ரோட்டுக் கடை வடை

Vadai

பெருந்தலைவர் காமராசர் முதல்வராக இருந்த போது காரில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அவருக்கு பசியெடுத்தது. அவர் தனது உதவியாளரிடம் சாப்பிட ஐந்து வடை வாங்கலாம் என்று சொன்னார். உடனே கார் வழியில் இருந்த‌ ஒரு பெரிய ஒட்டலில் நின்றது.

காரை ஏன் இங்கு நிறுத்தினாய் என்று காமராசர் கேட்டார்.

உங்களுக்கு வடை வாங்கத்தான் நிறுத்தினேன் என்றார் உதவியாளர். உடனே காமராசர் கோபத்துடன் வண்டியை எடுக்க சொன்னார்.

ஏன் கோபமாக இருக்கிறார் என்று உதவியாளருக்கு புரியவில்லை.

சிறிது தூரம் சென்றதும் காமராசர் ரோட்டின் ஒரம் வண்டியை நிறுத்தச் சொன்னார்.

அங்கு ஒரு கிழவி வடை சுட்டு கொண்டு இருந்தாள். அவளிடம் சென்று ஐந்து வடை வாங்கி வருமாறு உதவியாளரிடம் காமராசர் சொன்னார்.

நீங்கள் இந்த மாநிலத்தின் முதல்வர். நீங்கள் இங்கு ரோட்டுக் கடை வடையை சாப்பிடலாமா? அது சுகாதாரமாக இருக்குமா? என்று வினவினார் உதவியாளர்.

அதற்கு காமராசர் அவர்கள் சிரித்த முகத்துடன் நீங்கள் நிறுத்திய பெரிய உணவகத்தில் மட்டும் உணவு தரமாக இருக்குமா? என்று கேட்டார். உதவியாளரிடம் பதில் இல்லை.

“நீங்கள் சென்ற பெரிய உணவகத்தில் தரம் இருக்கலாம்; இல்லாமலும் இருக்கலாம். நாம் சாப்பிட்டாலும் சாப்பிடாவிட்டாலும் ஆயிரம் பேர் அங்கு வந்து சாப்பிடுவர். அந்த உணவகத்திற்கு நன்கு விற்பனை ஆகும்.” என்றார் காமராசர்.

“ஆனால் இந்தக் கிழவியை நாம் தினமும் செல்லும் ரோட்டில் காண்கிறோம்; கூட்டம் இல்லை; அந்த கிழவிக்கு வருமானம் இல்லை.
அதற்காக அவள் உழைப்பைக் கை விடவில்லை; நம்பிக்கையை விடவில்லை; இந்த ரோட்டில் தினமும் கடை போட்டு வியாபாரம் செய்கிறாள்.”  என்றார் காமராசர்.

நாம் தினமும் இவளிடம் வடை வாங்கி சாப்பிட்டால் அவள் உழைப்பிற்கும் அவள் குடும்பத்திற்கும் உதவியாக இருக்கும்.
நீங்களும் நாளை முதல் இங்கே என்னோடு சேர்ந்து சாப்பிட வேண்டும் என்று தனது உதவியாருக்கு அன்பு கட்டளை இட்டார் காமராசர்.

“ருசிக்கு சாப்பிடுபவன் எங்கும் சாப்பிடலாம்; பசிக்கு சாப்பிடுபவர்கள் ஏழைகளின் கடைக்கு சென்று அவர்கள் பசியை போக்கி நமது பசிக்கு சாப்பிட வேண்டும். ரோட்டுக் கடை என்று அலட்சியப் படுத்தக் கூடாது. ஏழையின் உணவில் தரம் இல்லாமல் போகாது” என்றார் காமராசர்.

உதவியாளருக்கும் காரை ஒட்டிய டிரைவருக்கும் கண் கலங்கியது.

 

இன்றும் சென்னை போன்ற பெருநகரங்களுக்கு வேலைக்கு வரும் திருமணமாகாத பெரும்பாலான இளைஞர்களுக்கு ஏழை மக்களால் நடத்தப்படும் சிறிய உணவு விடுதிகளே நல்ல சாப்பாட்டை வழங்கிக் கொண்டிருக்கின்றன.

 

 

Visited 1 times, 1 visit(s) today