யாருக்காகவும் எதற்காகவும் – சிறுகதை

அவன் பேரு சுப்பையா. ஊரில் அவனை ‘தொப்பையன்’ என்றுதான் அழைப்பார்கள். ஊரில் யார் மனதும் புண்படு்ம்படி அவன் பேசியது கிடையாது.

பேசியது கிடையாது என்பதைவிட பேச தெரியாது என்று சொல்வது மிகவும் பொருத்தமாக இருக்கும். கள்ளம், கபடம், சூது, வாது என்று எந்த எண்ணமும் இல்லாதவன். வெகுளி. அன்பு என்ற வார்த்தையின் அடையாளம்.

குழந்தைகள் என்றால் அவனுக்கு கொள்ளை பிரியம். அடுத்தவர் பிள்ளைகளையும் தன் பிள்ளைகளாய் நினைப்பதாலோ என்னவோ அவனுக்கு குழந்தை பாக்கியம் இல்லை.

ஊரில் அவன் தூக்கி கொஞ்சாத பிள்ளைகள் மிக மிக குறைவு. அவனின் இந்த குணங்களாலோ என்னவோ மனைவி அவனை விட்டுட்டு வேறொருவனோடு சென்றுவிட்டாள்.

ஆவணி மாதம் பிறந்து விட்டால் போதும், ஊரில் கோவில் திருவிழாவிற்கு வரி எழுத ஊர் மக்களை ஒன்று திரட்டுவது. திருவிழாவுக்கு மேள தாளங்கள் ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் வைப்பதற்கு முன்பணம் கொடுப்பது என எல்லா வேலைகளையும் இழுத்து போட்டு செய்வான்.

ஊரில் வயதானவர்கள் சாவு என்றால் இறந்து போனவரின் பிள்ளைகளிடம்கூட அனுமதி கேட்காமலே மேளதாளங்களுக்கு சொல்லிவிடுவான்.

ஒருமுறை ஊரில் ஒரு வயதான பெண்மணி இறந்துவிட, அவரது மகன்களிடம் அனுமதி கேட்காமலே தப்புக்கு சொல்லிவிட்டான்.

தப்புக்காரர்கள் வந்து பிணத்தை எடுத்து அடக்கம் செய்யும் வரை வாசித்தார்கள்.

அந்த ஊரில் பிணம் அடக்கம் முடிந்ததும், சாவு செலவுகளுக்கு மொய் எழுதும் பழக்கம் இருந்தது.

இறப்பு என்பது சொல்லிட்டு வருவதில்லை. அது நடந்துவிட்ட பட்சத்தில், இருக்கப்பட்டவன் சிறப்பாக‌ சாவை எடுப்பான். அவனை பற்றி கவலை இல்லை.

இல்லாது பட்டவன் அந்த நேரத்தில் என்ன செய்வான் என்பதற்காக ஊரில் இப்படியொரு முறையை வைத்திருந்தார்கள். தொகை அதிகம் இல்லை.

ஏழை பணக்காரன் யாராக இருந்தாலும் ஐம்பது ரூபாய் தான் மொய் செய்ய வேண்டும். முதலில் இரண்டு ரூபாயில் ஆரம்பித்தது. விலைவாசி ஏற ஏற அதுவும் ஏறி ஐம்பது ரூபாய்க்கு வந்துவிட்டது.

சாவுக்கு வாசித்த தப்புக்காரர்கள் தங்களுக்குரிய பணத்தை மொய் எழுதி முடிந்ததும் தருவார்கள் என்று காத்திருந்தார்கள்.

மொய் எழுதி முடிந்ததும் பூ கொண்டு வந்தவர், பாடை கட்டியவர், குழி வெட்டியவர்கள், மொட்டை போட்டு விட்டவர் என தொழிலாளிகள் எல்லோருக்கும் சேர வேண்டிய தொகைகளை கொடுத்து அனுப்பினார்கள். கடைசி வரை தப்புக்காரர்களை யாரும் கண்டுக்கவே இல்லை. எல்லோரும் வீட்டிற்கு கிளம்ப ஆயத்தமாயினர்.

