யோகா

யோகா

யோகா என்பது உடல் மற்றும் மனத்தைப் புத்துணர்வு பெறச்செய்யும் பயிற்சியாகும்.

அஷ்டாங்க யோகம் எனும் எட்டு அங்கங்கள் கொண்ட யோக சாத்திரத்தில் ஆசனம், பிராணாயாமம், தியானம் என்பவை மூன்று அங்கங்களாகும்.

இதில் ஆசனம் என்பது உடலை உறுதியானதும் சுகமானதும் ஆன நிலையில் அமர்த்துவது.

பிராணாயாமம் என்றால் மூச்சுப் பயிற்சி செய்வது, ஆசனங்கள் எண்ணற்றவை என்று பண்டைய நூலோர் விளக்கி உள்ளனர்.

தியானம் என்பது மனதை ஒருமைப் படுத்துவது ஆகும்.

யோகப் பயிற்சியை அவரவர் வயது, உடல் நிலை, பலம் போன்றவைகளுக்கு ஏற்றவாறு மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும். எந்த யோகாசனங்களைத் தவிர்க்க வேண்டும், எதைச் செய்தால் பயனளிக்கும் என்பதை அறிந்து பயில வேண்டும்.

வெறும் புத்தகங்களைப் பார்த்தோ, தங்கள் விருப்பம் போலோ யோகாசனங்களைச் செய்வது நல்லதல்ல.

ஒரு ஆசிரியரின் உதவியுடன் ஒழுங்காக கற்று, தினம் தோறும் பயிற்சி செய்ய வேண்டும். நோயாளிகள் யோகா பயிற்சியை செய்வதற்கு முன்பு இதற்கான பயிற்சி பெற்ற மருத்துவரின் ஆலோசனைகளைப் பெறுவது நல்லது.

ஒவ்வொரு ஆசனத்திலும் ஆரம்ப நிலை, இறுதி நிலை என்ற இரண்டு நிலைகள் உண்டு. ஆரம்ப நிலையிலிருந்து இறுதி நிலைக்குப் போகும் பொழுது மூச்சை உள்ளே இழுக்கவோ, விடவோ செய்ய வேண்டும்.

சுவாசத்தை எப்பொழுதும் மெதுவாக இழுப்பதும், விடுவதும் நல்லது. சுவாசத்தைத் தொண்டையில் இருந்து இழுப்பதும் விடுவதும் பழகிக் கொள்ள வேண்டும்.

உடலை விரிவுபடுத்தும் பொழுது மூச்சை இழுப்பதும் உடலை சுருக்கும்போது மூச்சை வெளியேற்றுவதும் தான் சரியான முறையாகும்.

யோகாசனங்களைச் செய்யும் போது ஒவ்வொருவரும் அவர்களுக்குச் சுகமாக இருக்கும் வகையில் ஆசனங்களைச் செய்ய வேண்டும். ஆகவேதான் ஆசனத்தில் இறுதி நிலை இப்படித் தான் இருக்க வேண்டும் என்று கூறுவதற்கு சாத்தியமில்லை.

உதாரணமாக பச்சிமோத்தாசனம் செய்யும் பொழுது கால்களை மடக்கக் கூடாது என்றும், முகம் முழங்காலைத் தொட வேண்டும் என்றும் பல நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இப்படி இந்த ஆசனத்தைச் செய்வது ஒரு சிலருக்குத் தான் சாத்தியம்.

இந்த ஆசனத்தைச் செய்யும் பொழுது சற்றே தேவை உள்ள அளவு முழங்கால்களை மடக்க வேண்டும். பலவந்தமாகத் தலையை முழங்கால்கள் மீது வைக்க முயற்சிப்பது தவறு என்று தெரிந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு ஒவ்வொரு ஆசனத்தையும் உடல் நிலையைப் பார்த்து தேவைக்கு ஏற்றவாறு மாற்றி அமைத்துக் கொள்வது அவசியம்.

யோகாசனங்களில் எல்லா ஆசனங்களும் ஆண்கள், பெண்கள் இருவருக்கும் பொருந்தும் என்றாலும் சில குறிப்பிட்ட ஆசனங்கள் பெண்களுக்கும் தாய்மார்களுக்கும் முக்கியமானவை.

உதாரணமாக பத்தகோணாசனம், மகா முத்தரா, விபரீதகரணி போன்ற ஆசனங்கள் மாதவிடாய் கோளாறுகளுக்குப் பயனளிக்கும். இதேபோல் கர்ப்ப காலத்திலும் மாதத்திற்கு ஏற்றவாறு செய்யக் கூடிய சிறப்பு யோகப் பயிற்சிகளும் உள்ளன.

ஆனால் முன் கூறியவாறு எச்சரிக்கையுடன் உடல் நலம், பலம், வயது எல்லாவற்றையும் அறிந்து தகுந்தவாறு பயிற்சி அளிக்க வேண்டும்.

பெண்கள் மாதவிடாய் காலத்தல் யோகப் பயிற்சியை தவிர்க்கவும். யோகப் பயிற்சியை சுத்தமான இடத்தில் செய்ய வேண்டும்.

பயிற்சி செய்யும் முன்பு வயிறு காலியாகவும், சாப்பிட்ட ஆகாரம் சீரணமடைந்தும், மலம், சிறுநீர் வெளியேற்றிய பிறகு குடல் சுத்தமாகவும் இருக்க வேண்டும்.

ஆசனப் பயிற்சி செய்வதற்கு முன்பு மூட்டுகளுக்குத் தளர்ச்சி செய்ய வேண்டும்.

ஆசனப் பயிற்சி, மூச்சுப் பயிற்சி, தியானம் இவை மூன்றும் சேர்ந்தே யோகப் பயிற்சி. இப்பயிற்சியினால் உடலில் இரத்தம் சரியானபடி ஓடுகிறது.

இருதயம், வயிறு, எலும்பு, தசை, மூச்சுபலம், ஆயுள்பலம், புலன்களின் பலம், புத்திகூர்மை, வாக்குபலம், ஆகியவைகள் வளர்ச்சி அடைகிறது. நோய் வராமலும், வந்த நோய்களைத் தீர்க்கவும் பயன்படுகிறது.

 

Comments

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.