ரசவாதியின் ரசக்கலவை

நான் வெகுவிரைவில் நிலைகுலைந்து

உருமாறிப் போனாலும் போவேன்.

அந்தத் தடுமாற்றத்தில் பைத்தியக்காரனாகி எங்கோ எதையோ

இழந்தவனைப் போல் தேடித் திரிந்தாலும் திரியலாம்

 

அவ்வாறு நானிருந்தால்

கொஞ்சம் கவனித்துக் கொள்ளுங்கள்

 

யாரையும் அடிக்கவோ, கடிக்கவோ

மாட்டேன் என்று தான் நினைக்கின்றேன்.

அப்படி எதாவது செய்தால்

சும்மா விட்டு விடாதீர்கள்.

 

கை, கால்களை நன்கு கட்டி

ஆற்றிலோ, குளத்திலோ எறிந்து விடுங்கள்.

ஏன் இப்படிச் செய்கிறீர்கள்? என்று

யாராவது கேட்டால், நீங்கள் ஒன்றும் கூறாதீர்கள்.

நான் அவர்களைச் சும்மா விடுவதில்லை.

நாயாகவோ நரியாகவோ அல்லது பேயாகவோ வந்து

கை, கால்களைப் பிய்த்துச் சதைகளைக் கீறி

இரத்தம் குடிக்காமல் விடமாட்டேன்.

 

நீங்கள் எதற்கும் பயப்படாதீர்கள்

உங்களை நான் ஒன்றும் செய்திட மாட்டேன்.

 

எனக்குப் பசி வரும், அப்போது உணவில்லையெனின் கோபம் வரும்.

கோபம் வந்தால் என்ன செய்வேன் என்று எனக்கே தெரியாது.

 

எதுவும் தரவில்லையென்றாலும்

நீங்கள் எதற்கும் பயப்படாதீர்கள்.

உங்களை நான் ஒன்றும் செய்திட மாட்டேன்.

 

நீங்கள் எப்பேர்பட்ட ரசவாதி என்று தெரிந்தே

இப்போது உடனாளியாய் இருக்கின்றேன்.

 

அறியாமல் நீங்கள் சேர்மானம் கூட்டவில்லை.

அறிந்தே ரசக்கலவை ஆக்குகிறீர்கள்.

 

இன்னது இன்னதென்று தெரியாமலா

தீமூட்டிக் காய்ந்தமரம் சாய்க்கிறீர்கள்…

 

சொற்களை வைத்தேச் சோறாக்கித் தலையிலூற்றுகிறீர்கள்…

 

எனக்குத் தெரியும்… உலக தத்துவம்.

 

காற்றே குற்றவாளி.

இடியும், மழையும்

என்னாலில்லை என்கிறீர்கள்.

மேகமே… உனை வரச்சொன்னது யார்? என்கிறீர்கள்

 

இந்தப் பைத்தியத்திற்குத் தெரியும்

இடியும், மழையும் அதாகவே தான் வருமென்று.

பாரதிசந்திரன்

 

பாரதிசந்திரன்

முனைவர் செ சு நா சந்திரசேகரன்
9283275782
chandrakavin@gmail.com

 

 

5 Replies to “ரசவாதியின் ரசக்கலவை”

 1. மனிதன் என்பவன் எப்போதும் சமூகத்தில் சூழ்நிலை கைதியாகவே இருக்கின்றான்.

  உணர்வு குவியம் ஆன அவன் தன்னுள் தோன்றும் உணர்ச்சிகளை அவ்வப்போது வெளிக்காட்ட இயலாத சுதந்திரத்தையே பெற்றிருக்கின்றான். இந்த வினோத சுதந்திரம் எல்லோராலும் உணரப்படுவதில்லை. இதை இயல்பு என்கிறார்கள். இதை புரிந்து கொண்டவர்கள் சிலரே, அவர்களுள் ஒருவர் பாரதி சந்திரன்.

 2. நல்ல உரைநடைத் தன்மையிலான நவீன நடையில் சரளமாகக் கவிதைையை எழுதத் தொடங்கி விட்டீர்கள். ஆனால் கவிதையின் முற்பகுதியில் உள்ள சரளம் பிற்பகுதியில் உருவகத்திற்குத் தாவுகிறது. தலைப்பிலும் இது உண்டு. இந்த மெனக்கெடல் இல்லாமேலேயே கவிதையை இயல்பாக முடித்திருக்க வாய்ப்பதிகம். என்ன கவிதையை முடிக்கும் பொறுப்பைக் கவிதையிடமே விடும் தைரியம் வேண்டும் அவ்வளேவே!

