ரத்த அழுத்தம் – ஒர் பார்வை – ஜானகி எஸ்.ராஜ்

நம் உடலிலுள்ள செல்களுக்கு உணவையும் பிராணவாயுவையும் எடுத்துச் செல்ல ஒருகுறிப்பிட்ட வேகத்தில் உடல் முழுவதும் ரத்தம் ஓடுவதைத்தான் ரத்த அழுத்தம் என்கிறோம்.

இதயத்திலிருந்து தான் ரத்தம் எடுத்துச் செல்லப்படுவதால் இதயத்தின் பீச்சும் செயல்தான் இந்த ரத்தத்தின் வேகத்தை உருவாக்கி, இதயத்திலிருந்து ரத்தத்தை எடுத்துச் செல்லும் குழாய்களில் சீராக ஓட வைக்கிறது.

ரத்த அழுத்தம் ஆளக்கு ஆள் வேறுபடும். ஒரே நபருக்குக்கூட நிமிடத்திற்கு நிமிடம் மாறுபடும். நாம் உணர்ச்சி வசப்படும் போது ரத்த அழுத்தம் மாறுபடும்.

இளமையில் சாதாரணமாகக் குறிப்பிட்ட அளவில் அதிமாகிச் சிறிதும் குறையாமல் ஒரே நிலையில் இருப்பதை உயர் இரத்த அழுத்தம் என்கிறார்கள்.

ரத்த அழுத்தம் ஏன் ஏற்படுகிறது?

ரத்த அழுத்தம் எதனால் ஏற்படுகிறது என்பதை மிகச்சரியாகச் சொல்ல முடியாவிட்டாலும் பத்து சதவிகிதத்தினருக்கு ரத்த அழுத்தத்திற்கான காரணம் சரியாக அறியப்படாமலேயே இருக்கிறது.

உப்பு மற்றும் நீரின் அளவு நம் உடலில் அதிக அளவில் தங்கும் நிலை ஏற்படும்போது ரத்த அழுத்தம் அதிகரிக்கிறது. இதயத்திலிருந்து ரத்தம் எடுத்துச் செல்லும் குழாய்கள் சுருங்கும்போது ரத்த அழுத்தம் கூடும். இதயம் வேகமாகவும், மிகுந்த சிரமத்துடனும் செயல்படும் போதும் ரத்த அழுத்தம் ஏற்படக்கூடும்.

ரத்த அழுத்தத்தை நாம் உணர முடியாது. எனவே ஒரு குறிப்பிட்ட வயதிற்கு பிறகு மருத்துவரிடம் சென்று அடிக்கடி பரிசோதனை செய்து கொண்டு ஆரம்பத்திலேயே சிகிச்சை மேற்கொள்ளாவிடில் உடல் உறுப்பிலுள்ள ரத்த குழாய்கள் படிப்படியாகப் பழுதடைந்து குறிப்பாக சிறுநீரகங்கள், இதயம், மூளை, கண்கள் பாதிக்கப்படும். அதனால்தான் ரத்த அழுத்தத்தை ‘அமைதிக்கொல்லி’ என அழைக்கிறார்கள்.

ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தாவிட்டால் மிகமோசமான விளைவுகளை ஏற்படுத்திவிடும்.

ரத்தக் குழாய்களில் உட்சுவர்கள் பாதிக்கப்பட்டு ரத்தக் குழாய்கள் குறுகலாகி விடும். ரத்தம் உறுப்புகளுக்கச் செல்வதில் சிரமம், தடை ஏற்படும்.

சாதாரண ரத்த அழுத்தம் பின்வரும் காரணங்களால் ஏற்படுகின்றது.

உணவில் அதிக உப்பைச் சேர்த்துக் கொள்வதால் அதிக எடையினாலும்கூட இந்நோய் எற்பட வாய்ப்புண்டு.

மது, பீடி, சிகரெட், புகையிலை போன்ற போதைவஸ்துக்களை பயன்படுத்துதல்.

ரத்த அழுத்தத்தை அளவிடும்போது சிஸ்டாலிக் அழுத்தம் அதாவது அதிக அழுத்தத்தையும் டயஸ்டாலிக் அதாவது குறைந்த அழுத்தத்தையும் கணக்கிடுகிறார்கள்.

ஓர் நல்ல ஆரோக்கியமானவரின் ரத்த அழுத்தம் அதிக அளவில் 120, குறைந்த அளவில் 80 எனக் கணக்கிடப்படுகிறது.

ரத்த அழுத்தம் ஏற்படாமலிருக்க நாம் நம்மை எப்படிப் பாதுகாத்துக் கொள்ளலாம்?

பரம்பரை காரணமாக ரத்த அழுத்தம் ஏற்படுவதைத் தடுக்க முடியாவிட்டாலும், நெருங்கிய உறவினர் ஒருவருக்கு ரத்த அழுத்தம் இருப்பதை அறிய நேரிடும்போது, நாம் நம் வாழ்க்கை பழக்க வழக்கங்களை முறையாக ஏற்படுத்திக் கொள்வதின் மூலம் ரத்த அழுத்தம் ஏற்படுவதைத் தடுக்க முடியும்.

கொழுப்புச்சத்து மிகுந்த உணவுப் பொருட்களைத் தவிர்ப்பதின் மூலம், குறைவாக உண்பதின் மூலம் ரத்த அழுத்தத்திலிருந்து விடுபடலாம்.

கொழுப்புச்சத்து மிகுந்த பொருட்களை அதிக அளவில் சாப்பிடுவதால் ரத்த குழாய்களில் கொழுப்புப் படிந்து சுருங்கி ரத்த ஓட்டம் தடைபடும். மாரடைப்பு ஏற்படலாம்.

அனைத்திற்கும் மேலாக ரத்த அழுத்தம் ஏற்படாமலிருக்க உடற்பயிற்சி மிகவும் அவசியம். குறைந்தபட்சம் தினம் குறிப்பிட்ட தூரம் நடக்கலாம்.

உடற்பயிற்சி மூலம் உடலும், உள்ளமும் புத்துணர்ச்சி பெறும். உணவில் இஞ்சி, மிளகு, எலுமிச்சை போன்றவற்றைச் சேர்த்துக் கொள்ளலாம். நமக்குப் பிடித்தமான ஓர் வேலையில் அன்றாடம் ஈடுபட்டு அதில் மனதைச் செலுத்தலாம்.

இனிமையாகப் பேச, பழக, சிரித்த முகத்துடனே இருக்க நம்மைத் தயார் செய்து கொண்டால் ரத்த அழுத்தம் நம்மை நெருங்காது.

வருடத்திற்கொரு முறையாவது முறையான மருத்துவ பரிசோதனை செய்து கொண்டு, ரத்த அழுத்தம் இருக்கும் பட்சத்தில் ஆரம்பத்திலேயே சிகிச்சை எடுத்துக் கொண்டால் ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் கொண்டு வரமுடியும். பின்விளைவுகளைத் தவிர்க்கலாம்.

ஜானகி எஸ்.ராஜ்
திருச்சி
கைபேசி: 9442254998