ராகி கொழுக்கட்டை (கேழ்வரகு கொழுக்கட்டை) சத்தான சிற்றுண்டி ஆகும். ராகியில் புட்டு, பூரி, தோசை, ஆலு பரோட்டா, இனிப்பு ரொட்டி, கார ரொட்டி என பல்வேறு வகையான உணவு பதார்த்தங்களை செய்யும் முறை பற்றி ஏற்கனவே இனிது இணைய இதழில் பதிவிட்டுள்ளோம்.
ராகியில் செய்யப்படும் கொழுக்கட்டை தயார் செய்ய குறைந்த நேரமே ஆவதோடு சுவையும் அதிகம். இந்த வருட விநாயகர் சதுர்த்திக்கு இதனைச் செய்து அசத்துங்கள்.
ராகி மிகவும் சத்தான சிறுதானியம். இதனை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தேவையான கால்சியம் மற்றும் இரும்புசத்து இதில் உள்ளது என்பது இதனுடைய சிறப்பான விசயம் ஆகும்.
இனி சுவையான ராகி கொழுக்கட்டை செய்யும் முறை பற்றிப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
ராகி மாவு – 200 கிராம் (2 பங்கு)
மண்டை வெல்லம் – 100 கிராம் (1/2 பங்கு)
வெல்லப்பாகிற்கு தேவையான தண்ணீர் – 1/4 பங்கு
தேங்காய் – 1/4 மூடி (நடுத்தர அளவு)
ஏலக்காய் – 3 எண்ணம்
உப்பு – மிகவும் சிறிதளவு
ராகி கொழுக்கட்டை செய்முறை
வாயகன்ற பாத்திரத்தை அடுப்பில் வைத்து பாத்திரம் சூடானதும், அதில் ராகி மாவினைப் போட்டு 5 நிமிடங்கள் கைவிடாது கிளறி, அடிப்பிடிக்காமல் வாசனை வரும் வரை வறுக்கவும்.
பின்னர் வறுத்த ராகி மாவினை நன்கு ஆற விடவும்.
மண்டை வெல்லத்தை நன்கு தூளாக்கிக் கொள்ளவும்.
பின்னர் ஒரு பாத்திரத்தில் மண்டை வெல்லம் சேர்த்து அதில் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து, வெல்லம் முழுவதும் கரைந்து ஒரு கொதி வந்ததும் இறக்கி விடவும்.
மண்டை வெல்லப் பாகினை வடிகட்டிக் கொள்ளவும்.
தேங்காயை துருவிக் கொள்ளவும்.
ஏலக்காயை ஒன்றிரண்டாகப் பொடித்துக் கொள்ளவும்.
வாயகன்ற பாத்திரத்தில் வறுத்து ஆறிய ராகி மாவு, உப்பு, பொடித்த ஏலக்காய், தேங்காய் துருவல் ஆகியவற்றைச் சேர்த்து ஒருசேர கலந்து கொள்ளவும்.
பின்னர் அதில் வெல்லப் பாகினை சிறிது சிறிதாகச் சேர்த்து, பிசைந்து மாவினை உருண்டையாக திரட்டவும்.
மாவினை ஒன்று திரட்ட தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளலாம்.
திரட்டிய மாவிலிருந்து தேவையான அளவு எடுத்து விரும்பிய வடிவில் கொழுக்கட்டையாகப் பிடிக்கவும்.
எல்லா மாவினையும் கொழுக்கட்டையாகப் பிடித்ததும், அவைகளை இட்லிப் பானையில் 10 நிமிடம் வேக வைத்து எடுக்கவும்.
சுவையான ராகி கொழுக்கட்டை தயார்.
குறிப்பு
விருப்பமுள்ளவர்கள் மண்டை வெல்லத்திற்கு பதில் கருப்பட்டியைப் பயன்படுத்தியும் கொழுக்கட்டை தயார் செய்யலாம்.
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!