யார் சிறந்த கொடையாளி

யார் சிறந்த கொடையாளி?

கொடையாளி என்பதற்கு இலக்கணமாக அனைவரும் சொல்வது கர்ணனைத்தான்.

பீமனுக்கு ஏற்பட்ட சந்தேகத்தின் மூலம் கர்ணனின் பெருமையை கண்ண பிரான் எவ்வாறு விளக்கினார் என்பதைப் பாருங்களேன்.

ஒரு முறை பாண்டவர்களில் இரண்டாமவனான பீமனுக்கு ஒரு சந்தேகம் ஏற்பட்டது. அதாவது கர்ணனை எல்லோரும் ஏன் கொடை வள்ளல் என்கின்றனர், என்பதே அது.

தன்னுடைய சந்தேகத்தை கண்ண பெருமானிடம் “கண்ணா, ஏன் எல்லோரும் கர்ணனையே சிறந்த கொடையாளி என்கின்றனர்?. நானும் கர்ணனைப் போல தானம் செய்து சிறந்த கொடையாளி என்று பெயரினைப் பெற விரும்புகிறேன்.” என்று பீமன் கூறினான்.

உடனே கண்ண பிரானும் “பீமா உன்னுடைய கொடை அளிக்கும் தன்மைக்கு ஓர் வாய்ப்பினைத் தருகிறேன். அதோ தெரிகிறதே அம்மலையை, இப்போதே நான் பொன்மலையாக மாற்றித் தருகிறேன்.

நீ அதனை பிறருக்கு கொடுத்து சிறந்த கொடையாளியாக மாறு” என்று கூறி எதிரில் இருந்த மலையை பொன் மலையாக மாற்றினார்.

இரண்டு வாரங்கள் கழித்து கண்ண பெருமான் பீமனை சென்று பார்த்தார். பொன் மலையின் அளவு சிறிதளவே குறைந்து இருந்தது.

பீமனும் கோடாரியைக் கொண்டு பொன் மலையை வெட்டி எல்லோருக்கும் தானம் செய்து கொண்டிருந்தான். கண்ண பிரானிடம் பீமன் “வாரி வழங்கும் வள்ளல் என்று எல்லோரும் என்னை தற்போது புகழ்கின்றனர்” என்று பெருமை பொங்கக் கூறினான்.

கண்ண பிரான் பீமனிடம் “பீமா, இதே வாய்ப்பை நான் தற்போது கர்ணனுக்குத் தருகிறேன். அவன் என்ன செய்கிறான் என்று பார்ப்போம்” என்று கூறினார்.

பின்னர் கர்ணனை அழைத்த கண்ண பிரான் “கர்ணா, இதோ இப்பொன் மலை உனக்குச் சொந்தம். நீ உன் விருப்பம் போல் இதனை வாரி வழங்கு” என்று கூறினார்.

பின்னர் பீமனும் கண்ண பிரானும் அவ்விடத்தை விட்டு புறப்பட்டுச் சென்றனர். அவர்களைத் தொடர்ந்து கர்ணனும் வந்து கொண்டிருந்தான்.

அதனைக் கண்டதும் கண்ண பிரான் கர்ணனிடம் “கர்ணா, பொன் மலையை வாரி வழங்கும் வாய்ப்பினை உனக்குத் தந்தேன். நீயோ அதனை விட்டுவிட்டு நீ எங்களைத் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறாய்?” என்று கேட்டார்.

அதற்கு கர்ணன் “கண்ண பிரானே, நீங்கள் புறப்பட்டவுடன் இரவலன் ஒருவன் என்னிடம் வந்தான். அவனுக்கு என்ன தருவது என்று எண்ணினேன். இந்தப் பொன் மலை உனக்கே சொந்தம் எடுத்துக் கொள்” என்று கூறி அவனுக்கே பொன் மலையைத் தானம் அளித்து விட்டேன்.” என்று கூறினான்.

இதனைக் கேட்டதும் பீமன் தன்னிலை எண்ணி வெட்கி தலைகுனிந்தான்.

இதனைத்தான் ‘ஞாயிற்றைக் கைமறைப்பார் இல்’ என்று கூறுவர் நம் முன்னோர்கள். அதாவது சூரியனுடைய ஒளியை யாராலும் கைகளால் மறைக்க இயலாது. அதே போல் ஒருவனுடைய புகழினை யாராலும் அழிக்க இயலாது என்பதை இக்கதை மூலம் அறிந்து கொள்ளலாம்.

 


Comments

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.