ராமு

ராமு!

1972 வாக்கில் திருச்சி ரத்னா கபே அருகில் உள்ள தட்டிக்கடையில் இருபது பைசாவுக்கு டபுள் ஸ்ட்ராங்க் காப்பி சாப்பிட்டு விட்டு, எதிரே இருந்த பனகல் நூலகத்திற்குள் நுழைந்தார் இருபத்தியெட்டு வயது இரயில்வே அலுவலர் ராமு.

ஆள் உயர சாய்வு மேஜையில், அப்போதைய அரசியல் களத்தில் பரபரப்புடன் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட ஒரு பெரும் கட்சியின் தலைவரை, “அந்த ராமச்சந்திர பெருமான்தான் இந்த ராமச்சந்திர அவதாரம் எடுத்து வந்துள்ளார்!” என்று ஒரு அரசியல் தலைவர் புகழ்ந்து முழங்கியதை வெளியிட்ட ‘அலை ஓசை’ பத்திரிக்கையை பலரும் பரபரப்பாகப் படித்துக் கொண்டிருந்தனர்.

ராமு “தி ஹிந்து” வையும், “இந்தியன் எக்ஸ்பிரஸ்”ஸையும் தேடி எடுத்து அரைமணி நேரம் படித்து விட்டு, வெளியே எதிரில் இருந்த பாய் கடையில் ஒரு ரஸ்தாளி வாழைப்பழம் சாப்பிட்டுவிட்டு குஜிலி தெருவில் இருந்த தன் வீட்டிற்கு திரும்பினார், ஒரு வாழைப்பழத்தால் தன் வாழ்க்கை தடம் புரளும் என்பதை அறியாது!

அறுபதுகளில், ‘நல்லசேலம்’ கிராமத்தில் அப்போதெல்லாம் உயர்நிலைப் பள்ளி கிடையாது என்பதால் ஏழெட்டு கி.மீ தள்ளியிருந்த அடைக்கம்பட்டி கிராமத்து பள்ளியில் படிக்க நேரிட்டது பள்ளி சிறுவன் ராமுவிற்கு.

இயல்பாகவே அப்போது அவருக்கு வயிற்றில் அசிடிட்டி ஜாஸ்தி. போதாக்குறைக்கு சைக்கிளில் வேறு தினமும் 16 கி. மீ. மிதிக்க வேண்டும்.

ஓட்டை சைக்கிள் கேரியரில் மோர் சாதமும் வடு மாங்காயும் தான் பெரும்பாலும் அவர் மதிய உணவு. காலை உணவு ‘மூலப்பிள்ளையார்’ என்று சொல்லப்படும் பழைய சாதம்.

மின்சாரம் இல்லா கிராமத்தில் இருட்டு சமையல் அறையில் அவரே அவசரத்துக்கு, பழையதை அள்ளி தட்டில் போட்டுக்கொண்டு கல் உப்பு, மோர், ஊறுகாய் என்று பிசைந்து அள்ளி வாயில் போட்டுக் கொண்டு சைக்கிளில் இரண்டு டயர்களிலும் காற்று இருப்பதைக் கண்டு மிக்க மகிழ்ச்சியடைந்து கிளம்பி விடுவார் பள்ளிக்கு.

அப்போதெல்லாம் உத்யோகம் எளிதாக கிடைத்தது. எஸ்.எஸ்.எல்.சி. முடித்து புகலூர் சுகர் ஃபேக்டரியில் கொஞ்ச நாள் போஸ்ட் மாஸ்டர் வேலை.

பிறகு இரயில்வேயில் நல்ல ஜோலி கிடைத்து, பொன்மலையில் பணியில் சேர்ந்து இரயில்வே பாஸ் மூலம் அவ்வப்போது அகில இந்தியாவிற்கும் சுற்றியபடி அவர் பிரம்மசாரி வாழ்க்கை பச்சை விளக்காக ஒளிர்ந்தது.

ஒருமுறை அவர் அம்மாவின் வற்புறுத்தலுக்கு இணங்க சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள அம்மாவின் அண்ணனான தாய் மாமன் வீட்டிற்கு விஜயம் செய்தார்.

எழுபதுகளில், ‘நல்லசேலம்’ போன்ற கிராமங்களில் இருந்து சென்னை அப்போதெல்லாம் அமெரிக்கா தூரத்தில் இருந்ததால் ராமுவின் அம்மாவால் சென்னை சென்று அண்ணாவை பார்க்க முடிவதில்லை.

