ராபின் தந்த தகவல்

சொர்க்க வனம் 7 – ராபின் தந்த தகவல்

அதிகாலையில் குருவிகள் எல்லாம் கண் விழித்தன. பற்பல செய்திகளைத் தங்களுக்குள்ளே அவை பரிமாறிக் கொண்டிருந்தன. அதனால் அப்பகுதியே கலகலப்பாக இருந்தது.

வாக்டெய்லும் மும்முரமாக தனது பெற்றோருடன் பேசிக் கொண்டிருந்தது.

மெல்ல வானம் விடிந்தது. அந்தப் பகுதியை சுற்றிப் பார்க்க மரத்திலிருந்து சில குருவிகள் புறப்பட்டுச் சென்றன.

வாக்டெய்லும் தனது பெற்றோரிடம் அனுமதி பெற்று அங்கிருந்து தனியே வந்தது. குறிப்பாக தனது நண்பன் ராபினை காணலாம் என்ற எண்ணத்தில்.

ராபினை சந்தித்த அதே இடத்திற்கு மீண்டும் சென்றது வாக்டெய்ல். ஆனால் அங்கு ராபின் இல்லை.

வாக்டெய்லுக்கு ஏமாற்றமே. ‘சரி, இன்னும் கொஞ்சம் தொலைவு சென்றுப் பார்க்கலாம்’ என்று முடிவு செய்து மேலும் முன்னோக்கிச் சென்று, ஒரு மரத்தில் அமர்ந்தது வாக்டெய்ல்.

“எங்காவது ராபின் இருக்குமா?” என்று தேடியது வாக்டெய்ல்.

அப்பொழுது, தூரத்திலிருந்து இனிமையான பாடல் ஒலி தன்னை நோக்கி வருவதை உணர்ந்தது வாக்டெய்ல்.

ஆமாம், அந்தக் குரல் ராபினுடையது தான்.

உடனே, அந்தக் குரல் வந்த திசையை நோக்கிப் பற‌ந்தது வாக்டெய்ல்.

எதிரே ராபின் வந்து கொண்டிருந்தது.

வாக்டெய்லைக் கண்டதும் ராபினும் மகிழ்ந்தது. இரண்டும் அருகிலிருந்த ஒரு மரக்கிளையில் வந்தமர்ந்தன.

“வாக்டெய்ல் எப்படி இருக்கீங்க? உங்கள‌ பார்க்கலாம்னுதான் வந்தேன்.”

“நானும் உங்கள‌ பார்க்கலாம்னுதான் வந்தேன், ராபின்.”

“நல்லது வாக்டெய்ல். இன்னிக்கு எந்த நேரம் கிளம்புறீங்க?”

“இரவு நேரத்துல தான் புறப்படுவோம்”

“பத்திரமா போயிட்டு வாங்க வாக்டெய்ல். மீண்டும் எப்ப திரும்பி வருவீங்க?”

“ஆறு மாதத்துக்கு மேல ஆகலாம்.”

“ஆறு மாதமாகுமா? வரும்போது இங்க மீண்டும் வருவீங்களா வாக்டெய்ல்?”

“தெரியல ராபின். சொல்லப்போனா நாங்க ஒரு ஏரிப் பகுதியிலதான் தங்குற‌தா இருந்துச்சு. ஆனா அத எங்களால கண்டுபிடிக்க முடியல. அதனால் தான் இங்க வந்தோம்.”

 

“என்னது ஏரி ஆஆ…”

“ஆமா ராபின். இந்த இடத்துக்கு முன்னாடியே ஒரு ஏரி இருக்குமாம். அது ரொம்ப அழகா இருக்கும்னு எங்க தலைவர் ஐயா சொன்னாரு.

ஆனா, அந்த ஏரி எங்க இருக்குன்னு எங்களால கண்டு பிடிக்க முடியல. ஒருவேளை திரும்பி வரும்போது அந்த ஏரிய கண்டுபிடிச்சோம்னா அங்க தான் தங்குவோம்னு நினைக்கிறேன்.”

“வாக்டெய்ல், நீங்க சொல்ற மாதிரி ஒரு ஏரி இருந்துச்சு. இங்க இருந்து கொஞ்ச தொலைவுல தான். சமீபத்துல தான் அந்தப் பகுதி நகரமயமாக்கப்பட்டுச்சு. அதனால அந்தப் பகுதியோட அமைப்பு மாறிப்போச்சு.”

“அப்படியா!”. ராபின் தந்த தகவல் வாக்டெயிலுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

“ஆமா வாக்டெய்ல். இந்த தகவல எங்க அப்பாகிட்ட அவர் நண்பர் ஒருநாள் சொல்லும் போது தான் கேட்டேன். ஒருவேள‌ நீங்க சொன்னதும் அந்த ஏரிதான்னு நினைக்கிறேன். ஏன்னா, அந்த ஏரியில் வெளிநாட்டுல இருந்து பறவை நண்பர்கள் வருவாங்கனு பேசிக்கிட்டு இருந்தாங்க.”