 3. ஒரு ரசவாத கலவைதான் மனிதனின் வாழ்க்கை.

  எப்பொழுதும் மனிதனுடைய வாழ்க்கை அவனுடைய உள்ளங்கைக்குள் அகப்பட்டதே இல்லை. எல்லைமீறி, பிரபஞ்சம் தாண்டி, எல்லாவற்றையும் கடந்து சிந்திக்க அல்லது தானாக உருமாற்றம் அடைவது தான் கவிதையின் ஆன்மா என்றே கருதுகிறேன்.

  ஒரு ஆண்மகனுக்குள் ஒரு பெண் குடி கொண்டிருப்பதைப் போல, ஒரு பெண் மகவுக்குள் ஓர் ஆண்மகன் உணர்வை கொண்டிருப்பதைப் போல, எப்பொழுதும் எல்லா நேரத்திலும் ஒரு மனிதன் ஒரே விதமாக ஒரே சிந்தனையுடனும் ஒரே எண்ணத்துடனும் இருப்பதில்லை.

  ஒரு கவிஞன் எல்லா உணர்வுகளையும் பிரதிபலிப்பதாகவே மேற்குறிப்பிட்ட உங்கள் கவிதையின் தன்மையும் இருக்கிறது.

  சில நேரத்தில் கவிதை தத்துவ சிந்தனைகளுக்குள் சிக்கிக் கொண்டு வெளியே வர முடியாமல் தவிப்பது போல “ரசவாதியின் ரசக்கலவை” சிக்கித் தவிப்பதாகவே அறிகிறேன்.

  சில நேரங்களில் உங்கள் கவிதை பாப்லோ நெருடோவை ஞாபகப்படுத்துகிறது. அவர்தான் மனிதனின் மனப்பிரழ்வுகளை இயல்பாக‌, எளிமையாக, உரைநடை வடிவில் எனக்கு அறிமுகப்படுத்தினார்.

  அவருடைய எல்லா கவிதையையும் ஒரே மூச்சில் வாசித்து முடித்துவிட வேண்டும் என்ற எண்ணம் தோன்றி இருக்கிறது.

  அது போன்ற எண்ணத்தை இந்தக் கவிதை எனக்குத் தந்திருக்கிறது. ஆனால் உங்களுடைய எல்லா கவிதையையும் என்னால் அப்படி குறிப்பிட்டு சொல்விடமுடியாது. சில கவிதைகளை இரண்டு… மூன்று…. நான்கு…. முறை கூட வாசித்திருக்கிறேன். அப்பொழுது கூட சில நேரத்தில் என்னுடைய கற்பனையோ?அல்லது அறிவையோ(!) துணைக்கு அழைத்து சிந்தித்தது உண்டு.

  இந்தக் கவிதை மிக எளிமையாக, பாசாங்கு இல்லாத மொழியில், எதார்த்தமான நடையில் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் கட்டுக் கடங்காத உணர்வுகளை வெளிப்படுத்தும் தன்மையை அதன் இயல்பிலேயே சொல்லிய விதம், அதன் ஆழம் இப்படி எல்லாவற்றையும் சிறப்பாகச் சொல்ல முடியும்.

  உங்கள் கவிதையை படிப்பதற்காக ஒரு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்ததற்கு பெரிய நன்றி.

  அதே சமயத்தில் இந்தக் கவிதையைப் படித்துவிட்டு, இதற்கு ஒரு சிறந்த பின்னூட்டம் எழுத வேண்டும் என்ற எண்ணமும், அதற்காக சிந்திப்பதற்கு ஒரு வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொடுப்பதற்காக இன்னொரு முறை நன்றி கூறிக் கொள்கிறேன்.

  சிறந்த கவிதை.

  மகிழ்ச்சி.

  வாழ்த்துக்கள்!

 4. உங்கள் பேனா முனை என்னையும்
  கீறி வைக்கிறது…

  வலி குறையும் போது மறுபடியும் மறுபடியும் வாசிக்கிறேன்…

  கொஞ்சம் கொஞ்சமாக மரத்து போக வேண்டும்…

  க. வீரமணி
  சென்னை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.