கீதா, மாமாவின் ஒரே பெண். ஏதோ ஒரு கல்யாணத்தில் பாவாடை சட்டையுமாக அலைந்து கொண்டிருந்த கீதாக்குட்டியா இது என்று பிரம்மித்து போய் விட்டார் ராமு.

பிரம்மாவின் ஆசியால் நாளமில்லா சுரப்பிகள் மூலம் எஸ்டிரொஜெனும் ப்ரோஜேஸ்டெரோணும் எக்கச்சக்கமாக சுரந்து ‘பெரிய மனுஷி’ ஆன சிலமாதங்களிலேயே ‘பெரிய்ய்ய்ய!’ மனுஷியாக வளர்ந்து விட்டாள்.

அந்தக் காலத்தில் மாமா பொண் அத்தை பையனை மணப்பது சர்வ சாதாரணம். இப்போதும் கிராமங்களில்.

ஆனால் நகர வாழ்க்கையில், இப்போதெல்லாம் ‘காண்சங்குயின்’ கல்யாணம் (Consanguine marriage) என்று ஏதோ கொரிய பாஷையில் சொல்லி தடுக்கிறார்கள்.

நெருங்கிய சொந்தத்தில் திருமணம் செய்தால் குழந்தைகளை பாதிக்குமாம்.
அப்ப “மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக உலகை விலை பேசுவார்” என்று ‘பாசமலரில்’ சுசீலா கேவிக்கேவி அழுகையின் விளிம்பில் பாடியதெல்லாம் வேஸ்டா?

மாமாவிற்கும், மாமிக்கும் ராமுவை ரொம்ப பிடிச்சு போச்சு. ‘ரயில் பாஸ்’ மற்றும் ‘பி.டி.ஓ’ இருப்பதால் ராமுவின் அடிக்கடி வருகையால் கீதா வானத்தில் மிதந்து கொண்டிருந்ததையும் அவர்கள் அவதானித்தனர்.

ராமு ஒரு தாமஸ் ஆல்வா எடிசன். அபூவர்வ மூளை. ஒரு அஷ்டாவதானி. எங்கிருந்து அதையெல்லாம் கற்றுக் கொண்டார் என்று தெரியவில்லை.

கிரிக்கெட்டில் ‘சோபர்ஸ்’, ‘லாய்ட்’, ‘ஹட்டன்’, ‘பாய்காட்’ என்று அநாயசமாக பெயர்களை உதிர்ப்பார்.

மர்பி ரேடியோவில் காதை தீட்டி வைத்துக் கொண்டு ‘டிக்கி ரட்னாகர்’ , ‘ஜாக் பிங்கல்ட்டோன்’ ‘எ.ஏப்.எஸ்.டால்யாயற்கான்’ ஆகியோரின் ரன்னிங் காமென்டரி கேட்டுக் கொண்டிருப்பார்.

மூச்சு விடாமல் பேசும் ‘சுரேஷ் சரையா’வை அவருக்கு ஏனோ பிடிக்காது. நல்லசேலம் கிராமத்துக்கே கிரிக்கெட்டை அறிமுகப்படுத்தியது அவர்தான்.

சென்னையில் ‘காசி செட்டி ஸ்ட்ரீட்’, ‘லிங்கி செட்டி ஸ்ட்ரீட்’ என்று அலைந்து ஸ்பேர் பார்ட்களை யெல்லாம் குறைந்த விலைக்கு வாங்கி அவரே டிரான்சிஸ்டர் ரேடியோ அஸ்ஸம்பெல் பண்ணி ஆளாளுக்கு கொடுப்பார்.

எழுபதுகளிலேயே, ரேடியோ ஸ்பீக்கரை கடம் பானைக்குள் வைத்து ‘கும் கும் சவுண்ட்’ என்று ஸ்டீரியோபோனிக் ஒலியை கொண்டு வந்து விட்டார்.

லிட்டருக்கு முப்பது கொடுக்கத் திணறும் அரதப்பழசு ‘லாம்பரேட்டா’ ஸ்கூட்டர் கார்பரேட்டரை குடைந்து, கொஞ்சி, கெஞ்சி, மன்றாடி லிட்டருக்கு எழுபது கி.மீ. வரவழைத்து விடுவார். அப்போதெல்லாம் பெட்ரோல் லிட்டர் ஒரு ரூபாய்.

