(முன்கதைச் சுருக்கம்: தன் தந்தை தன்தோழி மீது சொல்லும் அபாண்டத்தை நம்ப மறுக்கிறாள் யாமினி. தன் தந்தை மீதே சந்தேகம் வருகிறது யாமினிக்கு. தோழி ரேவதியை சந்திக்கச் செல்கிறாள். தனக்கு வந்த ஃபோனின் தகவலால் மயங்கி விழுகிறார் ரேவதியின் தாய்)
யாமினி ரேவதி வீட்டு வாசல் கேட்டருகே சென்றபோது நேரம் மாலை 5-50 ஆகியிருந்தது.
இன்னும் அந்தி சாயவில்லை. கடைசி நேர வெய்யிலின் தாக்கம் சற்று குறைந்து லேசாய் குளிர்ந்த காற்று வீசியது.
கேட்டருகே சென்ற யாமினியின் பார்வை திறந்து கிடந்த வாசல் கதவைத் தாண்டி உள்ளே சென்றது. அவளின் கண்களில் பட்ட காட்சி அவளைத் திடுக்கிட வைத்தது.
“ஐயோ! இதென்ன ஆன்ட்டி கீழ விழுந்து கிடக்கறாங்க” கேட்டைத் திறந்து கொண்டு வேகமாக உள்ளே ஓடினாள்.
வாசலுக்கு நேராய் ஹாலில் மயங்கிக் கிடந்தார் ரேவதியின் தாய். வலது கை செல் ஃபோனைப் பிடித்திருந்தது.
“ஆன்ட்டி.. ஆன்ட்டி..” கத்திக் கொண்டே அருகே ஓடினாள் யாமினி. முகத்தைப் பிடித்து அப்படியும் இப்படியும் ஆட்டினாள்.
ம்கூம்! ரேவதியின் தாய் கண்களைத் திறக்கவில்லை. கிச்சனுக்குள் ஓடி
கிண்ணமொன்றில் தண்ணீர் கொண்டு வந்து முகத்தில் தெளிக்க சட்டெனக் கண் விழித்தார்.
‘மலங்க மலங்க’ விழித்தவரின் பார்வையில் பயம் கலந்திருந்தது.
“ஆன்ட்டி! ஆன்ட்டி! என்னாச்சு ஆன்ட்டி? ஏன் மயக்கம் போட்டு விழுந்து கிடந்தீங்க? சாப்டீங்களா இல்லியா?”
தீடீரென கைகளால் முகத்தைப் பொத்திக் கொண்டு அழ ஆரம்பித்தார் ரேவதியின் தாய்.
யாமினியின் வருகைக்காக நெடு நேரமாய்க் காத்துக் கிடந்த அவர், யாமினி வந்தும் அவளிடம் எதையும் கூறாமல் அழுதார்.
ரேவதி அழுதுகொண்டே இருப்பதன் காரணமாகத்தான் ஆன்ட்டி கவலையாலும் பதைபதைப்பாலும் மயங்கி விழுந்ததாய் யாமினிக்குத் தோன்றியது. அதனால்தான் அழுவதாயும் தோன்றியது.
“ஆன்ட்டி நீங்க ரெஸ்ட் எடுங்க! நான்போய் ரேவதியப் பாக்குறேன். நா அவகூடப் பேசும்போது நீங்க அங்க வரவேண்டாம். அவ என்கிட்ட எதையும் மறைக்கமாட்டா. அவள நார்மலுக்குக் கொண்டு வர்ரது எம் பொறுப்பு. கவலப்படாத இருங்க ஆன்ட்டி. போய்ப் படுத்து ரெஸ்ட் எடுங்க” என்று கிளம்பியவளின் கைகளைப் பிடித்து நிறுத்தினார் ரேவதியின் தாய்.
“ஏ ஆன்ட்டி! ரேவதி ரூம்லதானே இருக்குறா?”
“ஆமா, ஆனா மாடி ரூம்க்கு போயி கதவ சாத்திண்டு திறக்க மாட்டேங்கறா. ரொம்ப பயமாருக்கு. அதோட, தோ இது ரேவதியோட ஃபோன். இதுக்கு கொஞ்ச நேரம் முன்னாடி ஒருகால் வந்துது. அதுல.. அதுல..” மீண்டும் அழ ஆரம்பித்தார் ரேவதியின் தாய்.
“யாரோ ரேவதிய மெரட்ரா, உன் வீட்டுலயோ ஒன் ஃப்ரண்டு கிட்டயோ நடந்தத சொன்ன நா ஒங்கம்மாவ கொன்னுடுவே. ஒன்னைய கடத்திடுவேன்றான் யாரோ ஆம்பள. யாரு எம்பொண்ண மெரட்றா. அவுளுக்கு என்ன நடந்துது?