நடப்பது எல்லாவற்றையும் அதுவரை பொறுமையாக பார்த்துகொண்டு இருந்த தப்புக்காரர்களில் ஒருவர், “ஏன்ய்யா, எல்லார் கணக்கையும் முடிச்சி விட்டவங்க. எங்கள மட்டும் அம்போன்னு விட்டுட்டு போறீங்க. எங்க கணக்கையும் கையோடு முடிச்சி விட்டிங்கன்னா, நாங்களும் பொழுதோட ஊர் போய் சேருவோமில்ல? எங்களுக்கும் வீடு, வாசல், புள்ளை குட்டி எல்லாம் இருக்கதானே செய்யுது. இவ்வளவு நேரம் வாசிச்சிட்டு வெறும் கையை வீசிக்கிட்டா வீட்டுக்கு போவோம்.” என்றார் தப்புக்காரர்.

அவர்கள் சிறிதும் எதிர்பாராத வகையில் “யாரு உங்கள கூட்டிட்டு வந்தது?” என்றார் இறந்து போனவரின் மகன்.

“இந்த கேள்விய இவ்வளவு நேரம் வாசிச்சோமே, அப்ப கேட்டு இருக்க வேண்டியது தான? எல்லாம் முடிஞ்சுதுக்கு அப்பறம் கடைசி நேரத்துல கேட்கற? கடைசி நேரத்துல கேட்டாதான் காசு கொடுக்காம அனுப்பலாம்ன்னு ஏதாவது திட்டம் வச்சி இருந்தீங்களா?”

“பாருங்கப்பா, கோவப்படாதீங்க. திட்டமெல்லாம் எதுவுமில்ல. நானும் உழைச்சிதான் சாப்பிடுகிறேன், யாரையும் ஏமாற்றி இல்ல. நான் யார் கிட்டயும் தப்புக்கு சொல்ல சொல்லல. அத முதல்ல புரிஞ்சிக்கங்க. உங்களை இங்க கூட்டிட்டு வந்தது யாரோ அவன் கிட்ட பணத்தை வாங்கிக்கங்க.” என்றதும்.

சுப்பையாவின் பக்கமாக திரும்பி “யோவ்… சுப்பையா, நல்ல ஆள நம்பி எங்கள கூட்டிட்டு வந்தய்யா. என்னய்யா கடைசி நேரத்துல இந்த ஆளு இப்படி பேசுறான். உனக்கும் இதுவுக்கும் சம்பந்தம் இல்லாதது போல ஓரமா போய் நிற்கற? பாரு… சுப்பையா, மரியாதையா பேசுன பணத்தை வாங்கி கொடுத்துடு. இல்ல, நீ கையில இருந்து குடு. நாங்க ஊருக்கு கிளம்பனும்.”

“இருங்கய்யா, நான் பேசி வாங்கி தர்றேன்.” என்று சொல்லிவிட்டு இறந்து போனவரின் மகன் பக்கமாக திரும்பி…

“சங்கிலி தொழிலாளிங்க வயிற்றில் அடிக்க கூடாது. நம்ம பிரச்சனையை அப்புறம் பேசி தீர்த்துக்கலாம். ஒரு ரெண்டாயிரத்தி ஐநூரு ரூபாய் கொடுத்து விடு.”

“பாரு… சுப்பையா, கோவத்த கிளப்பாத. முதல்ல நான் உன்கிட்ட தப்புக்கு சொல்ல சொன்னேனா? அத சொல்லு”

“எப்பா உங்க அம்மா சாவுக்குதான வாசிச்சானுங்க? என்னமோ ஊரான் சாவுக்கு வந்து வாசிக்க மாதிரி பேசுற? புள்ளகுட்டி, பேரன், பேத்தின்னு வாழ்ந்துட்டாயா. திருவிழா சாவு. ஒரு பெத்த தாயிக்கு இந்த செலவு கூட பண்ண மாட்டியா? பாரு, இந்த தப்பு கொண்டு வந்ததுனால ஊருக்காரனுங்க எப்படி பேசிட்டு போறானுங்க தெரியுமா? பெத்த தாய்க்கு கடைசி காலத்துல ஒழுங்கா கஞ்சி ஊத்தினயா? நோய்க்கு வைத்தியம் பார்த்தியான்னு எவனும் பேசல. சாவ போடு போடுன்னு போட்டு தூக்கிட்டான்ய்யான்னு பேசிட்டு போறானுக.”

