லச்ச கொட்டை கீரை பொரியல் அருமையான தொட்டு கறி ஆகும். லச்ச கொட்டை கீரை மருத்துவ குணம் மிகுந்தது.
இது முழங்கால் வலி, முதுகு வலி ஆகியவற்றை நீக்கும் சிறந்த மருந்தாகவும் விளங்குகிறது. இதனை நமது முன்னோர்கள் பயன்படுத்தியதாக எனது பாட்டி கூறக் கேட்டுள்ளேன்.
சிறு மரம் போல் இருக்கும் தாவரத்திலிருந்து இக்கீரை பெறப்படுகிறது. இக்கீரை நீளமாக பெரிதாக இருக்கும். இம்மரத்தின் கிளையை ஒடித்து நட்டு வைத்தாலே தளிர் விடும்.
இனி சுவையான லச்சகொட்டை கீரை பொரியல் செய்முறை பற்றிப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
லச்ச கொட்ட கீரை – 20 எண்ணம் (100 கிராம்)
பாசிப் பருப்பு – 20 கிராம்
சீரகம் – 3 ஸ்பூன்
தேங்காய் – ¼ மூடி (சிறியது)
உப்பு – தேவையான அளவு
தாளிக்க
நல்ல எண்ணெய் – 3 ஸ்பூன்
சின்ன வெங்காயம் – 8 எண்ணம்
உளுந்தம் பருப்பு – 3 ஸ்பூன்
மிளகாய் வற்றல் – 3 எண்ணம்
கறிவேப்பிலை – 4 கீற்று
லச்ச கொட்டை கீரை பொரியல் செய்முறை
லச்ச கொட்ட கீரையை அலசி நடுநரம்பினையும், காம்பையும் நீக்க வேண்டும். பின்னர் கீரையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி சுத்தம் செய்து சதுரத் துண்டுகளாக வெட்டவும்.
கறிவேப்பிலையை அலசி உருவிக் கொள்ளவும்.
மிளகாய் வற்றலை காம்பு நீக்கி இரண்டாக ஒடித்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீரை ஊற்றிக் கொதிக்க வைத்து இறக்கி விடவும்.
பாசிப் பருப்பை அலசி கொதித்த தண்ணீரில் போட்டு மூடி வைக்கவும்.
வாணலியை அடுப்பில் வைத்து நல்ல எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் உளுந்தம் பருப்பு, நறுக்கிய சின்ன வெங்காயம், உருவிய கறிவேப்பிலை, ஒடித்த மிளகாய் வற்றல் சேர்த்து தாளிதம் செய்யவும்.
பின்னர் அதில் நறுக்கிய கீரை, சீரகம், தேவையான உப்பு சேர்த்து ஒருசேர கிளறி, மூடி போட்டு மிதமான தீயில் வேக விடவும்.
கீரை வெந்ததும் பாசிப் பருப்பின் நீரை வடித்துவிட்டு, பாசிப் பருப்பை கீரையில் சேர்த்துக் கிளறவும்.
ஒருநிமிடம் கழித்து அடுப்பினை அணைத்து விடவும்.
பின்னர் தேங்காய் துருவலை கீரையுடன் சேர்த்து ஒருசேரக் கிளறவும்.
சுவையான லச்ச கொட்டை கீரை பொரியல் தயார்.
குறிப்பு
பாசிப் பருப்பு லேசாக மலர்ந்தது போல் அவிந்தால் போதுமானது.
விருப்பமுள்ளவர்கள் மிளகாய் வற்றலுக்குப் பதிலாக, பச்சை மிளகாய் சேர்த்து பொரியல் தயார் செய்யலாம்.
மறுமொழி இடவும்