அவன் டைரியின் பக்கங்களை வாசித்துக் கொண்டேயிருக்கிறேன்.
முடிந்தால் நீங்களும் என் அருகில் வந்து உட்கார்ந்து கொள்ளுங்கள்; வாய்விட்டு வாசிக்கிறேன்; அவன் வலிகளை கேட்டுக் கொள்ளுங்கள்!
இனி இயற்கையை சுவாசிக்க முடியாது என்கிற ‘சந்தேக சந்தர்ப்பம்’ ஏற்படுகிறபோது, எந்த வகையில் இயற்கை கொடுத்த வாழ்வை நேசிக்கலாம் என்கிற வினாவினை, ஒவ்வொரு இதயத்துடிப்பிலும் வேள்வியாக்கிக் கேள்வியாகக் கேட்கிறது அவன் மனம்.
அந்த ஒவ்வொரு நொடியும் உன்னதமாகப்படுகிறது அவனுக்கு. வாழ்க்கை அர்த்தமுள்ளதாகத் தோன்றுகிறது.
உலகம் பரந்து விரிந்த தேடல் நிறைந்த அதிசயமாகத் தெரிகிறது.
மனம் கவிஞனாகி கவி பாடுகிறது.
ஆனால் அந்த ஒவ்வொரு நொடியும் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு, எப்படியாவது மீண்டு விட வேண்டும். இன்னும் கொஞ்ச காலம் இயற்கையில் இணைந்து இயல்பாக வாழ்ந்துவிட வேண்டும் எனும் வைராக்கியத்தோடு மருத்துவமனைக்கு புறப்பட்டான்.
தவறி விழும்போதுதானே தன்னம்பிக்கை வருகிறது. தண்ணீரில் குதித்தபிறகுதானே கை கால்களை அசைக்க வேண்டியிருக்கிறது. முடியாதபோது தானே நம்பிக்கையான கரங்களைப் பற்றி கரை சேர்க்கக் கோருகிறோம்.
கதை இப்படி போகிறது…!
“டேய் மொக்குத் தலையா! எந்திரிடா பள்ளிக்கூடத்துக்கு நேரமாயிருச்சு.”
வீட்டில் அம்மா விரட்டும்போதெல்லாம் எப்படியும் மணி காலை எட்டு, எட்டே கால் இருக்கும். இறைவழிபாட்டுக் கூட்ட மணியோசை செவிகளில் ஒலிக்கும். அவ்வளவு பக்கத்தில்தான் பள்ளிக்கூடம்.
எப்படியாச்சும் இன்னைக்கும் ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி பள்ளிக்கூடம் போகக்கூடாது என மனதிற்குள் முடிவு செய்து கொள்வான்.
பெரும்பாலும் ‘வயிற்றை வலிக்கிறது’ எனச் சாக்குப் போக்கு சொல்வதுண்டு. பள்ளிக்கூடம் என்றால் அவனுக்கு பாகற்காய் கசப்பாய் இருந்திருக்க வேண்டும்.
“மொக்குத் தலையா, மொக்குத் தலையா! எந்திரிச்சு குளி, பல்லு வெளக்கு, துணிமணியே மாத்து, கிளம்பு, இல்லைன்னா அடிச்சு தரதரன்னு இழுத்துக் கொண்டு போயி பள்ளிக்கூடத்திலேயே விட்டுருவேன். ஆமா, ஞாபகம் வச்சுக்கோ.” – இது அம்மா.
“என்னடி நெனச்சிக்கிட்டு இருக்கே? தெனமும் இதே ராமாயணமாப் போச்சு.” – இது அப்பா.
“யம்மா..”
“என்னடா?”
“யம்மா, யம்மோவ்”
“என்ன திட்டம் வச்சிருக்கே சொல்லு?”