“நீ சொல்றது வாஸ்தவம்தான். நான் இல்லேன்னு சொல்லல. சாவுக்கு செலவு பண்ணிட்டா செய்த பாவம் அத்தனையும் இல்லன்னு போயிடுமா? சொல்லு. என் அம்மா உயிரோட இருக்கும் போதே என் பொண்டாட்டி சரியா சாப்பாடு கொடுக்கமாட்டா. இப்ப, சாவுக்கு கடன் வாங்கி செலவு பண்ணுனேன்னு வை. எனக்கும் என் அம்மா பக்கத்துல ஒரு குழிய தோண்டி புதைச்சிடுவா. என் வசதி என்னவோ அதுக்கு தகுந்த மாதிரிதான் செலவு செய்ய முடியும்.”

“கடைசியா என்னதான் சொல்ற?”

“எங்கிட்ட பத்து பைசா கிடையாது.” என்று சொல்லிவிட்டு சென்றான் சங்கிலி.

தப்புக்காரர்கள் சுப்பையாவை சூழ்ந்து கொண்டு பணத்தை கேட்டுக் கொண்டு இருக்க, சாவுக்கு வந்த மற்றவர்கள் கிளம்பி சென்றார்கள்.

தப்புக்காரர்கள் சுப்பையாவை பணத்தை தந்தால்தான் விடுவோம் என்று கையோடு அழைத்துகொண்டு, பேருந்துக்கு செல்ல கையில் பணம் இல்லாததால் நடந்தே சென்றார்கள்.

தப்புக்காரர்கள் தெம்பாக வாசிக்க வேண்டும் என்பதற்காக சுப்பையா தனது கையில் இருந்து பணத்துக்கு மதுவை வாங்கி போதை இறங்க இறங்க ஊற்றி விட்டான்.

சுப்பையாவிடம் பணம் இல்லாததால் பக்கத்து ஊரில் தனக்கு தெரிந்த வாழைக்காய் வியாபாரியிடம் பணம் வாங்கி தருகிறேன் என்று அழைத்து சென்றார். அவரிடம்தான் சுப்பையா வேலை பார்த்து வந்தான்.

அவர்கள் சென்ற நேரத்தில் வாழைக்காய் வியாபாரி வீட்டில் இல்லை. குடும்பத்தோடு ஏதோ ஒரு நிகழ்வுக்கு சென்றிருந்தார்.

சுப்பையாவுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. தலையே சுற்றுவது போல் இருந்தது. தப்புக்காரர்கள் சுப்பையாவை அக்கம் பக்கம் விடுவதாய் இல்லை.

“பணத்தை தந்துட்டு உன் சொந்தக்காரங்களோ! இல்ல ஊர்க்காரணுங்களோ! வந்து உன்னை மீட்டுட்டு போகட்டும். இப்ப, எங்களோட ஊருக்கு நட” என்று அழைத்து போனார்கள்.

வழியில் சுப்பையாவுக்கு தெரிந்த மற்றொரு பக்கத்து ஊர்க்காரன் அருணகிரி வர, சுப்பையாவை பார்த்த அருணகிரி விசாரிக்க, சுப்பையா நடந்த விசயத்தை சொன்னான்.

விவரத்தை தெரிந்து கொண்ட அருணகிரிக்கு உதவும் எண்ணம் இருந்தாலும் கையில் பணம் இல்லை.

தப்புக்காரர்களிடம் பேசிப் பார்த்தான். அவர்கள் விடுவதாய் இல்லை.

அருணகிரி கோபம் வந்தவனை போல “பணம் இல்லாம தொழிலாளியை என்ன மயிருக்கு கூபிடுறீங்க.” என்று சுப்பையாவை ‘பளார் பளார்’ என‌ கன்னத்தில் அறைந்து “ஊரைப் பார்த்து ஓடு” என்று சொல்லி விரட்டி விட்டான்.