அவள யாராவது எதாவது செஞ்சிருப்பாளா? அதான் அவ அத வெளிய சொல்ல முடியாம அழறாளா! ப்ராக்டிகல் எக்ஸாமுனு போனவ இப்டியா திரும்பி வரனும். பகவானே! நா என்ன பண்ணுவேன்?” தலையில் ‘படீர் படீரெ’னத் அடித்துக் கொண்டார்.
‘திக்’கென்றது யாமினிக்கு.
“ஃபோன்ல ரேவதிய மெரட்டினாங்களா? ஆன்ட்டி! ஃபோன குடுங்க. ஏ ஆன்ட்டி,
பேசி மெரட்டினவ வாய்ஸ் ரெகார்ட் ஆயிருக்குமா?” ஃபோனை வாங்கி ஆராய்ந்தபோது எதிர்பாராத விதமாய் குரல் பதிவாகி இருந்தது.
பதிவாகியிருக்கும் மிரட்டல் குரலைப் போட்டுப் பார்த்தாள் யாமினி. எந்த எண்ணிலிருந்து வந்திருக்கிறது என்பதை ஆராய்ந்தன அவளது கண்கள்.
‘இது.. இது.. அப்பாவின் வியாபார விஷயமாக அதோடு தொடர்புடையவர்களிடமும் மிக நெருக்கமானவர்களிடமும் மட்டும் பேசும் ஃபோன் நம்பராச்சே.
எனக்குக்கூட இந்த நம்பர் தெரிந்துவிடக் கூடாதென வெகு ஜாக்கிரதையாக அந்த ஃபோனை மறைத்தவராச்சே.
எப்டியோ நா தெரிஞ்சுகிட்டேன். எனக்குத் தெரியும்னு அவுருக்குத் தெரியாது. அப்ப மிரட்டியது அப்பாவா!’ வியர்த்துப் போனது யாமினிக்கு.
பதிவாகியிருந்த மிரட்டும் குரலை இயக்கினாள். குரல் யாருடையது என்று புரியவில்லை.
“ஏ பொண்ணு! த பாரு. ஒம் ஃப்ரெண்டு வீட்டுல நடந்தத ஒங்கம்மாட்டியோ, ஒம்
ஃப்ரண்டாண்டியோ சொன்னேன்னு வையி அப்பரமேட்டுக்கு ஒங்கம்மா சோலிய முடிச்சிடுவேன். ஒன்னியு கடத்திடுவே. தெரிஞ்சிச்சா! போலீஸுகீலீஸுன்னு போனேன்னு வையி நிமிசமா நா வெளிய வந்துடுவே. அப்பறமு உனக்கு ஏல்ரதா. பாத்து நடந்துக்க” பேச்சு கட்டானது.
‘யார் குரல் இது? யாரோ பல்லிடுக்கில் ஏதோ ஒரு பொருளை வைத்துக் கடித்துக் கொண்டு பேசுவதுபோல். அப்பாவின் குரல் போலும் இருந்தது. இல்லைபோலும் தோன்றியது.
கண்டுபுடிப்பேன் கண்டுபுடிப்பேன். அப்பா மட்டும் குற்றவாளின்னு தெரிஞ்சுட்டா அப்றம் நா அவர் பொண்ணு இல்ல. நா எடுக்குற முடிவு… முடிவு…’ பல்லைக் கடித்துக் கொண்டாள் யாமினி.
‘ஆன்ட்டி பயப்படாதிங்க. இந்த அநாமதேய மிரட்டல் கால் ரேவதியோட ஃபோன்ல இருக்க வேண்டாம். எம் ஃபோனுக்கு மாத்திக்கிட்டு ரேவதி ஃபோன்ல இக்குறத டெலிட் பண்ணிடறேன்” சொல்லியபடி செய்தாள்.
“ஆன்ட்டி நீங்க எதுக்கும் பயப்படாம போய் ரெஸ்ட் எடுங்க. இந்த விஷயத்த நாம் பாத்துக்குறேன். போலீஸ்க்கெல்லாம் போகனும்ணு யோசிக்காதிங்க. நாம் போய் ரேவதியப் பாக்கறேன்” மாடியை நோக்கி நடந்தாள்.
“ரேவி! ரேவி!” அழைத்தபடி ரேவதி இருக்கும் அறையின் கதவைத் தட்டினாள் யாமினி.
ம்கூம். மௌனமே பதிலாய்.
