யார் சீடன்? – சிறுகதை

யார் சீடன் என்பது ஒரு நல்ல கதை. வாழ்வினை எப்படி அணுக வேண்டும் என்பதை நமக்குச் சொல்லிக் கொடுக்கும் அருமையான கதை. படியுங்கள்! பயன் பெறுங்கள்!

கரும்பையூர் என்ற ஊரில் சோமு, பாபு, கோபு என்ற நண்பர்கள் மூவர் வாழ்ந்து வந்தனர்.

அவர்கள் தங்களுக்குக் குரு ஒருவரைத் தேர்வு செய்து அவரிடம் வாழ்க்கைக் கல்வி கற்க விரும்பினர்.

யாரிடம் கல்வி கற்பது? என்று யோசித்துக் கொண்டிருக்கும் வேளையில், தருப்பையூருக்கு அருகில் சம்பு என்றொரு சாது, ஆசிரம் அமைத்து வாழ்க்கைக் கல்வி கற்பிப்பதை கேள்வியுற்றனர்.

நண்பர்கள் மூவரும் அவரிடம் சென்று கல்வி கற்க தீர்மானித்தனர்.
நண்பர்கள் மூவரும் தருப்பையூருக்குச் சென்று சாது சம்புவைச் சந்தித்தனர்.

தாங்கள் அவரின் சீடர்களாக விரும்புவதைத் தெரிவித்தனர்.

சம்புவும் அவர்களிடம் “நாளை மூவரும் வாருங்கள்; பார்ப்போம்.” என்று கூறி அனுப்பினார்.

மறுநாள் சாது தன்னுடைய மனைவியிடம் நண்பர்கள் மூவரும் வரும் போது, சாதுவின் காதிற்குள் எலி புகுந்ததால் இறந்து விட்டதாக கூறச் சொன்னார். அதற்கு அவருடைய மனைவியும் சம்மதித்தார்.

நண்பர்கள் மூவரும் முனிவரின் ஆசிரமத்தை அடைந்தனர்.

சாதுவின் மனைவி அவர்களிடம் “சாதுவின் காதிற்குள் எலி புகுந்ததால் அவர் இறந்து விட்டார்” என்று கூறினார். சாதுவின் மனைவி கூறியதைக் கேட்டதும் நண்பர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனே சோமு “நல்ல குருவிடம் கல்வி கற்க வேண்டும் என்று எண்ணியே நாங்கள் இங்கு வந்தோம். ஆனால் குருவிற்கு இப்படி ஆகிவிட்டதே. எல்லாம் எங்களுடைய துரதிஷ்டம்” என்று கூறி அவ்விடத்தை விட்டுச் சென்றான்.

பாபு “எங்களுடைய முன்வினை எங்களைப் பாடாய்படுத்துகிறது. இப்போதுதான் நல்ல குரு கிடைத்தார் என்று மகிழ்ச்சியாக இருக்கும்போதே இப்படி ஆகிவிட்டதே” என்று புலம்பியவாறே அவ்விடத்தைவிட்டு நகர்ந்தான்.

கோபு சாதுவின் மனைவியின் முகத்தை உற்று நோக்கினான்.

பின்னர் அவரிடம் “நீங்கள் பொய் சொல்லுகிறீர்கள். சாது சம்பு உயிருடன்தான் இருக்கிறார்.” என்று கூறினான்.

அதனைக் கேட்டதும் முனிவரின் மனைவி ஆச்சர்யம் அடைந்தார். அறையின் உள்ளிருந்து சாது சம்பு வெளிப்பட்டார்.

“நான் உயிருடன் இருப்பதை, நீ எப்படிக் கண்டறிந்தாய்?” என்று கேட்டார்.

அதற்கு கோபு “உங்களுடைய மறைவினால் உண்டாகும் துக்கத்தின் அறிகுறி ஏதும் இன்றி, உங்களுடைய மனைவியின் முகம் அமைதியாக இருந்தது.

மேலும் எலி எப்படி மனிதரின் காதிற்குள் புக முடியும்? அது நடக்காத காரியம். ஆதலால்தான் நீங்கள் உயிருடன் இருப்பதாகக் கூறினேன்” என்றான்.

“எதார்த்தத்தைப் புரிந்து கொள்ளும் நீயே, என்னுடைய சீடனாக தகுதியானவன்.” என்று கூறி சாது சம்பு கோபுவை சீடனாக ஏற்றார்.

எதார்த்தத்தைப் புரிந்து கொண்டால்தான் வாழ்வில் வெற்றி பெற முடியும் என்பதை யார் சீடன் என்ற கதையின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.