அவர் பார்ப்பது எல்லாம் ‘ரிச்சர்ட் பர்ட்டன்’ ‘க்ளிண்ட் ஈஸ்ட்வுட்’ படங்கள்தான். அவர் இளைய சகோதரர்களையும் வற்புறுத்தி திருச்சி அருணா டாக்கீஸ்ஸிலும், பிளாசா டாக்கீஸ்ஸிலும், தலா அறுபத்திமூன்று பைசாவுக்கு ஆங்கிலப் படங்களை பார்க்க வைப்பார்.

சகோதரர்கள் ‘படம் இன்னும் ரொம்ப நேரம் ஓடும்’ என்று நினைக்கும்போது தியேட்டரில் அனைவரும் எழுந்திருக்கும்போதுதான் ‘அய்யயோ! படம் முடிந்து விட்டது!’ என்று அவர்களுக்கு புரியும்.

‘ஜேம்ஸ் ஹாட்லி சேஸ்’ ‘ஆர்தர் ஹேய்லி’ எழுதிய ஆங்கில அரிச்சுவடி நாவல்களை தம்பிகட்கு அறிமுகப்படுத்தியவர்.

நெப்போலியன் ஹில், நார்மன் வின்சென்ட் பீல் ஆகியோரைப்பற்றி கேள்விப்படாமலேயே ‘பாசிட்டிவ் மெண்டல் ஆட்டிட்யூட்’ உடையவர். அற்புதமான மெண்டர் (mentor).

“மாப்பிள்ளை பையனுக்கு ரயில்வே உத்யோகம், வருடாந்திரா பாஸில் இந்தியா முழுக்க ஊர் சுற்றலாம், பென்ஷன், ‘கால் காசு உத்யோகம் என்றாலும் கவர்ன்மெண்ட் உத்யோகம்’, உலக விபரங்கள் தெரிந்தவன், கீதாவிற்கு சூப்பர் பொருத்தம்” என்று ஆனந்தப்பட்ட மாமா, மாமி, கல்யாணம் பேசி முடிக்க ஒரு நல்ல நாளில் சென்னையிலிருந்து திருச்சி வழியாக நல்லசேலம் கிராமம் வந்திறங்கினர்.

இப்போது ஊருக்கு மின்சாரம் வந்துவிட்டது. ஒரே குறை. கொல்லைக்கு வந்தால் கொல்லைப்புரம்தான் ஒதுங்க வேண்டும். அப்போதெல்லாம் கக்கூஸ் கிடையாது கிராமங்களில்.

“அதனால் என்ன, கீதா இங்கேயா இருக்கப்போறாள், மாப்பிள்ளைக்குத்தான் மெட்ராஸ் ட்ரான்ஸ்பர் ஆய்டுமே” என்று மாமா மாமி சமாதானப்பட்டுக் கொண்டனர்.

பருவ மழை பொழிந்து கிராமம் எங்கும் பச்சைப் பசேல். மைத்துனர் கிராம கர்ணம் வேறு.

அவருடைய வயல்களையெல்லாம் சுற்றிப்பார்த்துவிட்டு ஒரு நல்ல நேரத்தில் திருமண பேச்சு வார்த்தையை தொடங்கி, அனைவரும் “ஆஹா!” என்று சம்மதித்துவிட்டு அன்று மதியம் தடபுடல் விருந்து.

விருந்து முடிந்து மாலை திருச்சி வழியாக சென்னை பயணம். விருந்தில் வடை, பாயாசம், போளி என்றெல்லாம் அமர்க்களப்பட்டு, பல வருடங்கட்கு பிறகு, பல ஊர்களில் இருந்து வந்த உறவுகள், அதையும் இதையும் உற்சாகமாக அனைவரும் பேசிக்கொண்டே சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது இலையில் கடைசியாக வாழைப்பழம் பரிமாறப்பட்டது.

மிகவும் ஆசாரமான பழக்க வழக்கம் கொண்ட மாமி வாழைப்பழத்தை சற்று பெரிய துண்டாக விண்டு, “பல்லில் படக்கூடாது”, “கையில் எச்சில் படக் கூடாது” என்று வாயில் நேரடியாக போட்டுக் கொள்ள அது வழுக்கி தொண்டைக் குழியை அடைத்துக் கொண்டது.

மாமி மூச்சு விடமுடியாமல், “ஆ! ஆ!” என்று வாயைப் பிளந்து சில நொடிகளில் சாகும் விளிம்பிற்கு வந்து விட்டார்.

