா போட்ருக்கணும். நான் கீழே விழுந்ததுமே மயக்கமாயிட்டேன். யாமினி ரூமுக்கு வந்தபோதுதான் எனக்கு மயக்கமே தெளிஞ்சிச்சு.
இப்ப சொல்லு கண்ட பயலோடு பழக்கம் வெச்சுருக்குற அந்தப் பொண்ணோடு உனக்கு சிநேகிதம் வேணுமா யாமி?” என்று கேட்டார் தில்லைசாமி.
அப்பா சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் இடியாய் இறங்கியது யாமினியின் நெஞ்சுக்குள்.
‘இல்ல! இல்ல! நிச்சயமா என் ரேவதி அப்பா சொல்வதைப்போன்ற பெண் இல்லை. நானும் ரேவியும் இன்று நேற்றாய்ப் பழகும் தோழிகள் இல்லை. எல்.கே.ஜி.முதல் இதோ +2 வரை ஒன்றாகப் படிப்பவர்கள்.
உயிருக்குயிரான தோழிகள். எங்களுக்கிடையே ஒளிமறைவே கிடையாது. ஒருநாளைக்கு எத்தனை முறை மூச்சுவிட்டோம் என்பதைக்கூட சொல்லிக் கொள்பவர்கள். எனக்குத் தெரியாத அவளின் ரகசியம் எதுவும் கிடையாது.
அவளுக்கு ஆண் சிநேகம் உண்டு என்பதையெல்லாம் நான் ஒருசதவீதம்கூட நம்பமாட்டேன். அவள் இயல்பிலேயே அமைதியானவ; சாதுவானவ. என் உயிரினும் மேலான அன்புத் தோழியை நான் கொஞ்சங்கூட சந்தேகப்படமாட்டேன்.
இதில் ஏதோ மர்மம் இருக்கு. ஏதோ தவறு நடந்திருக்கு. அப்பா பொய் சொல்வதாகப்படுகிறது. ஏனோ அப்பாவின் மீது கோபம் மட்டுமல்ல சந்தேகமும் வருகிறது’ என்று நினைத்தாள்.
“சரி, நான் போய் ரேவதிய பாத்துட்டு வரேன். அப்பா சொன்னது மட்டும் உண்மையா இருந்துச்சினா, நாக்கப் புடிக்கிக்கிறா மாரி நறுக்குனு நாலு கேள்வியக் கேட்டுட்டு உனக்கும் குட்பை; உன் ஃப்ரெண்ட்ஷிப்புக்கும் குட்பைனு சொல்லிட்டு வந்துர்றேன்” என்றாள்.
பின், ரேவதி விட்டுச்சென்ற அவளின் நோட்டு, பென் பாக்ஸ், கர்சீப், பயாலஜி புக் ஆகியவற்றை கேரிபேக்கில் போட்டு அவளின் செருப்பு அனைத்தையும் எடுத்துக் கொண்டு தில்லைசாமியும் லீலாவதியும் போகக் கூடாதெனத் தடுக்கத் தடுக்கப் பிடிவாதமாய்க் கிளம்பினாள் யாமினி.
தில்லைசாமியின் மனதில் பயம் பற்றிக் கொண்டது.
கம்பன் தெருவிலிருந்த சமுதாயக்கூட கட்டிடத்தின் முன் போய் நின்றாள் யாமினி. கட்டிடத்தின் ஓர் அறையிலிருந்து கச்சலான தேகத்தோடு கூடிய ஒருநபர் வெளியே வந்து எட்டிப் பார்த்தார்.
“என்னம்மா வேணும்?”
“சார், என் வீடு இந்தத் தெருவுலதான் இருக்கு. நாலாம் நம்பர் கம்பத்துல இருக்குற சிசிடிவி-யில இன்னிக்கு எங்கவீட்டு வாசலுக்கு மாலை நாலு டு அஞ்சு மணிக்குள்ளாற யார்யார் வந்தாங்கன்னு பதிவாகியிருக்குற காட்சியப் பாக்கணும்”
“ஏம்மா! என்னாச்சு?”
இப்படிக்கேட்டால் என்ன பதில் சொல்வது என்பதை ஏற்கனவே தீர்மானித்திருந்ததால் “அதொன்னுமில்ல சார், நால்ர டு அஞ்சு மணிக்குள்ள எங்க வீட்டுக்கு யா ர்வந்தாங்கன்னு பாக்கனும் சார். கொஞ்சம் பாத்து சொன்னா தேவல சார், ப்ளீஸ்!” கை கூப்பினாள்.
