வணக்கத்திற்கு உரியவர் அல்லாஹ் ஒருவனே’ என்ற ஓரிறைக் கொள்கையை வெளிப்படுத்தும் பல சூஃபி தத்துவ பாடல்களை இயற்றியவர் தென்காசி ரசூல் பீவி ஆவார்.
தென்காசி ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க ஊர்.
பழமையான ஆன்மீகக் கதைகளும் இந்து, இஸ்லாமிய, கிறிஸ்துவ மதம் சார்ந்த திருத்தலங்களும் ஒருங்கே அமையப் பெற்ற ஊர்.
தமிழ் வளர்ச்சிக்கு அரும்பாடுபட்ட பல்வேறு புலவர்களை, எழுத்தாளர்களைத் தன்னகத்தில் கொண்ட ஊர். முக்கியமான விடுதலைப் போராட்ட வீரர்கள் பிறந்து வளர்ந்த ஊர்.
இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம். தமிழ்வளர்ச்சிக்குப் பெரும்பங்காற்றியுள்ள ஊராகவும் தென்காசி விளங்குகிறது. வரகுணராமன், வரதுங்க ராமன், சீவலமாறன் என்னும் அதிவீரராமன் ஆகிய மூவரும் தென்காசிப் பாண்டியர்கள் வரிசையில் மிகச் சிறந்த புலவர்கள் ஆவர். நிறையத் தமிழ் நூல்கள் எழுதியுள்ளனர்.
தென்காசி பராக்கிரம பாண்டியனைப் புகழேந்திப் புலவர் சிறப்பித்துப் பாடியுள்ளார்.
தென்காசிக்கு அருமையிலுள்ள குற்றால நாதர் குறித்துப் பல இலக்கியங்கள் திரிகூட ராசப்பக் கவிராயரால் எழுதப் பெற்றிருக்கின்றன. இந்த வரிசை இப்படியே நீண்டு கொண்டே செல்கிறது.
இந்த வரிசையில், இஸ்லாமியப் பெண் சூஃபிக் கவிஞராகத் தென்காசியில் தோன்றியவர் தான் ரசூல் பீவி. இவரும் இவரின் கணவரும் சேர்ந்து பல அரிய தமிழ் நூல்களைத் தோற்றுவித்துள்ளனர்.
இஸ்லாமியத்தின் ஏகத்துவக் கொள்கையின்படி ஒன்றே கடவுள் என்பதையுணர்ந்து, தனக்குள் உண்டான ஆன்மீகப் பக்குவத்தை தமது இறையாண்மைப் பாடல்களாக இவர்கள் பாடியுள்ளனர்.
இஸ்லாமியத்தின் சூஃபி தத்துவம் இறையனுபவ மேன்மையின் வெளிப்பாடாகும். உலக அறிவின் முதுமையின் விளைவே இத்தத்துவம்.
வாழ்வின் அர்த்தங்கள் பூஜ்ஜியத்திலிருந்து முடிவிலியை நோக்கி நகர்வதை விலகி நின்று இரசிப்பதை உணர்த்துகின்றது. இவ்வாறான சூஃபி ஞானியாகத் திகழ்ந்த பெண்பாற் புலவர்கள் நம்மில் பலராவர்.
அவர்களில் குறிப்பிடத் தகுந்தவர்கள்:
1. ஆற்றங்கரை நாச்சியார்
2.பரங்கிப்பேட்டை அல்குரை நாச்சியார்
3. குடந்தை அரைக்காசம்மா
4. புதுக்கோட்டை ஜச்சாபீவி
5. கீழக்கரை சையது ஆசியா உம்மா
6. உபாதாவின் மனைவி உம்முஹரம்
7. ஆயிசா
8. அல் மன்னூபிய்யா
9. முஆதுல் அதவிய்யா
10. ஸ்வ்வானா பிஹ்தா
11. ஸித்தி ஸகீனா
12. ஜைனப் பினத் முஹம்மத்
13. ஆயிசா உம்மா
14. கதீஜா உம்மா
15. ஆமினா உம்மா
16.திருவனந்தபுரம் பீ அம்மா
17. தென்காசி ரசூல் பீவி
போன்றோர் ஆவர்.
இப்பெண் புலவர்கள் சூஃபி தத்துவத்தின் வழி மக்களை நல்வழிப்படுத்த முனைந்தார்கள். இவர்கள் இயற்றிய இலக்கியங்களைக் குறித்த செய்திகள் இஸ்லாமிய இலக்கிய நூல்களில் மட்டுமே விரிவாகப் பேசப்பட்டுள்ளன.
