தலைமுடியை கொத்தாக பிடித்துக் கொண்டு முதுகில் ‘கும் கும்’ என்று மொத்தினாள் மல்லிகா தனது மகள் சுமதியை.
சத்தம் கேட்டு உள்ளேயிருந்த ஓடி வந்தான் கதிரேசன்.
அடித்துக் கொண்டிருந்த மல்லிகாவின் கைகளைப் பிடித்து தடுத்தான். “ஏண்டி, குழந்தையைப் பிடிச்சி இந்த வாங்கு வாங்கறயே; அறிவில்ல ஒனக்கு?”
“வாய்யா, வா இப்பதான் கொழந்தன்னு தெரியுதா ஒனக்கு, இவளுக்கு-ன்னு இன்னா பண்ணிட்ட நீ? இப்ப வக்காலத்துக்கு வர்ற. சம்பாதிக்கிறத மொத்தமா குடிச்சிட்டு வந்து அழிக்கிற. ஒன்னாலதான் எல்லா பிரச்னையும்… ” சுமதியின் மேலிருந்த கோபம் மொத்தமும் கணவனிடம் பாய, இதுதான் சமயம் என்று சுமதி அங்கிருந்து தப்பித்து கொல்லைப்புறத்துக்கு விரைந்தாள்.
கொல்லையிலிருந்த வேப்ப மரத்தடியில் அமர்ந்து கொண்டாள். முதுகு பக்கம் ‘கப கப’ என்று எரிந்தது. அம்மா எப்போதும் இப்படி அடிப்பவள் அல்லள்.
இன்று எதேச்சையாக வீதியில் சுமதியின் டீச்சரை பார்த்திருக்கிறாள்.
“சுமதி அம்மா, நானே உங்க வீட்டுக்கு வந்து உங்களைப் பார்க்கலாம்னு இருந்தேன். வரவர சுமதிக்கு படிப்புல கவனம் குறையுது. வீட்டுப் பாடம் எல்லாம் சரியா செய்யறது இல்ல, கொஞ்சம் பார்த்துக்கங்க” என்று சுமதியின் டீச்சர் கொளுத்திப் போட, அதுதான் இப்போது பற்றி எரிகிறது.
அம்மாவின் குரல் இன்னும் ஆவேசமாய் ஒலிக்கிறது.
“இந்த டீச்சர்ங்கல்லாம் கவர்ன்மெண்ட்ல சம்பளம் அள்ள அள்ள கொறையாம வாங்கறாங்கதான, புள்ளைங்க படிக்கலன்னா அவங்கதான பார்த்துக்கோணும், அத உட்டுப்போட்டு நீங்க பாத்துக்கோங்கன்னு சொன்னா இன்னா நாயம், எங்களுக்கு எழுத படிக்க தெரியுமா? அப்பறம் இவங்க எதுக்கோசரம் இருக்காங்க?”
அம்மாவின் கோபம் இப்போது அப்பாவின் மீதிருந்து டீச்சரின் மேல் பாய்ந்ததை சுமதி புரிந்து கொண்டாள். ஆனால் அது தவறு என்பதும் புரிந்தது.
‘டீச்சர் பாவம். அவங்க என்ன செய்வாங்க, எத்தனையோ முறை என்னைப் பார்த்து சொல்லியிருக்காங்க, ‘சுமதி முன்னைவிட உனக்கு படிப்பில் கவனம் குறைவாயிருக்கு.
கொரானா லாக்டவுன் முடிஞ்சி வந்த எல்லா ஸ்டூடன்ஸ்ஸூம் ரொம்ப கவனக் குறைவாத்தான் இருந்தாங்க. படிச்சதை எல்லாம் மறந்தா மாதிரிதான் இருந்தாங்க. ஆனா இப்ப எல்லாம் ஓரளவிற்கு சரியாகி, அவங்கிட்ட கொஞ்சம் முன்னேற்றம் தெரியுது.
ஆனா நீ மட்டும் முன்னை மாதிரி ஆர்வமா இல்ல, நல்லா படிக்கிற பொண்ணு தானே நீ, என்னாச்சு உனக்கு?
வீட்ல அம்மா அப்பாவுக்கு சண்டையா? அது எல்லார் வீட்லயும் நடக்கிறதுதான். சண்டை போடுவாங்க; அப்புறம் ஒண்ணா சேர்ந்துக்குவாங்க.