சிறிது நேரம் எதுவும் பேசுவதில்லை மெளனமாக இருந்துவிட்டு, “வயித்த வலிக்குதும்மா, யம்மா, வயித்த வலிக்குதும்மா”
“அதெல்லாம் சரியாகப் போகும். சோத்தையும் தண்ணியும் குடிச்சிட்டு கிளம்பு”
“யம்மா நாளைக்கு போறேம்மா, யம்மா”
“தெனமும் இதத்தேன் சொல்லுரே?”
பாவம் என்று
“சரி நாளையிலிருந்து பள்ளிக்கூடத்தைப் பார்த்து போயிரனும் சரியா?”
“ம்..ம்…”
அவ்வளவுதான் அன்றைய நாள் முழுவதும் மகிழ்ச்சியாக, அவன் விருப்பப்படி விளையாடிக்கொண்டிருப்பான்.
மதியான நேரத்தில் விளையாடிக் கொண்டிருக்கும் போது “ஏன்டா இப்ப வயித்த வலிக்கலையா?”
தலையைக் குனிந்நதவாறே சிரிப்பான், ஆறாம் வகுப்பு வரையில் இப்படியெல்லாம்.
அதன் பிறகு வீட்டில் உள்ளவர்கள் கட்டாயப்படுத்தி “இன்னக்கி ஒருநாள் மட்டும் பள்ளிக்கு போக வேண்டாம் தம்பி, சாமி” என்று கெஞ்சினால் கூட இருக்கமாட்டான்.
அவன் வகுப்பு தலைவன். ஆசிரியர் அவனிடம் யார் பேசினாலும் பெயர் எழுதிக்கொண்டு வா, நான் பாத்துக்கிறேன் என்றார். ஓவியம் வரையச் சொல்லிப் பாராட்டுவார்.
யாரு முன்னாடி வந்து கதை சொல்றீங்க ?
உடனே அவன் தன் அண்ணனிடம் கேட்ட கதைகளை வகுப்பில் சிரித்துக் கொண்டே சொல்வான்.
இவையெல்லாம் அவனை தொடர்ந்து பள்ளிக்கு செல்லத் தூண்டியிருக்கலாம்.
அவனின் உண்மையான பெயர் “ராஜா.”
வீட்டில் மொக்குத்தலையான் என்றுதான் அறிமுகம். பள்ளிப் படிப்பை முடித்து கல்லூரி சென்ற பிறகு மொக்குத்தலையான் என்றெல்லாம் கூப்பிடுவதில்லை வீட்டில். அதனால் ராஜாவாக வலம் வந்தான். கூப்பிட்டாலும் பெரிதாகக் கண்டு கொள்வதில்லை.
இப்பொழுது கல்லூரியில் புகைப்படத் துறையில் இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறான்.
போன மாதம் கல்லூரி விடுமுறையின் போது, விடுதியிலிருந்து ஊருக்கு வந்திருந்தபோது, அந்த ஒருநாள் அவனுள் ஏற்படுத்திய தாக்கம், இப்பொழுது நினைத்தாலும் அடிவயிற்றைக் கலக்குகிறது.
ராஜா வீட்டிற்கு வந்திருந்த நேரம் இரவு.
பெரும் பகுதி கனமான மழை. அதிகாலை ஐந்து மணிக்கே விழிப்புத் தட்டியது. இருந்தாலும் புரண்டு புரண்டு படுத்து சூரிய உதயத்திற்காகக் காத்திருந்தான்.
இரவு பெய்த மழைக்கு, மரத்தின் பசுமையான இலைகளில் படிந்திருந்த தண்ணீர், சூரிய ஒளிபட்டு கண்ணாடி வைரமாய் மின்னியது.
காற்றில் நீர்த்துளிகள் உதிர்ந்தபோது, மரத்தடியில் கட்டியிருந்த வெள்ளாட்டுக் கிடாய்களின் உரோமங்கள் சிலுப்பிக்கொண்டு உர்ரென்று அசையாமல் நின்றன.
அவனும் அந்த ஒருநாள் ஒரே சூழலில் சிக்கித் தவித்துப் பட்டபாடு சொல்லி மாளாது; சொல்லிலும் அடங்காது.
