ரவா உப்புமா என்பது எளிதாகச் செய்யக் கூடிய சிற்றுண்டி வகையாகும்.
இதனை தயார் செய்ய சிறிது நேரமே பிடிப்பதால் அவசரத்திற்கு இதனை செய்து அசத்தலாம்.
இனி சுவையான ரவா உப்புமா செய்முறை பற்றிப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
ரவை – 100 கிராம் (1 பங்கு)
சின்ன வெங்காயம் – 6 எண்ணம் (மீடியம் சைஸ்)
பச்சை மிளகாய் – 1 எண்ணம் (பெரியது)
இஞ்சி – பாதி சுண்டு விரல் அளவு
உப்பு – தேவையான அளவு
தண்ணீர் – இரண்டு பங்கு
தாளிக்க
நல்ல எண்ணெய் – 3 ஸ்பூன்
கறிவேப்பிலை – 3 கீற்று
உளுந்தம் பருப்பு – 1½ ஸ்பூன்
ரவா உப்புமா செய்முறை
முதலில் சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி சதுரத் துண்டுகளாக வெட்டவும்.
பச்சை மிளகாயை அலசி சிறு துண்டுகளாக வெட்டவும்.
கறிவேப்பிலையை அலசி உருவிக் கொள்ளவும்.
இஞ்சியை தோல் சீவி சிறு துண்டுகளாக வெட்டவும்.
ரவையை வெறும் வாணலியில் லேசாக சூடாகும் வரை வறுத்து ஆற விடவும்.
வாய் அகன்ற பாத்திரத்தை அடுப்பில் வைத்து நல்ல எண்ணெய் ஊற்றவும்.
நல்ல எண்ணெய் காய்ந்ததும் உளுந்தம் பருப்பு, கடுகு, உருவிய கறிவேப்பிலை சேர்த்து தாளிதம் செய்யவும்.
பின் அதனுடன் நறுக்கிய சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சித் துண்டுகள் ஆகியவற்றைச் சேர்த்து வதக்கவும்.
கலவை வதங்கியதும் இரண்டு பங்கு தண்ணீரை ஊற்றவும்.
அதனுடன் தேவையான உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
தண்ணீர் கொதித்ததும் அடுப்பினை சிம்மில் வைத்து வறுத்து ஆற வைத்துள்ள ரவையை சிறிது சிறிதாகச் சேர்த்து கிளறி விடவும்.
அடுப்பினை மிதமான தீயில் வைத்து கிளறிக் கொண்டே இருக்கவும்.
கலவையானது கெட்டியானதும் இறக்கி விடவும்.
சுவையான ரவா உப்புமா தயார்.
இதனுடன் தேங்காய் சட்னி, சாம்பார், சர்க்கரை வைத்து உண்ணலாம்.
குறிப்பு
விருப்பமுள்ளவர்கள் மஞ்சள் பொடி சேர்த்து உப்புமா தயார் செய்யலாம்.
விருப்பமுள்ளவர்கள் கடலைப் பருப்பு, முந்திரிப் பருப்பு சேர்த்து உப்புமா தயார் செய்யலாம்.
கொதிக்கும் நீரில் ரவைச் சேர்க்கும் போது சிறிது சிறிதாகச் சேர்த்து கட்டி இல்லாதவாறு கிளறவும்.