ரச வடை செய்வது எப்படி?

சுவையான ரச வடை

ரச வடை விழாக் காலங்களிலும், விருந்தினர்களின் வருகையின் போதும் செய்யக் கூடிய உணவாகும்.

ரசத்தில் ஊற வைத்து உண்ணக் கொடுக்கப்படும் உணவுப் பதார்த்தம் ரச வடை ஆகும். இதனை எல்லோரும் விரும்பி உண்பர்.

இதனை வீட்டில் சுவையாக செய்யும் முறை பற்றிப் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

ரசம் செய்ய

புளி – சின்ன எலுமிச்சை அளவு

தக்காளி – 1 எண்ணம் (பெரியது)

மிளகாய் வற்றல் – 2 எண்ணம் (நடுத்தரமானது)

மல்லி இலை – ஒரு கொத்து

கறிவேப்பிலை – இரண்டு கீற்று

ரசப்பூண்டு – 5 இதழ்கள் (மீடியம் சைஸ்)

மிளகு – 8 எண்ணம்

சீரகம் – ¾ ஸ்பூன்

பெருங்காயப் பொடி – சிறிதளவு

உப்பு – தேவையான அளவு

கடுகு – ¼ டீஸ்பூன்

வெந்தயம் – ¼ டீஸ்பூன்

வடை செய்ய

பட்டாணிப் பருப்பு – 150 கிராம்

சின்ன வெங்காயம் – 25 கிராம்

கறிவேப்பிலை – 5 கீற்று

பெருஞ்சீரகம் (சோம்பு) – 2 ஸ்பூன்

வெள்ளைப் பூண்டு – 3 இதழ்கள் (மீடியம் சைஸ்)

பச்சை மிளகாய் – 1 எண்ணம்

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு

ரச வடை செய்முறை

முதலில் பட்டாணிப் பருப்பை இரண்டு மணி நேரம் ஊற வைத்து, வடிதட்டில் போட்டு தண்ணீர் இல்லாமல் வடித்துக் கொள்ளவும்.

 

ஊற வைத்து வடித்த வடைப் பருப்பு
ஊற வைத்து வடித்த வடைப் பருப்பு

 

சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றை சுத்தம் செய்து சதுரங்களாக வெட்டிக் கொள்ளவும்.

பட்டாணிப் பருப்பில் பாதியை மிக்ஸியில் போட்டு தண்ணீர் சேர்க்காமல் அரைத்துக் கொள்ளவும்.

கடைசியாக வெள்ளைப்பூண்டு, தேவையான உப்பு சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.

 

பிசைந்த வடைமாவு
பிசைந்த வடைமாவு

 

பாத்திரத்தில் அரைத்த விழுதைக் கொட்டி அதனுடன் மீதம் உள்ள பட்டாணிப் பருப்பு, சோம்பு, நறுக்கிய சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வடை மாவுப் பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.

( அதாவது மாவினை வடையாகத் தட்டும்போது மாவு உதிரக்கூடாது.)

 

சரியான பதத்தில் வடைமாவு
சரியான பதத்தில் வடைமாவு

 

வாணலியில் எண்ணெய் விட்டு மாவுக்கலவையை வடைகளாகத் தட்டிப் பொரித்துக் கொள்ளவும். 

 

சுவையான பருப்பு வடை
சுவையான பருப்பு வடை

 

புளியை ½ மணி நேரம் ஊறவைத்து தேவையான தண்ணீர் சேர்த்து கரைசல் தயார் செய்யவும்.

அதனுடன் தக்காளியை சேர்த்து பிசைந்து கொள்ளவும்.

 

புளி,தக்காளிக் கலவை
புளி,தக்காளிக் கலவை

 

ரசப்பூண்டு, மிளகு, சீரகம் ஆகியவற்றை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.

நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை, காம்பு நீக்கிய மிளகாய் வற்றல், மிளகுசீரகக் கலவை, பெருங்காயப் பொடி, உப்பு ஆகியவற்றை புளிக்கரைசலில் சேர்க்கவும்.

 

தாளிக்கத் தயார்நிலையில் ரசக் கலவை
தாளிக்கத் தயார்நிலையில் ரசக் கலவை

 

வாணலியில் நல்லஎண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, வெந்தயம் சேர்த்து வெடித்ததும் புளிக்கரைசலை ஊற்றி தாளிதம் செய்யவும்.

கலவை நுரைத்ததும் அடுப்பினை அணைத்து விடவும்.

 

நுரைத்த நிலையில் ரசக் கலவை
நுரைத்த நிலையில் ரசக் கலவை

 

ரசக் கலவை
ரசக் கலவை

 

சூடான ரசத்தில் வடைகளைச் சேர்த்து இரண்டு மணி நேரம் ஊற விடவும்.

சுவையான ரச வடை தயார்.

 

சுவையான ரச வடை
சுவையான ரச வடை

 

தேவையானபோது ரசத்தை சூடாக்கி வடைகளைப் பரிமாறவும்.

குறிப்பு

ரசத்திற்கு ரசப்பூண்டையும், வடைக்கு சாதாப்பூண்டினையும் பயன்படுத்தவும்.

ஜான்சிராணி வேலாயுதம்

 

Visited 1 times, 1 visit(s) today

Comments

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.