நாம் மட்டும் பிறரிடம் ஏமாறக் கூடாது என்றே நாம் எண்ணுகிறோம். அதேசமயம் நாம் பிறரை ஏமாற்றக் கூடாது என்று எண்ணுவதில்லை. இதனை அறிந்து கொள்ள ரொட்டி நீதிக் கதை படியுங்கள்.
முன்னொரு காலத்தில் அப்பு என்பவர் ரொட்டிக் கடை நடத்தி வந்தார். அவர் வெண்ணை வியாபாரம் செய்யும் சுப்புவிடம், தனது ரொட்டிக் கடைக்குத் தேவையான வெண்ணையை வாங்கி வந்தார்.
ரொட்டிக் கடை வைத்திருந்த அப்புவிற்கு, நெடுநாள் சுப்பு தரும் வெண்ணை அளவின் மீது சந்தேகம் இருந்தது.
எடை குறைவாக சுப்பு வெண்ணையை தனக்கு வழங்கி, தன்னை ஏமாற்றுவதாக ரொட்டிக் கடை அப்பு நினைத்தார்.
ஒருநாள் ரொட்டிக் கடை அப்பு வெண்ணைக் கடை சுப்புவிடம் “சுப்பு நீங்கள் தரும் வெண்ணையின் அளவு குறைவாகவே இருப்பதாக நான் கருதுகிறேன்.” என்று கூறினார்.
அதற்கு வெண்ணைக் கடை சுப்பு “இல்லை. நான் சரியான எடை அளவிலேயே உங்களுக்கு வெண்ணையைத் தருகிறேன்.” என்று கூறிச் சென்றார்.
ரொட்டிக் கடை அப்பு வெண்ணைக் கடை சுப்புவிடம் வெண்ணையின் எடை அளவில் குறைவதாக அடிக்கடிக் கூறினார்.
ஒருநாள் இருவருக்கிடையே வாக்குவாதம் முற்றி அவ்வூர் நீதிமன்றத்திற்குச் சென்றனர்.
நீதிபதியிடம் ரொட்டிக் கடை அப்பு “ஐயா, வெண்ணைக் கடை சுப்பு, அரை கிலோ என தரும் வெண்ணையின் அளவானது, அரை கிலோவாக இருப்பது இல்லை. எடை குறைவாகவே இருக்கிறது.” என்று மீது குற்றம் சாட்டினார்.
உடனே நீதிபதி “நீங்கள் கூறும் குற்றச்சாட்டிற்கு ஆதாரம் என்ன?” என்று வினவினார்.
ரொட்டிக் கடைக்காரர் அப்பு, தன்னிடமிருந்த சுப்பு கொடுத்த அரை கிலோ வெண்ணைப் பொட்டலத்தை நிறுத்துக் காட்டினார். வெண்ணையின் அளவு 450 கிராமே இருந்தது.
இதனைக் கண்டதும் ரொட்டிக் கடை அப்பு “பாருங்கள், வெண்ணையின் அளவு 450 கிராம்தான் உள்ளது. இவ்வாறே வெண்ணைக் கடை சுப்பு பலமுறை ஏமாற்றியுள்ளார். ஆதலால் சுப்புவிற்கு தகுந்த தண்டனை அளியுங்கள்” என்று நீதிபதியிடம் கூச்சலிட்டார்.
நீதிபதியும் சுப்புவிடம் “நீங்கள் ஒவ்வொரு முறையும் 50 கிராம் வெண்ணையை குறைவாகவே தந்துள்ளீர்கள். இது குற்றமில்லையா?” என்று கேட்டார்.
உடனே வெண்ணைக் கடை சுப்பு “ஐயா, என்னிடம் எடைக் கல் கிடையாது. அதனால் அரை கிலோ அளவிலான ஏதேனும் பொருளை எடைக்கல்லுக்குப் பதிலாகப் பயன்படுத்துவேன்.
இவரது கடையில் இருந்து வாங்கும் ரொட்டியில் 500 கிராம் என்று எழுதப்பட்டிருக்கும். ஆதலால் 500 கிராம் ரொட்டியை எடைக் கல்லுக்குப் பதிலாகப் பயன்படுத்துவேன்.
இவரது ரொட்டியையும், என்னுடைய வெண்ணையும் எடை போடுங்கள். இரண்டும் சமமாக இருக்கும்.” என்று கூறி ரொட்டியையும், வெண்ணையையும் எடைப் போட்டுக் காண்பித்தார்.
இரண்டும் சமமாகவே இருந்தது. இதனைக் கேட்ட ரொட்டிக் கடை அப்பு அதிர்ந்து போனார்.
தன்னைப் பிறர் ஏமாற்றக் கூடாது என நினைப்பவர்கள், பிறரை தானும் ஏமாற்றக் கூடாது என்பதே ரொட்டி நீதிக் கதை கூறும் உண்மை ஆகும்.