‘ஏதோ விபரீதம் நடக்கின்றது!’ என்று அறிந்த ராமுவின் தமக்கை பத்மாவதி துணிச்சலுடன் மாமியின் வாயில் விரலை விட்டு எப்படியோ தெய்வ பலத்தால் பழத்துண்டை வெளியே எடுத்து போட்டாள்.

கல்யாணக் களை கலவரக் களையாகி களேபரத்தில் முடிந்தது.

ஒருவழியாக மாமி ரெகவர் ஆகி, ஆசுவாசபடுத்திக் கொண்டு சற்று நேரம் கழித்து அனைவரிடமும் சொல்லிக் கொண்டு இருவரும் திருச்சி பஸ் பிடித்து சென்னை சென்றனர்.

ராமு ஆபீஸில் இன்ஸ்பெக்ஷன் என்பதாலும், இது போன்ற தருணங்களில் மாப்பிளை தலையை காட்டக்கூடாது என்பதாலும் அவர் கிராமத்திற்கு வரவில்லை.

நாட்கள் மாதங்களாகின. கிணற்றில் போட்ட கல்லாக கல்யாண பேச்சு மூச். ராமுவின் சித்தப்பாதான் கிராமத்து போஸ்ட் மாஸ்டர். தினமும் சென்னை தபாலை எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏமாற்றம்.

ஒருகட்டத்தில் ராமுவின் அம்மா “பாதி வாழைப்பழத்தை அப்பிடியா ஒரு மனுஷி வாயில் ‘லபக்’ என்று போட்டுக் கொள்வாள்” என்று மன்னியை அவ்வப்போது கோபித்துக் கொண்டே இருந்தாள்.

வேலையில்லா பட்டதாரிகள் இன்டர்வியூவிற்கு சென்றால் இன்டர்வியூ பண்ணும் மேனேஜர்கள் “வீ வில் லெட் யு நோ“ என்று சொல்லி அனுப்பிவிடுவர்.

கடைசிவரை நாம் எதற்காக தேர்ந்தெடுக்கப்படவில்லை என்பது பட்டதாரிக்கு தெரியவே தெரியாது. தெரிந்தாலாவது தன்னை மேம்படுத்திக்கொண்டு அடுத்த இன்டர்வியூவில் வெற்றி பெற முடியும்.

இதில் வேடிக்கை என்னவென்றால் அதே பட்டதாரி வேலை கிடைத்து, பின்னாளில் மேனேஜரானால், அவரும் ஆள் எடுக்கும்போது, “ வீ வில் லெட் யு நோ” என்றுதான் சொல்லி வழியனுப்பி வைப்பார்.

மாமா மாமியிடமிருந்து தபாலே இல்லை.

“கல்யாணம் நிச்சயம் ஆயிடுத்தாமே” என்று பேசியவர்கள் எல்லாம் கண்ணுக்கு தெரியாத இடத்தில் நின்று கொண்டு கிசுகிசு பேச ஆரம்பித்து விட்டனர். அதுவும் கிராமம் என்றால் கேட்கவே வேண்டாம்.

தகுதியிருக்கோ இல்லையோ ஒரு சம்பந்தம் முறிந்தது என்றவுடனேயே அரிவாளை தீட்டும் இன்றைய உலகில், பெண்ணும் ஆணும் சம்மதித்து நெருங்கிய உறவினர்களான இரு வீட்டார் சம்மதித்து, கடைசியில் ஒரு வாழைப்பழத்தால் ஒரு கல்யாணம் நின்று போயிற்று.

வாழைப்பழத்தில் வழுக்கிய திருமணத்தால் அவன் வேலை செய்யும் ரயில்வே உத்யோகத்துக்கு ஏற்ப ராமுவின் வாழ்க்கையும் நாளடைவில் தடம் புரண்டது.

திரும்பிப் பார்த்தால் திடீரென்று கீதாவைப் போல அவன் இரண்டு தங்கைகள் திருமணக் கனவுடன் ‘திமுதிமு’வென்று நின்று கொண்டிருக்கின்றனர்.

சகோதரர்கள் இருவர் டிகிரி முடித்து விட்டு வேலை கிடைக்காமல் திண்டாடுகின்றனர். போதாக்குறைக்கு அறுபது ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்துவிட்டு அறுபத்தி இரண்டாம் வயதில் அவர் அப்பாவுக்கும், சித்தப்பாவிற்கும் பாகப்பிரிவினை பிரச்சனை.

