ரவா லட்டு செய்வது எப்படி?

ரவா லட்டு செய்ய‌ எளிய முறையினை விளக்கமாக சொல்லி இருக்கிறேன். அதனால் எந்த தயக்கமும் இன்றி நீங்களும் செய்து வீட்டில் உள்ளவர்களின் பாராட்டுக்களைப் பெறலாம்.

சுவையான ரவா லட்டு செய்முறையைக் காண்போம்.

 

தேவையான பொருட்கள்

ரவை – ½ கிலோ

சர்க்கரை – ½ கிலோ

நெய் – 6 ஸ்பூன்

முந்திரி பருப்பு – 50 கிராம்

தேங்காய் – 1

ஏலக்காய் – 12

பால் – 250 மில்லி லிட்டர்

 

செய்முறை

முந்திரி பருப்பை சிறு துண்டுகளாக (முழு முந்திரி பருப்பை நான்காக) உடைத்து நெய்யில் வறுத்து எடுத்துக் கொள்ளவும். தேங்காயை துருவிக் கொள்ளவும். ஏலக்காயை பொடித்துக் கொள்ளவும்.பாலை தண்ணீர் சேர்க்காமல் காய்ச்சி வைத்துக் கொள்ளவும்.

வாணலியில் நான்கு ஸ்பூன் நெய் விட்டு ரவையை வறுக்கவும். ஐந்து நிமிடங்களில் ரவை வறுபட்டு மணம் வரும். வாணலியின் அடிப்பகுதியில் ஒட்டியுள்ள ரவை சிவக்க ஆரம்பித்ததும் தீயை சிம்மில் வைக்கவும்.

 

ரவையை வறுத்தல்
ரவையை வறுத்தல்

 

அடுத்ததாக சர்க்கரையை அதனோடு சேர்த்துக் கிண்டவும். தொடர்ந்து சிம்மில் வைத்தே செய்யவும். ஓரளவு சர்க்கரையின் அளவு சிறுத்து ரவையோடு சேர்ந்து வரும்போது தேங்காய் துருவலைச் சேர்த்துக் கிண்டவும். ஓரளவிற்கு விடாமல் கிண்டவும். இல்லை எனில் அடியில் தீய்ந்து ஒட்டிக் கொள்ளும்.

 

சர்க்கரை சேர்த்தல்
சர்க்கரை சேர்த்தல்

 

தேங்காய் துருவலைச் சேர்த்துக் கிண்டுதல்
தேங்காய் துருவலைச் சேர்த்துக் கிண்டுதல்

 

தேங்காயில் உள்ள நீர் சத்து போய் பொல பொலவென வரும். அப்பொழுது ஏலக்காய்த்தூளைச் சேர்த்து ஒன்றாக கலந்து வரும்படி கிளறவும். கடைசியாக 2 ஸ்பூன் நெய் சேர்த்து கிளறி அதனோடு வறுத்த முந்திரி பருப்பைச் சேர்க்கவும்.

சூடான ரவைக் கலவையில் மிதமான சூட்டில் உள்ள பாலை ஊற்றி ஒரு பகுதியை மட்டும் நன்கு கலந்து விட்டு லட்டு பிடிக்கத் துவங்கலாம். ரவைக் கலவை ஆறிவிட்டால் மறுபடியும் பாலை சூடுபடுத்தி ரவைக் கலவையில் ஊற்றி மீதமுள்ள லட்டைப் பிடிக்கவும். சுவையான ரவா லட்டு தயார்.

 

லட்டு பிடிக்க‌ தயார் நிலையில்
லட்டு பிடிக்க‌ தயார் நிலையில்

 

ஓரிரு நாட்கள் கழித்து சாப்பிட இந்த ரவா லட்டு சுவையாக இருக்கும். இது நான்கைந்து நாட்களுக்கு மேல் கெடாமல் இருக்கும். உருண்டை பிடித்த ரவா லட்டை எறும்பு இல்லாத இடத்தில் வைத்து முழுவதுமாக மூடாமல் 5% திறந்து இருக்குமாறு வைக்கவும்.

இரண்டு நாள் கழித்து விரும்பிய டப்பாக்களில் போட்டு எடுத்து வைத்துக் கொள்ளவும். இரண்டு, மூன்று நாட்கள் ஆக ஆகத்தான் இதற்கு சுவையே.

 

குறிப்பு

மொத்தத்தில் அரை மணி நேரமாவது ரவைக் கலவையை அடுப்பில் குறைந்த தணலில் வைத்துக் கிண்டிட விரும்பியவாறு சுவையான ரவா லட்டு கிடைக்கும்.

சிறிய ரவையையே இந்த‌ லட்டு செய்ய பயன்படுத்தவும்.

பிரதிபா செந்தில்

Comments are closed.