காலைக் கடனுக்காக மிதிவண்டியை எடுத்துக் கொண்டு, குளத்துப் பக்கம் போனான். இரவு பெய்த மழைக்கு குளம் வழிந்து கடை போயிருந்தது.
வீடு திரும்பும்போது அவனுக்கு வயிற்றில் ஏதோ ஒரு உணர்வு தென்பட்டது. மிதிவண்டியை நிறுத்திவிட்டு அப்படியே கட்டிலில் சாய்ந்தான்.
இசைக் கச்சேரி தொடங்குவதற்கு முன்னால், இசைக் கலைஞர்கள் இசையைப் பற்றி ஒன்றுமே தெரியாதவர்களைப் போல, அவர்கள் மீட்டும் இசை மாதிரி அந்த நிகழ்வு அவனுள் அரங்கேறியது.
அவன் வேதனைகளும் அப்படியே தொடர்ந்தன. கொஞ்சம் கொஞ்சமாக அந்த உணர்வு வயிற்று வலியாக உருவெடுத்தது. கட்டிலில் படுத்து கண்களை இருக மூடிக் கொண்டான்.
காலை பத்து மணி இருக்கும் .
மீண்டும் மிதிவண்டியை எடுத்துக் கொண்டு குளத்துப் பக்கம் போன போது, வெகு நேரம் அப்படியே உட்கார்ந்திருந்தான்.
வயித்தாலை ஓடுவதாகத் தெரியவில்லை. வயிறு மாவாகப் பிசைந்தது. எந்திரிக்கவே மனமில்லை. பக்கவாட்டில் திரும்பிப் பார்த்ததுதான் தாமதம்.
தன்னை நோக்கி, ஐந்தாறு அடி நீளமுள்ள உருண்டு திரண்ட பாம்பொன்று ஊர்ந்து வருவதைப் பார்த்தவுடன், ஓடிச் சென்று மிதிவண்டியில் உட்கார்ந்து அழுத்தும் வரை மனம் ஒரு நிலையில் இல்லை.
வீட்டில் வந்து கட்டிலில் படித்தவுடன் தான் நிம்மதியாக இருந்தது.
மருத்துவத் துறையில், மின் அதிர்வு சிகிச்சையில் உடலை பழைய நிலைக்கு கொண்டு வர முயற்சிப்பது போல, ராஜாவுக்கு பாம்பைப் பார்த்த அதிர்ச்சியில், வயிற்றுவலி எங்கே போனதென்றுகூடத் தெரியவில்லை. வீட்டில் யாரிடமும் சொல்லாமல் கூட உறங்கிவிட்டான்.
எழுந்திருத்தபோது மணி ஒன்று.
உச்சி வெயில். காற்று வேகமாக வீசிக் கொண்டிருந்து. குடிகாரனைப் போல அரைகுறை விழிப்புடன் உட்கார்ந்திருந்தான். தொண்டை பேசக்கூட முடியாத அளவிற்கு வறண்டு போயிருக்கும் போல.
உப்புக்கரைசல் ஒரு செம்பையும் உதட்டில் வைத்து முழுவதும் குடித்து விட்டுத்தான் கீழே வைத்தான். சாப்பாடு போட்டுக் கொடுத்ததைக்கூட சாப்பிடவில்லை.
சிறிது நேரத்தில் வயிற்றுக்குள் பெரிய இரைச்சல். வயிற்றாலைதான் ஓடும் போலிருக்கே என நினைத்து கழிவறைக்கு போனான். ஆனால் இல்லை.
வயிற்றை வலிக்கிற மாதிரி இருக்க படுத்தான்; புரண்டான்; எழுந்தான்; நின்றான்; நடந்தான்; மறுபடியும் படுத்தான்; நெளிந்தான்; உப்புக்கரைசல் குடித்தான்.
இப்படியே கழிவறைக்கும் கட்டிலுக்கும் சுமார் ஐம்பது முறைக்கு மேல் நடந்து நடந்து, அயர்ந்து அயர்ந்து, சோர்ந்து துவண்டே போனான்.