“ஏய், ரேவி கதவ திறக்க மாட்டியா?”
கனத்த மௌனமே மீண்டும். யாமினிக்கு மனதுக்குள் பயம் எட்டிப் பார்த்தது.
‘ஐயோ! உள்ளேந்து சின்ன சப்தம் கூட கேக்கிலியே. ரேவி தப்பான முடிவு எதாச்சும் எடுத்துருப்பாளோ?’ நினைப்பே மனதை நடுங்க வைத்தது.
நெஞ்சுக்குள் தவிப்பும் பீதியும் தாக்கி நிலைகுலைய வைத்தது. அழுதே விட்டாள் யாமினி.
“ரேவி! ரேவி! ப்ளீஸ் ரேவி! கதவத் திறப்பா, நா ஒன்னோட உண்மையான உயிருக்குயிரான தோழிங்கறது சத்தியம்னா கதவத் திற. நம்ம நட்புக்கு நீ மரியாத வெச்சிருந்தா, நீ என்ன நம்பினா கதவத் திற ரேவி!”
உள்ளே எந்த அசைவும் இல்லை.
நடக்கக் கூடாதது நடந்து விட்டதாகவே தோன்றியது யாமினிக்கு.
கதறி விட்டாள் யாமினி, “ரேவி! ரேவி! நீ இனி மேலும் கதவத் தொறக்கல நா வீட்டுக்குப் போயி தற்கொல பண்ணிப்பேன். இது சத்தியம்!
நீ பிடிவாதமா கதவத் தொறக்கலயா! இல்ல நீ உயிரோடையே இல்லியா தெரியல! உடனடியா நீ கதவத் தொறக்கலன்னா நீ உயிரோட இல்லன்னு புரிஞ்சிப்பேன். ஒடனடியா நா வீட்டுக்குப் போயி என் ரூமுல தூக்குப் போட்டு சாவேன் ரேவி! இது சத்தியம்!” அழுதாள் யாமினி.
உள்ளிருந்து சன்னமான சப்தம். தொடர்ந்து ‘ப்ளக்’ என்ற சப்தத்துடன் தாழ்ப்பாள் நீக்கப்பட்டுக் கதவு திறந்தது.
யாமினி உள்ளே நுழைவதற்குள் கட்டிலில் அமர்ந்து முழங்கால்களைக் குத்திட வைத்து அதில் முகத்தைப் பதித்து சப்தமின்றி அழ ஆரம்பித்தாள் ரேவதி. முதுகு குலுங்கியது.
“ரேவி!” அழும் தோழியின் முதுகில் கைவைத்தாள் யாமினி.
சட்டென யாமினியின் கையைத் தட்டி விட்டாள் ரேவதி.
“தீடீர்னு எதுக்கு இப்ப எங்க வீட்டுக்கு வந்த?” யாமினியை நிமிர்ந்துகூடப் பார்க்காமல் ஆரோஷமாய்க் கேட்டாள் ரேவதி.
“நீ ப்ராக்டிகல் முடிஞ்சி வந்ததுலேந்து அழுதுகிட்டே இருக்குறதாவும் காரணம் கேட்டா பதிலே சொல்லாம அழுதுகிட்டே இருக்குறதாவும் ஆன்ட்டி ஃபோன் பண்ணாங்க”
“ஓ! வேற ஒன்னும் ஒனக்குத் தெரியாது இல்ல”
“நா அம்மாவோட ஹாஸ்பிடல்ல இருந்தப்பதா ஆன்ட்டி ஃபோன் பண்ணாங்க. அப்ப எனக்கு எந்த விபரமும் தெரியாது.
வீட்டுக்கு வந்தப்புறம் தான் நீ வந்துட்டுப் போனதும் நீ வந்திருந்தப்ப ஏதோ ப்ரர்ச்சன நடந்திருக்குன்னும் தோணிச்சு. ஆனா என்ன நடந்துதுன்னு தெரியல ரேவி!
என்னை நம்பு. சொல்லு ரேவி எவ்வீட்டுல ஒனக்கு என்ன நடந்திச்சு? ப்ளீஸ் ரேவி. ப்ளீஸ் ரேவி என்னைப் பாருப்பா”
“தயவு செய்து போயிடு, ஏன் ஓன் அப்பா எதுவும் சொல்லலியா? தான் யோக்கியர் மாதிரியும் என்னை அவதூறாயும் சொல்லிருப்பாறே! அல்லது இங்கு என்ன நடக்கிறது.