“ராபின், நீங்க சொல்றதும், நாங்க தேடின ஏரியும் ஒன்றாகத்தான் இருக்கணும், ஏன்னா, அங்க மனித குடியிருப்புகள் இருந்துச்சு. அதனால நாங்க குழம்பி, வழி தவறிப் போயிட்டோம். பிறகு மீண்டும் இந்த வழியா, தலைவர் ஐயா தான் எங்கள கூட்டிட்டு வந்தாரு.”

“அடடா, இதனால உங்களுக்குச் சிரமம் தான். ஆனாலும் நல்ல வேளையா சரியான வழியை கண்டுபிடிச்சுட்டீங்க.”

“ஆமா ராபின். நீங்க நல்ல தகவல சொன்னீங்க. இத எங்க தலைவர் ஐயாவிடம் சொல்றேன். ஏன்னா, ஏரி பகுதியை கண்டுபிடிக்க முடியாம வழி தவறி போனதுல, எங்களை எல்லாம் அவரு சிரமபடுத்திட்டோமேனு ரொம்ப கவலப்பட்டாரு. அவரு கவலை பட்டதப் பார்த்து எங்களுக்கு ரொம்ப கஷ்டமா போச்சு.. மனுஷங்க குடியேற்றத்தால தான் ஏரிய கண்டுபிடிக்க முடியாம போச்சுன்னு இப்பத்தான தெரியுது.”

“அப்படியா, பாத்து வாக்டெய்ல்; இன்னும் நீங்கபோகிற வழியில என்ன மாற்றம் நிகழ்ந்திருக்கோ?.”

“ஆமா ராபின். ஆனா எங்க தலைவர் ஐயா எல்லா சவால்களையும் எதிர் கொண்டு எங்கள‌ சரியா வழி நட‌த்துவாரு.”

“அப்ப நல்லது வாக்டெய்ல். சரி இந்தாங்க, இந்த அன்பளிப்பு (ஒரு பை) உங்களுக்குத் தான்.”

 

“இந்த பையில என்ன இருக்கு ராபின்?”

“திறந்து பாருங்க.”

பையை திறந்து பார்க்க, அதில் நீல நிறத்தில் கொஞ்சம் பழங்கள் இருந்தன.

“ராபின், இது என்ன பழம்?”

“இதோட பேரு நீல பெர்ரீஸ் (blueberries). மிகவும் சுவையா இருக்கும். இதுல தாதுக்கள், வைட்டமின்கள் அப்படீன்னு நிறைய ஊட்டச்சத்துக்கள் இருக்கு. உடலுக்கும் நல்லது. இதனால நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். எடுத்து சாப்பிடுங்க வாக்டெய்ல்.”

வாக்டெய்ல் சில நொடி யோசித்தது. பின்னர் எடுத்த பழத்தை மீண்டும் அந்தப் பையிலேயே வைத்துவிட்டு, “இல்ல ராபின். மன்னிச்சுக்கோங்க, உங்க அன்பளிப்ப என்னால ஏத்துக்க முடியல” என்று சொல்லி மீண்டும் அந்த பையை ராபினிடம் கொடுக்க முற்பட்டது.

ராபினுக்கு அதிர்ச்சி. “ஏன் வாக்டெய்ல்? எதுக்காக நீல பெர்ரீஸ் பழங்கள வாங்க மறுக்கிறீங்க. இது உண்மையில் உடம்புக்கு நல்லது தான். இதுல தீங்கு ஒன்றும் இல்ல. நான் வேணும்னா உங்க முன்னாடியே இந்தப் பழத்தை சாப்பிட்டுக் காட்டுறேன். பிறகு நீங்க இத சாப்பிடலாம்” என்றது ராபின்.

உடனே, “ஐயோ ராபின். அதுக்காக உங்க கிட்ட திருப்பி தரல.”

“அப்ப ஏன் தயங்கறீங்க வாக்டெய்ல்?”

“நீல பெர்ரீஸ் உடம்புக்கு நல்லது தானே”

“ஆமாம் வாக்டெய்ல். அதனால் தான் உங்களுக்கு கொண்டுவந்தேன். நீண்ட பயணத்துக்கு, உடல் ஆரோக்கியம் முக்கியமாச்சே.”

“அப்ப நான் மட்டும் நீல பெர்ரீஸ் பழங்கள எப்படி சாப்பிட முடியும்? எங்க கூட்டத்துல எண்பது பேரு இருக்காங்களே”

ராபினுக்கு, வாக்டெய்லின் எண்ணம் புரிந்தது.

உடனே, “உங்க கூட்டத்து மேல நீங்க எவ்வளவு பற்றும் பாசமும் வச்சுருக்கீங்க. உங்கள நினைச்சா பெருமையா இருக்கு, வாக்டெய்ல். ஆனால் பிரச்சனை எதுவும் இல்ல. எல்லோருக்கும் பழங்கள் கிடைக்கும்.”

