ராகி ஆலு பரோட்டா செய்வது எப்படி?

ராகி ஆலு பரோட்டா சத்தான, சுவையான உணவாகும். இதனை வீட்டில் செய்து விருந்தினர்களுக்கும் அசத்தலாம்.

ராகியை (கேப்பை) அடிக்கடி உணவில் கட்டாயம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற ராகியை உண்டு அதில் உள்ள ஊட்டச்சத்துகளைப் பெறலாம். இனி ராகி ஆலு பரோட்டா செய்முறை பற்றிப் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

பரோட்டா தயார் செய்ய

கோதுமை மாவு – 600 கிராம் (3 கப்)

ராகி (கேப்பை) மாவு – 200 கிராம் (1 கப்)

பால் – 50 மில்லி லிட்டர்

உப்பு – தேவையான அளவு

ஸ்டப்பிங் செய்ய

உருளைக் கிழங்கு – 2 எண்ணம் (மீடியம் சைஸ்)

பெரிய வெங்காயம் – 1 எண்ணம் (மீடியம் சைஸ்)

வெள்ளைப் பூண்டு – 3 இதழ்கள் (மீடியம் சைஸ்)

மஞ்சள் பொடி – ¼ ஸ்பூன்

கரம் மசாலாப் பொடி – ¾ ஸ்பூன்

மிளகாய் வற்றல் பொடி – ½ ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

தாளிதம் செய்ய

நல்ல எண்ணெய் – 4 ஸ்பூன்

கடுகு – ¼ ஸ்பூன்

சீரகம் – 1 ஸ்பூன்

கறிவேப்பிலை – 3 கீற்று

ராகி ஆலு பரோட்டா செய்முறை

உருளைக் கிழங்கினை வேக வைத்து, தோலுரித்து மசித்துக் கொள்ளவும்.

பெரிய வெங்காயத்தை தோலுரித்து பொடியாக சதுரத் துண்டுகளாக வெட்டவும்.

வெள்ளைப் பூண்டினைத் தோலுரித்து ஒன்றிரண்டாக நசுக்கிக் கொள்ளவும்.

பாலைக் காய்ச்சி ஆற விடவும்.

கறிவேப்பிலையை அலசி உருவிக் கொள்ளவும்.

கோதுமை மாவு, கேப்பை மாவு, காய்ச்சி ஆற வைத்த பால், தேவையான உப்பு மற்றும் தண்ணீர் ஆகியவற்றைச் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்குத் திரட்டவும். இதனை அரை மணி நேரம் ஊற விடவும்.

 

திரட்டப்பட்ட மாவு
திரட்டப்பட்ட மாவு

 

வாணலியில் நல்ல எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் சீரகம், கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளிதம் செய்யவும்.

 

தாளிதம் செய்யும் போது
தாளிதம் செய்யும் போது

 

பின் அதனுடன் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் பாதி வதங்கியதும் நசுக்கி வைத்துள்ள வெள்ளைப் பூண்டினைச் சேர்த்து வதக்கவும்.

 

வெள்ளைப்பூண்டினை வதக்கும்போது
வெள்ளைப்பூண்டினை வதக்கும்போது

 

பின் அதனுடன் மிளகாய் வற்றல் பொடி, கரம் மசாலாப் பொடி, மஞ்சள் பொடி, தேவையான உப்பு சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.

 

மசாலாப் பொடிகளைச் சேர்த்து வதக்கும்போது
மசாலாப் பொடிகளைச் சேர்த்து வதக்கும்போது

 

பின் அதனுடன் மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கினைச் சேர்த்து ஒரு சேரக் கிளறி சுருள வதக்கி இறக்கி கலவையை ஆற விடவும்.

 

உருளைக்கிழங்கினைச் சேர்த்ததும்
உருளைக்கிழங்கினைச் சேர்த்ததும்

 

 

சுவையான மசாலாக் கலவை
மசாலாக் கலவை

 

சப்பாத்தி மாவுப் பதத்திற்கு திரட்டியுள்ள மாவினை சிறுசிறு உருண்டைகளாக உருட்டவும்.

 

சிறுசிறு உருண்டைகளாக திரட்டியதும்
சிறுசிறு உருண்டைகளாக திரட்டியதும்

 

பின் அதிலிருந்து ஒரு உருண்டை மாவினை எடுத்து கிண்ண வடிவில் செய்து உள்ளே வதக்கி வைத்துள்ள கலவையில் சிறிதளவு வைத்து மூடி உருண்டையாக்கி பின் அதனை சப்பாத்தி வடிவில் மெதுவாக விரித்து தேய்க்கவும்.

 

மசாலாக் கலவையை உள்ளே வைத்ததும்
மசாலாக் கலவையை உள்ளே வைத்ததும்

 

 

மசாலாக் கலவையை உள்ளே வைத்தது மூடியதும்
மசாலாக் கலவையை உள்ளே வைத்தது மூடியதும்

 

 

சப்பாத்தியாக விரித்ததும்
சப்பாத்தியாக விரித்ததும்

 

சப்பாத்திக் கல்லினை அடுப்பில் வைத்து மிதமான தீயில் சப்பாத்தி போல் தேய்த்து வைத்துள்ளவற்றை சுட்டு எடுக்கவும்.

 

சப்பாத்தியை சுடும்போது
சப்பாத்தியை சுடும்போது

 

சப்பாத்தியை திருப்பி வேகவைக்கும்போது
சப்பாத்தியை திருப்பி வேகவைக்கும்போது

 

சுவையான ராகி ஆலு பரோட்டா தயார்.

 

சுவையான ராகி ஆலு பரோட்டா
சுவையான ராகி ஆலு பரோட்டா

 

குறிப்பு

விருப்பமுள்ளவர்கள் ஒரு ஸ்பூன் வெண்ணை சேர்த்து சப்பாத்தி மாவினைத் திரட்டலாம்.

மாவினை சப்பாத்தியாக விரிக்க பிளாஸ்டிக் கவரில் எண்ணெய் தடவி விரித்தால் எளிதாக இருக்கும்.

– ஜான்சிராணி வேலாயுதம்

 

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.