நா போலீஸ்க்குப் போய் தன்மீது புகார் குடுக்கப் போறேனான்னு தெரிஞ்சிண்டுவர ஒன்ன அனுப்பினாறா? என்ன போனாறா வந்தாறான்னு மாரியாத. அந்த கேடு கெட்ட ஆளுக்கு. கேவலம் கேவலாமா பேசனும்ணு தோணுது.”
“ரேவி! ஒன்னோட கோவம் நியாயமானது. ஒனக்கு என் வீட்ல ஏதோ நடந்துருக்கு. ஆனா என்ன நடந்துதுன்னுதா புரியல. இப்ப நீ பேசறதுலேந்து என்னப் பெத்தவராலதா ஒனக்கு ஏதோ பிரரர்ச்சன ஏற்பட்டுருக்குன்னு தெரியறது”
“அப்பாவுக்காக மன்னிப்புக் கேப்பியே! எங்கப்பா ஏதாவது ஒனக்கு ப்ரர்ச்சன குடுத்ருந்தா
அப்பிடி செஞ்சது தப்புதா. தெரியாம செஞ்சிருப்பாரு அத பெரிசுபடுத்தாத. மன்னிச்சிடு அவுருக்கு பதிலா நா மன்னிப்பு கேட்டுக்குறேன்னு வசனம் பேசி நடிக்கப் போறியா?”
வாடிப் போனது யாமினியின் மனது.
“ரேவி! நீ என்ன புரிஞ்சிகிட்டு இருக்குறது இவ்வளவுதானா. ஒரு பொண்ண தவறான பார்வ பாக்குற ஆணயே நான் எப்பிடி திட்டுவேன்னு ஒனக்குத் தெரியும். அதுவும் ஒரு பெண்ண அவளோட விருப்பமில்லாம தொடுரதே தப்பு.
அதுலயும் அப்பா அப்பான்னு வாய்நிறைய பாசமா கூப்புடற ஒன்ன. யாமி, ஒங்கப்பாவ என்னோட அப்பாவ மதிக்கிற மாரியே மதிக்கிறேன்னு அடிக்கடி சொல்லுவியே அப்பிடி என்னைப் பெத்தவரின் இன்னொரு பெண்ணா தன்னை நினைச்ச ஒன்ன அவர் தவறான கண்ணோட்டத்தோட பாத்தாரா?
ஒன்னிடம் தவறா நடந்தாரா? ஒன்னும் புரியலயே ரேவி! சொல்லு ரேவி!என்னப் பெத்தவர அப்பான்னு சொல்லவே அருவருப்பா இருக்கு.
அதா என்னப் பெத்தவருன்னு சொல்லுறேன். கேக்கவே கூசுது. ஆனாலும் கேக்குறேன். எங்க வீட்டுல ஒனக்கு என்ன நடந்துது? ப்ளீஸ் சொல்லு ரேவி!”
மீண்டும் அழ ஆரம்பித்தாள் ரேவதி.
“ரேவி அழாத! அழுவுறது எதுக்கும் தீர்வத் தந்துடாது. எதிர்த்து நிக்கனும். நீ என்னை உன் உயிர்த் தோழியா நெனச்சது உண்மைனா நடந்தத சொல்லு ரேவி!”
“சொன்னா போலீஸ்ல ஒங்கப்பா மேல கம்ப்ளெய்ன்ட் குடுப்பியா? கம்பி எண்ண வெப்பியா? தெரிஞ்சு என்ன பண்ணப் போற?”
“அந்தத் தப்ப மட்டும் பண்ண மாட்டேன். ஏன்னா என்னப் பெத்தவன் அரசியல் பின்புலம் உள்ள ஆளு. பத்து நிமிஷத்துல கேஸ இல்லேன்னு ஆக்கி வெளீல வந்துடுவான்.
போக்ஸோ சட்டமெல்லாம் என்னப் பெத்தவனுக்கு ஒன்னுமே இல்ல. சட்டத்துல இருக்குற ஓட்டைங்கள்ள எதுக்குள்ளையாவது பூந்து வெளீல வந்துடுவான். அப்பறம் உன்னால நிம்மதியா வாழ்ந்துட முடியாது. உன் எதிர்காலமே இருண்டு போய்டும்”
“அப்ப நீ என்னதா செய்வ?”
“நீ என்ன நடந்துதுன்னு சொல்லு. அத வெச்சு நான் என்ன செய்யனும்னு
முடிவெடுப்பேன்”
“வேண்டாம்! எதையும் கேக்காதே! அந்த கேவலத்தக் கேட்டா நீ தாங்கமாட்ட!”
“அப்ப நீ எதையும் சொல்ல மாட்ட. ஆனா என்னப் பெத்தவர் ஒன்னப் பத்தி என்ன சொன்னார்னு சொல்லவா?”
