ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது

ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது

ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது இந்திய அரசால் இந்திய விளையாட்டுத் துறையில் சாதனை புரிந்தோருக்கு வழங்கப்படும் மிகப் பெரிய விருதாகும்.

இவ்விருது மறைந்த முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியின் பெயரால் வழங்கப்படுகிறது. கேல் ரத்னா என்பதற்கு விளையாட்டில் ரத்தினக் கல் போன்றவர் என்று பொருள்.

இவ்விருதானது தனிநபர் மற்றும் விளையாட்டுக் குழுவினர் ஆகியோர்களுக்கு வழங்கப்படுகிறது. இவ்விருது மத்திய அரசின் இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகத்தால் வழங்கப்படுகிறது.

இவ்விருது ஒரு பதக்கம், பாராட்டுச் சுருள் மற்றும் பணமுடிப்பைக் கொண்டுள்ளது. பணமுடிப்பானது முதலில் ஐந்து இலட்சங்களாக இருந்தது. பின் ஏழரை இலட்சங்களாக மாற்றப்பட்டது.

இவ்விருதிற்கான பரிந்துரைப்போர் பட்டியல் விருது வழங்கும் குழுவினரிடம் ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 30-க்குள் வழங்கப்பட வேண்டும்.

இதுவரையிலும் சுமார் 32 விளையாட்டு வீரர்கள் இவ்விருதினைப் பெற்றுள்ளனர். தடகளம், பூப்பந்து, பில்லியட்ஸ், குத்துச்சண்டை, சதுரங்கம், கிரிக்கெட், ஹாக்கி, மல்யுத்தம், துப்பாக்கி சுடுதல், ஸ்நூக்கர், டென்னிஸ், பளுத்தூக்குதல், படகுப்பந்தயம் மற்றும் ஜிம்னாஸ்டிக் போன்ற விளையாட்டுகளுக்கு இதுவரையிலும் இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.

இவ்விருதினைப் பெற்ற முதல் விளையாட்டு வீரர் விஸ்வநாதன் ஆனந்த் ஆவார். இவர் சதுரங்க விளையாட்டிற்காக இவ்விருதினைப் பெற்றார்.

இவ்விருதினைப் பெற்ற முதல் பெண் விளையாட்டு வீரர் கர்ணம் மல்லேஸ்வரி ஆவார். அவர் பளுதூக்கும் விளையாட்டுப் போட்டிக்காக இவ்விருதினைப் பெற்றார்.

அபினவ் பிந்திரா என்பவர் இளவயதில் இவ்விருதினைப் பெற்றவர் என்ற சிறப்பினைப் பெற்றவர் ஆவார். 2001-02-ல் அவர் தனது 18-வது வயதில் துப்பாக்கி சுடும் விளையாட்டுப் பிரிவில் இவ்விருதினைப் பெற்றார்.

 

இவ்விருது வழங்குவதற்கு உள்ள நியதிகள்

இவ்விருதிற்கு சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் விளையாட்டு வீரர்களின் நான்காண்டு கண்கவர் செயல்பாடுகள் மற்றும் சாதனைகள் விருது வழங்குவதற்கு முந்தைய ஆண்டில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

சர்வதேச விளையாட்டுப் போட்டிகள் என்பவை ஒலிம்பிக் போட்டிகள், ஆசியப் போட்டிகள், காமன்வெல்த் போட்டிகள், உலக விளையாட்டுப் போட்டிகள், உலகக் கோப்பைப் போட்டிகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட சர்வதேசப் போட்டிகள் ஆகியவை ஆகும்.

சர்வதேச ஊக்க மருந்து தடுப்பு இயக்கத்தால் தடை செய்யப்பட்ட மருந்துகளை பயன்படுத்தியதாக ஏற்பட்ட குற்றசாட்டுகளுக்கான விசாரணை நடைபெற்றுக் கொண்டிருப்பவர்களும், தண்டனை பெற்றவர்களும் இவ்விருதினை பெறுவதற்கு தகுதியற்றோர் ஆவர்.

இவ்விருதினை ஒரு விளையாட்டுவீரர் தனது வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே பெற இயலும்.

இவ்விருது ஒருவரின் இறப்புக்குப் பின்னரும் வழங்கப்படலாம்.
இவ்விருது வழங்கும் விழாவின்போது விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நபர் மட்டுமே விருதினை வாங்க இயலும்.

விருது வழங்கும் விழாவிற்கு வரவியலாத தேர்ந்தெடுக்கப்பட்ட நபருக்கான விருது இந்திய இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு துறை அமைச்சரால் பின்னர் வழங்கப்படும்.

இவ்விருதிற்கான விதிமுறைகளை இந்திய இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் மட்டுமே தளர்வு செய்ய இயலும். ஆனால் விதி தளர்விற்கான தகுந்த காரணங்கள் எழுத்துப்பூர்வமாக அமைச்சரால் தெரிவிக்கப்பட வேண்டும்.

 

இவ்விருதிற்கான பரிந்துரைகள்

இவ்விருதிற்கான பரிந்துரைகள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய விளையாட்டு கூட்டமைப்புகள், இந்திய ஒலிம்பிக் சங்கம், இந்திய விளையாட்டு ஆணையம், விளையாட்டு மேம்பாடு மற்றும் கட்டுப்பாட்டு வாரியங்கள், மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் ஆகியோர்களிடமிருந்து பெறப்படுகின்றன.