இப்படியே வயிற்றுவலியின் வேகம் அதிகரித்துக் கொண்டே இருந்தது. காலையில் சாப்பிட்டதுதான். மீதி ஆகாரம் உப்புக்கரைசலும் பாலும்தான்.
இருளும் ஒளியும் சந்திக்கும் அழகிய மாலை நேரம் அமைதியாக இருந்தது. காற்று அதிகமாக வீசவில்லை. அந்த அழகிய அமைதி அவனை வாட்டி எடுத்தது. சில நிமிடங்களில் வயிற்றுவலி அவனை விட்டு பறந்து சென்ற பிரமை ஏற்பட்டது.
மதியத்திலிருந்து வயிற்று வலியை குறைந்துவிட வேண்டும் எனும் ஆவலில் சீரகம், உப்புக்கரைசல், ஓமத்தண்ணீர், வடிகஞ்சி என வீட்டில் அவர்களால் பார்க்க முடிந்த முதலுதவி அவ்வளவுதான்.
உடனே படுக்க வேணும்போல இருந்தது. தலையணையை இறுக கட்டிப்பிடித்துக் கொண்டு படுத்தான்.
இருள் தன் பரப்பை விரிவாக்கி இருந்தது; வயிற்றுவலியும் தான்.
கழிவறைக்கு சென்றுவிட்டு வந்து படுத்தான். வலி குறைந்திருப்பதாகத் தெரிந்தது. வயிறு நன்றாக சுருங்கி கிழவனைப் போல வில்லாக வளைந்து படுத்துக் கிடந்தான்.
படிக்காமல் சென்று ஆசிரியரிடம் அடி வாங்கும் போது, “டீச்சர், டீச்சர் நாளைக்கு படிச்சிட்டு வந்தர்ரேன் டீச்சர்; அடிக்காதீங்க டீச்சர்” என மன்றாடுவதுபோல மனதிற்குள் வேண்டிக் கொண்டான்.
வயிற்று வலி உயிரைவிட உயர்ந்து உரைத்தது. நடப்பது நடக்கட்டும் என நினைத்துக் கொண்டு, காலையில் சாப்பிட்டதுதான், முடிந்த வரை உணவைச் சாப்பிட்டு தெம்பை ஏற்படுத்திக் கொள்ளலாம் என சோற்றுப் பானையின் முன் அமர்ந்தான்.
சாப்பாட்டை அள்ளி தட்டில் போட்டபோது, அந்த இடத்திலிருந்து எழுந்து வந்து விடு எனக் கட்டளையிட்டது போலத் தோன்றியது ராஜாவுக்கு. அவனால் ஒரு நொடிகூட அங்கே அமர முடியவில்லை. பிறகு எப்படி சாப்பிட முடியும்?
அப்போது மணி இரவு எட்டரையாகியிருந்தது. உடம்பு வேர்காமலே வேர்த்தது போன்ற உணர்வு. மருத்துவமனைக்குச் செல்ல வேண்டுமானால் ஒன்பது மணிக்குத்தான் பேருந்து.
மருத்துவமனைக்குச் செல்லவில்லை எனில், உயிர் தன்னிடம் இருந்து பிரிந்து விடும் என உணர்ந்தான்.
உடனே விரித்துப் படுத்திருந்த சால்வையை போர்த்திக் கொண்டு, நடுங்கும் வேகமான குரலில் ‘ஆஸ்பத்திரிக்கு கிளம்பு’ என்று அப்பாவிடம் கத்தினான்.
தண்ணீச்சோறு, உப்புக்கரைசல் பாட்டில் என ஓரிரு வார்த்தைகளில் உளறிவிட்டு, ஒவ்வொரு அடியாக நடக்க ஆரம்பித்தான். அவசர அவசரமாக அம்மா தூக்கு டிபனில் தண்ணிச்சோற்றையும், பாட்டிலில் உப்புக் கரைசலையும் ஊற்றிக் கொண்டிருந்தாள்.