திடுக்கிட்டு நிமிர்ந்தாள் ரேவதி.
“என்னப் பத்தியா? என்னப் பத்தி சொல்ல என்ன இருக்கு?”
“சொல்லவா, நீ எங்க வீட்டுக்கு வந்தப்ப ஒன்னத் தேடிக்கிட்டு எவனோ வந்ததாகவும் அவுனுக்கும் ஒனக்கும் வாக்குவாதம் நடந்ததாகவும் அவுனுக்குப் பயந்து நீ என் ரூமுக்குள்ள ஓடி ஒளிஞ்சதாவும் அவுனும் ஒன்ன வெரட்டிகிட்டு அந்த ரூமுக்கு வந்து ஒன்ன அடிக்கப் பாஞ்சதாகவும் ஒன்னக் காப்பாத்த தானும் அந்த ரூமுக்கு வந்து அவனத் தடுத்தபோது அவன் தன்னைப் பிடித்துத் தள்ளினதாவும் தான் கீழே விழுந்ததாகவும் நீ அவன்டேந்து தப்பி ஓடினதாகவும் அவன் ஒன்னத் தொரத்திகிட்டு ரூமவிட்டு ஓடும்போது ரூம்கதவ வெளிய தாப்பா போட்டுட்டு ஓடிட்டதாவும் சொன்னாரு. நீ கண்டவனோட பழக்கமுள்ளவளா தெரியுதுன்னு சொன்னாரு என்னப் பெத்தவரு” என்றாள் யாமினி.
யாமினி சொல்வதைக் கேட்டதும் உட்சபட்ச கொதிநிலைக்கு ஆளானாள்
ரேவதி.
“அடப்பாவி! ஏய் அந்தாளு உங்கப்பாங்கறது நால மரியாதயால்லாம் பேச முடியாது. தூ! நாய்ப்பய. யாரு கண்டவனோட பழக்கம் வெச்சுருக்கறவ, நானா? ஏய், உங்கப்பன் மாதிரி கேவலம் புடிச்சவ நானில்ல. அவன் ஒரு மிருகம்.
சொந்த அப்பாபோல நெனச்சுப் பழகின ஒரு பொண்ணுகிட்ட, அதுவும் தம்பொண்ணு வயசு பொண்ணுகிட்ட ச்சீ! நாய்கூட அப்பிடி நடந்துக்காது. ஒன்னோட ரூமுல எம் பயாலஜி புக்க கப்போர்டுல தேடிக்கிட்ருந்தப்ப,
சத்தம் போடாம ரூமுக்குள்ள வந்து கதவ தாப்பா போட்டு விகாரமா இளிச்சிக்கிட்டு கிட்ட வரவும், அப்பிடியே நடுங்கிட்டேன்.
ஒடம்பு அப்டியே ‘வெடவெட’க்குது. அவனோட கேவல புத்தியும் அவனோட நோக்கமும் அப்பட்டமா புரிஞ்சி போச்சு.
அவன்டேந்து தப்பிக்கனும்னு கதவத் தொறந்திண்டு வெளியே ஓடலாம்னு கதவ
நோக்கி ஓடினா அப்டியே ரெண்டு கையையும் அகல விரிச்சு நா ஓடமுடியாம தடுத்து வா ரெண்டு பேருமா புக்கத் தேடலாம்னு சொல்லி விகாரமா இளிச்சுக்கிட்டே எங்கையப் புடிச்சி தன்னை நோக்கி இழுத்து.. இழுத்து..” கைகளுக்குள் முகத்தைப் பதித்து அழுதாள் ரேவதி.
“மேற்கொண்டு அந்த மிருகத்திடமிருந்து என்னக் காப்பாத்திக்க பலங்கொண்ட மட்டும் வேகமா அந்த ஆள புடிச்சித் தள்ளினேன். அந்த கேடு கெட்டவன் எங்க விழுந்தான்னுகூட நாம் பாக்கல.
ரூமவிட்டு வெளீல வந்து ரூம்கதவத் தாப்பா போட்டுட்டு வாசல் கதவையும் தாப்பா போட்டுட்டு தப்பிச்சு ஓடி வந்தேன். நடந்தது இப்டி இருக்க, நான் ஆண் சகவாசம் வெச்சுருக்குறவளா?.
இவன் சொல்ற கற்பனையான ஆணோட நா வாக்குவாதம் செய்ய, அந்த ஆண் என்ன தாக்க முயல இவன் என்னக் காப்பாத்த வர அப்ப அந்த குறிப்பிட்ட ஆளு இவனப் புடிச்சித் தள்ள, என்ன ஒரு ஃபிராடுத்தனம். இவன்லாம் ஒரு மனுஷ ஜென்மம். நாயவிடக் கேவலமானவன்.”