மேற்கூறியவர்கள் ஒவ்வொரு வருடமும் ஒரே விளையாட்டுப் பிரிவைச் சேர்ந்த தகுதியான விளையாட்டு வீரர்கள் இரண்டு நபர்கள் வரை மட்டுமே பரிந்துரை செய்ய இயலும்.

கிரிக்கெட்டை பொறுத்தவரையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் பரிந்துரை செய்ய இயலும். இவ்விருதினை ஏற்கனவே பெற்றுள்ள விளையாட்டு வீரரும் தன்விளையாட்டுப்பிரிவைச் சேர்ந்த தகுதியான ஒரு விளையாட்டு வீரரை பரிந்துரைக்கலாம்.

பரிந்துரைகள் ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 30 அல்லது ஏப்ரல் மாத கடைசி வேலை நாளுக்குள் அனுப்பப்பட வேண்டும்.

 

இவ்விருதிற்கான தேர்வு முறை

இவ்விருதிற்கான பரிந்துரைகள் அனைத்தும் இந்திய விளையாட்டு ஆணையம் மற்றும் தேசிய ஊக்க மருந்து தடுப்பு நிறுவனம் ஆகியவற்றிற்கு அனுப்பப்பட்டு சரிபார்க்கப்படும். பின் விளையாட்டு ஆணையத்தின் துணைச் செயலாளர் / இயக்குநர் மற்றும் இணை செயலாளர், இந்திய விளையாட்டு ஆணையத்தின் இயக்குநர் ஆகியோரைக் கொண்ட குழுவினரால் சரிபார்த்து பரிசோதிக்கப்படும்.

பின் சரியான பரிந்துரைகள் இந்திய அரசினால் அமைக்கப்பட்ட பன்னிரெண்டு நபர்கள் அடங்கிய தேர்வுக்குழுவினருக்கு அனுப்பப்படும். இக்குழுவில் ஒவ்வொரு விளையாட்டுப் பிரிவைச் சேர்ந்த ஒரு நபர் மட்டுமே இடம் பெறுவர்.

தேர்வுக்குழு உறுப்பினர்களின் விவரம்

1. இந்திய அரசால் அமைக்கப்பட்ட குழுவின் தலைவர் – 1

2. மாண்புமிகு விளையாட்டு வீரர்கள் (ஒலிம்பிக்கில் பதக்கம் பெற்றவர்கள் அல்லது ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது பெற்றவர்கள் அல்லது அர்ஜூனா விருது பெற்றவர்கள்) – 4

3. விளையாட்டு பத்திரிக்கையாளர்கள் அல்லது வர்ணனையாளர்கள்  3

4. உடல் ஊனமுற்ற விளையாட்டு வீரர் அல்லது உடல் ஊனமுற்றோருக்கான விளையாட்டு நிர்வாகி – 1

5. விளையாட்டு நிர்வாகி – 1

6. இந்திய விளையாட்டு ஆணையத்தின் பொது இயக்குநர் – 1

7. விளையாட்டு ஆணைய இணை செயலாளர் – 1

மொத்தம் 12

1991-92-ல் இவ்விருது வழங்கும் வழக்கம் நடைமுறைபடுத்தப்பட்டது. இவ்விருதானது முதலில் விருது வழங்கும் வருடத்தில் நிகழ்த்தப்பட்ட விளையாட்டு வீரரின் சாதனை கணக்கில் கொள்ளப்பட்டு வழங்கப்பட்டது.

பின் 2014-ல் விருதுக்கு பரிந்துரை செய்யும் குழுவினரின் ஆலோசனைப்படி இவ்விருதானது விளையாட்டு வீரரின் நான்காண்டு செயல்பாடுகள் மற்றும் சாதனைகள் கணக்கில் கொள்ளப்பட்டு வழங்கப்பட வேண்டும் என திருத்தம் செய்யப்பட்டு 2015- பிப்ரவரியில் நடைமுறைப்படுத்தப்பட்டது.

தேர்வுக்குழு தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களின் பெயரினை இந்திய இளைஞர்நலம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகத்திடம் ஒப்படைக்கும்.

பின் விருதானது குடியரசுத் தலைவரால் தேர்ந்தெடுக்கப்பட்டோருக்கு வழங்கப்படுகிறது.

ஒரு வருடத்தில் ஒரு நபருக்கு மட்டுமே இவ்விருது வழங்கப்பட வேண்டும் என்ற விதி வகுக்கப்பட்டுள்ளது. எனினும் இவ்விதி சிலநேரங்களில் சூழ்நிலைக்கு ஏற்றவாறு தளர்த்தப்படுகிறது.

எந்த விளையாட்டு வீரரும் தேவையான தகுதிகளைப் பெறவில்லை எனில் அவ்வாண்டு விருது வழங்கப்படாது இருக்கலாம். 2008, 2014 ஆகிய ஆண்டுகளில் இவ்விருது வழங்கப்படவில்லை.

அதிகபட்சமாக 2016-ஆம் ஆண்டு நான்கு இந்திய விளையாட்டு வீரர்களுக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது.

– வ.முனீஸ்வரன்

 

Visited 1 times, 1 visit(s) today

Comments

“ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது” அதற்கு 6 மறுமொழிகள்

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.