மனதில் ஆறாக்காயம் பட்டவன் “எனக்கு கல்யாணமே வேண்டாம்” என்று சொன்னாலும் வீட்டுப் பெரியவர்கள் “டேய்! ஒண்ணு போனா ஒன்பது வரும்டா! உன் புத்திசாலித்தனம் என்ன, பர்சனாலிட்டி என்ன, உத்யோகம் என்ன, உன்னை கல்யாணம் பண்ணிக்க பொண்களா இல்லை!” என்று ஆற்றுப்படுத்தி வேறு வரன்களை தேட முயற்சிக்க தவறி விட்டனர்.

இந்த விஷயத்தில் படிக்காத கிராமத்து மனிதர்கள் கெட்டிக்காரர்கள். ஒரு சம்பந்தம் முறிந்து விட்டது என்று சொன்னால், வேறு ஒரு பொருத்தம் பார்த்து சட்டு புட்டென்று கல்யாணத்தை முடித்து அந்த மனவலியிலிருந்து வெகு விரைவில் கடந்து போய் விடுவார்கள்.

வம்ச விருட்சத்தை எந்த பாத்திரம் தாங்கினால்தான் என்ன?

ஆனால் ராமு விஷயத்தில் பெற்றோரையும் குறை சொல்ல முடியாது, ஏனென்றால் அப்போதிருந்த குடும்ப சூழ்நிலை அப்படி.

அரிவாளை தீட்டும் சமூகத்தில் பிறக்காது அறிவை தீட்டும் சமூகத்தில் பிறந்ததால் ராமு அந்த மானசீக வலியை பொறுத்துக்கொண்டு சமூகத்தில் வளைய வந்தார்.

ஒரு ப்ரமோஷனில் மெட்ராஸ் ட்ரான்ஸ்பர் ஆகி ரங்கநாதன் தெரு பேரின்ப விலாசில் அறை எடுத்து ஆபீஸ் சென்று வந்து குடும்பத்திற்கு பணம் அனுப்பி வந்தார்.

சென்னை ஜன சமுத்திரத்தின் சமுத்திர சைஸ் கவலைகள் ஏக்கங்களில் அவர் துயரமும் நிராசையும் கரைந்து போயிற்று.

காலம் கடந்தது. காலம் கடந்தேனும் ராமுவின் தங்கைகள் இருவரும் திருமணமாகி, சகோதரர்கள் வேலை கிடைக்கப்பெற்று அவர்களும் சம்சாரியானர்கள்.

நல்லசேலத்திற்கு பத்திரிக்கை அனுப்பாமலேயே கீதாவுக்கும் யாருடனோ போபாலில் கல்யாணமாகி ஓரிரு குழந்தைகள் பெற்று, அவர் கணவரும் அகால மரணம்.

அந்த அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் வாழ்ந்து, அவர் மாமாவும், மாமியும் இப்பூவுலகில் இருந்து வயது முதிர்வால் விடை பெற்றுக் கொண்டனர்.

ராமுவும் ரிடையர்ட் ஆகி ஒருநாள் தற்செயலாக கோடம்பாக்கம் வாத்தியார் தோட்டம் வந்தார். அந்த பகுதியில் அடையாளம் தெரியா மாற்றங்கள்.

மாமா மாமி வாழ்ந்த வீடு விற்கப்பட்டு இடிக்கப்பட்டு விட்டது. அந்த இடத்தில் ஒரு பெரிய அபார்ட்மெண்ட் எழுந்து நின்றது.

இன்னொரு முறை சொற்ப தூரத்தில் இருந்த ‘லிபெர்டி’ சினிமாவில், வீணை எஸ்.பாலசந்தரின் ‘நடு இரவில்’ சினிமா செகண்ட் ஷோ பாரத்து விட்டு கும்மிருட்டில் அப்போது வயலாக இருந்த கோடம்பாக்கம் ஏரியாவில், ‘திகில்’ படம் பார்த்த பாதிப்பில் இருந்த கீதாவுடன் அவளுக்கு ஆறுதலாக கை கோர்த்து வந்தது!

மனிதனுக்கு உணர்வுகள் மறப்பதில்லை; மரிப்பதில்லை; மனிதன் மரிக்கும் வரை.

ஜெ.ஜெயகுமார்
சென்னை
கைபேசி: 9884251887