ரேவதி சொல்லச் சொல்லக் கூசிக்குறுகி அமர்ந்திருந்தாள் யாமினி. பெற்றவன் மீது அணுகுண்டு வீசி பீஸ்பீஸாகக் கிழிக்க வேண்டும் போல் இருந்தது. மனது நிலையில்லாமல் தவித்தது.
“ரேவி! என்னை பெத்த அந்தக் கயவன நெனச்சு நான் அவமானப்படறேன். அவன் தண்டிக்கப்பட வேண்டியவன். ஆனா நீ பவித்ரமானவ ரேவி. இத ஒரு விபத்தா நெனச்சு மறந்திடு.
ஏதோ ஒரு பெருங்கூட்டத்துல பெண்கள் சிக்கும்போது வாய்ப்புக் கெடச்சிதுன்னு வக்கிரம் புடிச்ச சில ஆண்கள் பெண்கள இடிச்சும் தடவியும் தங்ளோட கீழ்த்தரமான ஆசைகள தீத்துக்குறது இல்லியா?
அன்றாடம் பஸ்ஸுல போற பெண்கள் சந்திக்கிற பிரர்ச்சனல இதுவும் உண்டுதானே! நா இப்பிடி சொல்றதுனால இத நீ மறந்துடுன்னு சொல்லல.
இத மறக்கவும் முடியாது. இந்த கேவலமானத் தப்ப செய்ய நெனச்ச என்னப் பெத்தவன் தண்டிக்கப்பட வேண்டியவன். அதுல சந்தேகமே இல்ல.
இந்த விஷயத்த எங்கிட்ட விட்டுடு. இதையே நெனச்சு நடக்கவிருக்குற பப்ளிக் எக்ஸாமுக்கு படிக்காம தயாராகாம நாம இருந்துடக் கூடாது.
ஆன்ட்டி பாவம். நீ அழுவுறதுக்குக் காரணம் புரியாம பயந்துகிட்டு இருக்காங்க.அவுங்க தெளிவடையனும். எழுந்துக்கிட்டு வெளிய வா. அம்மாவ சமாதானம் பண்ணு.
பாவம் அவுங்க மயக்கமே வந்து விழுந்துட்டாங்க. நீ அழுதுகிட்டே இருந்ததுக்கான காரணம்னு எதையாவது சொல்லிதா ஆகனும்.
பிராக்டிகல் முடிச்சுட்டு வீட்டுக்குத் திரும்பி வரச்சே நாலு ரௌடிப் பசங்க பின்னாடியே வந்து அசிங்க அசிங்கமா பேசி கிண்டல் பண்ணிணதாவும் அதுல பயந்துபோய்தான் வீட்டுக்கு வந்து அழுததாவும் சொல்லு”
ரேவதியின் தாய் கொஞ்சம் சமாதானம் ஆனாலும் அநாமதேய ஃபோன் கால் அவரை பயமுறுத்தியது.
ரேவதிக்கு தெரியாமல் யாமினியிடம் அதுபற்றிக் கேட்டபோது, “விடுங்க ஆன்ட்டி! பொறுக்கி பசங்க இப்டீல்லாம் பொண்ணுங்க வீட்டுக்கு ஃபோன்லாம் செஞ்சு பயமுறுத்தி காசு பாக்குற தெல்லாம் இப்ப ட்ரெண்டு. இன்னொரு முறைவந்தா போலீஸ்ல கம்ப்ளெய்ட் குடுக்கலாம். கவலைலாம் படாதீங்க!” என்று ரேவதியின் தாயை நம்ப வைத்தாள் யாமினி.
ரேவதியின் வீட்டிலிருந்து வெளியே வந்தபோது யாமினி கொந்தளித்துப் போயிருந்தாள். தந்தையால் ஏற்பட்ட அவமானம், அசிங்கம் பெரும் மனஉளைச்சலைத் தந்திருந்தது.
தந்தைமீது வெறுப்பு துடைத்தெறிய முடியாத அளவு வளர்ந்திருந்தது; மண்டிப் போயிருந்தது; வன்மம் பெருகியது.