மணவை முஸ்தபா அவர்களின் ‘தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்’ எனும் கருத்தரங்கக் கட்டுரைத் தொகுப்பும், ம.முகம்மது உவைஸ், பீ.மு.அஜ்மால்கான் அவர்கள் இருவரும் எழுதிய இஸ்லாமியத் தமிழ் இலக்கிய வரலாறும், எஸ்.ஏ.ஆர்.எம். செய்யித் ஹஸன் மௌலனா எழுதிய ‘இஸ்லாமும் தமிழும் இலக்கியச் சங்கமம்’ நூலும் நவாஸ் சௌபி அவர்களின் ‘முஸ்லிம் தேசிய இலக்கியம்’ நூலும் இஸ்லாமிய இலக்கியங்களைப் பட்டியலிடுகின்றன.
எத்தனையோ இலக்கியங்கள் இஸ்லாமியர்களால் படைக்கப் பட்டிருந்தாலும், இன்னும் முறையாக பதிவு செய்யப்படாத இலக்கியங்களும் இருக்கத்தான் செய்கின்றன.
தொடர்ந்து எழுதப்பட்டு வரும் பல்வேறு அறிஞர்களின் தமிழ் இலக்கிய வரலாற்றில், இஸ்லாமிய இலக்கிய வரலாறு பகுதியில் குறிப்பிட்ட இலக்கியங்கள் மட்டுமே மீண்டும் மீண்டும் பதிவாக்கப்படுகின்றன.
அதில் முழுமையான இலக்கிய வரலாறுகள் தெரிவிக்கப்படவில்லை. அவ்வகையில். தென்காசி ரசூல்பீவி அவர்களின் இலக்கியப் பங்களிப்பும் கூறப்படாமல் இருக்கிறது.
ரசூல் பீவி குறித்தவை
‘வணக்கத்திற்கு உரியவர் அல்லாஹ் ஒருவனே’ என்பதே ஓரிறைக் கொள்கையாகும். இதை வெளிப்படுத்தும் சூஃபி தத்துவ பாடல்களை இயற்றியவர் தென்காசி ரசூல்பீவி ஆவார்.
இந்த அம்மையார் குறித்து, முனைவர் ரமேஷ் தங்கமணி அவர்கள் ‘வல்லமை’ இணைய இதழில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். தினமணியில் தாயம்மாள் அறவாணன் அவர்கள் ஒரு கட்டுரை எழுதியுள்ளார்.
தமிழ் ஹிந்து நாளிதழில் தஞ்சாவூர் கவிராயர் ஒரு அழகான கட்டுரையொன்றை எழுதியுள்ளார். இவர்களைத் தவிர ரசூல்பீவி அவர்களின் இலக்கியப் பணி குறித்துப் பெரிதாகப் பேசவோ பதிவு செய்யவோ இல்லை.
மணவை முஸ்தபாவின் ‘தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்’ எனும் நூலில் தான் விரிவான முறையில் இவரின் இலக்கியங்கள் ஆராயப்பட்டுள்ளன.
இவர் மட்டுமல்ல, இவரின் கணவரும் சூஃபி ஞானியாக இருந்து பல அரிய தமிழ் இலக்கிய நூல்களைப் படைத்துள்ளார் என்பதை இந்நூல் வெளிப்படுத்துகின்றது.
ரசூல் பீவியின் வாழ்க்கை
தென்காசியில் நயினார் முகம்மது லெப்பை என்பவரின் மகளாக ரசூல்பீவி பிறந்து வளர்ந்தார். இவரது கணவர் பரிமளத்தார் என்று அழைக்கப்படும் புலவர் ஞானி முகம்மது காசிம் சாகிபு ஆவார். இவர்களது மகனின் பெயர் முகம்மதப்பா சாஹிப் ஆகும்.
இவர்கள் இல்லறத்தில் இருந்து கொண்டே துறவு வாழ்க்கை வாழ்ந்தவர்கள். பல ஆன்மீகச் சுற்றுப் பயணங்களை கணவன்-மனைவி இருவரும் சேர்ந்தே பயணித்துப் பாடல்கள் புனைந்து இலக்கியமாக்கி வந்துள்ளனர்.
இவற்றில் மகனார் சேமித்து வைத்திருந்த பாடல்கள் மட்டுமே, தென்காசி இராமனுஜ அச்சுக் கூடத்தில் அச்சிடப்பட்டிருக்கின்றன. சேமிக்கப்படாமல் தவறவிட்ட ரசூல்பீவியின் பாடல்கள் எண்ணிறந்தவைகளாக இருக்கலாம்.