தப்புக்காரகளை தனது வீட்டுக்கு அழைத்து கொண்டு போய் மனைவியிடம் காபி போட சொல்லி, தப்புக்காரர்களுக்கு காபியை குடிக்க கொடுத்து விட்டு பஸ்சுக்கு மட்டும் பணத்தை கொடுத்து, “ஊருக்கு போங்க. அந்த ஊருக்காரங்கிட்ட பேசி ரெண்டு நாளையில பணத்தை கொண்டு வந்து தர சொல்றேன்.” என்று சொல்லி அனுப்பி வைத்தார்.

தப்புக்காரர்களும் அருணகிரியின் கோபத்தை பார்த்து பயந்து, கொடுத்த பணத்தை வாங்கி கொண்டு சென்றனர்.

சுப்பையாவின் ஊர் இரு முக்கிய சாலைகளுக்கு நடுவே இருந்தது. சாலை ஊருக்கு வடக்கேவும் தெற்கேவும் மேற்கு கிழக்காக சென்றது.

ஏதாவது ஊருக்கு அவசமாக போக வேண்டும் என்றால் ஊரின் ஏதாவது ஒரு சந்திப்பிற்கு சென்றுதான் பஸ் ஏறி போக வேண்டும்.

ஒரு நாள் ஊருக்காரர் ஒருவர் அவசரமாக ஊருக்கு செல்ல வேண்டி இருந்தது. யாராவது தன்னை கொண்டு சந்திப்பில் விடுவார்களா? என்று பார்த்தான் யாரும் இல்லை.

அதனால் தானே தனது சைக்கிளில் சந்திப்பிற்கு சென்றுவிட்டு சந்திப்பிலிருந்து ஊருக்கு வரும் யாரிடமாவது கொடுத்து அனுப்பிவிட்டு போகலாம் என்று நினைத்து வந்தார்.

அன்று அவர் நேரத்திற்கு சுப்பையா வர, சைக்கிளை சுப்பையாவிடம் கொடுத்து அவரது வீட்டில் விட சொல்லிவிட்டு போனார். சுப்பையாவிற்கு சைக்கிள் ஓட்ட தெரியாது.

சுப்பையா அதை உருட்டிகொண்டு செல்லாமல், கையில் இருந்த துண்டு வேட்டியில் சும்மாடு சுத்தி தலையில் வைத்து அதன் மேல் சைக்கிளை தூக்கி வைத்துக் கொண்டு ஊருக்கு நடந்தே சென்றான்.

இப்படிப்பட்ட சுப்பையாவிற்கும் காதல் வந்தது.

அவன் வாழைக்காய் வியாபாரியோடு பாரம் ஏற்றிக் கொண்டு நாகர்கோவில் சந்தைக்கு சென்று விட்டு வரும்போது சந்தையில் பூக்கடை வைத்திருந்த பெண்ணோடு பழகி வந்திருக்கிறான்.

பழக்கம் காதலாகி அவளை திருமணம் செய்துகொண்டு ஊருக்கு வந்தான். ஊரில் உள்ள எல்லா வீட்டுக்கும் அழைத்து சென்று உறவு முறையை புதிய மனைவிக்கு சொல்லி அறிமுகம் செய்து வைத்தான்.

ஒரு வாரம் அவனோடு ஊரில் இருந்தாள். ஒரு வாரத்திற்கு அப்பறம் இருவரும் ஊருக்கு கிளம்பி சென்றார்கள். அவர்களுக்குள் என்ன நடந்ததோ, திரும்பி வரும் போது சுப்பையா மட்டும் தனியே வந்தான். உடலெங்கும் சிறு காயங்கள் இருந்தன‌.

அன்று அளவுக்கு அதிகமாகவும் குடித்திருந்தான்.

வாசலில் நீண்ட நேரமாக தெருவை பார்த்தவாறு அமர்ந்திருந்தான் சுப்பையா.

அவன் அமர்ந்திருந்ததுக்கு ஒரு மணி நேரத்திற்கு முன்புதான் வந்து ஊரையே நலம் விசாரித்துவிட்டு ஊரில் இருந்த அத்தனை கோவில்களுக்கும் சென்று வணங்கி விட்டு வீட்டிற்கு சென்றான்.