‘அப்பனா அந்த ஆளு. மட்டமானவன். தான் தவறு செய்துவிட்டு என் தோழி ரேவி மீது எப்படியொரு அபவாதத்தை அபாண்டத்தை பழியை சுமத்துறாரு செய்வதையும் செஞ்சிட்டு மெரட்டி ஃபோன் வேற செஞ்சிருக்காரு. அடுக்கடுக்கா எத்தன தப்பு செஞ்சிருக்காரு. மாட்டேன்.. மாட்டேன்.. நா மன்னிக்க மாட்டேன்’
யாமினி வீட்டுக்குள் நுழைந்தபோது ஹால் சுவற்றில் மாட்டியிருந்த கடிகாரம் நேரம் 8.30 என்று காட்டியது. வீடு மயான அமைதியாய் இருந்தது.
ஹாலில் தில்லைசாமியைக் காணவில்லை. லீலாவதி மட்டுமே இவளின் வருகைக்காகக் காத்திருப்பதுபோல் தோன்றியது. தாயிடம் எதுவும் பேசவில்லை யாமினி.
தன் அறையை நோக்கிப் போனவளைத் தடுத்தது லீலாவதியின் குரல்.
“யாமி!அந்தப் பொண்ணு வீட்டுக்குப் போகாத போகாதன்னு நானும் அப்பாவும் கத்துறோம். நீ பாட்டுக்குக் காதுலயே வாங்காம போய்ட்டு இப்பதாம் வர்ற.
நான் சொன்னாதா கேக்கமாட்ட. அப்பா வார்த்தைக்குக்கூடவா மதிப்பில்ல. மரியாத இல்ல. இந்த மாரி குணம் கெட்ட பொண்ணுகிட்டல்லாம் நீ ஃப்ரெண்டா இருக்கியேன்னு சொல்லிச் சொல்லி மாஞ்சு போய் அப்பாவுக்கு கடுமையான காச்சலே வந்திடுச்சி. உள்ளதாம் படுத்துருக்காரு போய்ப் பாரு” என்றார்.
“காச்சலா! ஐயோ பாவம்!” என்றாள் கிண்டலாக. மனம் பற்றி எரிந்தது.
‘குணம் கெட்ட பெண்ணோட ஃப்ரெண்டா இருக்கேனா. யாரு குணங்கெட்டவங்க. என்னைப் பெத்தவரா? என் தோழி ரேவியா?’
தாயிடம் அனைத்தையும் சொல்லி ‘பாரு! ஒம் புருஷனோட கேவல புத்தியன்னு’ கத்த வேண்டும்போல் இருந்தது யாமினிக்கு.
மனதை அடக்க முயன்றாள். மனம் அடங்க மறுத்தது. பதின்பருவத்து உணர்சிகள் அவ்வளவு எளிதாய் அடங்காது. ஆசை, கோபம், பாசம், வன்மம் எது ஏற்பட்டாலும் மிகத் தீவிரமாக கட்டுக்குள் அடங்காமல் திமிறும்.
யார் சொல்லும் எடுபடாது; பின் விளைவுகள் பற்றி யோசிக்காது; கடிவாளமில்லாத குதிரையாய் அங்குசத்துக்கு அடங்காத யானையாய்த் திமிறும்.
அந்த நிலையில்தான் அடங்க மறுக்கும் மனத்தோடு, ‘என்னப் பெத்தவனுக்கு நானே தண்டன குடுப்பேன் நானே தண்டன குடுப்பேன்’ என்று உணர்சிக் குவியலாய் எரியும் தீப்பிழம்பாய் உலைக்கலத்தில் உருகும் இரும்புக் குழம்பெனக் கொதித்துக் கொண்டிருந்தாள் பதின் பருவத்து யாமினி.
“டீ, யாமினி! பாரு என்னால கால்வலி எழுந்திருக்கவே முடீல. ராத்திரிக்கு சாப்புட எனக்கு ரெண்டு தோச ஊத்திக் குடுத்துட்டு. அப்பாவுக்கு கஞ்சி வெச்சு பாலு ஊத்தி சக்கர போட்டு ரெண்டு டம்ளர் குடு. ரசம் ஊத்திக் குடிக்க அப்பாவுக்குப் புடிக்காதில்ல. அதுனால பாலு ஊத்தி சக்கர போட்டே குடு. காச்சல் ரொம்ப கடுமையா இருக்கு. வாயெல்லாம் கசக்குதுன்னாரு. சக்கரய கொஞ்சாம் தூக்கலா போட்டுக் குடுத்துட்டு. கஞ்சி குடிச்சப்புறம் ஜொர மாத்ர இருந்திச்சினா குடு” என்றார் லீலாவதி.
தாய் லீலாவதியின் முன்பு தட்டில் தோசையை கொண்டு வைத்தாள்.
“கஞ்சி வெச்சிட்டியா?”
“ம்!”