அப்பாவும் ஆயத்தமானார்.
சிறுவயதில் அவன் படித்த பள்ளியின் முன்புதான் பேருந்து நிறுத்தம். இதுதான் வாழ்வின் கடைசிப் போராட்டம் என நினைத்து நிதானமாக நகர்ந்து கொண்டிருந்தான். உடம்பு ஆட ஆரம்பித்தது. பற்கள் எல்லாம் வெடவெட வென்றன.
பள்ளிக்கூடம் போகப்பிடிக்காமல் சிறுவயதில் ‘வயித்த வலிக்குதும்மா’ என்று பொய் சொல்லி ஆதாரமாகப் பயன்படுத்தியது, இப்பொழுது ஆயுதமாக வந்து அவன் மனதைப் புண்படுத்தியது.
புகைப்படத் துறையில் சாதிக்க வேண்டும்; பலரும் போற்றும் கவிஞராக வேண்டும் என எவ்வளவோ கனவுகளோடு கல்லூரியில் காலடி எடுத்து வைத்தான். இறந்து விடுவேனோ என மரணப் பயம் அவனைக் கவ்விக் கொண்டது.
அம்மா தூக்கு சட்டியில் தண்ணிச் சோற்றையும், உப்புக் கரைசலையும் கொண்டு வந்து கொடுத்தாள். எல்லோரும் கொஞ்சம் வார்த்தைகளால் தேற்றினார்கள்.
ஆனால் அதை அவன் செவிகள் ஜீரணிக்கவில்லை. கேட்கும் நிலையிலும் இல்லை. தெரு விளக்கின் மஞ்சள் நிற வெளிச்சம் பரவி ஒளிர்ந்தது.
அங்கு போடப்பட்டிருந்த கல்லுக்கட்டில் நுனியில் டிபனைத் திறந்து சோற்றை அள்ளி வாயில் போட்டான். கைகள் தடுமாறின. சோற்றுப் பருக்கைகள் உதட்டிலிருந்து சிதறி விழுந்தன.
வீடு பூசும் சாந்து கலவையைப் போல அள்ளி அள்ளி உள்ளேத் தடவித் தள்ளி விழுங்கினான். சோற்றுத் தண்ணீரை முழுவதும் குடித்துவிட்டு அங்கும் இங்குமாக நடக்க ஆரம்பித்தான். உதடுகள் துடித்தன. இன்னும் பத்து நிமிடத்தில் பேருந்து வந்துவிடும் நேரம்தான்.
மணப்பாறை செல்லும் பேருந்தில் ஏறி கொசூரில் இறங்க வேண்டும். அங்கிருந்து பாளையம் பேருந்தைப் பிடித்து, மைலம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இறங்க வேண்டும்.
காலை இருத்தி நின்று பார்த்தான். கிடுகிடுவென ஆடியது. தாவாங்கொட்டையை இறுகப் பிடித்தான். பற்கள் எல்லாம் வெடவெட வென்றன. நெஞ்சு படபடத்தது. இதயமேகூட வயிற்றுக்கு இரையாகிவிடும் என நினைத்தபொழுது, பச்சை வண்ணப் பேருந்து குதிரை வேகத்தில் வந்து நின்றது.
பேருந்தில் ஏறியதும் எங்கே இருக்கைகள் காலியாக உள்ளன எனத் தேடி, மூவர் அமரக்கூடிய இருக்கையில் அமர்ந்து அப்பாவின் மடியில் தலை வைத்துப் படுத்துக் கொண்டான்.
கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. சில நிமிடங்களில் எழுந்து உப்புக் கரைசலை குடித்துவிட்டுப் படுத்தான்.
பேருந்தின் வேகத்தை விட வயிற்றுவலியின் வேகம் அதிகமாகத் தெரிந்தது. பேருந்து செல்லும் வேகத்தில் உடம்பு ஆட்டம் குறைவாகவே தென்பட்டது.
