பக்கத்து கிராமத்தில் இருப்பவர்
சின்னாண்டிக் கோனார்
அப்பாவுக்கும் அவருக்கும் அப்படி
ஒரு நட்பு இரட்டையர்கள் போல
ஆனாலும் அவருக்கு அவர் ஊர்ல
நண்பர்கள் இருந்த மாதிரி தெரியலை
ஒரு கோடை விடுமுறையில்
ஒரு வாரம் அவர் வீட்டில் தங்கினேன்
அங்க அக்கா இருந்தா
அவ தான் அவரோட வாரிசு
வற்றாத வெல்லம் போட்ட
தேநீர் பானை இருந்தது
பெரிய டம்ளர்ல காலையும் மாலையும்
கண்டிப்பாக தேநீர் கிடைக்கும்
கணுக்கால் அளவு தண்ணீர் ஓடிய ஆறு
வயல் பம்பு செட்டு
வயலுக்கு நடுவுல சாமி
சாமிக்கு நிழலாக வேப்ப மரம்
பல் தேய்க்க கருவேலங்குச்சி
அரண்மனை மாதிரி கார வீடு
வீட்டுல பாதி நெல்லு மூட்டை
அடுத்த அறையில
தட்டாம்பயறு பாசிப்பயறு உளுந்தம்பயறு என
செழிப்பான வாழ்கை!
நீண்ட இடைவெளிக்கு பின்
அங்கு செல்ல
ஆறு இல்லை
வயலும் மக்காச்சோளத் தட்டையாகி கிடக்க
வீடும் வெள்ளைகூட அடிக்காமல் பாழாகி…
எப்படி தொலைந்தது அந்த வாழ்க்கை?
யாரால் தொலைக்கப்பட்டது அந்த வாழ்க்கை?
கரித்து விழுந்தது கண்ணோரம் சில துளிகள்!
இராசபாளையம் முருகேசன்
கைபேசி: 9865802942