“சூடா இருக்கும்போதே அப்பாவுக்குக் குடுத்து குடிக்க வையி. வேண்டாம் வேண்டாம் போதும் பாரு. முழுக்க குடிக்க வையி.
ஜொர மாத்ரையும், தினம் போட்டுக்குற தூக்கமாத் திரையும் குடு. நல்லா தூங்கினா காச்சல் விட்டுடும். காலேல கலகலப்பா எழுந்திக்கிடுவாரு”
கொதிக்கக் கொதிக்க அடுப்பிலிருந்து கஞ்சியை இறக்கி வைத்தாள் யாமினி. பால் ஊற்றி சர்க்கரை போட்டாச்சு. அந்த சின்ன சைஸ் ப்ளாஸ்டிக் டப்பாவின் மூடியைத் திருகித் திறந்தாள்.
டப்பாவின் மேல் Diazepam-10mg.(sleeping pills) என்ற பெயர் ப்ரின்ட்டாகியிருந்தது. டப்பாவை வலது கை உள்ளங்கையில் கவிழ்த்தாள். மொத்தமாய் மாத்திரைகள் உள்ளங்கையில் விழுந்தன.
1- 2 -3 -4 -5 -6 -7- 8- 9-10 என்று பத்துவரை மாத்திரைகளை எண்ணி எண்ணி சுடு கஞ்சியில் போட்டாள். நன்றாக மாத்திரைகள் கரையும் வரை கஞ்சியைக் கிளறி விட்டாள்.
டப்பாவை முட முயன்றபோது அதனடியில் கிடந்த ஒரே ஒரு மாத்திரையையும் எடுத்துக் கஞ்சியில் போட்டுக் கலக்கினாள்.
கஞ்சிக்குள் விரல் வைத்து எடுத்து வாயில் வைத்தாள்.லேசாய்க் கசந்தது. இன்னும் நாலு ஸ்பூன் சர்க்கரை சேர்த்தாள்.
“கஞ்சி!” என்றாள் ஒரே வார்த்தையில்.
படுக்கையிலிருந்து எழுந்து அமர்ந்தார் தில்லைசாமி. பெற்றவன் கண்களை யாமினியும் மகளின் கண்களை பெற்றவனும் நோக்கிக் கொள்ளவில்லை.
கஞ்சியை டம்ளரில் ஊற்றினாள். எடுத்து ஒரு மிடறு விழுங்கினார். கசந்தது.
“உவ்வ! கசப்பு” என்றார்.
அறையின் வாசற்படிக்கு வந்து நின்ற லீலாவதி “கடுமையான காச்சலா இருக்குல்ல. வாய் அப்டிதான் கசக்கும். மல்லுக்கட்டிக் குடிச்சிடுங்க. மாத்ரையப் போட்டு படுங்க. காலேல காச்சல் விட்டு கலகலப்பா எந்திரிப்பீங்க” என்றாள்.
முக்கி முனகி வேண்டா வெறுப்பாய்க் குடித்து முடித்தார்.
“ஜொர மாத்ரையும் தூக்க மாரையும் குடு” என்று சொல்லிக் கொண்டே சோஃபாவில் போய் படுத்துக் கொண்டார் லீலாவதி.
மாத்திரைகளை எடுத்துக் கொண்டு உள்ளே போனாள் யாமினி.
படுக்கையில் கண்களை மூடிக்கிடந்தார் தில்லைசாமி.
தான் ஆடாவிட்டாலும் சதை ஆடியது. யாமினியின் மேனி ஒருமுறை அதிர்ந்து அடங்கியது.
விடிகாலை நாலு மணி. தூங்காமல் கட்டிலிலேயே அமர்ந்திருந்த யாமினி மெல்ல எழுந்து தந்தை படுத்திருந்த அறைக்குள் சென்றாள்.
அசைவின்றிக் கிடக்கும் தந்தை தில்லைசாமியின் உடலைத் தொட்டுப் பார்த்தாள். உடல் சில்லிட்டுப் போயிருந்தது.
என்னதான் இருந்தாலும் பெற்ற தந்தை. ஒரே ரத்தம். ரத்த பாசம் யாமினியைத் தடுமாற வைத்தது. கண்களிலிருந்து கண்ணீர் எட்டிப் பார்த்தது.
மீண்டும் கட்டிலில் போய் அமர்ந்து கொண்டாள். முற்றிலுமாய் விடிந்தால் சந்திக்கப் போகும் விளைவுகளுக்காகக் காத்திருந்தாள் யாமினி.
(முடிந்தது)
காஞ்சி தங்கமணி சுவாமிநாதன்
காஞ்சிபுரம்