அதனால அதைப்பத்தி கவலைப்படாமல் படிப்புல உன் கவனத்தை செலுத்து. வேறு ஏதாச்சும் பிரச்சனையா இருந்தாலும் எங்கிட்ட தயங்காம சொல்லு.
பாடம் ஏதாவது புரியலன்னாலும் என்னை தனிப்பட்ட முறையில வந்து பாரு. நான் சொல்லித் தரேன் சரியா?’ என்று எவ்வளவு அக்கறையா என்கிட்ட சொன்னாங்க.
ஆனா, நான் அவங்களை தனியா போய் பார்க்கிறதையே தவிர்த்துட்டேனே, என்கிட்ட சொல்லி சரிவரலன்னுதான் அம்மாகிட்ட சொல்லியிருக்காங்க, இதெல்லாம் அம்மாவுக்கு எப்படி புரியும்?’
அதுசரி, நான் நல்லாதானே படிச்சிகிட்டு இருந்தேன். பிறகு எப்படி ஆர்வமே இல்லாம போயிட்டுது. எதனால?’ யோசிக்க யோசிக்க, ஒன்றுமே பிடிபடவில்லை என்றாலும், ஒருநாள் அம்மா மார்பில் அடித்துக்கொண்டு கதறி அழுதது நினைவுக்கு வந்தது.
“பொட்டப்புள்ளையா இருக்கே, அதுக்கு ஏதாவது சேக்கணுமேன்னு ஒழைச்சதை எல்லாம் கொண்டு போய் சீட்டுன்ற பேர்ல நல்லவன்னு நம்பி கட்டினனே. பாவிப்பய, மொத்தத்தையும் சுருட்டிகினு ஓடிட்டானே சண்டாளி.
நான் இன்னா பண்ணுவேன், எங்க போய் கேப்பேன், அநியாயமா எல்லாத்தையும் சுருட்டிகினு ஓடிட்டானே” அம்மா அழுது கொண்டே புலம்ப இதை எப்படியோ மோப்பம் பிடித்துக் கொண்டு வீட்டிற்கு வந்த கதிரேசன்,
“நல்லா வேணுண்டி ஒனக்கு, அந்த காச எனக்குகூட கண்ணுல காட்டாம சேர்த்த இல்ல, மொத்தமா நாமம் போட்டான் பாரு, கட்சீல நீயும் துன்னல, நானும் துன்னல, ஊர்ல இருக்கிற பொறம்போக்குதான் துன்னறான். ஒனக்கு இதுவும் வோணும், இன்னமும் வோணும்” கெக்கலித்து சிரிக்க அம்மா பத்ரகாளியானாள்.
“எடு அந்த கட்டைய, மொதல்ல ஒன்ன பொணமாக்கிட்டுதான் மறுசோலி”
அவளது ஆத்திரத்தை கண்டு அங்கிருந்து அப்பா பம்மிச் சென்றது இன்னும் நினைவிலிருந்தது சுமதிக்கு.
அன்று இரவு முழுக்க உறக்கமே இல்லாமல் ஏதோ ஒரு மாதிரியான உணர்ச்சியில் இருந்ததும் நினைவுக்கு வந்தது.
சித்தாள் வேலை பார்த்து சிறுகச் சிறுக சேர்த்த பணம் அநியாயமாய் போனதை நினைத்து இரவு முழுக்க அழுது தீர்த்த அம்மாவின் மேல் அவளுக்கு இரக்கம் கவிந்தது.
‘இதெல்லாம் ஏன் இப்படி நடக்குது? யார் மேல தப்பு?’ என்கிற கேள்வி மட்டும் மூளையில் சுழன்று கொண்டே இருந்தது.
அதுவுமில்லாமல் அம்மா அடிக்கடி அப்பாவை ‘அடிப்பேன், உதைப்பேன்’ என்று சொல்வாளே தவிர அடி உதை அனைத்தையும் பெறுபவள் அவளாகத்தான் இருக்கிறாள் இன்று வரை.
ஒருமுறை கதிரேசன், மல்லிகாவின் மண்டையை உடைத்து தையல் போடுமளவிற்கு காயம். டாக்டர் கூட கண்டித்தார்.
