இந்திய சீர்திருத்தங்களின் முன்னோடியாக திகழ்ந்த ராஜாராம் மோகன்ராய் 1772ஆம் ஆண்டு மே 22ல் வங்காளத்தில் இராதா நகர் என்னும் ஊரில் வளமிக்க பிராமண குடும்பத்தில் பிறந்தார். இவரது பெற்றோர் இராம்காந்த்ராய், தாரிணி தேவி. இவர் அரசியல், பொது நிர்வாகம், கல்வி மற்றும் மதம் சார்ந்த துறைகளில் கைதேர்ந்தவர் ஆவார்.
இவர் அராபிக், சமஸ்கிருதம், ஆங்கிலம், இந்தி, பிரெஞ்சு, இலத்தீன், கிரேக்கம் மற்றும் ஹீப்ரு மொழிகளை அறிந்தவர். இவர் வங்காளம், இந்தி, சமஸ்கிருதம், பாரசீகம் மற்றும் ஆங்கிலத்தில் பல நூல்களை எழுதியுள்ளார். இவர் எழுதிய இயேசு கிறிஸ்துவின் கட்டளைகள், அமைதிக்கும் மகிழ்ச்சிக்கும் வழி ஆகியவை குறிப்பிடத்தக்க நூல்கள் ஆகும்.
ஆங்கில கிழக்கிந்திய நிறுவனத்தில் 1805 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்து 1814 ஆம் ஆண்டு வரை பணியாற்றினார்.
ராஜாராம் மோகன்ராய் இந்து சமுதாயம் மற்றும் சமயத்தில் காணப்பட்ட பல்வேறு மூடப்பழக்க வழக்கங்களை நீக்கப் பாடுபட்டார். 1815ஆம் ஆண்டு ஆத்மீக சபாவைத் தோற்றுவித்தார். இதில் நடுத்தர மற்றும் கீழ்தர மக்கள் கலந்து கொண்டனர். பின் இதுவே 1828ல் முதல் பிரம்ம சமாஜமாக வளர்ந்தது.
‘ஒரே கடவுள்’ என்ற கொள்கையின் அடிப்படையில் பொது சமயத்தில் நம்பிக்கை கொண்டவர்களின் சபையாக இது விளங்கியது. பிரம்ம சமாஜத்தில் எல்லா சமயத்தின் அரிய கோட்பாடுகளும் நிறைந்திருந்தன.
எல்லோரும் சாதி, சமய வேறுபாடுயின்றி ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்றும், எல்லோரும் சகோதரர்கள் என்பதையும் பிரம்ம சமாஜம் வலியுறுத்தியது. பிரம்ம சமாஜம் இந்தியாவின் முதல் சீர்திருத்த இயக்கமாகும். எனவே ராஜாராம் மோகன்ராய் நவீன இந்தியாவின் விடிவெள்ளி என்றும இந்திய மறுமலர்ச்சியின் தந்தை என்றும் அழைக்கப்படுகிறார்.
இவர் இந்திய மக்கள் தங்கள் பாராம்பரிய நடைமுறை வழக்கங்களுடன் மேலைநாட்டு நல்ல பழக்க வழக்கங்களையும் ஏற்றுக் கொள்ளுமாறு வலியுறுத்தினார்.
ராஜாராம் மோகன்ராய் உருவ வழிபாடு, ஆடம்பரமான சடங்குகள், சமய விதிகள், சாதி வேறுபாடு, தீண்டாமை மற்றும் உடன்கட்டை ஏறுதல் போன்றவற்றை வன்மையாகக் கண்டித்தார்.
இந்துக்களிடையே கணவன் இறந்ததும் கணவனை இழந்த பெண்ணைக் கணவனுடன் சேர்த்து உயிருடன் எரிக்கப்படும் வழக்கம் இருந்து வந்தது. இதுவே சதி அல்லது உடன்கட்டை ஏறுதல் ஆகும்.
ராஜராம் மோகன்ராயின் சீரிய முயற்சியால் 1829ஆம் ஆண்டு ஆங்கிலேய ஆளுநர் வில்லியம் பெண்டிங் பிரபு சதி தடை சட்டத்தைக் கொண்டு வந்தார். இதன்படி சதி என்னும் உடன்கட்டை ஏறும் பழக்கம் தண்டனைக்குரியதாகும். இச்சட்டம் அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்கவும் வழிவகுத்தது.
இவர் பலதார மணம் மற்றும் குழந்தை திருமணத்திற்கும் எதிராக போராடினார். விதவைகள் மறுமணம், பெண்கல்வி, பெண்கள் முன்னேற்றம், கலப்பு திருமணம் ஆகியவற்றை ஆதரித்தார்.
சமுதாய மலர்ச்சி என்பதனை கல்வியால் மட்டுமே சாதிக்க முடியும் என்று இராஜாராம் மோகன்ராய் உறுதியாக நம்பினார். எனவே மேலை நாட்டுக் கல்வி முறையையும் மற்றும் மேலை நாட்டு கலாசாரத்தின் நல்ல விசயங்களையும் ஏற்றுக் கொள்ள வலியுறுத்தினார்.
மூடநம்பிக்கைகளையும், கண்மூடித்தனமான பழக்கவழக்கங்களையும் நீக்கப் பாடுபட்டார். அறிவியல் மற்றும் புதுமையான எண்ணங்களை மேலை நாட்டுக் கல்வி மூலம் அடையலாம் என்று வலியுறுத்தினார்.
1817ல் டேவிட் ஹேர் என்பவருடன் இணைந்து கல்கட்டாவில் இந்து கல்லூரியை நிறுவினார். 1822ல் ஆங்கிலோ-இந்து பள்ளியை நிறுவினார். பின் 1826ல் இது வேதாந்த கல்லூரியாக மாறியது. இக்கல்லூரியில் மேலை மற்றும் இந்திய கல்விமுறைகள் இணைந்து பயிற்றுவிக்கப்பட்டன.
பின் இவர் முகலாய மன்னர் இரண்டாம் அக்பருக்கு வழங்கப்பட்ட ஓய்வூதியத்தை உயர்த்திப் பெறுவதற்கு இங்கிலாந்து சென்றார். 1833ஆம் ஆண்டு செப்டம்பர் 23ம் நாள் இங்கிலாந்தின் பிரிஸ்டல் என்னும் இடத்தில் இறந்தார்.
ராஜாராம் மோகன்ராயின் மறைவிற்கு பிறகு திரு கேசவ் சந்திரசென் மற்றும் தேவேந்திரநாத் தாகூர் போன்றோர் பிரம்ம சமாஜத்தை ஏற்று நடத்தினர். கேசவ் சந்திரசென் முயற்சியால் 1872ஆம் ஆண்டு பலதார மணமுறை மற்றும் குழந்தைகள் திருமணம் போன்றவற்றை தடைசெய்யும் சட்டம் இயற்றப்பட்டது. இச்சட்டம் கலப்புத் திருமணத்தையும், விதவைகள் மறுமணத்தையும் ஆதரித்தது.