வயிற்றுவலியின் வேகம் குறைந்த பாடில்லை. வயிறு வலிப்பதும் குறைவதுமாகத் தொடர்ந்தது. நல்ல வேளை பேருந்தில் இருக்கும் போது வயிற்றாலை ஓடவில்லை .
கொசூரில் இறங்கியதும் எதிரில் உள்ள முருகன் இனிப்பகத்தின் முன்னால் ஓரமாய் அங்கேயே படுத்து விட்டான். அப்பாவும் அங்கனேயே அமர்ந்துவிட்டார்.
கொஞ்ச நேரத்தில் வயிற்று வலி தாங்க முடியவில்லை. சாலைக்கு அந்தப் பக்கம் சந்தைப் பகுதியில் உள்நுழைந்து கொஞ்சம் இருட்டான பகுதியில் சுற்றும் முற்றும் பார்க்காமல் உட்கார்ந்தான்.
ஐந்தாறு நாய்கள் சுற்றியலைந்தன. குப்பைகளைக் கிளறி, தூக்கி எறியப்பட்ட உணவுகளைத் துழாவிக் கொண்டிருந்தன. ராஜாவுக்கு அந்த இடத்திலேயே காலை நீட்டி படுத்துக் கொள்ளலாம் என்றுகூடத் தோன்றியது.
வயிறும் வாழ்வும் எவ்வளவு பின்னிப் பிணைந்தது. வறுமையில் சாகிறவர்கள் இருக்கிறார்கள், வயிற்று வலியால் சாகிறவன் நானாகத்தான் இருப்பேன் என நினைத்தான்.
சாலையைக் கடந்து முருகன் இனிப்பகத்தை அடைந்தபோது எதிர்பார்த்து அப்பா சோடா பாட்டிலைக் கையில் வைத்திருந்தார்.
“இதக் குடிப்பா இன்னும் கொஞ்ச நேரத்தில் பஸ் வந்திரும்” என ஆறுதல் சொன்னார். வாங்கிக் குடித்துவிட்டு அங்கேயே சாய்ந்து விட்டான்.
கல்லூரி செல்லும் போது பேண்ட், சட்டை போட்டு தேநீர் அருந்திய இனிப்பகம். கைலி, சட்டையோடு புழுதியில் படுத்து புரண்டான்.
பாளையம் பேருந்தில் ஏறி மைலம்பட்டி மருத்துவமனை நுழைவு வாயிலை அடைந்ததும், மின் விளக்குகள் எதுவும் ஒளிர்வதாகத் தெரியவில்லை.
அந்த அமைதியான ஆள் அரவமற்ற இருட்டில் வயிறு வலிக்கிறதா என்பது கூட மறந்துவிட்டது. கதவைத் தட்ட, நர்சுகள் வந்து கதவைத் திறந்து உள்ளே அழைத்தார்கள்.
அப்பா காரணத்தைக் கூறியதும், நர்சுகள் ஆயத்தமானார்கள். அவன் சதா வெறுமனே தூக்கக் கலக்கத்துடனும் களைப்புடனும் ஒரு பெரியவரைப் போல சாய்ந்து உட்கார்ந்திருந்தான். ஊசி போட்டார்கள்; மருந்து, மாத்திரை, உப்புக் கரைசல் பாக்கெட் எல்லாம் கொடுத்தார்கள்.
மருத்துவமனை தன் கடமையை ஆற்றி விட்டதாக கருதி, அவனை வீட்டுக்கு அனுப்ப முற்பட்டது.
“உங்க பையனுக்கு ஏதாவது ஒன்று ஆனால், மருத்துவமனை எதற்கும் பொறுப்பாகாது” என்றபடி பேசினார்கள்.
இரவு நேர மருத்துவர் எங்கே என்றபோது ? அவர் காலையில் தான் வருவார். உங்க பையனைத் தங்க அனுமதிக்க முடியாது; காலையில் கூட்டி வாருங்கள் என மறுத்துவிட்டனர்.