“இது என்ன உடம்பா, இல்லை கல்லா? இப்படியா அடிப்பான் பாவி, நீ பேசாம போலீஸ்ல கம்பளைண்ட பண்ணிடு, நாலு நாள் உள்ள இருந்தாதான் இவனுக்கெல்லாம் புத்தி வரும்.”
“எல்லாம் இந்த பொட்ட புள்ளைக்காக பார்க்கிறேன் சாமி, அப்பன் செயிலுக்கு போனா நாள பின்ன ஏதும் பிரச்சனையா போச்சின்னா?”
“இப்படி சொல்லி சொல்லியே இவனுங்க குளிர் விட்டு திரியறானுங்க. இப்ப இருக்கற பிரச்னையவிடவா பெரிய பிரச்னை வந்திடப் போகுது, என்னமோ, போ” டாக்டரும் அதோடு நிறுத்திக் கொண்டார்
பழைய நினைவுகளில் பயணித்த சுமதிக்கு கொசுக்கடி திரும்ப நிகழ்உலகிற்கு அழைத்து வந்தது.
கொல்லைப்புறம் முழுக்க இருட்டு நிறைந்து பயத்தை ஏற்படுத்தியது. தட்டுத்தடுமாறி எழுந்து வீட்டினுள் நுழைந்தாள் சுமதி.
உள்ளே தரையில் மரம் போல சாய்ந்து கிடந்தாள் மல்லிகா. சுமதிக்கு அம்மாவைப் பார்க்க பயமாகவும் பாவமாகவும் இருந்தது. மெல்ல அம்மாவை தட்டிப் பார்த்தாள்.
“அம்மா, பசிக்குதும்மா” என்றதும், லேசான அசைவு ஏற்பட்டது மல்லிகாவிடத்தில்.
படுத்தபடியே புடவைச் சுருக்கை தடவி, அதிலிருந்து எட்டாய் மடித்திருந்த ரூபாய் தாளை நீட்டினாள்.
“இந்தா, ஆயாக் கடையில குடுத்து உனக்கு இட்டிலி வாங்கிக்க, எனக்கு ஒரு சோடா மட்டும் வாங்கியா?”
“உனக்கு சாப்பிட ஏதும் வேணாமா?”
“எனக்கு ஒண்ணும் வாணாம். இன்னைக்கி வெயிலும் அதிகம், வேலையும் அதிகம். வவுறு வேறு சரியில்ல, சோடா குடிச்சா சரியாப் போவும்”
“சரிம்மா” சொல்லியபடி அவள் சொல்லிய அனைத்தையும் வாங்கி வந்தாள் சுமதி.
சோடாவை அம்மாவிடம் நீட்டினாள். “குடிக்கிறயாம்மா?” என்றதும் வாங்கி ‘மடக் மடக்’ என்று குடித்து முடித்தாள்.
வாயை புடவைத் தலைப்பால் அழுந்த துடைத்தபடி மகளை ஏறிட்டாள் மல்லிகா,
“சுமதி கண்ணு அம்மா அடிச்சிட்டேன்னு கோவமா?”
‘இல்லை’ என்ற விதமாக தலையாட்டினாள் சுமதி,
“நீயாவது நல்லா படிச்சி முன்னுக்கு வரணும்னுதான் பாக்கறேன். எல்லா கஷ்டமும் என்னோடயே போட்டும். நீ சரியா படிக்கலேன்னு டீச்சரம்மா சொன்னதும் எனக்கு ஒரே கோவமாயிடிச்சி. அதான் உன்னய அடிச்சிட்டேன். கண்ணு உசாரா படிப்பியா?” ஏக்கத்தோட கேட்ட அம்மாவைப் பார்த்து தலையை மட்டும் ஆட்டினாள். பசி வயிற்றைக் கிள்ளியது.
“சரி நீ சாப்பிடு” சொல்லிவிட்டு மீண்டும் தரையில் படுத்தாள் மல்லிகா. அடுத்த நொடியே உறக்கத்தினுள் ஆழ்ந்து போனாள்.
சுமதி, பார்சலை பிரிக்கத் தொடங்கினாள். வீட்டின் கதவை ‘டமார்’ என திறந்தபடி நுழைந்தான் கதிரேசன்.
படுத்துக் கிடந்த மல்லிகாவைப் பார்த்து கோபத்தில் பொருமினான்.