அப்போதிலிருந்து இப்படித்தான் அமர்ந்திருக்கிறான். ரொம்ப நேரமாக ஒரே இடத்தில் அமர்ந்திருக்கிறான் என்று யாராவது அவனை பார்க்கப் போனால், மீண்டும் நலம் விசாரிக்க ஆரம்பித்து விடுவான்.

அவன் நம்மீது அன்பை காட்டுவதுகூட நமக்கு ஒரு விதமான அவஸ்தையாக தான் இருக்கும். போதையில் நிறைய பேசிக் கொண்டு இருப்பான். அதனால் யாரும் அவன் ஏன் அவ்வாறு இருக்கிறான் என்று சென்று பார்ப்பதற்கு முன் வரவில்லை.

தெருவில் சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது சிறுவன் ஒருவன் அடித்த பந்து சுப்பையாவின் வீட்டுக்குள் சென்றது.

மற்றொரு சிறுவன் பந்தை எடுக்க சென்றான்.

சுப்பையா எவ்வித அசைவுமின்றி இருந்தான். அவனது கழுத்தில் வேட்டியின் ஒரு முனை சுற்றி கட்டப்பட்டு இருந்தது. மறுமுனை வீட்டின் சட்டத்தில் கட்டப்பட்டு இருந்தது.

அதை பார்த்த சிறுவன் பயந்து போய் ஓடி சென்று மற்ற சிறுவர்களிடம் சொல்ல, சிறுவர்கள் அனைவரும் சென்று பார்த்துவிட்டு ஊரில் விஷயத்தை சொன்னார்கள்.

பெரியவர்கள் வந்து பார்த்தபோது சுப்பையன் உயிர் உடலை விட்டு பிரிந்து இருந்தது.

ஊர்க்காரர்கள், சுப்பையனிடம் சண்டை போட்டு சென்ற அதே தப்புகாரர்களை அழைத்து வந்து சுப்பையனின் சாவுக்கு வாசிக்க வைத்தார்கள்.

சுப்பையன் கொடுக்க வேண்டிய பணத்தையும் சேர்த்து ஊர் பணத்தில் இருந்து கொடுத்து விட்டார்கள். சுப்பையனின் சாவு திருவிழா சாவு போல நடந்தது.

சுப்பையன் மறைவுக்கு பிறகு ஒரு நாள் அந்த ஊருக்கு மேளதாள கோஷ்டியும் கரகாட்ட கோஷ்டியும் வந்தது. விசாரித்த போதுதான் தெரிந்தது.

மேளதாள கோஷ்டியும் கரகாட்ட கோஷ்டியும் வந்த நாளில், ஊர் கோவில் திருவிழாவுக்கு நாள் குறித்து இருந்தது. சுப்பையா இறந்து போனதால் ஊர்க்காரர்கள் திருவிழா தேதியை 48 நாட்கள் மாற்றி வைத்திருந்தார்கள். மற்ற தொழிலாளிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.

சுப்பையாதான் வந்த கோஷ்டிக்கு முன்பணம் கொடுத்து செய்திருக்கிறான். அது ஊரில் யாருக்கும் தெரியாது. அதனால் இந்த கோஷ்டினருக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை.

ஊர்க்காரர்கள் கோஷ்டியிடம் நடந்த விசயத்தை சொல்லி வருத்தம் தெரிவித்தார்கள். அவர்களும் புரிந்து கொண்டு புதிய தேதியை குறித்துக் கொண்டு சென்றார்கள்.

மறுதேதியில் திருவிழா அமோகமாக நடந்தது. தற்போது திருவிழா நடைபெற்று பல ஆண்டுகளையும் கடந்து விட்டது.

சுப்பையன் இல்லாது, ஊரை கூட்ட ஆள் இல்லாது கோவில் திருவிழா நடைபெறாமல் உள்ளது. யாருக்காகவும் எதற்காகவும் காத்திருக்காமல் காலம் மட்டும் கடந்து செல்கிறது.

ரக்சன் கிருத்திக்
8122404791

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.