தரையில் முன்பக்கம் படுக்க சொன்னால் கூட பரவாயில்லை. அத்தனை இடமும் வெறிச்சோடிக் கிடந்தன.
இவர்கள் பேச்சைக் கேட்கும் போதே ராஜாவுக்கு மயக்கம் வருவது போல் இருந்தது. இருந்தாலும் அப்பா வார்த்தைகளால் தேற்றினார்.
அவனுக்கு அடுத்த கட்ட போருக்கு தயாராவது போலிருந்தது. அதிகமான உடல் சோர்வு, தூக்கம் அவனைக் கவ்விக்கொண்டது.
மணியை பார்த்த பொழுது பதினொன்று ஆகியிருந்து.
வயிறு உம்மென்று இருந்தது; ஆனால் வலிக்கவில்லை. ஒரு வழியாக கொசூர் வந்து இறங்கியபொழுது மணி பதினொன்னே முக்கால். முருகன் இனிப்பகத்தில் சுக்கு டீ குடித்துக்கொண்டிருக்கையில் அவன் நினைத்தான்.
காலையில் இருந்து பட்ட துயரத்திற்கும், கட்டிலுக்கும் கழிவறைக்கும் நடந்த காலுக்கும், உயிருக்கும், உடலுக்கும் மருத்துவமனை அடைக்கலம் கொடுக்கும் என்ற நம்பிக்கையில் தான் இங்கே வந்தேன்.
சரி அதுகூட இல்லையென்றால் பரவாயில்லை.
இன்னும் ஐந்து கிலோ மீட்டர் நடந்தால் தான் வீட்டை அடையமுடியும் என நினைத்தபொழுது உடம்பெல்லாம் உறைந்து போனது.
அப்போது அங்கு வந்த பக்கத்து ஊர்க்காரர் ஒருவர், அப்பாவிடம் “என்னப்பா இன்னும் வீட்டுக்குப் போகலையா?” என்றார்.
“பையனுக்கு வயித்த வலி; ஆஸ்பத்திரிக்கு போயிட்டு வந்தேன்.”
“வண்டிவாசியும் கிடையாது பஸ்சும் கிடையாது. எப்படி போவே?”
“நடந்து தான்” என்று சொல்லி வாய் மூடுவதற்குள்,
“இருப்பா, நானே கூட்டிக்கிட்டு போறேன்” என்ற போது சுக்கு டீ யை கீழே இறக்கிவிட்டு அவரை ராஜா, உலகத்தின் ஒட்டுமொத்த கடவுளாகப் பார்த்தான்.
கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்தது இவர்தான் என மனதிற்குள் வாழ்த்தி வணங்கிக் கொண்டான்.
ஆட்டோவில் ஏறியதும் வாகனம் புறப்பட்டது.
குளிர்ந்த காற்று. சால்வையை இறுக போர்த்திக் கொண்டான்.
ஏறிய இடத்திலேயே பள்ளிக்கூடத்தின் முன்பு வாகனம் நின்றது. தெருவிளக்கின் மஞ்சள் நிற வெளிச்சம் இன்னும் பிரகாசமாகப் பரவி ஒளிர்ந்தது. ஊர் இன்னும் அமைதியாக இருந்தது.
அப்பாவும் மகனும் அவரைக் கைகூப்பி விடைபெற்ற போது மணி பனிரெண்டு இருபது. மீண்டும் கொஞ்சம் தண்ணிச் சோற்றையும், கொடுத்த மாத்திரைகளையும் விழுங்கிவிட்டு சால்வையால் முகத்தை துடைத்துக் கொண்டான்.
அப்பாவும் உடல் அசதியில் ஆறுதல் சொல்லிவிட்டு படுத்துக் கொண்டார். படுத்த சில நிமிடங்களில் தூக்கம் அவனையறியாமல். காலையிலிருந்து போன வயிற்றுப்போக்கு, வயிற்று வலி, மருத்துவமனைக்குச் சென்று வந்த சோர்வு எல்லாம் சேர்ந்து அவனைத் தூங்க வைத்தன.
