லாட்டரி

வீட்டின் வரவு செலவு கணக்கை போட்டு திக்கு முக்காடி போய் இருந்தான் ராஜன்.

வரவைவிட செலவு அதிகம். கடன் சுமை அதிகமா இருப்பதை நினைத்து வேதனையுடன் கணக்கு பார்த்து கொண்டு இருந்தான்.

பள்ளி விடுமுறை என்பதால் ஆண் பிள்ளைகள் இருவரும் வீட்டில் அங்கும் இங்கும் சப்தத்துடன் ஓடி ஆடி கொண்டு இருந்தனர்.

ராஜனுக்கு தலைவலி சற்று அதிகமானது. அதனால் பிள்ளைகளை சப்தம் போட்டு விட்டார்.

ஒவ்வொரு மாதமும் வீட்டு செலவு கணக்கை எழுதும் நோட்டை எடுத்தார் ராஜன்.

அந்த நோட்டில் பிள்ளைகள் தன் கைவண்ணம் காட்டி இருந்தனர். அதனை பார்த்ததும் கோபம் அதிகமானது.

பிள்ளைகள் இருவரையும் அழைத்தார். இருவருக்கும் கன்னத்தில் ‘பளார்’ என்று அடி ஒன்று விழுந்தது.

இருவருக்கும் விழுந்த அடியில் கண்ணீர் கொட்ட ஆரம்பித்தது.

“இந்தாங்க இந்த நோட்ட, கிழுச்சி போட்ருங்க. நான் புது நோட்டு போட்டுகிறேன்!“ என்று கோவமாக அவர்களை நோக்கி தூக்கி எறிந்தார்.

அடி விழுந்த பயத்தில் கீழே விழுந்த நோட்டை எடுத்து சுக்கு நூறாய் கிழிக்க தொடங்கினார் பிள்ளைகள்.

“கிழிச்சிட்டு அந்த பெட்டியில் வைத்து, வெளியில் இருக்கிற குப்பையும் போட்டு எரிக்க சொல்லு அம்மாட்ட சொல்லு!” என்று பிள்ளைகளிடம் கூறிவிட்டு, மனைவியை நோக்கி சப்தமிட்டார் ராஜன்.

ராஜனின் செல்போன் சிணுங்கியது. அழைத்தது நண்பர் ரமேஷ்.

“என்னடா ரமேஷ்! உனக்கு என்ன வேணும்?“ என்று கோவமாக கேட்டார் ராஜன்.

“சார் கோவமாக இருகீங்களா? உனக்கு அதிர்ஷ்டம் கிடைக்காதா என்று கேப்பியே, உனக்கு அதிர்ஷ்டம் கிடைச்சிருச்சு!” என்றான் ரமேஷ்.

“என்னடா சொல்ற? அதிர்ஷ்டம் எனக்கா? எப்படி?“ என்று ஆவலாய் கேட்டான் ராஜன்.

“போன வாரம் ஊருக்கு போனோம்ல, அப்போ வாங்கின இன்றைய தேதி லாட்டரி டிக்கெட் பாரு. உனக்கு இருபத்தி ஐந்து லட்சம் விழுந்திருக்கு!” என்றார் ரமேஷ்.

“என்னடா சொல்ற?.உண்மையா!“ என்று ராஜன் சந்தேகமாக கேட்டான்.

“ஆமாடா, முத அந்த லாட்டரி சீட்டை எடுத்து எங்க வீட்டுக்கு வா!“ என்று இணைப்பை துண்டித்தார் ரமேஷ்.

மிகுந்த குஷியில் ராஜன், மனைவியை அழைத்தார்.

ராஜனின் மனைவி மற்றும் பிள்ளைகள் வாசலில் குப்பைகளை எரித்து கொண்டு இருந்தனர்.

“சுந்தரி! அந்த லாட்டரி சீட்டை எங்க வச்ச? அதுக்கு இருபத்தி ஐந்து லட்சம் பரிசு விழுந்திருக்காம். அத கொடு, நானும் ரமேஷும் போய் என்னான்னு பார்த்துட்டு வாரோம்!”: என்று மனைவியை நோக்கி சந்தோசமாக கேட்டார்.

‘லாட்டரி சீட்டை எங்க வச்சேன்னு தெரியலயே!’ என்று மனதில் யோசனையோடு, “இதோ தேடி பார்க்கிறேன்!” என்றபடி அங்கிருந்து நகர்ந்தாள்.

சிறிது நேரம் கழித்து, “என்னடி, எங்க வச்சு தொலைச்ச? இப்போ தேடிட்டு இருக்க?” என்று ராஜன் கோவமாக பேசினான்.

“என்னங்க!, ஞாபகம் வந்திருச்சு. நீங்க கணக்கு எழுதி வைப்பீங்கள அந்த நோட்டுல நடு பக்கத்துல வச்சிருந்தேன்” என்று சுந்தரி கூறினாள்.

“வீட்டு செலவுகள எழுதி வைக்கிற நோட்டா?“ என்று அதிர்ச்சியில் கேட்டார் ராஜன்.

“ஆமாங்க, அந்த நோட்டு தான். உங்க டேபிள் மீது தான் இருக்கும்!“ என்று சுந்தரி கூறினாள்.

அவள் கூறும் போதே, ராஜன் வாசலை நோக்கி நகர்ந்தார்.

வாசலில் பிள்ளைகள் இருவரும் குப்பைகளோடு, அந்த கிழிந்த நோட்டையும் போட்டு எரித்து கொண்டு இருந்தனர்.

நோட்டு முழுதும் எரிந்து போய் இருந்தது.

“அப்பா! நீங்க சொன்ன மாதிரி, சரியா செஞ்சிடோம்ல. எங்கள அடிக்க மாட்டிங்கள? “ என்று பிள்ளைகள் கேட்க, ராஜன் தலையில் கை வைத்தவாறு அப்படியே அமர்ந்தார்.

“பிள்ளைகளை அடிக்காதீங்க! அதெல்லாம் சொன்ன பேச்சை கேட்கிற பிள்ளைகள் தான். பார்தீங்களா நீங்க சொன்ன மாதிரி குப்பைகளை எரிச்சிட்டு இருக்காங்க. அது சரிங்க, அந்த நோட்ட தேடமா இங்க வந்து இருக்கீங்க!” என்று மனைவி சுந்தரி கூறினாள்.

தலையில் இடி விழுந்த மாதிரி இருந்தது ராஜனுக்கு.

மணிராம் கார்த்திக்
மதுரை
கைபேசி: 9842901104

Comments

“லாட்டரி” அதற்கு 2 மறுமொழிகள்

  1. […] பணம் பத்தும் செய்யும்! லாட்டரி […]

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.