வெளியூரில் இருந்த காரணத்தினால், நண்பர் மகேஷ் வீட்டு கிரகப் பிரவேசத்திற்கு கலந்து கொள்ள முடியாமல் போனது யோகேஷிற்கு.
இரண்டு நாள் கழித்து, ஊர் வந்ததும் முதல் வேலையாக மகேஷின் வீட்டிற்குப் புறப்பட்டான் யோகேஷ்.
அந்தப் பகுதியில், மகேஷின் வீடு தனியாகத் தெரிந்தது.
இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ப, வீட்டை நவீனமாகக் கட்டியிருந்தான் அவன். வீட்டைச் சுற்றிப் பார்த்துவிட்டு ‘ரொம்ப அழகான வீடு’ என்று பாராட்டினான் யோகேஷ்.
அவர் வீட்டு வாசலில் காலணிகளை வைக்கும் ஸ்டாண்டில் நிறைய புதிய, பழைய செருப்புகள் என்று 10 ஜோடி செருப்புளை நேர்த்தியாக அடுக்கி வைத்திரூந்தான்.
அந்த வீட்டில் மகேசும் அவன் மனைவியும் மட்டுமே இருந்தார்கள்.
“ஏன் இப்படி செருப்பு ஸ்டாண்டுல, செருப்புகளை குவிச்சு வெச்சிருக்கீங்க? பழைய செருப்புகளையெல்லாம் தூக்கி குப்பையில போட வேண்டியது தானே!” யோகேஷ் அவனிடம் கேட்டான்
“நாங்க குடியிருக்கிற ஏரியா ஊராட்சி பகுதி. இப்போ தான் மெதுவா நகராட்சியா வளர்ந்துக்கிட்டு வருது. வீடெல்லாம் அவ்வளவு இல்லை. திருடனுங்க நடமாட்டம் அதிகம்.
திருடனுங்க பகல், ராத்திரி வேவு பார்த்து வெச்சிக்கிட்டு திருடுவானுங்க. செருப்பு நிறைய இருந்தா, நிறைய பேர் வீட்டுல இருக்காங்கன்னு நினைச்சி திருட வர மாட்டாங்கன்னு ஒரு யோசனை” மகேஷ் சொன்னதைக் கேட்டு வியந்து போனான் யோகேஷ்
“நல்ல ஐடியாவா தான் இருக்கு. குட்” என்று மனதார பாராட்டினான் மகேசை.
எம்.மனோஜ் குமார்