“மகாராணி அதுக்குள்ள நீட்டிக்கிட்டா பாரு. ஆம்படையான் வருவானே அவனுக்கு ஏதாவது சமைச்சி கிமைச்சி வெக்கணுன்னு புத்தி கீதா பாரு, ஏய் சுமதி கையில இன்னாது?” பக்கத்தில் அவன் வந்ததும் சாராய வாடை குப்பென்று வீச, அப்படியே மூக்கைப் பொத்திக் கொண்டாள் சுமதி.
அவள் கையிருந்த பார்சலை பிடுங்கிக் கொண்டான். “இது இன்னா கடை இட்டிலியா, கடவாய்க்கு கூட பத்தாது.” சொல்லிக் கொண்டே அத்தனையும் லபக்கிட்டான். “போய் தண்ணி எடுத்துகினு வா” சுமதியை ஏவினான்.
சுமதி கொடுத்த தண்ணீரை குடித்து விட்டு அப்படியே தரையில் கால் நீட்டி படுத்துக் கொண்டான்.
பசித்த வயிற்றை சமாதானம் செய்ய தண்ணீரை குடித்துவிட்டு அம்மாவின் அருகில் படுத்துக்கொண்டாள் சுமதி. அப்போதுதான் அவளுக்கு காலையில் டீச்சர் சொன்னது நினைவுக்கு வந்தது.
“நாளைக்கு நம்ம ஸ்கூல்ல இன்ஸ்பெக்ஷன். அதிகாரிகள் எல்லாரும் வருவாங்க. உங்களை கேள்விகள் கேட்பாங்க, பயப்படாம தைரியமா பதிலைச் சொல்லணும். இன்னைக்கு வீட்டுக்கு போய் நல்லா படிச்சுட்டு வாங்க சரியா?”
எல்லா மாணவர்களும் கோரஸாக “ஓகே மிஸ்” என்றார்கள்.
இப்போதுதான் சுமதிக்கு ஞாபகத்துக்கு வந்தது. ‘எழுந்து உட்காந்து படிக்கலாமா?’ ஒருவிநாடி தோன்றியதும், அடுத்த விநாடி ‘எதைப் படிக்க, எப்படி படிக்க, அதுவும் இந்த மங்கலான விளக்கொளியில்?’ பசி ஒரு பக்கம், அம்மாவின் மீது ஏற்பட்ட பரிதாபம். அப்பாவின் மீது ஏற்பட்ட வெறுப்பு ஒருபக்கமாய் சேர்ந்து சோர்வையே அவளுள் ஏற்படுத்தியது.
மறுநாள் காலை வகுப்பறையில் சுமதி சற்று நடுக்கத்துடன் அமர்ந்திருந்தாள். எதிர்பார்த்தபடி அதிகாரி வந்தார். மாணவர்களிடம் பொதுவான அறிவுரை வழங்கினார். அவருக்கு அருகில் டீச்சரும் நின்றிருந்தார்.
அதிகாரி சுமதியை கைகாட்டி எழுப்பினார். படபடத்த மனதுடன் எழுந்து நின்றாள் சுமதி.
“தமிழ் பாடத்துல இருக்கிற முதல் செய்யுள் மனப்பாடப் பாடலை சொல்” அதிகாரி கேட்டதற்கு ‘பேந்த பேந்த’ விழித்து நின்றாள் சுமதி.
அதிகாரி கோபமாய் டீச்சரைப் பார்க்க, டீச்சர் சற்றே கெஞ்சும் விதமாக “வேற மாணவனை கேளுங்க ஸார். அவங்க சொல்வாங்க” என்றதும், அதிகாரியின் கோபம் இருமடங்கானது.
“வேற பையன் சொல்வான்னா, அப்ப இந்த பொண்ணு சொல்லலன்னா அது சரியாயிடுமா? இந்த பொண்ணை நீங்க ஏன் கவனிக்காம விட்டீங்க? எல்லாருக்கும் சொல்லித் தரது தானே உங்க பணி?” அதிகாரி பேசிக்கொண்டே போக டீச்சரின் முகம் தரை நோக்கி தாழ்ந்திருந்தது.
சுமதியின் மண்டைக்குள் அதே கேள்வி, ‘இதெல்லாம் யார் தப்பு?’
சுமதிக்கு மட்டுமல்ல; நமக்குமே தோன்றும் கேள்வி தான். ‘யார் பிழை?’
மஞ்சுளா ரமேஷ்
ஆரணி