அடுத்த நாள் காலை எழுந்திருந்தபோது மணி ஒன்பது.
வீட்டை விட்டு வெளியே வந்து பார்த்த போது அப்போது வீசும் காற்றும், அந்த ஊரும் உலகமும் அவனுக்கு புதிதாகப்பட்டன. உயிரையும் உடலையும் புதிதாக உணர்ந்தான். ஒவ்வொரு செயலையும் விழிப்போடு செய்தான்.
வெண்ணீரில் உடல் அலுப்பு தீர குளித்து, துவைத்த ஆடைகளை உடுத்திக் கொண்டு, கிழக்கு பார்த்த வாசற்படியில் டைரியையும், எழுதுகோலையும் எடுத்துக்கொண்டு, முதுகுக்குப் பின்னால் தலையணையை வைத்து சாய்ந்து உட்கார்ந்தான்.
குடலைப் பற்றி படிப்பது, கடலைப் பற்றி படிப்பதைப் போல அகலமானது என எங்கேயோ படித்தது நினைவில் வந்தது.
வயிறு சரி வர தன் வேலையை செய்யவில்லை எனில், என்னென்ன நிலைக்கு ஆளாகிறோம் என நினைத்துப் பார்த்தான்.
பிரசவ வலிக்கு மட்டுமல்ல, வயிற்று வலிக்கும் அவசர ஊர்தி சேவையளித்தால் பரவாயில்லை என நினைத்தான்.
இரவு ஆட்டோவில் கொண்டு வந்து விட்டவரை உயிருள்ளவரை மறக்க மாட்டேன் என உறுதி கொண்டு, நேற்று வயிற்று வலியால் பட்ட துயரங்களை எழுதிக் கொண்டிருந்தான், உயிரோடு இருக்கிறேன் என்ற ஜீரணிக்க முடியாத மகிழ்ச்சியில்.
இருபது பக்கங்களுக்கு மேல் போய்க் கொண்டிருந்தது.
வானத்தை கருமேகங்கள் சூழ்ந்து கொண்டன.
பசியும், மரணமும் இல்லை எனில் உலகில் எந்தத் தேடலும் நிகழாது என உறுதிபட உணர்ந்தான். வானம் கருத்து மழைத் துளிகள் ராஜாவை அமைதிப்படுத்தியது. எழுதுகோலை மூடி வைத்துவிட்டு மழையை வெகுநேரம் பார்த்துக் கொண்டிருந்தான்.
பூமி குளிர்ந்து மழை ஓய்ந்த பிறகு, காகங்கள் தலையை சிலுப்பிக் கொண்டு சோற்றுப் பருக்கைகளை வாயில் அடக்கி, குஞ்சு காகங்களுக்கு ஊட்டிக் கொண்டிருந்தன.
நான் ராஜாவின் டைரியின் பக்கங்களை வாசித்து முடித்து அவனிடம் உரையாடிக் கொண்டிருந்தேன். சிரித்துக் கொண்டே பேசினான். என்னால் சிரிக்க முடியவில்லை.
மண்வாசமும், மழைவாசமும், ராஜாவின் மனவாசமும் என்னைக் கவ்விக் கொண்டது. ஏனெனில் எனக்கும் வயிறும், பசியும் இருப்பதால்.
அடைக்கலம் கேட்போரை தங்க அனுமதித்தாலே அவர்களின் ஆயுளை வளர்க்கும்.
ராஜாவின் வயிற்று வலிக்கே மருத்துவமனை தங்க அனுமதிக்கவில்லை எனில், குடிமக்கள் தங்கள் வயிற்றுப்பாட்டையும், வயிற்று வலியையும் எங்கே போய் சொல்வது?
” ஓ “மன்னிக்கவும். இது மன்னராட்சி அல்ல; ஜனநாயக நாடு தானே?
சிறுகதைச் சிறகோடு
ப. கலைச்செல்வன்
9385517371
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!