‘ஞான அமிர்த போதனை‘ எனும் நூலைப் பரிமளத்தாரும், ‘ஞானமிர்த சாகரம்‘ எனும் நூலை ரசூல்பீவியும் எழுதியுள்ளனர். ‘ஞானமிர்த சாகரம்’ எனும் நூலில் 37 தலைப்புகளில் தத்துவப் பாடல்கள் உள்ளன.
அவையாவன:
காப்பு – கடவுள் வாழ்த்து
பொருள் வினா விடை
கண்மணிப்பதிகம்
பரிமளக் கண்ணி, வெண்பா
கண்ணிகள்
மாக்கொடிக்கண்ணி
வெண்பா
என் தாய்க் கண்ணி
முச்சுடாக் கண்ணி
ரகுமான் கண்ணி
பரமானந்தக்கண்ணி
பீர்முறாதுக்கண்ணி
என்னாட்கண்ணி
குருபரக்கண்ணி
கண்மணிக்கண்ணி
வேகுதேகக் கண்ணி
காணேனோ
வாழ்வோமே
காண்பேனே
ஆகாதோ
நெஞ்சோடு புலம்பல்
வெண்பா
இரட்டை ஆசிரிய விருத்தம்
காட்சிப்படலம்
கோட்டைப்படலம்
விருத்தம்
சந்தவிருத்தம்
முகிய்யிதீனே
பேரின்பத் திறவுகோல் படலம்
கொச்சகம்
அம்மானை
பைத்து அல்லாகூ
முனா ஜாதது
இலாஹி என முடியும் தந்நிலையின் ஆனந்தக் கும்மி
‘தானே நீ தானல்லா தானே குனறூகல்லா’ ‘தானே றசூலுல்லா தானே இன்ஷானல்லா’ எனும் பாடல்
கப்பல் சிந்து
தாய் மகனேசல்
ரசூல் பீவியின் பாடல்களில் சில
தொழுகையின் அவசியத்தைப்பற்றி வினவுவது போன்றும், அதற்கு கணவர் பதிலளிப்பது போன்றும் பாடியுள்ள கவிதையானது,
”தீனறிந்து தெளிவுடைய தொழுகை தொழாதவர்க்கு
தீயினுடை கடிவாளம் பூட்டப்படும் நரகில்
வானவரும் வந்துநின்று வாள்சுழற்றிக் கேட்கும்
போது ஜவாப் என்ன சொல்வாய் பெண்ணே றசூல்பீவி”
அவர்கள் இருவரும் இவ்வுலகில் எவ்வாறு இணைபிரியாது இன்ப வாழ்வு வாழ்ந்து வந்தனரோ அதுபோன்று மறுமையிலும் இருக்கவேண்டுமென்று தம் கணவரிடம் இறசூல்பீவி கூறுவது:
“மயில் குயில்போல் கூடினமே மாநிலத்தில் மனமே
மறைந்தாலும் இதுபோலெ மண்ணறையில் இருக்க
துயிலுடைந்து எழுந்ததுபோல் துணைமஹூலில் இருக்க
துலக்கும் ரஹ்மான் ஆணை துய்யோன் பரிமளமே”
பெரியளவில் பேசப்படாத சூஃபி ஞானியான இன்னொரு பெண் புலவர் குறித்து அடுத்த வாரம் காண்போம்.
புதையல் தேடுவோம்…
முனைவர் செ சு நா சந்திரசேகரன்
கைபேசி: 9283275782
மின்னஞ்சல்: chandrakavin@gmail.com
முந்தையது
ரசூல் பீவி சூஃபி பற்றி ஒற்றை வரிகளில் கேள்விப்பட்டதுண்டு ஆனால் ஒரு மிக நீண்ட வரலாற்றை இங்கு கண்டு கொண்டேன்.
தமிழ் மத மாச்சரியங்களை கடந்த ஒரு மொழி என்பதற்கு ரசூல் பீவி சூஃபியின் எழுத்துக்களும் சிந்தனைகளும் தத்துவங்களும் உதாரணமாக இருக்கின்றன.
ஒரு கைதேர்ந்த வக்கீல் போல் பாரதி சந்திரன் அவர்கள் நிறைய மேற்கோள்களையும் ஆதாரங்களையும் கொண்டு இக்கட்டுரையை தொகுத்துள்ளார்.
எல்லா கட்டுரைகளுக்கும் போடும் உழைப்பை இந்தக் கட்டுரைக்கும் அளிக்கத் தவறவில்லை.
தமிழ் உழைப்பவர்களை தரம் உயர்த்தும் என்பதில் ஐயமில்லை. தொடரட்டும் சூஃபியின் தத்துவங்கள்!