“இதுல என்னம்மா இருக்கு? பாக்கலாம்”
கம்ப்யூட்டரை ஆன் செய்ய, நாலாம் நம்பர் கம்பத்துக்குரிய கேமராவில் குறிப்பிட்ட நேரத்தில் பதிவாகியிருக்கும் காட்சிகள் திரையில் விரிந்தன.
நேரம் மாலை மணி நாலு நாப்பது. யாமினியின் வீட்டு வாசல். கிரில் கேட்டைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்து திரும்பி மீண்டும் கேட்டைத் தாழிடுகிறாள் ரேவதி.
மூன்று படிகள் ஏறி வராண்டாவுக்குள் நுழைந்து வாசல் கதவைத் தட்டுகிறாள். அதோடு காட்சி முடிந்து மீண்டும் 5-05 மணிக்குத் தொடர்கிறது. வீட்டுக்குள்ளிருந்து வெளியே வருகிறாள் ரேவதி.
முகத்தில் பதட்டம் வாசல் கதவை வெளிப்புறம் தாழ் போடுகிறாள். கிரில் கேட்டை திறந்து கொண்டு மீண்டும் தாழ் போடாமல் திறந்து போட்டுவிட்டு பதட்டமாய் நடக்கிறாள். வேறு ஏதும் தொடர்ந்து பதிவாகவில்லை.
“ரொம்ப நன்றி சார்! பணம் ஏதாவது கட்டனுமா?”
“அதெல்லாம் ஒன்றுமில்லம்மா”
“வரேன் சார்! மறுபடி நன்றி தெரிவிச்சுக்கிறேன்”
“வெல்கம்மா”
சமுதாயக்கூடத்தை விட்டு வெளியே வந்தவளின் மனம் பௌவுர்ணமி கடலலையாய்ப் பொங்கியது.
‘அப்பா சொன்னது அனைத்தும் பொய். ரேவதியைத் தேடி எவனும் வர வில்லை. ரேவதி ஏன் அத்தன பதட்டத்தோட வேகவேகமா நடந்தா? அப்பிடி என்ன நம்ம வீட்ல நடந்திருக்கும்.
அப்பா ஏன் விழுந்து கிடந்தார்? ஏன் ரேவியத் தேடி எவனோ வந்ததா சொன்னார்? எத்தன அபாண்டமா ரேவிய பத்தி சொன்னார். ஏதோ தப்பு நடந்துருக்கு’ அப்பா மீது அவளுக்கு சந்தேகம் வந்தது.
‘நா சந்தேகப்படுறது மட்டும் உண்மையா இருந்திச்சின்னா, விடமாட்டேன்! விடமாட்டேன்! அது அப்பனாவே இருந்தாலும் விடமாட்டேன்’ நெஞ்சு பொங்கியது.
வாய் கசந்தது. “தூ!” என்று எச்சிலைக் கூட்டித் துப்பினாள் யாமினி.
ஷேர் ஆட்டோவில் ரேவதியின் வீடு நோக்கிச் செல்லும் யாமினியின் மனது அமைதியின்றித் தவித்தது.
‘இன்னும் என்ன யாமினியக் காணும். இவளானா வந்ததுலேந்து ஒரு டீ கூட குடிக்காம அழுது அழுது மாஞ்சு போறா. பயமாருக்கே! என்ன ஆச்சு இவுளுக்குன்னு தெரியலயே!’ யாமினியின் வரவுக்காக வாசலுக்கும் உள்ளுக்குமாக அமைதியின்றி நடந்து கொண்டிருந்தார் ரேவதியின் தாய்.
செல்ஃ போன் அழைக்கவும் ஃபோனைக் காதில் வைத்து “ஹலோ!” என்றார் பதட்டத்துடன்.
எதிர் முனையில் என்ன சொல்லப்பட்டதோ, அதைக் கேட்டதுமே அப்படியே மயங்கிச் சரிந்தார் கீழே. வாசல் கதவு திறந்து கிடந்தது.
(முடிவுப் பகுதி அடுத்த வாரம்)
காஞ்சி தங்கமணி சுவாமிநாதன்
காஞ்சிபுரம்
‘