“அது எப்படி சாத்தியமாகும்? இதுல கொஞ்ச பழங்கள் தானே இருக்கு.”

“வாக்டெய்ல், பக்கத்துல நீல பெர்ரீஸ் செடிகள் நிறையவே இருக்கு. அதுல கொத்து கொத்தா பழங்கள் இருக்கு.”

“அப்படியா!”

“ஆமா, நான் அந்த இடத்த உங்களுக்கு காட்டுறேன். அப்புறம் உங்க நண்பர்கள கூட்டி வந்து எல்லோருக்கும் தேவையான பழங்கள பறிச்சுக்கலாம்.”

“சரி ராபின்”

“சரி, முதல்ல நீங்க பழங்கள எடுத்து சாப்பிடுங்க.”

பழத்தை எடுத்து சாப்பிட்டது வாக்டெய்ல். அதற்கு நீல பெர்ரீஸின் சுவை மிகவும் பிடித்துப் போனது.

 

“இந்தப் பழம் ரொம்ப அருமையா இருக்கு. ஆமா, பழத்தோட நீல நிறத்துக்கு என்ன காரணம், ராபின்?”

ராபினும் ஒரு பழத்தை எடுத்து சாப்பிட்டுக் கொண்டே, “நிறத்துக்கு காரணம் ஆந்தோசயனின் (anthocyanin) எனும் இயற்கை நிறமி தான் தெரியுமா? இதுக்கு உடல் பருமன தவிர்க்கும் சக்தி இருக்கு.”

“அப்படியா அப்ப நிறையவே சாப்பிடலாம்.”

“ஊம்ம் எடுத்துக்குங்க” என்று ராபின் கூற வாக்டெய்ல் பழங்களை எடுத்து சுவைத்தது.

பின்னர், இரண்டும் நீல பெர்ரீஸ் செடிகள் இருந்த தோட்டத்திற்குச் சென்றன. அந்தப் பகுதியே நீல நிறத்தில் காட்சியளித்தது. காரணம், செடிகளில் இருந்த நீல பெர்ரீஸ் பழங்கள் தான். அதனைக் கண்டு வாக்டெய்ல் வியந்தது. ராபினுக்கும் நன்றிகளை தெரிவித்தது.

பின்னர், வாக்டெய்லும் ராபினும் விடைப் பெற்று தத்தம் இருப்பிடத்தை நோக்கிச் சென்றன.

 

அதற்குள் நண்பகல் நேரம் ஆகியிருந்தது. நேரே இருன்டினிடேவை நேக்கிச் சென்றது வாக்டெய்ல். ஏரி குறித்து ராபின் தந்த தகவல் பற்றி இருன்டினிடேவிடம் கூறியது.

அதற்கு “ராபின் தந்த தகவல் மிகவும் முக்கியமானது வாக்டெய்ல். இனி மிகவும் கவனத்தோட தங்கும் இடத்த தேடணும். அப்பதான் வீண் அலைச்சல தவிர்க்க முடியும்.” என்றுக் கூறி வாக்டெய்லையும் அதன் நண்பன் ராபினையும் பாராட்டியது இருன்டினிடே.

அத்தோடு, நீல பெர்ரீஸ் பழங்கள் பற்றியும், அது கிடைக்கும் இடத்தைப் பற்றியும் கூறியது வாக்டெய்ல். இருன்டினிடே மகிழ்ந்தது.

சில குருவிகளை அழைத்துக் கொண்டு இருன்டினிடேவும், வாக்டெய்லும் அந்த பழத்தோட்டத்திற்குச் சென்றன. கூட்டத்திற்கு தேவையான பழங்களை எடுத்துக் கொண்டு இருப்பிடத்திற்கு அவை திரும்பின.

குருவிக் கூட்டத்திற்கு, அன்று மதிய உணவே நீல பெர்ரீஸ் பழங்கள் தான். குருவிகள் எல்லாம் நிறைவாக உண்டன. உண்ட மயக்கத்தால், சிறுதூக்கம் போட்டன.

இரவு நேரமும் வந்தது. திட்டமிட்டபடி அங்கிருந்து குருவிக் கூட்டம் மீண்டும் பயணத்தை உற்சாகமாய்த் தொடங்கியது.

(பயணம் தொடரும்)

கனிமவாசன்
சென்னை
9941091461
drsureshwritings@gmail.com

 

இதைப் படித்து விட்டீர்களா?

சொர்க்க வனம் 8 – செயற்கை ஒளி விளைவு

சொர்க்க வனம் 6 – வாக்டெய்லுக்கு கிடைத்த நட்பு

Comments

“சொர்க்க வனம் 7 – ராபின் தந்த தகவல்” மீது ஒரு மறுமொழி

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.